வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

31. அரவிந்த் டி சில்வா எனது பேனாவை திருடிவிட்டார் ! ஜோஸ் பட்லர்

By ராம் முரளி.| Published: 28th December 2018 10:00 AM

 

அது 1999-ம் ஆண்டு. சர்வதேச உலக கோப்பை போட்டித் தொடரின் 21-வது போட்டியில், இந்தியாவும் இலங்கையும் மோதியது. டான்டனில் நடைப்பெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மொத்தமாக 373 ரன்களை குவித்திருந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அப்போட்டியில் சவுரவ் கங்குலி 183 ரன்களை எடுத்திருந்தார். ஏழு சிக்ஸரும், பதினேழு பவுண்டரிகளும் அதில் அடக்கம். தனது உச்சபட்ச திறன்களை அன்றைய போட்டியில் சவுரவ் வெளிப்படுத்தியிருந்தார். க்ரீஸ் கோட்டுக்கு வெளியில் வந்து பந்துகளை சிக்ஸர்களாக விளசித் தள்ளிய கங்குலியின் அன்றைய ஆட்டத்தை இப்போதும் கூட பல கிரிக்கெட் ஆர்வலர்கள் அவ்வப்போது குறிப்பிட்டு பேசுவது வழக்கம்.

இரண்டாவதாக பேட்டிங் செய்த இலங்கை அணி வெறும் 216 ரன்களில் சுருண்டதால், பெரும்வாரியான வெற்றியை இந்திய அணி பெற்றிருந்தது. பெரும் சாதனை நிகழ்த்தப்பட்ட அன்றைய தினத்தில், மைதானத்தில் குழுமியிருந்த ஆரவாரமிக்க பார்வையாளர்களுள் ஒருவராக அமர்ந்திருந்தார் ஜோஸ் பட்லர். எங்கெங்கும் பிதுங்கி வழியும் உற்சாக குரல்கள் அவரது செவிகளை அதிரச் செய்தது. பெருத்த மனித கூட்டத்தின் முழுமையான கொண்டாட்ட மனநிலையை ஒரு சிறுவனாக அந்த கூட்டத்தின் மையத்தில் அமர்ந்தபடியே விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தார்.

போட்டி நடைபெற்ற டான்டன் மைதானம் பட்லர் வீட்டுக்கு மிக அருகிலேயே இருந்ததால், அன்றைய போட்டியை காண அவர் சென்றிருந்தார். அன்றைய தினங்களில் ஒரு போட்டி முடிவடையும் போது, பார்வையாளர்கள் மைதானத்தின் உள்ளே ஒட்டுமொத்தமாக நுழைய முற்படுவார்கள். தங்களது விருப்பமான கிரிக்கெட் வீரரை நெருங்கி சூழ்ந்து கொள்வார்கள். சிலர் கையொப்பமும் பெற்றுக் கொள்ளும் வழக்கத்தை உடையவர்களாக இருப்பார்கள். அன்றைய போட்டியின் முடிவில், ஜோஸ் பட்லர் தன் கையில் இருந்த குறிப்பு புத்தகத்தை சுமந்து கொண்டு, மைதானத்திற்குள் நுழைந்து விட்டார். அவரை கடந்து விரையும் முகங்களை கடந்து, எந்தவொரு விளையாட்டு வீரரிடமாவது கையெழுத்து வாங்கிவிட வேண்டுமென அலைமோதுகிறார்.

