வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

குவியத்தின் எதிரிகள் - 16. வெள்ளையா இருக்கறவன்..

By சுதாகர் கஸ்தூரி.| Published: 21st April 2018 12:00 AM

 

ஸ்டீபன், அந்த வருடம் பதவி உயர்வை எதிர்பார்த்திருந்தார். குறைந்தது 15% ஊதிய உயர்வுடன், கார் கிடைக்கும். குடியிருப்பு வளாகத்தில், நாலு மாதத்துக்கு முன்பே சொல்லிவைத்து, கார் நிறுத்துவதற்கு, வேப்ப மரத்தினடியில் இடமும் உறுதியாகிவிட்டது.

பதவி உயர்வு வரவில்லை. அதோடு காரும்.

ஸ்டீபன், புள்ளிவிவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார். எத்தனை மில்லியன் டாலர்களுக்கு அவரது விற்பனை இருந்தது? அவரது குழுவின் மொத்த செலவு என்ன? ஒவ்வொரு ஆளுக்கும், சராசரி லாபம் எத்தனை டாலர்கள் என்பதை அவர் புட்டு புட்டு வைத்து, தன் பதவி உயர்வை உறுதிப்படுத்துவார் என எதிர்பார்த்தோம்.

ஆனால், ஸ்டீபனின் எதிர்விளைவு நாங்கள் எதிர்பார்த்தபடி இல்லை. ஒரு வெள்ளிக்கிழமை மாலை, நண்பர்களுடன் பீர் அருந்திக்கொண்டிருக்கும்போது, ஸ்டீபன் பொங்கினார். ‘எல்லாம் அந்த ஸ்டெல்லாவால் வந்த்து. சந்தேகமேயில்ல. அவதான் பாஸ்கிட்ட வேற மாதிரி போட்டுக்கொடுத்திருக்கா.’

‘ஸ்டீபன், ஸ்டெல்லா உங்களைப் பத்தி ஏன் பேசப்போறா? அவளுக்கும் உங்களுக்கும் ஒரு போட்டியுமே இல்லையே?’

‘உங்களுக்குத் தெரியாது’ சற்றே அடங்கியபின், மெதுவாகச் சொன்னார். அவளோட பையனுக்கு எங்க சர்ச் மூலமா, செயிண்ட் சேவியர்ஸ் காலேஜ்ல இடம் வாங்கித்தரச் சொன்னா. எங்க ஃபாதர் செய்யல. அந்த கோபம்.’

ஸ்டெல்லாவின் பையனுக்கு மிக நல்ல மதிப்பெண்கள். சேவியர்ஸ் கிடைக்காவிட்டாலும், மிக நல்ல கல்லூரி ஒன்றிலேயே சேர்ந்திருந்தான். ஸ்டெல்லா அவன் படிப்பைப் பற்றி ஒரு குறையும் சொன்னதில்லை. ஸ்டீபன் மீது அவருக்கு ஒரு கோபம் இருந்தது என்னமோ உண்மை.

ஸ்டீபன் சொன்னதில் நியாயம் இருந்திருக்கலாம். அதற்கு ஒரு நிகழ்தகவு 50% வைத்துக்கொண்டாலும், ஸ்டெல்லாவைத் தெரிந்தவர், 20%-க்கு மேல் அந்தக் கதைக்கு நம்பகத்தன்மை கொடுக்கமாட்டார்கள். மொத்தத்தில், அது 10%-க்கு மேல் நம்பமுடியாத கதை. ஆனால், ஸ்டீபனுக்கு 100% நம்பக்கூடிய நிகழ்வு.

இந்தப் பிறழ்வு, நமக்குப் பலமுறை வரும். சில நிகழ்வுகளைக் குறித்தும், தடைகளைக் குறித்தும் நமக்கென ஒரு அனுமானம் இருக்கும். நிகழ்வு நடந்தபின், நமது அனுமானத்தை மிகப்பெரிய அளவில் நம்பகத்தன்மை கொடுத்து வலுவாக்கிவிடுவோம்.

‘போன வாரம் சந்திரகாந்த்துக்கு மாரடைப்பு வந்துச்சாமே? அப்பவே சொன்னேன். இவரு கன்னாபின்னான்னு தின்றாரு. ஒரு வயசுக்கு அப்புறம், தீனிய குறைச்சுக்கணும். அதோட உடற்பயிற்சி செய்யணும். இவரு காலேல எட்டு மணி வரைக்கும்ல தூங்குவாரு. ஏழரை மணிக்கு செல்போன்ல கூப்பிட்டுப் பாருங்க, எடுக்கவே மாட்டாரு…’

சந்திரகாந்த், வயிற்றில் ஒரு ஆபரேஷனுக்குப் பிறகு மிகக் குறைவாக (ஆனால் அடிக்கடி) உண்பார் என்பது பலருக்குத் தெரியாது. அவர் அடிக்கடி என்னமோ சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார் என்பதால், பெருந்தீனி தின்கிறார் என்ற ஒரு எண்ணம் பலருக்கு வந்துவிட்டது.

