சனிக்கிழமை 23 மார்ச் 2019

35. கிரிக்கெட் உலகின் இரண்டு நண்பர்களின் சுவாரஸ்யமான கதை இது!

By ராம் முரளி.| Published: 25th January 2019 10:00 AM

 

ஏபி டிவ்லியர்ஸ் மற்றும் பாஃப் டூ ப்ளிஸஸ் இருவருக்கும் இடையிலான நட்பு அவர்களது மிகச் சிறிய வயதிலிருந்தே துவங்கியிருக்கிறது. கிட்டதட்ட 15 வயதில் இருந்து இருவரும் இணைந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். அஃப்பிஸில் கல்வி பயின்று கொண்டிருந்த தினங்களில் இருவரும் மாணவர் விடுதியில் ஒரே அறையில்தான் தங்கியிருந்தார்கள். 1998-ல் இருந்து 2002 வரையில் இருவரும் அறைத் தோழர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஒருவரின் மீதான மற்றவரின் நேசிப்பு ஆழமிக்கது. இப்போதும் வரையில் கூட அந்த நட்பு எவ்வித மனத்தடங்களும் இல்லாமல் தொடர்ந்தபடியே இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் எப்போதும் ஊக்கமளிக்கக் கூடியவர்களாகவே இருந்து
வருகிறார்கள்.

கிரிக்கெட்டுக்கு வெளியில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இவ்விருவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாகவே இருக்கிறார்கள். 2010-ம் வருடத்தில் ஏபி டிவில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்க பாடலாசியரான ஆம்பி டூ ப்ரீஸ் உடன் இணைந்து 'உங்கள் கனவுகளை நிஜமாக்குங்கள்’ என்கின்ற பாடல் விடீயோ ஒன்றை உருவாக்கியபோது அதில், டூ ப்ளிஸஸை பங்கேற்க செய்திருந்தார். அதே போல டூ ப்ளிஸஸின் திருமணத்தின் போது அவரது மிகச் சிறந்த நண்பராக, மாப்பிள்ளை தோழனான உடன் நின்றிருந்தவர் டிவில்லியர்ஸ்தான். டூ ப்ளிஸஸ் சமையல் குறிப்புகள் சிலவற்றை டிவில்லியர்ஸுக்கு அவரது நிச்சயத்தார்த்தின் பின்பாக வழங்கியிருக்கிறார். அந்தளவிற்கு இவ்விரு நண்பர்களின் வாழ்க்கையும் பிணைக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக, இவர்கள் இருவரின் திறன்கள் ஒப்பு நோக்கப்படுகையில், டிவில்லியர்ஸைதான் மிகுந்த திறன் மிக்கவராக பெரும்பாலானோர் முன்னிருத்துகிறார்கள். மைதானம் முழுமைக்கும் பந்துகளை சிதறடிக்கும் அவரது அசாத்தியமான ஷாட்டுகள் இயல்பாகவே, எந்தவொரு பார்வையாளரையும் வசீகரிக்கக் கூடியதுதான். பல சர்வதேச போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிப் பெற டிவில்லியர்ஸ் காரணமாக இருந்திருக்கிறார். இன்றைய தேதியில், ஒரு அபாயகரமான கிரிக்கெட் அணி என்கின்ற நிலையை தென் ஆப்பிரிக்கா அடைய பெரும் காரணமாக அமைந்தவர் டிவில்லியர்ஸ்தான். 

எனினும், டிவில்லியர்ஸை போலவே, டூ ப்ளிஸஸும் மிகுதியான திறன் வாய்ந்தவர்தான் என்பதில் சந்தேகமில்லை. தேவைக்கு தகுந்தாற் போல தனது ஆட்ட வகைமையை மாற்றி அமைத்துக் கொள்வதில் டூ ப்ளிஸஸ் சாமர்த்தியமானவர். அவரால், வெகு எளிதாக அதிரடியாக விளையாடி ரன்களை விரைவாக சேர்க்க முடியுமென்றாலும், அணியை ஒரு சீரான போக்குடன் வழிநடத்தி செல்வதில்தான் தனது முழு கவனத்தையும் அவர் குவித்திருப்பார். வரிசையாக அதிரடியாக விளையாடக் கூடிய ஆட்டக்காரர்களை கொண்ட தென் ஆப்பிரிக்க அணியில் ஒரு நிதானமான ஆட்டப் போக்கை முன்னெடுக்க கூடியவராக டூ ப்ளிஸஸ் இருந்து கொண்டிருக்கிறார்.

