வியாழக்கிழமை 21 மார்ச் 2019

குவியத்தின் எதிரிகள் - 20. போலிச் செய்திகள்

By சுதாகர் கஸ்தூரி.| Published: 09th June 2018 12:00 AM

 

ரோல்ஃப் டோப்லி, தனது புத்தகத்தில் ‘தெளிவாக யோசிக்க வேண்டுமென்றால், செய்தித்தாள்களை, செய்திச் சேனல்களைப் புறக்கணியுங்கள்” என்கிறார். இதில் சமூக வலைத்தளங்களும் அடங்கும். எதனைப் பார்க்க வேண்டும், நம்ப வேண்டுமென்பதில் அதிக முதிர்ச்சி பலருக்கு இல்லை என்பது அவரது கணிப்பு.

ரோல்ஃப் டோப்லி

இது ஒரு செருக்கினால் வந்த சொற்களல்ல என்பது கவனித்துப் பார்த்தால் விளங்கும். பல காரணங்கள் நம்மை ஒரு செய்தியை நம்ப வைக்கின்றன. அதில் முதன்மையானது, நாம் முன்னமே கண்ட உறுதிப்படுத்தும் பிழை. நாம் நம்பும் ஒன்றினை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையான செய்தியை நம் கவனம் சட்டென ஈர்த்துக்கொள்கிறது. அதனை மீண்டும் அசைபோட வைக்கிறது. எனவே, ஒரு தலைவனைப் பிடித்திருந்தால், அவரைப் புகழும் வகையான செய்திகளை, செய்தித்தாளில் தேடிப் படிக்க வைக்கிறது. அதேபோல், வெறுப்பவரைப் பற்றிய தகவலை நாம் தேடிப் படிப்போம். செய்தியின் மூலத்தை, உண்மைத்தன்மையை ஆராய அந்தக் கவனப்பிழை அனுமதிக்காது.

இரண்டாவது, மூலம் குறித்த கருத்துப் பிழை. பொதுவாக, ஆங்கிலப் பத்திரிகையில் வரும் செய்திகளுக்கு நம்பகத்தன்மை அதிகமாகக் கொடுப்பது நமது அடிப்படைப் பிழை. இது, ‘செகப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்’ என்பது போன்ற ஒன்று. சில நாளிதழ்களுக்குக் காலம் காலமாகக் கொடுக்கப்பட்ட மதிப்பு மற்றவற்றிலும் அதிகமாக இருப்பின், அது தரும் செய்திகளை நாம் உண்மையென நம்பும் சாத்தியம் அதிகம். அந்த இதழ் பல கைகள் மாறி இப்போது போலியான அல்லது சாய்மானம் கொண்ட செய்திகளை வெளியிட்டு வரலாம். நமது நம்பிக்கையினால் இச்செய்திகளை நம்பிவிடும் சாத்தியம் அதிகம்.

மூன்றாவது, அனுபவ மற்றும் கருதுகோள் சாய்மானம். என்றோ எங்கோ கண்ட/கேட்ட செய்தியைத் தற்போது வந்திருக்கும் செய்தியுடன் இணைத்துப் பார்த்து, தருக்க ரீதியாக நாமே ஒரு முடிவுக்கு வருவது. உதாரணமாக, கம்பெனிகளில் மென் திறமைகள் (soft skills) எனப்படும் திறம்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்ற செய்தி, நாம் கேட்ட/புரிந்துகொண்ட அளவில் பதியும்போது, ‘அடிப்படைத் திறமையைவிட மென் திறமைகளே அதிகம் தேவை’ என்பதாக மாறுகிறது. இதன் விளைவு, தனது அடிப்படைத் திறமையை, நேர்த்தியை வளர்த்துக்கொள்ளாமல், பேச்சு, விரிவுரை கொடுத்தல், குழு உரையாடல், ஆங்கிலச் சொற்களில் தேர்ச்சி என்பவற்றில் மட்டும் கவனம் செலுத்துகிறோம். அதன் தாக்கம், வேலையில் சேர்ந்தபின் புரியும். கம்பெனிகளில் நல்ல பேச்சுத்திறமை மட்டுமிருந்தால் போதாது; வினைத்திறம், செயலை வெற்றிகரமாக முடிக்கும் வேகம், திறமை என்பதே மிக அடிப்படையான எதிர்பார்ப்பு. அது இல்லாவிடில், எத்தனை நேர்த்தியாகப் பேசினாலும், வெற்றிபெற இயலாது.

