வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

குவியத்தின் எதிரிகள் - 19. ஏட்டுச் சுரைக்காயில் கூட்டு

By சுதாகர் கஸ்தூரி.| Published: 02nd June 2018 12:00 AM

 

2008-ல், உலகளவில் பங்குச்சந்தை பெருமளவு சரிந்தது. பல லட்சம் கோடிகள் நொடிகளில் மறைந்தன. பெரும்பணக்காரர்கள் நிஜமாகவே தெருவில் நின்றார்கள். அமெரிக்காவின் சப் ப்ரைம் மார்க்கெட்டின் விளைவு உலகளவில் பாதித்த நிலையில், சில மார்க்கெட் வல்லுநர்கள் தொலைக்காட்சியில் ‘‘மார்க்கெட் விழும் என்பதை நாங்கள் முன்பே சொன்னோம்’’ என்றனர். ‘‘எந்தக் காரணங்கள் என்பதைச் சொல்லுவதில் வேண்டுமானால் முரண் இருக்கலாம். ஆனால் சந்தை வீழும் என்பதில் சந்தேகமே இல்லை’’ என்று, முன்பு அங்கு இங்கு சொன்ன சொற்களாலும் எழுத்துகளாலும் உறுதி செய்தார்கள். மக்கள் அதையும் நம்பினார்கள். மேலும் அந்த வல்லுநர்கள் சொல்வதைக் கூர்ந்து கவனித்தார்கள்.

‘‘சந்தையில் இப்போது முதலீடு செய்யாதீர்கள். மார்க்கெட் தாறுமாறாகிக் கிடக்கிறது’’ என்றனர் பலர். இதைக் கேட்டு, முன்பே முதலீடு செய்திருந்ததையும் மக்கள் மிக அதிக நஷ்டத்தில் வெளியே எடுத்தனர்.

‘‘எனது ம்யூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மிக மோசமான நிலையில் இருக்கிறதே, எடுக்கலாமா?’’ என்று என் நண்பரிடம் கேட்டேன். அவர் மறுதலித்தார். ‘‘உங்களுக்கு இந்த நாடு, இந்த உலகம் மீண்டு வரும் என்ற நம்பிக்கை இருந்தால், மேலும் முதலீடு செய்யுங்கள். பெரிய பெரிய கம்பெனிகளின் பங்குகள் அடிமட்ட விலையில் கிடைக்கின்றன. என்ன, நம்பிக்கையும், உறுதியும், ரிஸ்க் எடுக்கும் மனநிலையும் தேவை’’ என்றார். எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லாததாலும், நேரடிச் சந்தை பற்றி அதிகம் தெரியாததாலும், ம்யூச்சுவல் ஃபண்டில் இருந்ததை எடுக்காத அளவில் தைரியத்தை வைத்துக்கொண்டு, முதலீடு என்பதையே நிறுத்திவிட்டேன்.

2010 முதல் சந்தை மீண்டு வந்தபோது, யாரெல்லாம் 2008/09-ல் முதலீடு செய்திருந்தனரோ, அவர்கள் செல்வம் பெருகியது. அப்போது தொலைக்காட்சியில் அதே வல்லுநர்கள் ‘‘நான் சொல்லல? மார்க்கெட் மீண்டு வரும்னு? இப்ப…’’ இதையும் மக்கள் நம்பினர். ஏனெனில், அவர்கள் சொன்ன பங்குகள், யூனிட்டுகள் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தன. வல்லுநர்கள், நீங்கள் தோற்றாலும், ஜெயித்தாலும் வல்லுநர்களாகவே இருப்பார்கள்.

எதார்த்த ஆலோசனை சிலரிடமிருந்தே கிடைக்கும். வல்லுநர்களை அதிகம் நம்பவேண்டாம் என்று நஸ்ஸிம் நிக்கோலாஸ் தலேப் (Nassim Nicholas Taleb), ரோல்ஃப் டோப்லி (Rolf Doebli) போன்ற இன்றைய சமூக அறிவாளர்கள் கூறிவருகின்றனர். ஏனெனில், நிகழ்வின் புரிதல் என்பது தகவல் ஒரு பக்கம், அதனைத் திரித்துக் கூறுதல் மறுபக்கம் எனப் பிரிந்து கிடக்கிறது. இரண்டாவது பக்கத்தில் கில்லாடிகள் இந்த வல்லுநர்கள். அவர்கள் காட்டும் ட்ரெண்ட் நிலவரம், புள்ளியியல் தகவல்நிலைகள் போன்ற தகவல்களைத் தேவைக்கு ஏற்றார்போல் திரித்து விவரிக்க முடியும். நாமும், நமது தருக்க ரீதியான சிந்தனை மூலம் அதனை ஏற்றுக்கொள்ளவே செய்வோம்.