சிறு வயதில் டூ ப்ளிஸஸ் மற்றும் ஏபி டிவில்லியர்ஸுக்கு பயிற்சியாளராக இருந்த போட்ஸ், 'அக்காலங்களில், நான் டூ ப்ளிஸஸைதான் வெகுவாக நேசிக்கிறேன் என்று டிவில்லியர்ஸ் நினைத்து கொண்டார். ஆனால், உண்மை அதுவல்ல. நான் இருவரையுமே மிகுதியாக விரும்புகிறேன். டிவில்லியர்ஸ் புரிந்து கொள்ளாதது என்னவென்றால், ஒரு போட்டியை வெற்றியின் திசையாக நகர்த்திச் செல்ல வேண்டிய சூழல் நிலவும் போது நான் டூ ப்ளிஸஸையே பேட்டிங் செய்ய களத்துக்கு அனுப்பி வைப்பேன். ஏனெனில், டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டமும், பந்துகளை விளாசும் பண்பும் எனது இருதய துடிப்பை பல மடங்காக உயர்த்திவிடும்’ என்கிறார். டிவில்லியர்ஸ் கிரிக்கெட் விளையாடும் போது ஒருவிதமான பரபரப்பு களத்தில் தொற்றிக் கொள்கிறது என்றால், டூ ப்ளிஸஸ் மைதானத்தில் நிதானத்தை கட்டியெழுப்புவராக இருக்கிறார்.

பயிற்சியாளர் போட்ஸ் தலைமையில் பயிற்சி பெற்றது டூ ப்ளிஸஸுக்கு நல்லதொரு அனுபவத்தை உண்டாக்கியிருந்தது. பள்ளியில் இணைந்திருந்த துவக்க தினங்களில் லெக் ஸ்பின்னராக அறியப்பட்ட அவர், போட்ஸ் தலைமையின் கீழ்தான் மெல்ல மெல்ல ஒரு பேட்ஸ்மேனாக உருவெடுத்திருக்கிறார். போலவே, அப்போது விக்கெட் கீப்பராகவும், 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கக் கூடியவராகவும் இருந்த ஏபி டிவில்லியர்ஸ் நாள்போக்கில் தனது பேட்டிங் திறன்களை வளர்த்தெடுத்து, துவக்க நிலையில்
களமிறங்க துவங்கினார்.

பள்ளியில் நடைபெற்று வந்த மாலை நேர கிரிக்கெட் பயிற்சிகளின் மீது டூ ப்ளிஸஸுக்கு அதீத ஆர்வம் பெருகியிருந்தது. தினமும் தவறாமல் பயிற்சிகளில் அவர் உற்சாகத்துடன் கலந்து கொள்வார். மாணவர் விடுதி அறையில் தங்கியிருந்த அவரது தினசரிகளில் பயிற்சி என்பது ஒரு அங்கமாகவே மாறியிருந்தது. இந்த நிலையில், ஒரு நாள் சோர்ந்த முகத்துடன் டூ ப்ளிஸஸ் போட்ஸை நெருங்கிச் செல்கிறார். தனது அறை கதவு தாழிடப்பட்டிருப்பதாகவும், சாவியை தான் தொலைத்து விட்டதாகவும் சொல்கிறார். அவரது கிரிக்கெட் உடைமைகள் அறையினுள் இருக்கிறது. அதனால், அன்றைய தினத்தில் தன்னால் பயிற்சியில் பங்கேற்க இயவில்லை என்று தெரிவிக்கிறார். போட்ஸுக்கு அவர்மேல் சந்தேகம் உண்டாகிறது. பயிற்சி வகுப்பை புறக்கணிப்பதற்காக டூ ப்ளிஸஸ் பொய்யுரைக்கிறார் என்று நினைத்துக் கொண்டர். எந்தவொரு காரணமும் ஏற்றுக் கொள்ள மாட்டாது. நீ பயிற்சியில் கலந்து கொண்டே ஆக வேண்டும், என்று கண்டிப்புடன் தெரிவிக்கிறார். துயருற்ற முகத்துடன் அவரிடமிருந்து டூ ப்ளிஸஸ் விலகிச் செல்கிறார்.