போலிச் செய்தி என்பது சமூகத்தில் பரபரப்பு, வதந்தி மட்டுமல்ல, தனிமனித அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மேலே பார்த்தோம். இந்த மூன்று பிழைகள் மட்டும் நம்மை போலிச் செய்திகளை நம்பவைத்துவிடுவதில்லை. நம் மனச் சூழல், சுற்றுப்புறச் சூழல், அன்றைய, அந்த நேரத்தில் நமது எண்ணங்களைப் பிடித்து நிறுத்தும் வலிமை, நம்மை வலியுறுத்தும் நம்பகமான மனிதர்கள், ஊடகங்கள் போன்று பல காரணிகள் தங்கள் தாக்கத்தை மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ தோற்றுவிக்கின்றன. இவற்றில் எதன் தாக்கம் அதிகம், நமக்கு எது தேவை என்பதை நாம் மட்டுமே தீர்மானிக்க இயலும்.

உண்மையான நிரூபிக்கப்பட்ட தகவல்களையே மாற்றிச் சொல்லிவிட முடியுமெனில், திட்டமிடப்பட்டு, பொய்யாகப் பரப்பப்படும் போலிச் செய்தி, வதந்திகள், மீம்ஸ்கள், போலி வீடியோக்களில் நாம் மிகக் கவனமாக இருக்கவேண்டி இருக்கிறது. சமூக ஊடகங்களில் இதற்காகவே போலிச் செய்தி தயாரிப்பு ‘நிறுவனங்கள்’ இருப்பதாகவும், ரஷ்யாவில், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்-ல் இருக்கும் இண்டர்நெட் ரிசர்ச் ஏஜென்ஸி என்னும் நிறுவனத்தில் பலர் இந்தப் போலிச் செய்திகளைத் தயாரித்து வெளியிடவே வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர் என்றும், அமெரிக்கத் தேர்தலின்போது, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் ஹிலாரி க்ளிண்ட்டனுக்கு எதிராக அவர்கள் குவித்த போலிச் செய்திகளின் தாக்கம் கண்கூடாகக் காணப்பட்டது.

பொய்ச் செய்திகளால் சில நன்மைகளும் உண்டு. ஒரு குழுவை, ஒரு குறித்த நோக்கத்தின் மேல் இயங்கவைக்கவும், ஒரு மனிதனை பொருத்தமாகப் பொய்ச் செய்திகளால் ஊக்கமடையவைத்து தன் செயலை உற்சாகத்துடனும், திடத்துடனும் செய்யவைக்க இயலும் என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள். குழந்தைகள் முதல் கிழவர்கள் வரை அனைவருக்கும் இந்த ஊக்கம் தேவைப்படுகிறது.

மகாபாரதத்தில் ‘அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான்’ என்ற பொய்ச் செய்தி பரப்பப்பட்டது. துரோணர் அதனை நம்ப மறுத்து, இதனை ‘எப்போதும் உண்மையே பேசும் தருமன் சொன்னால் மட்டுமே நம்புவேன்’ என்றார். இது, செய்தியின் மூலத்தின் மீது வைத்த நம்பிக்கை. அஸ்வத்தாமன் என்ற பெயரில் இருந்த யானை கொல்லப்பட்டது. தருமன், உண்மையே சொல்லுமளவில் செய்தியைச் சற்றே திரித்துச் சொன்னார் - ‘அஸ்வத்தாமன் இறந்தது உண்மை. அது ஒரு யானை’ என்றார். நியாயமாகப் பார்த்தால், அவர் பொய் சொல்லவில்லை. ஆனால், செய்தியை துரோணர் புரிந்துகொண்ட விதம், தன் மகன் அஸ்வத்தாமன் இறந்ததாக இருந்தது. துரோணரின் உயிர் பறிக்கப்பட்டது.

