வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

குவியத்தின் எதிரிகள்: 7 இணைத்துப் பார்த்தல்

By சுதாகர் கஸ்தூரி.| Published: 13th January 2018 11:43 AM

 

‘‘நீலக் கலர் சட்டை” என்றார் ஜீவன் குப்தா. தூரத்தில் வரும் தன் மேனேஜரை கவனித்தவாறே, “இன்னிக்கு பாஸ் பெரிய டீல் எதோ பேசப்போறாரு”. எதாவது முக்கியமான வேலை என்றால், குப்தாவின் மேனேஜர் ஒரு நீலநிறச் சட்டையில்தான் வருவார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு, அவர் நீலக்கலர் சட்டை இட்டுச் சென்றிருந்த முக்கியமான மீட்டிங்கில், வெற்றி அவருக்குச் சாதகமாக அமைந்ததாம்.

அவரது சட்டையின் நிறத்துக்கும், ஒரு படுசிக்கலான அறிவியல் கருவி வாங்கப்படுவதற்கும் எதாவது தொடர்பிருக்கிறதா என்றால், ஒரு குழந்தைகூட இல்லை என்று சொல்லிவிடும். அப்படியிருந்தும், இவ்வளவு அனுபவம் வாய்ந்த ஒருவர் ஏன் அறிவற்ற ஒரு செயலைச் செய்கிறார்?

மூளை பல தகவல்களை இணைத்துப் பார்த்து, சாதகமான எதிர்நிகழ்வைத் தயார் செய்கிறது. ஒரு கூட்டத்தில் பெரியவர் ஒருவர் வந்தால், பிறருடன் மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்கிறோம். இதில் முன் அனுபவத்துக்குப் பங்கு இருக்கிறது என்றாலும், அனுபவமில்லாதார், பிறர் செய்வதைப் பார்த்து இயங்கலாம், அல்லது முன்கூட்டியே பழக்கங்கள் பற்றி படித்து/கேட்டு அறிந்திருந்தாலும், சரியாக இயங்க முடியும். இது இணைத்துப் பார்த்தல் என்ற வகைப்படும்.

எல்லா நேரத்திலும், மூளை சரியாக இணைத்து பார்த்துவிடாது. ஒரு நிகழ்வு தந்த தாக்கத்தில், அதில் ஈடுபட்டிருந்த பல நிகழ்வுகளை மூளை தன்னுள் பதித்துக்கொள்கிறது. ‘அந்தப் பெரிய வெற்றி கிடைத்திருந்த அன்று, நீலச்சட்டைதான் போட்டிருந்தேன். எனவே, நீலச்சட்டை ராசியானது’ என்பதும், “போன வாரம் தோல்வியைச் சந்தித்தபோது, நீலச்சட்டை போடலை’ என்பதும், நீலச்சட்டைக்கு ஒரு தளத்தைக் கொடுத்துவிடுகின்றன.

100 முறை அவர் சென்ற விற்பனை நிகழ்வுகளில், 60 முறை வென்றதாகவும், அதில் 45 முறை நீலச்சட்டை அணிந்திருந்ததாகவும் வைத்துக்கொள்வோம். இது, வெற்றிபெற்ற நிகழ்வில் 75 சதவீதம் நீலச்சட்டைக்குச் சாதகமான தகவல். ஆனால், நிகழ்தகவின் அடிப்படையில் பார்த்தால், புள்ளியியல் விவரங்கள் வேறு தகவல்களைச் சொல்லும். இருப்பினும், மனம், சாய்வுடன் “எதுக்குங்க வம்பு? நீலச்சட்டையே போட்டுட்டு போறேன்” என்று நீலச்சட்டையை எடுக்கத் தூண்டும். இதுதான் இணைத்துப் பார்த்தலின் பலம்.

பல நேரங்களில் இந்தப் பலம், நமது பலவீனங்களை மறைக்க மனம் போடும் நாடகம். தோத்துவிடுவோமோ என்ற அச்சம், பாதுகாப்பின்மையை மறைக்க, மூளை பழைய நிகழ்வுகளைத் தேடுகிறது. முன்பு வெற்றியைச் சந்தித்த நிலையில் எதெல்லாம் இருந்ததோ, அதையெல்லாம் மீட்டெடுத்துக் கொண்டுவர முயல்கிறது மூளை. இதில் தருக்கம் கேட்கும் கேள்விகளை, பாதுகாப்பின்மை அடக்குகிறது. “எதுக்கு வம்பு” என்ற கேள்வி முன் தூக்கி நிற்கிறது.

‘சரி, நீலச்சட்டை போட்டுப்போனா என்ன? அது ஒரு ஊக்கம் தந்தால் நல்லதுதானே’ என்ற கேள்வி சரியாக இருப்பதுபோல் இருக்கலாம். சற்றே யோசித்துப் பார்ப்போம்.

“இது என் பலவீனத்தை மறைக்கும் ஒரு உத்தி” என்பது தெளிவாக நமக்குத் தெரிகின்றதா? அந்தப் பலவீனம் இன்னும் இருப்பதை உணரமுடிகிறதா? எதனால் அந்த அச்சம், பாதுகாப்பின்மை வருகிறது?. பாதுகாப்பின்மையை, அச்சத்தை மறைக்காமல், அதனை ஒரு உறுதியினால் அகற்ற முடியுமா என்பது போன்ற சிந்தனைகள் வளர, சாய்வற்ற பின்னூட்டம், மற்றும் நமது சிந்தனை அவசியம்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று நினைப்பது நேரான சிந்தனை.

(தொடரும்)

Tags : அறிவியல் மனம் இணைத்துப் பார்த்தல் நேரா யோசி குவியம் science mind linking blue shirt நீலச் சட்டை

More from the section

குவியத்தின் எதிரிகள்: 11. அறிதலும் அறிவும்
குவியத்தின் எதிரிகள்: 10. விருப்பமும் முன்முடிவுகளும்
குவியத்தின் எதிரிகள்: 9 சுய இரக்கம்
குவியத்தின் எதிரிகள்: 8 வண் நுகர்வு
குவியத்தின் எதிரிகள்: 6 முன் அனுபவம்