சில நிமிடங்களில் துவங்கிய பயிற்சியில் மற்ற மாணவர்களுக்கு மத்தியில் டூ ப்ளிஸஸை அன்றைய தினத்தில் போட்ஸால் பார்க்க முடிகிறது. வழக்கமான உற்சாகம் அவரிடம் மிகுந்திருக்கிறது. போட்ஸ் அவரை கவனித்தபடியே இருக்கிறார். பயிற்சிகள் முழுவதுமாக நிறைவு பெற்றதும், அவரை நெருங்கி, 'இப்போது சாவி எப்படி கிடைத்தது?’ என்று கேட்டார். டூ ப்ளிஸஸ் அவரது கேள்வியை மறுத்து, 'இப்போதும் சாவி கிடைக்கவில்லை சார்’ என்றார். அதன் பிறகான விசாரணையில்தான், தனது அறை ஜன்னலை டூ ப்ளிஸஸ் உடைத்துக் கொண்டு உள் நுழைந்திருக்கிறார் என்பது போட்ஸுக்கு புரியத் துவங்கியது. வியப்பும், விநோதமும் ஒருங்கே உண்டாக மீண்டும் டூ ப்ளிஸஸிடம், 'ஏன் இப்படி செய்தாய்?’என்று போட்ஸ் கேட்க, வெகு அசால்ட்டாக 'நீங்கள்தானே எந்தவொரு காரணத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தீர்கள். எனக்கும் கிரிக்கெட் பயிற்சி அவசியமானது. அதனால்தான் ஜன்னலை உடைத்தேன்’ என்றார் டூப்ளிஸஸ். அந்த அளவிற்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது தீவிர பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தவர் அவர் அன்றைய கால நினைவுகளை சிறிய புன்னகையுடன் நினைவுகூருகிறார் போட்ஸ்.

பள்ளி கல்வி முடிவடைந்ததும், ஏபி டிவில்லியர்ஸை போலவே விளையாட்டு அறிவியல் துறையில் கல்லூரி பயிலலாம் என்கின்ற எண்ணம் டூ ப்ளிஸஸுக்கு உருவானது. அவரது பெற்றோரும் அவரை கல்லூரி பயில வலுயுறுத்தியபடியே இருந்தார்கள். ஆனால், கல்லூரிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் தினத்தில் அங்கு குழுமியிருந்த எண்ணற்ற இளைஞர்களின் எண்ணிக்கை காரணமாக, டூ ப்ளிஸஸ் அவ்வெண்ணத்தில் இருந்து பின்வாங்கிவிட்டார். அவரது மனம் முழுக்க முழு நேரமும் கிரிக்கெட் விளையாட வேண்டுமென்கின்ற எண்ணமே நிரம்பியிருந்தது. ஏபி டிவில்லியர்ஸும் வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே கல்லூரிக்கு சென்றுவிட்டு, படிப்புக்கு முழுமையாக குட் பை சொல்லிவிட்டார். அவர்கள் இருவருக்கும் வேறொரு களம் அப்போது காத்திருந்தது.

ஒருபுறம் டூ ப்ளிஸஸ் உள்ளூர் போட்டிகளில் தனது கவனத்தை முழுமையாக குவித்துக் கொண்டிருக்க, ஏபி டிவில்லியர்ஸின் வளர்ச்சி அபரிதமாக இருந்தது. அவர் தேசிய அளவில் இருந்து மிக விரைவாக சர்வதேச அணியில் இடம்பெற்று தனது விளாசல்களால் தனித்த கவனிப்பை அணியினிரிடத்திலும், பார்வையாளர்கள் மத்தியிலும் உருவாக்கிக் கொண்டிருந்தார். இருவருக்கும் இடையிலான வெளி அதிகமாகிக் கொண்டே போனது. உள்ளூர் போட்டிகளில் விளையாடியபடியே தனது நண்பரின் வளர்ச்சியையும், திறன்களையும், பந்துகளை எதிர்கொள்கின்ற விதங்களையும் கூர்ந்து அவதானித்துக் கொண்டிருந்தார் டூ ப்ளிஸஸ். மிக நுணுக்கமாக டிவில்லியர்ஸை அவர் ’ஸ்டடி’ செய்து கொண்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் தனது காலத்துக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில், டைட்டன்ஸ் அணியில் விளையாடிக் கொண்டிருந்த அவருக்கு, அவ்வணியின் பயிற்சியாளர் மேத்யூ மெய்னார்ட், ஒரு தொடரில் ஆட்ட வரிசையில் துவக்க நிலையில் களமிறங்கும் வாய்ப்பு வழங்குகிறார். அது டூ ப்ளிஸஸுக்கு மிகுந்த முக்கியமானதாக இருந்தது. தனது திறன்களை நிரூபிக்க அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஒரு நல்வாய்ப்பாக அத்தொடரை அவர் பயன்படுத்திக் கொண்டார். நான்கே போட்டிகளில், 3 சதங்கள் உட்பட, 599 ரன்களை குவித்து ஒட்டுமொத்த அணி வீரர்களையும், பயிற்சியாளரையும் புருவம் உயர்த்த செய்தார். அப்போதிலிருந்து அவரது வாழ்க்கை ஏறுமுகமாகவே இருந்தது.

