வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

34. தோனி தலைமையின் கீழ் விளையாடிய அனுபவம்தான் ஒரு கேப்டனாக எனக்கு கை கொடுத்தது! இப்படி சொன்னவர் யார்?

By ராம் முரளி.| Published: 18th January 2019 10:00 AM

ஒன்பதாம் நாயகன் – பாஃப் டூ ப்ளிஸஸ்

ஏபி டிவில்லியர்ஸுக்கு பிறகான தென் ஆப்பிரிக்க அணியை வலிமைமிக்கதாக முன்னிருத்த வேண்டிய பொறுப்பை ஏற்றிருப்பவர் பாஃப் டூ ப்ளிஸஸ் (Faf du Plessis). இன்றைய தென் ஆப்பிரிக்க அணியின் அனைத்து வகையிலான கிரிக்கெட் வகையிலும் கேப்டனாக தலைமை பொறுப்பில் இருப்பவர் இவர்தான். முன்னதாக, ஏபி டிவில்லியர்ஸும், டூ ப்ளிஸஸும் பள்ளி காலத்தில் இருந்தே ஒன்றாக கிரிக்கெட் விளையாடும் இணையர்களாக இருந்திருக்கிறார்கள். பல தருணங்களில், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டூ ப்ளிஸஸை முன்னிலைப்படுத்தியவரும், அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு நல்லதொரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவரும் டிவில்லியர்ஸ்தான்.

இந்த இரண்டு நண்பர்களின் இணை பல போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி கொள்ள காரணமாக இருந்திருக்கிறது. குறிப்பாக, 2014-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியொன்றில், இவர்களது இணை மூன்றாவது விக்கெட்டுக்கு 206 ரன்களை சேர்த்திருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தென் ஆப்பிரிக்கா அணியின் சிறந்த மூன்றாவது விக்கெட் பார்ட்னர்ஷிப் இதுதான். மிகச் சிறந்த புரிந்துணர்வும், ஒருவர் திறனை மற்றவர் பள்ளி காலத்தில் இருந்தே முழுவதுமாக அறிந்து வந்திருந்ததும், அவர்களது இத்தகைய மிகச் சிறப்பான பல இன்னிங்ஸ்களில் கை கொடுத்திருக்கிறது.

ஏபி டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல அதிர்வுகளை உருவாக்கியவர். மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் பந்துகளை பறக்க விடுகின்ற சாதுர்யத்தால் மிஸ்டர் 360 என்றே அவருக்கு பெயர் வழங்கப்பட்டிருந்தது. அந்தளவுக்கு குறுகிய கால கிரிக்கெட் போட்டிகளின் மீது மிகுதியான ஆளுமை செலுத்தியவராக டிவில்லியர்ஸ் இருந்திருக்கிறார். ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமல்லாது மிகச் சிறந்த விக்கெட் கீப்பராகவும், பின்னர் சிறந்த ஃபீல்டராகவும், தென் ஆப்பிரிக்க அணிக்கு முழு நம்பிக்கையூட்டக் கூடியவராகவும் டிவில்லியர்ஸ் தனது கிரிக்கெட் வாழ்நாள் முழுவதிலும் இருந்திருக்கிறார். அவர் அணியில் இருக்கிறார் என்றாலே, அவருக்கென்றே பிரத்யேகமாக பல வியூகங்களை எதிர் அணியினர் வகுக்க வேண்டியிருக்கும். அவரது விக்கெட்டை வீழ்த்திவிட்டாலே கிட்டதட்ட எதிர் அணியினரின் வெற்றி ஊர்ஜிதப்படுத்தப்பட்டுவிடும். ஏபி டிவில்லியர்ஸ் நவீன கிரிக்கெட் வடிவத்தை உருவகப்படுத்தும் ஒற்றை முகமாக அவரது சர்வதேச அளவிலான ஓய்வுக்கு பின்னரும் நிலைபெற்றிருக்கிறார்.

ஹஸீம் ஆம்லா, குவிண்டின் டி காக், மில்லர் போன்ற பல திறன்மிகுந்த ஆட்ட வரிசை கொண்ட அணிதான் தென் ஆப்பிரிக்கா என்றாலும், ஏபி டிவில்லியர்ஸ் இடத்தை இவர்களில் ஒருவரும் நிரப்பிவிட முடியாது என்பதை அனைவரும் அறிந்தே வைத்திருக்கின்றனர். எளிதில் கட்டுப்படுத்த இயலாத ஆக்ரோஷத்தை கொண்டிருந்த ஆட்ட வகைமை டிவில்லியர்ஸ் உடையது. மிக முக்கியமான ஒரு காலக்கட்டத்தில் (ஸ்மித்துக்கு பிறகு) தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாகவும் சில காலங்களில் டிவில்லியர்ஸ் இருந்திருக்கிறார். எனினும், கேப்டன் பொறுப்பில் தனது பங்களிப்பு அவருக்கு திருப்தி அளிப்பதாக இல்லை.

