வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

32. கேப்டன் தோனியாக என்னை உருவகப்படுத்திக் கொண்டேன்! ஜோஸ் பட்லர்

By ராம் முரளி.| Published: 04th January 2019 10:00 AM

‘கிரிக்கெட்டை விடவும், உலகம் சார்ந்த நமது கண்ணோட்டம்தான் முக்கியமானது. என்னால் இயன்ற வரையில் எனது திறன்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன். எனினும், உலகத்தில் ஏராளமான பிற முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அதனால், கிரிக்கெட் மட்டுமே முக்கியமானதல்ல. கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டது என்னவென்றால், நமது சிந்தனையோட்டத்தின் வலிமையை உணருவதுதான். ஒவ்வொரு முறையும் கிரிக்கெட்டில், நம்மை சிறப்புற வெளிப்படுத்திக் கொள்ள கடினமாக முயற்சிப்பதும், நமது சிந்தனையை எவ்வாறு விசாலப்படுத்துகிறோம் என்கின்ற அறிதலை அடைவதுதான். திறன் மிக்கவர்களாக பரிணமிக்க நாம் முயற்சிக்கிறோம். எனினும், நமக்குள் இருக்கும் வேட்கை இதன்மூலம் தொடர்ந்து பெருகியபடியே தானிருக்கும்’ – ஜோஸ் பட்லர்.

ஜோஸ் பட்லரின் கிரிக்கெட் வாழ்க்கையில் தொடர்ச்சியான சறுக்கல்களையும், சவால்களையும் ஏற்படுத்தி வருவது டெஸ்ட் கிரிக்கெட் வகைமைதான். ஒருநாள் கிரிக்கெட்டில் பல முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில், அற்புதமான இன்னிங்கஸை விளையாடியிருக்கும் பட்லர் இன்னமும் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பிட்டு சொல்லும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலாமல் தவித்து வருகிறார். 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் இந்தியாவுக்கு எதிரான போட்டியில், தனது முதல் டெஸ்ட் சதத்தையே பட்லர் பதிவு செய்திருக்கிறார். தொடர்ந்து இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டே வருகிறது.

2015-ம் வருடம் இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பு பட்லருக்கு அளிக்கப்பட்டிருந்தது. மோர்கன் அப்போது காயத்தின் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. அதனால், பட்லர் கேட்பனாக பொறுப்பு ஏற்றிருந்தார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டித் தொடர் அது. ஒரு நாள் அணியின் கேப்டனாக பட்லர் பொறுப்பேற்றிருந்த நிலையிலும், பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்குக்கான இடம் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. அந்தளவிற்கு டெஸ்ட் போட்டியில் அவரது ஆட்டத் திறன் பல்வேறு தடுமாற்றங்களை சந்தித்து வந்தது.

அந்தப் போட்டித் தொடருக்கு முன்னதாக, இங்கிலாந்து அணி பாகிஸ்தான், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்திந்திருந்தது. எனினும், பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை 2-1 என்கின்ற கணக்கில் வென்றது. பெரும் சறுக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்த இங்கிலாந்து அணிக்கு இந்த வெற்றி புத்துயிர்ப்பை வழங்கியிருந்தது. இந்த போட்டித் தொடரில் முற்றிலும் வேறான பட்லரை நம்மால் எதிர்கொள்ள முடிந்தது. எப்போதும் நிதானமும், சாந்தமும் உடைய விளையாட்டாளராக அறியப்படுகின்ற பட்லர் அப்போட்டித் தொடரில் தனது மற்றொரு மற்றொரு முகத்தை வெளிப்படுத்தினார். இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது, மைதானத்தில் அவரை பங்களாதேஷ் வீரரொருவர் வெறியேற்றியதன் காரணமாக, நிதானமிழந்து தனது விக்கெட்டை பறிகொடுத்த பட்லர், அந்த போட்டியில் வெற்றி அடைந்ததற்கு பின்னர், மிக ஆக்ரோஷமாக தனது வெற்றிக் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். அது வரையில் அவரது இயல்பு என கணிக்கப்பட்டிருந்த அமைதியான விளையாட்டாளர் என்கின்ற பிம்பம் அக்கணத்தில் உடைந்துபோனது.

‘நீங்கள் எப்போதும் என்னை கூச்ச சுபாவமுடையவன் என்றும், மெளனத்தில் ஆழ்ந்திருப்பவன் என்றும் எழுதுகிறீர்கள். உண்மையில், எனக்கு வேறொரு முகமும் இருக்கிறது’ என்கிறார் ஜோஸ் பட்லர். அந்த போட்டித் தொடரில் இங்கிலாந்து அணியை தலைமையேற்று வெற்றிப் பெற செய்திருந்த பட்லருக்கு அதனை தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் அணியில் இடமளிக்கப்படவில்லை. தனது டெஸ்ட் திறன்களை சரிவர பக்குவத்துடன் வெளிப்படுத்த பட்லர் இன்னமும் காத்திருக்க வேண்டியிருந்தது.