அத்தருணத்தைப் பற்றி ஜோஸ் பட்லர் நினைவு கூருகையில், ‘அன்றைய போட்டியில் கங்குலியும், டிராவிட்டும் இணைந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். முத்தையா முரளிதரன் போன்ற திறன்மிக்க சுழற்பந்து வீச்சாளரின் பந்துகளை எவ்வித பயமுமின்றி மைதானத்துக்கு வெளியில் பறக்க விட்டார்கள். ஒரு சிறுவனாக, கிரிக்கெட் சார்ந்த எனது முதல் பரவசமிகுந்த தருணம் அதுதான். போட்டி முடிவடைந்ததும், மைதானத்துக்குள் இறங்கி யாரிடமாவது கையெழுத்து வாங்கிவிட வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருந்தேன். நீண்ட போராட்டத்திற்கு பிறகு என்னால் ஒருவழியாக அரவிந்த் டி சில்வாவை நெருங்க முடிந்தது. என் கையில் இருந்த பேனாவை வாங்கி, கையொப்பமிட்டுவிட்டு, உடனடியாக பெவிலியனை நோக்கி ஓடத் துவங்கிவிட்டார். அவசரத்தில் எனது பேனாவை என்னிடத்தில் அவர் திருப்பிக் கொடுக்கவில்லை. அப்போது அது என்னை மிகப் பெரிய துயரத்துக்கு இட்டுச் சென்றது. என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. எனது தாயாரிடம் அழுது கொண்டே ஓடிய நான், 'அரவிந்த் டி சில்வா எனது பேனாவை திருடி விட்டார் என்று கூறினேன்’ என்கிறார்.

சிறுவனான ஜோஸ் பட்லர் ஏபி டிவில்லியர்ஸை போலவே கிரிக்கெட் தவிர்த்து எண்ணற்ற பிற விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டிருந்தவர். ஃபுட்பால், ஹாக்கி, டென்னிஸ், கோல்ஃப் என சகல விளையாட்டுகளிலும் அவரது ஆர்வம் விரிந்திருந்தது. ஒருவேளை கிரிக்கெட் விளையாட வந்திருந்திருக்காவிட்டால், தபால்காரராக ஆக விரும்புவதாக ஒரு நேர்காணலில் தெரிவித்த பட்லர், தபால் பணியை முடித்துவிட்டு, 'ஒவ்வொரு நாளின் மதிய வேளையிலும் சிறிது நேரம் கோல்ஃப் விளையாட்டில் என்னை இணைத்துக் கொண்டிருப்பேன்’ என்கிறார்.

பெற்றோரும் அவரது விளையாட்டு மீதான ஆர்வத்தை ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொள்ள பெரிதும் உதவி புரிந்தனர். எந்தவொரு விளையாட்டை கையிலெடுத்தாலும், அதனை சிறப்புற வெற்றி கொள்ள வேண்டும் என்பதே அவர்களது ஒரே அறிவுறுத்தலாக இருந்தது. அவரது தாயார் ஒரு கிரிக்கெட் அணியையும் நடத்திக் கொண்டிருந்தார். அதனால், மற்ற அனைத்து விளையாட்டுகளை விடவும், கிரிக்கெட் மீது அவருக்கு மிகுதியான ஈடுபாடு இருந்து வந்தது. தன்னை விட வயதில் பெரியவர்களுடன் விளையாடுவது, அவருக்கு நல்லதொரு அனுபவமாக அமைந்தது. அது போல, கிரிக்கெட் கிளப்களில் இணைந்த விளையாடியதும் அவருக்கு சிறப்பானதொரு அடித்தளத்தை அமைத்துக் கொள்ள உதவியாக இருந்தது.

மிகச் சிறிய வயதில் இருந்தே உள்ளூர் அணியான சோமர்செட்டில் இணைந்து விளையாடத் துவங்கியிருந்த ஜோஸ் பட்லர், அவ்வணிக்காக தனது முதல் சதத்தை 12 வயதுக்குள்ளாகவே பூர்த்தி செய்திருந்தார். சோமர்செட் அணி குளோசெஸ்டர் அணியை எதிர்த்து விளையாடியது. முன்னதாக, ஜோஸ் பட்லரின் தந்தை அன்றைய போட்டியில் பட்லர் சதம் அடித்தால், 100 பவுண்ட் பணத்தை அன்பளிப்பாக கொடுப்பதாக சொன்னார். அவரது மனதில் தான் பெரும் செல்வந்தராக உருவெடுக்கப் போகிறோம் என்கின்ற எண்ணம் எழுந்தது. சொல்லி வைத்தாற்போல, அன்றைய தினத்தில் பட்லர் சதம் அடித்தார். அன்றைய தினம் தனக்குள் உண்டாக்கிய மனவெழுச்சியை இப்போதும் தன்னால் உணர முடிகிறது என்கிறார் பட்லர்.