உதாரணமாக, ‘‘இப்போது வேலை வாய்ப்பு அரிதாகிவிட்டது. ஐ.டி. துறை படுத்துவிட்டது’’ என்று ஒரு மனிதவளத் துறை அதிகாரி சொல்கிறார் எனக் கொள்வோம். அதனை உறுதிப்படுத்தும்விதமாக, கூகிள் தேடல் மூலம், இரண்டே நிமிடத்தில் பல தகவல் வரைபடங்களையும் புள்ளிவிவரங்களையும், செய்தித் துணுக்குகளையும் எடுக்கமுடியும். ‘‘பாத்தீங்களா. இதான் சொன்னேன். ஐ.டி.ல இப்ப வேலையே இல்ல’’ என்பார், அவருக்குச் சாதகமாக மற்றொரு மனிதவளத் துறை அதிகாரி. அவருக்கு ஆட்கள் ஐ.டி.யில் தேவையில்லை; சிவில், மெக்கானிக்கலில் வேண்டுமென்றால், இதனைவிடச் சிறந்த ஆயுதம் வேறில்லை. புள்ளிவிவரங்கள், ஆலோசனை நிறுவனங்களின் அறிக்கைகள் – ‘‘அக்ஸெஞ்ச்சர் போன வருசம் ரிப்போர்ட்ல ‘இந்தியாவில் ஐ.டி. ஆளெடுப்பு 4.5 சதவீதம் குறையும்’ என்று சொல்லியிருக்கு’’ என ஒரு செய்தி கொண்டு, இன்றைய மாணவர்களைப் பயமுறுத்திவிட முடியும்.

தகவல்கள், புள்ளியியல் விவரங்கள் அனைத்தும் நம்பத்தகுந்தவை அல்ல. அவற்றின் தனித்த உண்மை நிலையைவிட, பல மாறிகளுடனான சேர்க்கையில் உண்மை நிலை அறியப்பட வேண்டும். அதுவே யதார்த்தம். ஐ.டி.யில் ஆளெடுப்பு 4.5 சதவீதம் குறையும் என்றால், எங்கே? எப்போது? எந்தத் தனித் துறையில் (ஜாவா/ டாட்நெட், பைத்தான்…) என்பது தெளிவாகச் சொல்லப்பட வேண்டும். நீங்கள் ஆரக்கிள் டேட்டாபேஸ் கற்றவராக இருந்தால், இந்தச் செய்தியால் பயப்படவேண்டியதில்லை. பொதுவான செய்தி பரவலான தாக்கத்தை விளைவிக்கும். எனவே, செய்திகளின் உண்மைத்துவம், தெளிவு நிலை இவை கவனிக்கப்பட வேண்டும்.

வல்லுநர்களை நம்பக் கூடாது என்கிறார்களா? அல்ல. எந்த அளவு நம்ப வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும் என்கிறார்கள். தலேப் எழுதிய ‘Skin in the Game’ புத்தகத்தில் இதனை விரிவாக எடுத்துரைத்திருக்கிறார். ‘‘உங்கள் செல்வத்தை ‘இந்தப் பங்குகளில், ம்யூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள்’ என்று சொல்பவரும் அதே பங்குகளில், ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்கிறாரா என்று பாருங்கள். அவர் செய்யாமல் உங்களை அறிவுறுத்தினார் என்றால், சற்று யோசியுங்கள். தனது சொந்த அளவில் ரிஸ்க் இல்லாது பிறரை ரிஸ்க் எடுக்கத் தூண்டுபவர்கள் உலகில் அதிகம். இவர்களால்தான் பல சரிவுகள், பின்னடைவுகள் வந்திருக்கின்றன என்பதை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகிறார் தலேப்.