முதன்முதலாக டெஸ்ட் போட்டித் தொடரில், பட்லர் அறிமுகமானது இந்தியாவுக்கு எதிராக 2014-ம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில். இங்கிலாந்து அணி 420 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டை பறிகொடுத்திருந்த நிலையில் பட்லர் களமிறங்கினார். அவரது இயல்பான அதிரடி ஆட்டம்தான் அப்போது இங்கிலாந்து அணிக்கு தேவையாக இருந்தது. பட்லர் தன் மீதான எதிர்பார்ப்பை பொய்யாக்கவில்லை. மிக விரைவாக ரன்களை குவிக்கத் துவங்கினார். மூன்று சிக்ஸர்கள், ஒன்பது பவுண்டரிகள் உட்பட பட்லர் குவித்திருந்தது 85 ரன்களை. இதன் மூலமாக, இங்கிலாந்து அணி வலுவான நிலையை அன்றைய போட்டியில் அடைந்திருந்தது.

தனது ஒருநாள் போட்டி அறிமுகத்தில் ஒரு ரன்கூட சேர்க்காமல் ஆட்டமிழந்த பட்லர், இன்றைக்கு சர்வதேச ஒருநாள் அரங்கில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்வதும், டெஸ்ட் போட்டி அறிமுகத்தில் அதிரடியாக விளையாடி 85 ரன்களை குவித்திருந்த நிலையிலும், தொடர்ச்சியாக டெஸ்ட் தளத்தில் தனது இடத்தை அடையாளம் காண முடியாமல் தவிப்பதும் பெரும் முரணாக பட்லரின் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்துக் கொண்டிருக்கிறது.

‘பட்லர், பேட்டிங் செய்ய களமிறங்கும்போது, நாட்ஸை சேர்ந்த மக்கள் தங்கள் டிவியை ஆன் செய்கிறார்கள். வானளாவிய மரியாதையை பட்லருக்கு அவர்கள் வழங்குகிறார்கள். அத்தகையதொரு தாக்கத்தை எனது காலத்தில் வெளிப்படுத்திய இங்கிலாந்து கிரிக்கெட் விளையாட்டாளர்கள் வெகு சொற்பமானவர்கள்தான். கெவின் பீட்டர்சன் அவர்களில் ஒருவர். அவர் களமிறங்கும் போது கைகளில் தேனீர் கப்பை ஏந்தியபடி, டிவியில் முன்னால் பெரும் எதிர்ப்பார்ப்புடன் மக்கள் அமரத் துவங்குவார்கள். ஏனெனில், அன்றைய தினத்தில் பீட்டர்சனிடமிருந்து எத்தகையதொரு இன்னிங்க்ஸ் வேண்டுமானாலும் வெளிப்படலாம். ஜிம்மி ஆண்டர்சன் புதிய பந்துடன், பந்து வீசத் துவங்கும் போது இதே வகையிலான ஆர்வம் பார்வையாளர்களிடத்தில் மிகுந்திருக்கும். அவர்களின் மாற்றாக, இன்றைய காலக்கட்டத்தில் ஜோஸ் பட்லர் பார்வையாளர்களின் முழு கவனிப்பை கோரும் வீரராக வளர்ந்திருக்கிறார்’ என்கிறார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளரான ஸ்டீவ் பிராட்.

பயிற்சி ஆட்டங்களின் போது, தன்னால் சரிவர விளையாட முடியவில்லை என்றாலே குறைந்தது அரைமணி நேரமாவது துயரார்ந்த முகத்துடன் காணப்படும் பட்லர், அவரது டெஸ்ட் திறன் தொடர்ந்து விமரிசனங்களுக்கு உள்ளாகி வந்ததால், பெரும் அவநம்பிக்கையில் உழன்றபடியே இருந்தார். அக்காலத்தில், அவரது மன அழுத்தங்களை கலையை பெரும் வழிவகை செய்தது ஐ.பி.எல் போட்டித் தொடர்தான். ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் அணியில் பங்குபெற்றதன் பின்னர்தான், அவரது நம்பிக்கை பன்மடங்காக பெருகியது.