குறிப்பாக, 2015 உலக கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெளியேறியதை அவரால் எளிதில் எடுத்துக் கொள்ளவே முடியவில்லை. சிறு வயதில் இருந்தே தாழ்வு மனப்பான்மையும், தோல்விகளால் பெரிதளவில் வதங்கிப் போவதும் அவரது இயல்பாகவே இருந்திருக்கிறது. 2015 உலக கோப்பையில் தோல்விக்கு பிறகு மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத டிவில்லியர்ஸின் முகத்தை இப்போதும் கிரிக்கெட் ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கின்றனர். இதனால், தனது கேட்பன் பதவியை துறந்துவிட்டு, அணியில் ஒரு மையமாக, அணியின் வெற்றிக்கு பங்காற்றுகின்ற பேட்ஸ்மேனாக மட்டுமே தனது இடத்தை தளர்த்திக் கொண்ட டிவில்லியர்ஸ், தனக்கு மாற்றாக தென் ஆப்பிரிக்க அணியை வழிநடத்த தகுதியுள்ளவராக முன்மொழிந்தது டூ ப்ளிஸஸைதான்.

டிவிவ்லியர்ஸ் கேப்டனாக இருந்த போதும் டூ ப்ளிஸஸ்தான் துணை கேட்பனாக இருந்தவர். பல தருணங்களில் டிவில்லியர்ஸ் காயம் காரணமாக ஓய்வில் இருக்க வேண்டியிருந்த சூழல்களில் அணியை தலைமை தாங்கிய அனுபவமும் டூ ப்ளிஸஸுக்கு இருந்திருக்கிறது. அதே போல தென் ஆப்பிரிக்காவின் இருபது ஓவர் கிரிக்கெட் அணியை 2012ல் இருந்தே டூ ப்ளிஸஸ்தான் தலைமை தாங்கி வருகிறார்.  

2011-ம் வருடத்தில் இந்திய அணிக்கு எதிரான போட்டியொன்றில் தனது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அறிமுகத்தை கண்ட டூ ப்ளிஸஸ் அப்போட்டியில் 60 ரன்களை குவித்து தன் மீதான அணி நிர்வாகத்தினரின் நம்பிக்கையை உறுதிப்படுத்தினார். தனது டெஸ்ட் அறிமுகத்தின் போதும், சதம் அடித்து ஒரு நிலையான கிரிக்கெட் வாழ்வில் அடியெடுத்து வைத்திருந்தார். அடிலெய்டில் நடைபெற்ற அப்போட்டியில் காயம் காரணமாக டூமினி அணியில் இடம்பெற முடியாமல் போனதால், டூ ப்ளிஸஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அன்றைய போட்டியில் 430 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தனது இன்னிங்க்ஸை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி மளமளவென தனது விக்கெட்டுகளை ஒன்றின் பின் ஒன்றாக பறி கொடுத்துக் கொண்டிருந்தது. காலிஸ், ஏபி டிவில்லியர்ஸ் போன்றவர்கள் கூட பெரியளவில் ரன்களை சேர்க்கவில்லை. இந்த நிலையில், 77 ரன்களில் 4 விக்கெட்டுகளை பறி கொடுத்திருந்தபோது டூ ப்ளிஸஸ் களத்தில் இறங்கினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டே இருந்தாலும், டூ ப்ளிஸஸ் வெகு நிதானமாக களத்தில் பந்துகளை எதிர் கொண்டார். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் உறுதி இதனால் குலைகிறது. எந்தவொரு வியூகமும், திட்டமிடலும் டூ ப்ளிஸஸின் ஆட்ட சாதூர்யத்தின் முன்னால் எடுபடவில்லை. மெல்ல மெல்ல தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஒரு ஸ்திரத்தன்மையை அந்த போட்டியில் டூ ப்ளிஸஸ் உருவாக்குகிறார். முடிவில், 376 பந்துகளை எதிர் கொண்ட அவர், 110 ரன்களை குவித்து ஆட்டமிழக்கமால் களத்தில் உறுதியுடன் நிலைத்துவிட்டார். தோல்வியின் கரையிலிருந்து விடுபட்டு அன்றைய போட்டி டிராவில் முடிவடைந்தது. முதல் இன்னிங்க்ஸில் 78 ரன்களும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 110 ரன்களையும் சேர்ப்பித்து அணிக்கு பெரும் பங்காற்றியதால், அப்போட்டியில் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த நான்காவது தென் ஆப்பிரிக்க வீரர் என்கின்ற பெருமை டூ ப்ளிஸஸின் வசம் வந்து சேருகிறது. சர்வதேச தளத்தில் தனது இருப்பை ஒரு சிறப்பான இன்னிங்க்ஸ் வாயிலாக இப்போட்டியில் டூ ப்ளிஸஸ் வெளிக்காண்பித்தார்.