இளமையில் நாம் கேட்ட முதல் பொய்ச் செய்தி, ‘ஓநாய் வருவதாகக் கத்திய சிறுவனின்’ கதை. ஒரு முறை பொய்ச் செய்தியை அவன் தந்ததால், நிஜமாகவே ஓநாய் வந்தபோது, மக்கள் தங்கள் அனுபவச் சாய்மானத்தில் அவனது செய்தியை நம்ப மறுத்தனர்.

இணையதளத்தில் வரும் மின்னஞ்சல்களில் 60 சதவீதம் பொய் அஞ்சல்களே எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை பல வடிகட்டிகளால் தடுக்கப்பட்டும் நமது உள்பெட்டி ஒவ்வொரு நாளும் நிறைகிறது. இணையதளத்தின் வலிமையைப் பெருமளவில் வீணாக்கும் பொய்ச் செய்திகள், மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள் மூலமே பரப்பப்படுகின்றன.

வேண்டாத மின்னஞ்சல் தொடர்புகளைத் துண்டிக்காமல் வைத்திருப்பது, பேஸ்புக்கில் பலரைத் தொடர்வது, நாம் இட்ட பதிவுகளுக்கு எத்தனை விருப்பக்குறிகள் வந்திருக்கின்றன என்று பார்ப்பது, ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பலரைத் தொடர்வது என்பதான ஒரு போதை அடிமைத்தனத்திலிருந்து நாம் விலகி வர வேண்டும். முதல்படியாக, இத்தனை மணித்துளிகள் மட்டுமே ஊடகங்களில் செலவிடுவேன் என ஒரு திட்டமும், எச்சரிக்கை மணியும் வைத்துப் பணியாற்றுதல் அவசியம். மெல்ல மெல்ல இவற்றிலிருந்து விடுபடும் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

சில சமூகக் கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகளில் பங்கேற்பது, நாடகம், சினிமா அரங்குகளுக்குச் சென்று பார்ப்பது என்பதான பழக்கங்கள் கொண்டுவர முடியுமானால் நன்று. இவை, ஆரோக்கியமான நிஜ மனித உறவுகளை மேம்படுத்தும். அவர்கள் சொல்வதிலும் பொய்ச் செய்திகள் வரலாம். சற்றே நிதானத்துடன், ‘இச்செய்தி தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறதா?’ என்பதாக சரிபார்த்துப் பின் நம்புதல் (trust but verify) என்ற பழக்கத்தைக் கற்க வேண்டும். அப்பாவியாக எதையும் நம்பி மோசமடைவதைவிட, சந்தேகப்பிராணியாக சற்று நிதானத்துடன் இயங்குவது, நேராக யோசிப்பதன் ஒரு அடையாளம்.

(யோசிப்போம்)

Tags : போலிச் செய்தி வலைத்தளங்கள் நம்பிக்கை மென் திறமைகள் fake news trust but verify e-mails soft skils

More from the section

குவியத்தின் எதிரிகள்: 11. அறிதலும் அறிவும்
குவியத்தின் எதிரிகள்: 10. விருப்பமும் முன்முடிவுகளும்
குவியத்தின் எதிரிகள்: 9 சுய இரக்கம்
குவியத்தின் எதிரிகள்: 8 வண் நுகர்வு
குவியத்தின் எதிரிகள்: 7 இணைத்துப் பார்த்தல்