ஒருபுறம் தொலைக்காட்சியில் சர்வதேச அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஆர்வமிகுதியுடன் பார்ப்பது, மற்றொருபுறம் தீவிரமான கிரிக்கெட் பயிற்சிகளில் ஈடுபடுவது என அவரது கிரிக்கெட் உடனான உறவு வளர்ந்து பெருகியபடியே இருந்தது. குறிப்பாக, ஆடம் கில்கிரிஸ்ட்டும், ஜாண்டி ரோட்ஸும் அக்காலங்களில் அவரது விருப்ப விளையாட்டாளர்கள். தலை சிறந்த விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆடம் கில்கிரிஸ்ட்டின் சாதூர்யங்களும், பந்துகளை ஸ்டம்புகளின் பின்னால் நின்றபடியே கவனமாக அதனை கைக்கொள்வதும், மைதானத்தில் பந்து தன்னை கடந்துச் செல்ல அனுமதிக்காத ஜாண்டி ரோட்ஸின் பீல்டிங் திறன்களும் பட்லரை வெகுவாக கவந்திருந்தன. இக்காலத்தில், அவர் சிறந்த கிரிக்கெட் விளையாட்டாளராக கருதுவது ஏ பி டிவில்லர்யஸைதான். எல்லா வகையிலான கிரிக்கெட்டையும் தன் வசப்படுத்திக் கொள்கின்ற முழுமையான கிரிக்கெட் வீரர் என டிவில்லியர்ஸை புகழ்கிறார் பட்லர்.

ஏ பி டிவில்லர்யஸை போலவே, பட்லரும் மைதானத்தின் 360 டிகிரியிலும் பந்துகளை விளாசக் கூடியவர். ராட்சத்தன்மையில் பந்துகளை எதிர்கொள்ளக் கூடியவர். இங்கிலாந்து அணி 250 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்திருக்கும் நிலையில் களமிறங்கினாலும், அல்லது 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருக்கும் நிலையில் களமிறங்கினாலும், அவரால் வெகு சிறப்பாக அணியை முன் செலுத்தி கொண்டு செல்ல முடியும். மிக மிக அபாயகரமான பந்து வீச்சாளர்களையும் திணறடிக் கூடிய உறுதி மிக்க ஷாட்டுகளை ஆடக் கூடியவர் அவர்.

ஜோஸ் பட்லரின் கிரிக்கெட் மீதான ஆர்வம் மிகத் தீவிரமானது. சிறு வயதில் ஒவ்வொரு போட்டியில் விளையாடும் போதும், தன்னால் ஒரு குறிப்பிடும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்றால், அவரால் அதனை எளிதாக எடுத்துக் கொள்ளவே முடியாது. கண்களில் நீர் கோர்த்துவிடும். அவரது துவக்க கால பயிற்சியாளரான பிரேக்வெல் அதுப்பற்றி குறிப்பிடுகையில், 'ஜோஸ் பட்லருக்கு அப்போது 14 வயது ஆகியிருந்தது. பள்ளியில் நடைபெற்ற போட்டியொன்றில் வெற்றிப் பெறுவதற்கு சற்று முன்னதாக தனது விக்கெட்டை அவர் பறி கொடுத்துவிட்டார். அவரால் அந்த சூழலை எளிதில் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. அழுது விட்டார். மிக அகவயமாக கிரிக்கெட் விளையாட்டுடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டுள்ளவர் அவர்’என்கிறார்.