பொதுவாக, டூ ப்ளிஸஸின் ஆட்டப் போக்கு வெகு நிதானமானது. ஏபி டிவில்லியர்ஸ் போன்று அடுத்தடுத்த உறுதியான ஷாட்டுகளை விளாசக் கூடிய பண்புடையவர் அல்ல அவர். காலிஸ் போல அணியின் தேவைக்கேற்ப தனது ஆட்டத்தை சீராக வளர்த்தெடுக்க கூடியவர் டூ ப்ளிஸஸ். ஒரு நிலை வரையில் வெகு சொற்ப ரன்களையும், பின்னர் சூழலின் தீவிரத்தை பிரதிபலிக்கும் வகையிலான சிக்ஸர்களை பறக்க விடுவதிலும் அவர் திறன்மிக்கவராக இருக்கிறார். இதே வகையிலான ஆட்ட சாதூர்யத்தை நாம் இந்திய அணியின் முன்னால் கேப்டனான தோனி இடத்தில் உணரலாம். மற்ற வீரர்களின் முழு திறன்களையும் வெளிப்படுத்தவும், வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்பளிக்கும் வகையில், மறுமுனையில் அமைதி காத்திருக்கும் தோனி, பின்னர் கட்டாயமாக தான் அதிரடியாக விளையாடியே ஆக வேண்டும் என்கின்ற நிலையில் மட்டுமே பந்துகளை உறுதியான ஷாட்டுகளுடன் எதிர் கொள்ளக்கூடியவர்.

ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் தலைமையின் கீழ் விளையாடிய டூ ப்ளிஸஸ், ‘தோனி தலைமையின் கீழ் விளையாட நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். ஒரு கேப்டனாக எப்படி செயல்பட வேண்டும் என்பதை அவர் தலைமையின் கீழ் விளையாடிய தினங்களில்தான் கற்றுக் கொண்டேன். பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமெங் மற்றும் கேப்டன் தோனியிடத்தில் ஒரு இளைய கேப்டனாக கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. சென்னை அணியில் விளையாட துவங்கியபோது, தென் ஆப்பிரிக்க கேப்டனாக எனக்கு போதிய அனுபவம் இன்னமும் உருவாகாமல் இருந்தது. அதனால், தோனியின் தலைமை பண்பை கூர்ந்து அவதானித்தேன். அணி வீரர்களின் திறன்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள தெரிந்தவர் அவர். முன் அனுபவம் இல்லாத விளையாட்டாளரை அவரால் மிகச் சிறந்த வீரராக பட்டை தீட்ட முடியும். அவர் எப்போதும் அமைதியாகவே இருப்பார். ஏராளமான திட்டமிடல்களை வகுப்பது அவரது பாணியும் அல்ல. எனினும், உள்ளுணர்வால் முன் செலுத்தப்படுகின்ற, சூழலுக்கு தக்க சிறந்த முடிவுகளை எடுப்பதில் அவருக்கு நிகரான ஒருவரை நான் அறிந்திருக்கவில்லை. இந்திய அணி அவரின் தலைமையில் குவித்திருக்கின்ற விருதுகளே அதற்கு சான்றாக நிற்கின்றன. என் போன்ற இளைய கேப்டன்கள் அணியை வழிநடத்துவது தொடர்பாக, அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது’ என்கிறார்.

தென் ஆப்பிரிக்கா அணி டூ ப்ளிஸஸின் தலைமையில் நல்லதொரு நிலையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. பல தொடர்களில் வெற்றியும் பெற்றிருக்கிறது. எனினும், கடந்த சில வருடங்களில் அவ்வணியின் ஒற்றைய உறுதியான முகமாக திகழ்ந்து கொண்டிருந்த ஏபி டிவில்லியர்ஸின் ஓய்வுக்கு பிறகு, இன்னும் கூடுதல் பொறுப்பும், சுமையும் டூ ப்ளிஸஸின் முன்னால் எழுந்துள்ளது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இன்னிங்க்ஸ்களை விளையாடி இருப்பதோடு, தோனி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் போன்ற இரு சிறந்த கேப்டன்களின் தலைமையின் கீழ் விளையாடியிருக்கும் அனுபவமும் அவரிடம் இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா அணியின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு அவரது இந்த அனுபவம் கை கொடுக்கும் என்று உறுதியாக நம்பலாம். ஒரு சராசரி விளையாட்டாளர் என்கின்ற நிலையில் இருந்து இன்றைக்கு தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக வளர்ச்சியுற்றிருக்கும் டூ ப்ளிஸஸின் பயணத்தை அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்.

சிக்ஸர் பறக்கும்…

Tags : Stephen Fleming Faf Du Plessis

More from the section

39. மகேந்திர சிங் தோனியின் நிறைவேறாத முதல் காதல்! பிரியங்கா ஜா!
38. நான் நிகழ்காலத்தில் வாழ்ந்திட ஆசைப்படுகிறேன்! தோனியின் வெற்றியின் ரகசியம்!
37. கேப்டன் தோனிதான் எனது நாயகன்! இப்படிச் சொன்ன முன்னாள் இந்திய கேப்டன் யார்?
36. ஒரு கிரிக்கெட் வீரருக்குள் ஒளிந்திருக்கும் பல்வேறு திறமைகள்!
35. கிரிக்கெட் உலகின் இரண்டு நண்பர்களின் சுவாரஸ்யமான கதை இது!