24 பிப்ரவரி 2019

12. ஒருபோதும் அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை இருந்ததில்லை, எவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் இல்லை! ரோஹித் சர்மா!

By ராம் முரளி.| Published: 03rd August 2018 10:00 AM

ரோஹித் சர்மா - 2

அன்றைய தினம் முழுப் பள்ளியும் பரபரப்புடன் காணப்பட்டது. எல்லோரும் துவங்கவிருக்கின்ற பள்ளிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். மஹாராஷ்டிர மாநிலத்தின் போரிவ்லி பகுதியில் அமைந்திருந்த சுவாமி விவேகானந்தா சர்வதேச பள்ளியில் அன்றைய தினம் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாக இருந்தது. டான் பாஸ்கோ பள்ளி மாணவர்களுக்கு எதிராக சுவாமி விவேகானந்தா பள்ளி மாணவர்கள் விளையாட இருந்தார்கள். மாணவர்களுக்கு இணையாக பயிற்சியாளர் தினேஷ் லட் அந்த போட்டியை மிகவும் எதிர்பார்த்திருந்தார். சிறுவனான ரோஹித் குருநாத் ஷர்மா அப்போதுதான் மெல்ல மெல்ல ஸ்பின் பவுலரிலிருந்து, பேட்ஸ்மேனாக உருவெடுத்துக் கொண்டிருந்தான். பயிற்சியாளர் தினேஷ் லட் தான் அவனால் சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுக்க முடியும் என்பதை கண்டறிந்து ரோஹித் சர்மாவுக்கு நம்பிக்கையூட்டியவர்.

போட்டி தொடங்கியது. ரோஹித் ஷர்மா பேட்டிங் செய்ய களத்திற்கு வருகிறான். சிறிது சிறிதாக ரன்களை சேர்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு தன் மீதான நம்பிக்கை பெருகியபடியே இருக்கிறது. அணி ஸ்கோரை சீராக உயர்த்திக் கொண்டிருக்கிறான். இந்த நிலையில், எதிர்பாராத விதமாக டான் பாஸ்கோ பள்ளியை சேர்ந்த வேகப் பந்து வீச்சாளன் ஒருவன் வீசிய பந்து ரோஹித் சர்மாவின் முகத்தில் பலமாக அடித்துவிடுகிறது. ரோஹித்தின் கண்களுக்கு கீழே சதை லேசாக கிழிந்து இரத்தம் வடிகிறது. எல்லோருக்கும் பெருத்த அதிர்ச்சி. விரைந்துச் சென்று அவனுக்கு முதலுதவி செய்கிறார்கள். எனினும், இரத்தம் நின்றபாடில்லை. ரோஹித் சர்மாவை களத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார்கள். ஆனால், ரோஹித் சர்மா விடாப்பிடியாக அதனை மறுத்து தொடர்ந்து களத்தில் தனது ஆட்டத்தை தொடருகிறான். முகத்தில் வழிந்து உருளும் இரத்தம் ரோஹித்தை மேலும் மேலும் அதிக உறுதியுடன் களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உந்துகிறது. ரோஹித் அன்றைய போட்டியில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடினான்.

ரோஹித் சர்மா சுவாமி விவேகானந்தா பள்ளியில் சேரக் காரணமாக இருந்தவர் பயிற்சியாளர் தினேஷ் லட் தான். போரிவ்லி பகுதியில் தினேஷ் லட் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த கிரிக்கெட் முகாமில் ரோஹிஷ் ஷர்மா இணைந்து பயிற்சிப் பெற்றுக் கொண்டிருந்தான். தினேஷ் லட்டின் மீது ரோஹித் ஷர்மாவுக்கு அளப்பறிய மரியாதை இருந்தது. எப்போதும் அவரது பார்வையிலேயே இருக்க வேண்டுமென ரோஹித் விரும்புவான். ரோஹித் பயிற்சிகளின்போது காட்டுகின்ற தீவிர உழைப்பும், எதிலும் உறுதியுடன் இருக்கும் ஆற்றலும் தினேஷ் லட்டையும் வெகுவாக கவர்ந்திருந்தது. அவர் எப்போதும் ரோஹித் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக உருவாகிவிடுவான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டிருந்தார். அதனாலேயே, ரோஹித் விருப்பம் கொண்டிருந்த ஆப்- ஸ்பின் பயிற்சிகளை விட, அவன் தனது பேட்டிங்கை வளர்த்தெடுப்பதில் அதிக உதவிகளை தினேஷ் லட் செய்துக் கொண்டிருந்தார்.