எனினும், காலம் பட்லருக்கு நல்லதொரு பக்குவத்தை வழங்கியிருக்கிறது. 'முன்பு போல நான் அதிகளவில் இப்போதெல்லாம் வருத்தப்படுவதில்லை. எந்தவொரு நிலையும் நிரந்தரமானதல்ல, அனைத்தையும் மாறுதல்களை அடைந்தபடியேதான் இருக்கும். அதனால் பாஸிட்டிவ் சிந்தனைகளை மட்டுமே மனதில் வளர்த்துக் கொள்வது நம்மை தொடந்து உயிர்ப்புடன் செயல்படும் ஆற்றலை அளிக்கும்’ என பட்லர் குறிப்பிட்டுள்ளார்.

பிரேக்வெல் பட்லரை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஐயன் போத்தமை விடவும் சிறந்த விளையாட்டாளர் என குறிப்பிடுகிறார். 16 வயதில் பட்லர் தனது தொடர் ஆட்டங்களில் சேர்த்திருந்த ரன் விகிதம் 95. அந்த வயதை கணக்கில்கொண்டு பார்க்கின்றபோது பட்லர் ஐயன் போத்தமை விட மிகுதியான திறன்கொண்டவர் என்பது அவரது கருத்து. வெகு விரைவில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பு பட்லருக்கு வழங்கப்படும் என்பதில் உறுதியான நம்பிக்கை அவருக்கு இருக்கிறது.

பட்லரின் துவக்க கால பயிற்சியாளர்களுள் மற்றுமொருவரான ஹூரே, 'முதலில், பட்லர் கிரிக்கெட் விளையாட்டின் நல்லதொரு மாணவர். அவர் தொடர்ச்சியாக பல முன்னோடிகளுடன் கிரிக்கெட் சார்ந்த உரையாடல்களில் பங்கு கொள்கிறார்கள். அணியின் இடம்பெற்றிருக்கும் மூத்த வீரர்களிடம் விவாதிக்கிறார். மெல்ல மெல்ல தனது திறன்களை எப்படி மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற புரிதல் அவரிடத்தில் இருக்கிறது. அணியை கட்டுக்கோப்பாக வழி நடத்திச் செல்லும் ஆற்றலும் அவரிடத்தில் இருக்கிறது. இன்னும் வரும் காலங்களில் பெரும் சாதனையை அவர் நிகழ்த்துவார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை' என்கிறார்.

பட்லரின் அதீதத் திறனும், ஆற்றலும் கண்டெடுக்கப்பட்டு இங்கிலாந்தில் அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. முன்னதாக இருபது ஓவர் போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமான அவர், 2012-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அறிமுகத்தை கண்டார். மிகுந்த எதிர்பார்ப்பு அவர் மீது குவிந்திருந்தது எனினும், ரன் எதுவும் சேர்க்காமல் இரண்டாவது பந்திலேயே சயித் அஜ்மலின் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். அதன் பிறகான போட்டிகளிலும் தொடர் சறுக்கல்கள் நேர்ந்தபடியே இருந்தது. அறிமுகம் ஆனதில் இருந்து ஒன்றரை வருடங்களில் அவர் குவித்திருந்த மொத்த ரன்கள் வெறும் 116 மட்டும்தான். சராசரி ரன் விகிதம் 11.60.  இங்கிலாந்து அணியின் அப்போதைய கேப்டன் குக் உள்பட பலரும் அவரை பற்றி தவறான அபிப்ராயங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