வார்னேவுக்கு பட்லரின் ஆட்டத்திறன் மீது மிகுதியான நம்பிக்கை உருவாகியிருந்தது. ‘நீ எப்போதும் சிறப்பாக விளையாட தயாராக இருக்க வேண்டும். எந்த ஒரு கடினமான சூழல் நிலவியிருந்தாலும், உனது நம்பிக்கையை மட்டும் கைவிடக்கூடது’ என்று அவ்வப்போது வார்னே பட்லரிடம் சொல்லுவது வழக்கம். அதே போல, ‘ஒரு கேட்பனாக, நான் எனது உறுதியில் இருந்து பின்வாங்காத வரையில், நீயும் எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளக் கூடாது’ என்பதும் வார்னே பட்லருக்கு தெரிவித்திருந்த அறிவுரைகளில் ஒன்று. ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றபடியே வார்னேவின் தலைமை பண்பை பட்லர் கூர்ந்து கவனிக்கிறார். அணியினரிடத்தில் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வளர்த்தெடுக்க உதவும் அவரது சொற்கள் பட்லரின் மனதை கிளர்ச்சியுற செய்தது. ஐ.பி.எல் தொடரில், ஒவ்வொரு நாள் போட்டியும் முடிவடைந்ததற்கு பின்னர், கையில் மதுக் கோப்பையை ஏந்திய நிலையில் வார்னே தெரிவித்திருந்த பல ஆலோசனைகள் பட்லரின் மன சோர்வை முழுமையாக விரட்டியடிக்க பெரும் உதவியாக இருந்திருக்கிறது.

போலவே, பட்லரால் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாட முடியும் என்கின்ற நம்பிக்கையும் வார்னேவிடம் இருந்தது. வார்னேவின் அண்மையில் பட்லர் கழித்திருந்த தினங்கள், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்கிறார் பட்லர். இங்கிலாந்திலும் அதே வகையிலான போட்டிகளை நடத்த வேண்டும் என்பது அவரது விழைவு. அணியில் இடம்பெற காத்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற துடிப்பு மிகுந்த இளம் வீரர்களில் ஒரு கோலியையோ அல்லது ஏபிடிவில்லியர்ஸையோ ஐ.பி.எல் போன்ற போட்டிகள் அடையாளப் படுத்தும் என்பது அவரது மிகுதியான நம்பிக்கை. எனினும், இங்கிலாந்து போன்ற கிரிக்கெட் விளையாட்டை அதிக நேர்த்தியுடன் அணுகுகின்ற தேசத்தில், அத்தகைய போட்டித் தொடர்கள் உருவெடுப்பத்து சற்றே சந்தேகத்திற்குரியதுதான்.

ஐ.பி.எல் போட்டித் தொடர்களின் பின்னர் பட்லரின் ஆட்டப் போக்கே மாற்றமடைந்திருந்தது. மிகத் தீவிரமாக பந்துகளை எதிர்கொள்ளும் முறைமைகள் ஐ.பி.எல் போட்டிகளுக்கு அவர் பின்பற்ற துவங்கினார். எனினும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சிறப்பான ஆட்ட வெளிப்பாடு இன்னமும் எட்டாத தூரத்தில்தான் இருந்துக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட போட்டி பட்லரின் வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2018-ல் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், பட்லர் 114 ரன்களை குவித்திருந்தார். பெரும் நெருக்கடியான சூழலில் தத்தளித்துக் கொண்டிருந்த அப்போட்டியில், இங்கிலாந்து அணியை பட்லர் தனியொருவராக தனது சதத்தின் மூலமாக மீட்டு, வெற்றி அடைய செய்திருந்தார். அவரை தவிர்த்து அவ்வணி வீரர்களில் ஒருவர்கூட 20 ரன்களுக்கு மேலாக குவித்திருக்கவில்லை. முடிவில் அப்போட்டியில், பட்லருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

அன்றைய போட்டியில், எவ்வாறு உறுதி குலையாமல் சீராக அவரால் விளையாட முடிந்தது என்கின்ற கேள்விக்கு, ‘அப்போது என்னை நான் தோனியாக உருவகப்படுத்திக் கொண்டேன். ஒரு இக்கட்டான நிலையை தோனி எப்படி கையாளுகின்றாரோ அதே வகையில், நானும் அன்றைய தினத்தில் செயல்படுவது என்று முடிவு செய்தேன். இறுதியில், தோனியை பின்பற்றியது என்னை வெற்றிக்கு அழைத்துச் சென்றது’ என்கிறார்.

(சிக்ஸர் பறக்கும்…)

Tags : jos butler butler England player cricket Dhoni தோனி கிரிக்கெட் ஜோஸ் பட்லர்

More from the section

39. மகேந்திர சிங் தோனியின் நிறைவேறாத முதல் காதல்! பிரியங்கா ஜா!
38. நான் நிகழ்காலத்தில் வாழ்ந்திட ஆசைப்படுகிறேன்! தோனியின் வெற்றியின் ரகசியம்!
37. கேப்டன் தோனிதான் எனது நாயகன்! இப்படிச் சொன்ன முன்னாள் இந்திய கேப்டன் யார்?
36. ஒரு கிரிக்கெட் வீரருக்குள் ஒளிந்திருக்கும் பல்வேறு திறமைகள்!
35. கிரிக்கெட் உலகின் இரண்டு நண்பர்களின் சுவாரஸ்யமான கதை இது!