ரோஹித் சர்மாவின் முன்னால் ஆசிரியர் ஒருவர் அந்த தினங்களை நினைவுக் கூர்கிறார். 'தினேஷ் லட் தான் ரோஹித்தை அடையாளம் கண்டவர். அவருக்கு ரோஹித் மீது அதீதமான நம்பிக்கை உருவாகியிருந்தது. ரோஹித்தின் பொருளாதார பின்னடைவுகளை கருத்தில் கொள்ளும்போது, எங்கள் பள்ளியின் கட்டணம் மிக அதிகமானது. ஆனால், தினேஷ் லட் அவன் எங்கள் பள்ளியில் சேர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டுமென்பதில் அதிக உறுதியுடன் இருந்தார். தினேஷ் லட்டின் மீதான ரோஹித்தின் ஈடுபாடும் அன்பிலானது. அவன் எப்போதும் அவருடன் இருக்க வேண்டுமென்றே விரும்பினான். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவரை காணச் சென்று விடுவான். அவருடன் பயிற்சிகளில் பல மணி நேரங்கள் செலவிடுவான். அதற்காக வகுப்புகளை புறக்கணிக்கக்கூட அவன் தயங்கியதில்லை’

ரோஹித் சர்மாவின் குடும்பம் நாக்பூர் பகுதியில் வசித்து வந்தது. மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியில் மிகவும் நலிவுற்றிருந்தது. ஒற்றை அறை மட்டுமே கொண்ட வீட்டில்தான் அவர்களது குடும்பம் வசித்து வந்தது. ரோஹித் பிறந்த தேதி ஏப்ரல் 30, 1987. ரோஹித் சர்மாவின் தந்தை குருநாத் சர்மா போக்குவரத்து துறையில் பணி செய்து வந்தார். ரோஹித்தின் தாயார் பூர்ணிமா சர்மா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். ரோஹித் குடும்பத்துடன் இருக்க நேரிடும் சந்தர்ப்பங்களில் தெலுங்கில் பேசிக் கொள்வது வழக்கம்.

குருநாத் சர்மாவின் மிகச் சொற்ப வருமானத்தால் அவர்களால் தங்களது மகனை தங்களுடன் வைத்துக் கொண்டு வளர்க்க இயலாத சூழல் நிலவியிருந்தது. அதனால், ரோஹித் போரிவ்லி பகுதியில் இருந்த தனது மாமா மற்றும் தாத்தா பாட்டியின் வீட்டில்தான் வளர்ந்து வந்தார். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதும், குறிப்பாக வார இறுதிகளிலும் தனது பெற்றோரை சந்திக்க வருகை புரிவார். பெரும்பாலும், ரயில்களிலும், பேருந்துகளிலும்தான் அவரது பயணம் அமைந்திருக்கும். நாக்பூரின் நெருக்கடி மிகுந்த  போக்குவரத்தை கடந்து வருவதற்குள் சோர்வாகி விடும். அதனால் இத்தகைய வருகையும் உற்சாகமூட்டக் கூடிய அனுபவமாக அமைந்ததில்லை. தன்னில் இருந்து வெகு தொலைவில் வசித்து வந்த தாய் தந்தையரின் பிரிவு ரோஹித்தை சற்றே வாட்டி வதைக்கத்தான் செய்தது.

போரிவ்லியில் அவரது மாமா ரோஹித்தை நன்றாக கவனித்துக் கொண்டார். அவரது பணத்தில்தான், தினேஷ் லட்டின் கிரிக்கெட் பயிற்சி முகாமில் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ள முடிந்தது. பயிற்சியின் போது ரோஹித்தின் மீது தினேஷ் லட்டுக்கு நம்பிக்கை உருவெடுத்ததால், ரோஹித்தை சுவாமி விவேகானந்தா பள்ளிக்கு மாறிவிடும்படி அவர் கோரிக்கை விடுத்தார். விளையாட்டு பயிற்சிக்கு ஏற்ற உபகரணங்கள் அங்கிருந்ததுதான் முக்கிய காரணம். ஆனால், ரோஹித் தனது பொருளாதார நிலையை அவரிடத்தில் விளங்கக் கூறினான். அவர் ரோஹித்துக்கு பள்ளியின் ஸ்காலர்ஷிப் கிடைக்க வழிவகைச் செய்தார். 'நான் அவரிடத்தில் பள்ளி கட்டணத்தை கட்டும் நிலையில் எனது குடும்பம் இல்லை என திட்டவட்டமாக எடுத்துக் கூறினேன். உடனே அவர் எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்க ஏற்பாடு செய்தார். அதனால், நான் அடுத்த நான்கு வருடங்களுக்கு பள்ளிக்கு எந்த பணமும் கட்ட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அதனால், நான் கிரிக்கெட்டில் எனது முழு கவனத்தை செலுத்தினேன்’

அன்றைய தினங்களில் இந்தியாவெங்கும் சச்சின் அலை ஓங்கியிருந்தது. ஒவ்வொரு இந்திய சிறுவனும், இளைஞனும் சச்சின் குறித்தான் பிரேமையில் திளைத்திருந்தார்கள். விராட் கோலி குறிப்பிடுவதைப் போல 'ஒரு காலக்கட்டத்தின் நினைவலைகளை உருவாக்கியவர் சச்சின்’. சச்சினை போன்றே கிரிக்கெட் விளையாட்டில் உச்சத்திற்கு செல்ல வேண்டுமென்கின்ற கனவு பல வளரும் கிரிக்கெட் விளையாட்டாளர்களுக்கு இருந்து வந்தது. ஆனால், இவர்களில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டு ரோஹித் சர்மாவுக்கு மேற்கு இந்தியத் தீவுகள் அணியை சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவானான பிரயன் லாராவின் மீது மிகப் பெரிய பிரமிப்பு உருவாகியிருந்தது. அவரது ஆட்ட சாதுர்யத்தால் ஈர்க்கப்பட்டிருந்தார் ரோஹித் சர்மா.