மெல்ல சர்வதேச அணியில் விளையாடும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. முதலில் ஆடும் பதினொரு நபர்களில் ஒருவராக சேர்க்கப்படவில்லை என்றாலும், களத்தில் யாராவது ஒரு வீரருக்கு காயம் ஏற்படும்போதும், ஓய்வு அவசியமாகும் போதும், அவர்களுக்கு மாற்றாக டூ ப்ளிஸஸ் மைதானத்தில் களத்தில் இறக்கிவிடப்படுவார். தனது ஒருநாள் போட்டி அறிமுகத்தை காணும் முன்பாக, ஓரிரு முறை இவ்வாறு மாற்று ஆட்டாக்காரராக களமிறங்கியிருக்கிறார் டூ ப்ளிஸஸ். பீல்டிங் செய்வதிலும் பெருவிருப்பம் கொண்டிருக்கும் அவர் தனக்கு வழங்கப்படுகின்ற எந்தவொரு சந்தர்ப்பத்தையும் தவறவிடுவதாக இல்லை.

கிட்டதட்ட ஏபி டிவில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம்பெற்றதற்கும், டூ ப்ளிஸஸ் அணியில் தனக்கென ஓரிடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும் இடையில் ஆறேழு வருடங்கள் கடந்திருந்தன. எனினும், அவரது வருகையால் வெகுவாக மகிழ்ச்சியுற்றது ஏபி டிவில்லியர்ஸ்தான். சிறு வயதிலிருந்து ஒன்றாக பயணித்திருக்கும் இவ்விருவரும் இப்போது ஒற்றைய அணியில், அதுவும் தென் ஆப்பிரிக்காவின் சர்வதேச அணியில் இடம்பெற்றிருந்தார்கள். ஏபி டிவில்லியர்ஸ் மனதில் பெரும் மகிழ்வு உருவாகியிருந்தது. சந்தர்ப்பம் வாய்திடும் போதெல்லாம் தனது நண்பரின் திறன்களுக்கு புகழாரம் சூட்ட டிவில்லியர்ஸ் தவறியதே இல்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டித் தொடர் ஒன்றில் டூ ப்ளிஸஸ் மூன்று சதங்களை அடித்து, அத்தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்ற பெரும் காரணமாக இருந்தபோது, 'டூ ப்ளிஸஸ் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அவர் வெளிப்படுத்தியிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்ட வெளிப்பாடு இது. எனினும், இதெல்லாம் அவரால் சாத்தியம்தான் என்பதில் எப்போதுமே எனக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது. இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கும் ஒருவர் இத்தனை உறுதியாக நெடு நேரம் நிலைத்திருக்கும் ஆற்றலை பெற்றிருப்பது அணிக்கு மிக சிறந்த பங்களிப்பை வழங்கும். கிரிக்கெட் நுணுங்களை பற்றி நன்கு அறிந்திருக்கும் டூ ப்ளிஸஸ் அவ்விடத்தில் மிகுந்த பங்களிப்பை ஆற்றுகிறார்’ என்றார்.

சர்வதேச தென் ஆப்பிரிக்கா அணியில் இடம்பெறுவதற்கான தனது நீண்ட கால காத்திருப்பு குறித்து டூ ப்ளிஸஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: 'நான் எனது காலத்தில் மேலும் மேலும் வளர்ச்சி அடைவேன் என்று நம்புகிறேன். தென் ஆப்பிரிக்கா அணியில் இடம் கிடைத்ததற்கு பிறகுதான், எனது மனம் அமைதியுற்றது. இப்போது மிகவும் லகுவாக என்னை உணருகிறேன். தொடர்சியாக நிறைய கிரிக்கெட் விளையாடுவதன் மூலமாக எனது ஆட்டத்தை செறிவாக்கிக் கொள்ள முடியுமென்று உறுதியாக நம்பிக்கை கொண்டிருந்தேன். இறுதியில் அப்படியே தான் நிகழ்ந்திருக்கிறது. எனது ஆட்டம் செறிவின் பாதையில் பயணிக்க துவங்கியிருக்கிறது’.

சிக்ஸர் பறக்கும்…

Tags : faf du plessis ab de villiers cricket south africa கிரிக்கெட் பாஃப் டூ ப்ளிஸஸ் ஏபி டிவ்லியர்ஸ்

More from the section

இது சிக்ஸர்களின் காலம்! இறுதி அத்தியாயம் 
42. ஓய்வுக்குப் பிறகான எனது காலமும் ஸ்டம்புகளுடன்தான் கழியும்! தோனி பேட்டி!
41. தேசிய கொடி கம்பீரத்துடன் மைதானத்தில் பறந்த தினம் அது! சிக்ஸர்களாய் விளாசிய கேப்டன் தோனி!
40. உலகக் கோப்பை வெற்றி என்பது வெறும் டீஸர் மட்டுமே! சைபரிலிருந்து சாதனை வரை மகேந்திர சிங் தோனி!
39. மகேந்திர சிங் தோனியின் நிறைவேறாத முதல் காதல்! பிரியங்கா ஜா!