தலேப்

இது முதலீடு என்பதில் மட்டுமல்ல, பெரும் பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பில் தவறினால், பொதுமக்களின் சொத்து விரயமாவதும், மிஞ்சிப்போனால் தவறு செய்பவர்கள் சிறையில் அடைக்கப்படுவதும் மட்டுமே மிஞ்சுகிறது. போன செல்வம் போனதுதான். வங்கிகளில் வாராக்கடன்கள் இதற்குப் பெரும் சான்று.

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில், அவருக்கு சொந்த ரிஸ்க், அக்கறை எந்த அளவில் இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ஒருவர் ஏன் குறிப்பிட்ட ஒரு தலைவரைப் போற்றியோ தூற்றியோ சொல்கிறார் என்பதை சற்றே விலகிக் கவனித்தால், அவருக்கு அந்த இயக்கத்தில் ஒரு ரிஸ்க்கும் இல்லை, ஆதாயமே இருக்கிறது என்பது கவனத்தில் வருமானால், விலகி நிற்பதே நல்லது.

சில கேள்விகளை அடிக்கடிக் கேட்டுக்கொள்வது நல்லது. நாம் நம்பும் இவர் / அல்லது இவர் தரும் செய்தியின் பின்னால் நிற்கும் இவரது கருத்து, இவருக்கு எந்த அளவில் ரிஸ்க்கை ஏற்படுத்துகிறது? ஏன் இவர் இப்படிச் சொல்கிறார்? என்ற கேள்விகளும் அதன் பின்னான ஆய்வுகளும் சில மணித்துளிகள் செலவிட நேர்ந்தாலும், நமது தனிவாழ்வு, பொதுவாழ்வில் நமது குவியத்தை நோக்கிச் செல்ல வழிவகுக்கும்.

ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்பதற்குப் பொங்குபவர்கள், காஷ்மிரப் பண்டிட்டுகள் என்ற ஒரு இனமே சொந்த மாநிலத்திலிருந்து வாள்முனையில் விரட்டப்பட்டிருக்கிறது என்பதற்குப் பொங்குகிறார்களா என்பதைக் கவனித்தல் நல்லது. அப்படிச் செய்யவில்லை என்றால், அவர்களிடம் இருந்து விலகி நம் வேலையைப் பார்த்தல் நலம். காகிதம், ஊடகம், சமூக வலைத்தளத்தில் தீவிரமாக எழுதுபவர்களைவிட, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில் சிறுஅளவிலேனும் குவியத்துடன் இயங்குபவர்களை அடையாளம் கண்டுகொண்டு, அவர்களது இயக்கத்தின் பின்னணியை அறிந்துகொண்டு, இச்செயல் நமது குறிக்கோளை அடையப் பயன்படுமா? அல்லது இடையூறாக இருக்குமா? என்று கேட்டுக்கொள்வது அவசியம். கேட்டுக்கொள்வது என்பதைவிட, கேள்வியாக ஒரு காகிதத்தில் எழுதி, சில நாட்கள் அவகாசம் கொடுத்து நம் கருத்தைப் பதிவு செய்ய வேண்டும். அதன்பின் நிதானமாக அவற்றை ஒரு மீள்பார்வை செய்தால், நாம் செய்ய வேண்டிய தீர்மானம் ஒரு வடிவில் வரத்தொடங்கும்.

இங்கு, நேராக யோசிப்பது மட்டுமல்ல, நேராக எழுதி, கவனித்து இயக்கத்தினை முடிவு செய்ய வேண்டும்.

(தொடர்ந்து யோசிப்போம்)

Tags : share market பங்குச் சந்தை முதலீடு investment mutual fund IT Industry statistics ம்யூச்சுவல் ஃபண்ட் வல்லுநர்கள் suggestions

More from the section

குவியத்தின் எதிரிகள்: 11. அறிதலும் அறிவும்
குவியத்தின் எதிரிகள்: 10. விருப்பமும் முன்முடிவுகளும்
குவியத்தின் எதிரிகள்: 9 சுய இரக்கம்
குவியத்தின் எதிரிகள்: 8 வண் நுகர்வு
குவியத்தின் எதிரிகள்: 7 இணைத்துப் பார்த்தல்