காலையில் அவர் நடைப்பயிற்சி செய்கிறார் என்பதும், ஏழே காலில் இருந்து எட்டு மணி வரை அவர் தியானம், பூசை என ஈடுபடுகிறார் என்பதும் பலருக்குத் தெரியாது. அந்த நேரத்தில் அவர் போன் அடித்தால் எடுக்கமாட்டார் என்பதன் காரணம், உறக்கமல்ல.

இந்த இரண்டாம் அனுமானத்துக்கு என்ன காரணம்? முதலில் சொன்ன குற்றச்சாட்டுக்காவது அவர் அடிக்கடி உண்பதைப் பலர் பார்த்திருக்கிறார்கள் எனலாம். அவர் தூங்குகிறார் என்பதை எவரும் கண்டதில்லை. இருப்பினும் ஏன் இந்த தவறான கருத்து?

நாம், ஒருவர் ஒரு நடைமுறைத் தவறைக் கொண்டிருக்கிறார் என்றால், பல நடைமுறைத் தவறுகளை அவருக்குக் கற்பித்து விடுவோம். அவை தொடர்புடையதாக இருக்க வேண்டுமென்பதில்லை. நடைமுறைத் தவறு என்ற வட்டத்தில் அடங்கினால் போதும். எனவே, அவர் அடிக்கடி உண்கிறார் என்றதும், அவர் அதிகம் உறங்குவார், நேர விரயம் செய்வார், சுத்தம் சுகாதாரம் குறைவாக இருக்கும் என்று மனதில் நீட்டித்துவிடுவோம். அவை பொய்யென உறுதிப்படுத்தும்வரை, அவற்றை மனதுள்ளே மறைமுகமாகக் கொண்டிருப்போம்.

ஏதோ சில வெள்ளைக்காரர்கள் கனவான்களாக நடந்துகொண்டார்கள், தலைவர்களாக வெற்றி கொண்டிருக்கிறார்கள் என்று படித்ததால், அனைத்து வெள்ளைக்காரர்களும், எல்லா நேரத்திலும் கனவான்களாகவே இருப்பார்கள் என்ற சாய்வு நிலை நீட்டீப்புதான், ‘வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான்’ என்ற கருத்து.

பள்ளியில், ஒரு மாணவன்/மாணவி சில பாடங்களில் சரியாகப் படிக்கவில்லையென்றால், ஆசிரியர்களே அவர்களைப் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புக் கொடுப்பதில்லை: நன்றாகப் படிக்கும் மாணாக்கர்களுக்கு அதிகமாக வாய்ப்புகள், அவர்களது திறமை அவற்றில் அதிகமில்லாது போயினும், கொடுக்கப்படுகிறது – இந்த ஆசிரியர்களின் சாய்வு நிலை பற்றிப் பல ஆய்வுக் கட்டுரைகள் வந்திருக்கின்றன. இதுவும், ஒரு நிகழ்வின் தொடராகப் பல நிகழ்வுகளில் எதிரொலிக்கும் எதிர்வினை என்றே சொல்லலாம்.

டாட்டா கம்பெனியின் இண்டிகா, சந்தையைச் சந்தித்தபோது, அதன் மிகப்பெரிய போட்டி, பன்னாட்டுக் கார் கம்பெனிகளோ, இந்தியத் தயாரிப்பான மாருதி சுசூகியோ அல்ல. சந்தையில் அதுவரை டாட்டா என்றாலே கனரக வாகனங்கள், பேருந்துகள் என்றிருந்த சாய்வுக் கண்ணோட்டத்தில், அதன் கார், மிதமான சொகுசுக் கார் என்ற அளவில் மதிக்கப்படாது போனதே காரணம். அதன் சந்தைப்படுத்துதல், டாட்டாவின் பிம்பத்தைத் தாண்டி வரவேண்டி இருந்தது.