எனினும், பட்லரை எதுவொன்றும் நிதானமிழக்க செய்யவில்லை. அவர் மெல்ல மெல்ல தனது நெருக்கடிகளில் இருந்து மீண்டும் வந்தார். தொடர் பயிற்சியும், உள்வெறியும் அவரை வழிநடத்தின. அடுத்த நான்கரை ஆண்டுகளில், அவர் நிகழ்த்தியிருப்பது பெரும் பெரும் சாதனைகள். இன்றைக்கு, இங்கிலாந்து அணியில் மத்திய ஓவர்களில் அதிரடியாக விளையாடக் கூடிய ஒற்றை பெரும் மையமாக ஜோஸ் பட்லரே திகழ்கிறார். மெல்ல மெல்ல அவரது சாதனை பட்டியலும் நீண்டுக்கொண்டே போகிறது. இங்கிலாந்து அணியின் சார்பாக மிக குறைந்த பந்துகளில் சதம் கண்ட முதல் மூன்று இடங்களும் பட்லரிடம்தான் இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக 66 பந்துகளிலும், இலங்கைக்கு எதிராக 61 பந்துகளிலும், இவை அனைத்தையும்விட பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 46-யே பந்துகளிலும் பட்லர் சதங்களை விளாசியிருக்கிறார். இங்கிலாந்து வீரர் ஒருவரிடமிருந்து எதிர்பார்க்கக் கூட இலக்கங்கள் இல்லை இவை.

எந்தெவொரு வீரரை தகுதியில் குறைபாடுள்ளவர் என்று பலரும் விமர்சனம் செய்தார்களோ அவர்தான் இன்றைய இங்கிலாந்து அணியை அதீத கவனத்துடன் அணுகுவதற்கான அடித்தளத்தை கட்டமைத்திருக்கிறார். இன்றைக்கு பெரிதும் நம்பிக்கையுடன் எதிர்நோக்கப்படும் இங்கிலாந்து வீரராக உருவெடுத்திருக்கிறார். தனது அதீத திறன் மட்டும் விடாப்பிடியான தொடர் போராட்டத்தின் வாயிலாகவே இந்த இடத்தை பட்லர் அடைந்திருக்கிறார்.

'சமயங்களில் நானொரு நேர்த்தியாளன். ஒரு பேட்ஸ்மேனாக நாம் மிகச் சிறப்புமிக்க இன்னிங்க்ஸை விளையாட வேண்டுமென்று விழைகிறோம். ஒவ்வொருமுறை நமது விக்கெட்டை பறி கொடுக்கும்போதும், அதிக சோர்வும் அவநம்பிக்கையும் பெருகிவிடுகிறது. கடைசி வரையில் ஆட்டமிழக்காமல் இருந்தாலோ அல்லது, 200 ரன்களை கடந்தாலோ மட்டும்தான் நமக்கு ஓரளவுக்கு மன நிறைவு உண்டாகிறது. எப்போதுமே நமக்கு ரன்களை குவிப்பதன் மீதான வேட்கை அதிகரித்தபடியே இருக்கும். ஒருபோதும் இவ்வேட்கை குறைவுறுவதில்லை. எனினும், யதார்த்தம் எப்போதும் நமக்கு கைக்கொடுப்பதில்லை. அத்தனை எளிதில் நம்மை வெற்றி அடைய அனுமதிக்கப் போவதுமில்லை. அதனால், இளைய வளர்ந்து வரும் கிரிக்கெட்டர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், எப்போதும் நம்பிக்கையை தளர விடாதீர்கள். உங்களை முழுமையாக நம்புகள் என்பதைத்தான்!’

(சிக்ஸர் பறக்கும்…)

Tags : Cricket கிரிக்கெட் உலக கோப்பை jose butler ஜோஸ் பட்லர்

More from the section

39. மகேந்திர சிங் தோனியின் நிறைவேறாத முதல் காதல்! பிரியங்கா ஜா!
38. நான் நிகழ்காலத்தில் வாழ்ந்திட ஆசைப்படுகிறேன்! தோனியின் வெற்றியின் ரகசியம்!
37. கேப்டன் தோனிதான் எனது நாயகன்! இப்படிச் சொன்ன முன்னாள் இந்திய கேப்டன் யார்?
36. ஒரு கிரிக்கெட் வீரருக்குள் ஒளிந்திருக்கும் பல்வேறு திறமைகள்!
35. கிரிக்கெட் உலகின் இரண்டு நண்பர்களின் சுவாரஸ்யமான கதை இது!