இந்த காலக்கட்டங்களில், ரோஹித் சர்மா மிகக் கடினமாக பயிற்சிகளில் ஈடுபடத் துவங்கினார். அவருக்கு ஒருபோதும் அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை இருந்ததில்லை. நமக்கொரு அங்கீகாரம் கிடைக்கிறதென்றால், அதற்காக மிக அதிக மெனக்கெடலையும், உழைப்பையும் நாம் செலுத்தியிருக்க வேண்டும் என்பதில் அவர் எப்போதும் உறுதியுடன் இருந்தார்.

'எவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், நான் நிச்சயம் ஆசீர்வதிக்கப்பட்டவன் இல்லை. ஒருவேளை நான் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், நேரடியாகவே நான் ஒரு பேட்ஸ்மேனாக உருவெடுத்திருப்பேன். அவசியமில்லாமல் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் துவக்க காலத்தில் என்னை பெளலர் என கற்பனை செய்து கொண்டு உலவியிருக்க மாட்டேன். எனது பேட்டிங் திறனுக்காக மிக அதிகமாக உழைத்திருக்கிறேன். எனது பயிற்சியாளர்கள் அதற்கு உதவி இருக்கிறார்கள். தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கும்போது பிரமிப்பாகவும், நாங்கள் நட்சத்திரங்களை போலவும் தோன்றலாம், ஆனால், இவையெல்லாம் கடின உழைப்பு மற்றும் பயிற்சியின் பலனாகக் கிடைப்பவை. எனது வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையையும் நான் அதீத உழைப்பின் மூலமாகவே அடைந்திருக்கிறேன்' என்கிறார் ரோஹித் சர்மா.      

தினேஷ் லட்டுக்கு ரோஹித்தின் பேட்டிங் திறன் மீது எப்போதும் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வந்தது. அதனால், அவர் பள்ளியில் நடைபெற்ற ஹாரீஸ் அண்ட் கைல்ஸ் ஹீல்ட் கோப்பையில் ரோஹித்தை துவக்க ஆட்டக்காரராக களமிறக்கினார். அதற்கு முன்பு ரோஹித்தின் கிரிக்கெட் செயல்பாடு என்பது வெறும் ஆஃப் ஸ்பின்னர் என்பதாகவே இருந்தது. எப்போதும் அவர் எட்டாவது அல்லது அதற்கும் கீழான ஆட்டக்காரராகத்தான் களத்தில் இறங்குவது வழக்கம். ஆனால், தினேஷ் ரோஹித்தை துவக்க ஆட்டக்காரராக இறக்கிவிட்டார்.

ரோஹித்தின் அதற்கு அடுத்ததான கிரிக்கெட் வளர்ச்சியின் துவக்கப் புள்ளி இந்தப் போட்டிதான். முதல் முறையாக, துவக்க நிலை ஆட்டக்காரனாக களத்தில் இறங்கிய ரோஹித் அந்த போட்டியில் எளிதாக 100 ரன்களை கடந்திருந்தார். தினேஷ் தனது சீடனை நினைத்து பெருமை கொண்ட தருணம் அது. அவரது நம்பிக்கை பொய்க்கவில்லை. ரோஹித்தின் பேட்டிங் திறன் பற்றிய கணிப்பு இந்த போட்டிக்கு பின்னர் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தினேஷ் லட் அன்றைய தினத்தை பற்றி குறிப்பிடுகையில், 'அதன் பிறகு, அவனுக்கு பின்னடைவே இல்லை. மேலும் மேலும் துவக்க ஆட்டக்காரனாக களமிறங்கி ரன்களை அதிகளவில் குவித்துக் கொண்டிருந்தான் ரோஹித்' என்கிறார்.

சிக்ஸர் பறக்கும்…...   

Tags : ICC ரோஹித் சர்மா Rohit Sharma Indian Cricket சுவாமி விவேகானந்தா பள்ளி

More from the section

39. மகேந்திர சிங் தோனியின் நிறைவேறாத முதல் காதல்! பிரியங்கா ஜா!
38. நான் நிகழ்காலத்தில் வாழ்ந்திட ஆசைப்படுகிறேன்! தோனியின் வெற்றியின் ரகசியம்!
37. கேப்டன் தோனிதான் எனது நாயகன்! இப்படிச் சொன்ன முன்னாள் இந்திய கேப்டன் யார்?
36. ஒரு கிரிக்கெட் வீரருக்குள் ஒளிந்திருக்கும் பல்வேறு திறமைகள்!
35. கிரிக்கெட் உலகின் இரண்டு நண்பர்களின் சுவாரஸ்யமான கதை இது!