இது பெரிய சோதனை என்பதை டாட்டா உணர்ந்திருந்தது. எனவே, இண்டிகாவை வாடகைக்கார் என்ற சந்தைப்பிரிவில் பொருத்திவைத்தது. ஆனால், இதே வெற்றி அதன் நேனோ காருக்குக் கிடைக்கவில்லை. ஏதோ புதியதொரு முயற்சி என்றளவிலேயே நேனோவை சந்தை எதிர்கொண்டது. விலை குறைவு, டாட்டாவின் தரம் என்பது இரண்டாம்பட்சமாகவே மக்களுக்குத் தோன்றியது. சாய்வுநிலைச் சிந்தனை அத்தகையது.

சாய்வுநிலை நீட்டிப்பு பிறரைக் குறித்தே இருக்க வேண்டும் என்பதில்லை. நம்மைக் குறித்த பல எதிர்மறை எண்ணங்கள், நேர்மறை எண்ணங்கள் நமது பல திறமைகளை, குணங்களை வெளிவரச் செய்யாமல் தடுக்கின்றன. எனக்குக் கணக்கு வராது; எனவே கணினித் துறை எனக்கு சரிப்படாது. எதுக்கு புதுசா கத்துக்கப்போயி வருந்தணும்? ‘இந்த கம்பெனியிலயே இருந்து செட்டில் ஆயிருவோம்’ என்பவர்க்கு, கணினித் துறையில் அனைவரும் புரோக்ராம் எழுதுவதில்லை; அவரது துறை பற்றி அவருக்கு இருக்கும் அறிவு, துறை வல்லுநர் என்றளவில் பெரிய அளவில் வளர வைக்கும் என்பது தெரியாமல் போய்விடுகிறது.

இதேபோல், ‘எனக்கு எதுவும் புதுசா செய்யப் பிடிக்கும். வேலைய விட்டுட்டு பிசினஸ் செய்யலாம்னு இருக்கேன்’ என்பவர், எந்த பிசினஸ், அதில் தனக்கு என்ன முன் அனுபவம், யார் உதவுவார்கள் என்பதையெல்லாம் கணிக்காமல், ‘நான் இறங்கினா வெற்றிதான்’ என்ற அளவில் இறங்கி, மாட்டிக்கொண்டு முழிப்பதைப் பல இடங்களிலும் பார்க்கலாம். இதுவும் ஒரு சாய்வுநிலைக் கருத்தைப் பல திசைகளில் நீட்டிப்பதுதான்.

பல பன்னாட்டுக் கம்பெனிகள், தன் ஊழியர்களை ஒரு முத்திரை குத்தப்படுவதைத் தடுக்க முயற்சி எடுக்கின்றன. வேலைச் சுழற்றி என்பது, ஒரு மனிதரில் இருக்கும் பல திறமைகளை வெளிக்கொணர உதவுவது மட்டுமல்ல, ‘நான் ஒரு விற்பனையாளன் மட்டுமே’ என்ற உணர்விலிருந்து, பத்து வருடம் விற்பனைத் துறையில் இருப்பவர் வெளிவர சாத்தியமாக்குகிறது. தான் மற்றும் பிறரைக் குறித்த ஒரு பிம்பக்கட்டு உடைய இது பெரிதும் உதவுகிறது.

ஏதோ ஒன்று நம்மைத் தூண்டுகிறது என்றால், அது நம் வாழ்வில் மிக முக்கியமானதாக இருப்பின், அதில் நமது கருத்துகளை உடனே செயல்படுத்தாமல், எழுதிவைக்க வேண்டும். பின், நாம் அறிந்த நமது சாய்வுகளைப் பதிவு செய்து, நமது கருத்துகளில் பொருத்திப் பார்த்து, நிதானமாக மீண்டும் சுயஆய்வு செய்தல் அவசியம். அந்தச் சாய்வு நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ இருக்கலாம் என்பதால், கவனம் இதில் மிக அவசியம். அதன்பின், நம்பகமான பிறரது கண்ணோட்டங்களைக் கவனமாகப் பதிப்பித்து, அதனோடு நமது கருத்துகளை ஒப்பிட்டுப் பார்த்தல் சிறந்தது. எப்போதும் இதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை, ஆனாலும்.

(யோசிப்போம்)

Tags : வேலை பிம்பம் ஊழியர் work workers probability

More from the section

குவியத்தின் எதிரிகள்: 11. அறிதலும் அறிவும்
குவியத்தின் எதிரிகள்: 10. விருப்பமும் முன்முடிவுகளும்
குவியத்தின் எதிரிகள்: 9 சுய இரக்கம்
குவியத்தின் எதிரிகள்: 8 வண் நுகர்வு
குவியத்தின் எதிரிகள்: 7 இணைத்துப் பார்த்தல்