24 பிப்ரவரி 2019

குவியத்தின் எதிரிகள் - 21. தோல்வியெனும் வெற்றிப்படி..

By சுதாகர் கஸ்தூரி.| Published: 16th June 2018 12:00 AM

 

ஒரு போட்டியின் பரிசளிப்பு விழா. வென்றவர், தோற்றவர் யார் என்ற முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வென்றவரின் பெயர் அறிவிக்கப்படுகிறது. மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போய், மேடையில் பரிசுடன் நிற்பவர் பேச முனைகிறார். எப்படிப் பேசுவார் என நினைக்கிறீர்கள்? முதலில் நன்றி நவிலல். ‘இதனை எதிர்பார்க்கவேயில்லை’ என்று சில நொடிகள். அதன்பின் சுதாரித்துக்கொண்டு, தன் குருநாதர், பெற்றோர், மனைவி, நண்பர்கள் என ஒரு வரிசை… மீண்டும் நன்றி நன்றி.

இப்போது, தோற்றவரிடம் கேட்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அவர் ஏமாற்றத்தைச் சமாளித்துக்கொண்டு, வெற்றிபெற்றவருக்கு வாழ்த்து, நல்ல போட்டி, நான் நல்லாத்தான் உழைச்சேன்… ஆனா… ‘தோல்விக்குக் காரணம்?’ என்று கேட்காமலேயே ஒரு பட்டியல் அடுக்குவார்.

கவனியுங்கள். இருவருமே எந்தப் பேச்சையும் தயார்செய்து வைக்கவில்லை. வைத்திருந்தாலும், அந்த நேரத்து அதிர்ச்சியில், தயார் செய்திருந்த உரை அனைத்தும் தளபாடமாக வருமென்ற ஒரு உத்திரவாதமும் இல்லை. காரணங்கள், வெற்றிபெற்றவருக்கு அத்தனை இயல்பாகச் சொல்ல வருவதில்லை. வெற்றிபெறாதவரின் கதையே வேறு.

எந்தப் போட்டியாளரும், தோற்ற பின்னான உரைக்குத் தயார் செய்வதில்லை. எனினும், தோல்வியின் காரணங்கள் யாரும் சொல்லாமலே, தயார் செய்யாமலே வருகிறது. இந்த முரணைப் பல ‘பழக்க உளவியலில்’ (Behavioural psychology) பலர் ஆராய்ந்திருக்கிறார்கள். முக்கியமாக, ‘மக்கள் ஏன் தோல்வியை விரும்புவதில்லை?’ என்ற கேள்வி, கடந்த 50 ஆண்டுகளாக ஆராயப்படுகிறது.

‘என்ன கேள்வி இது?’ என நாம் வியக்கலாம். தோல்வியை யார் விரும்புவார்கள்? வெற்றியல்லவா இலக்கு? அதனை அடைய முடியாத இயலாமையின் வெளிப்பாடு தோல்வி. வெற்றி என்பதே மகிழ்ச்சியைத் தரக்கூடியது. வாழ்வில் முன்னேற்றம், வெற்றியின் அடிப்படையில் அமைவது.

‘இல்லை’ என்கிறார்கள் உளவியல் வல்லுநர்களும், சமூகவியல் ஆய்வாளர்களும். விலங்கினங்கள், இரைதேடும் எதிரியிடமிருந்து தப்பியோடும் மற்றும், இனப்பெருக்கத்துக்கான முயற்சிகளில் முதலில் இருந்தே வெற்றி பெற்றிருக்குமானால், பரிணாம வளர்ச்சி சாத்தியமே இல்லை. ஓடுவதில் வேகமும், திடீரெனத் திரும்பும் லாகவமும் இல்லாத மான்கள் மரிக்கின்றன. எனவே, மான்கள் வேகமாக ஓடுவதற்கும், திரும்புவதற்கும் முயற்சி செய்துசெய்து, அவற்றின் கால்கள் வலுப்படுகின்றன. கற்கால மனிதன் தன் கைகளால் வேட்டையாட முடியாத நிலையில், கற்களை நாடினான். கூராக்கினான். மூளையைப் பயன்படுத்திக் கருவிகளைச் செய்துகொண்டான். இந்தப் பரிணாம வளர்ச்சி, தோல்வியால் வந்த வெற்றி.

வெற்றி என்பது கண நேரத்தில் முடிந்துவிடும் ஒரு நிகழ்வு. அற்ப நிமிட சந்தோஷம். அதோடு அடைய வேண்டிய இலக்கு குறித்த சிந்தனைகள், முயற்சிகள் நின்றுபோகின்றன. வெற்றி அதிகம் பயன்படுவதில்லை.

ஆனால், தோல்வி? ஊக்கமுடைய ஒருவனைக் கண நேரம் துவளவைக்கிறது. அதன்பின், இலக்கு அவனுக்கு மிக முக்கியமானதாக இருப்பின், மீண்டும் முயற்சிக்கவும், முயற்சியில் வலிமை சேர்க்கவும், புதிய உத்திகளைச் சிந்தனை செய்யவும் வாய்ப்பளிக்கிறது. தோற்றபின்னும் மீண்டும் மீண்டும் போராடுபவனுக்குக் கிடைக்கும் வெற்றி, புதிய பல வெற்றிகளுக்கு வழி வகுக்கிறது.

சத்ரபதி சிவாஜி பற்றி அறிந்திருப்போம். அவரது படையில், உடும்பு கொண்டு செங்குத்தான மலைகள், கோட்டைச் சுவர்கள் மீது ஏறுவதைப் பற்றிப் படித்திருப்போம். அதன் ஆரம்பம், இளமைக் காலத்தில் சாயத்ரி மலைப் பகுதிகளில், கடினமான பாறைகள் மீது ஏறிச்செல்ல முயன்றபோது கிட்டிய தோல்விகள். தோல்விகளின் மூலம் கிடைத்த படிப்பினை, ‘மேலேறிச் சென்றதும் போரிடக் கூடாது; படை முழுதும் வருவதற்கு ஏற்பாடாகக் கயிற்றினைக் கீழே செலுத்த வேண்டும். பெரிய வாள்களை முதலிலேயே கொண்டுசெல்லக் கூடாது. ஏறுவதற்கு வசதியாக உடும்புகளைப் பயிற்றுவிக்க வேண்டும்’ என்பதாக அமைந்தது. இது, குழுவின் ஒற்றுமைக்கும் அடிகோலியது. சிவாஜியுடன் இருந்த போர்வீரர்கள் கடுமையான பயிற்சியினால் ஒல்லியாக, எளிதில் வேகமாக இயங்கக்கூடியவர்களாக இருந்தனர். இது, தோல்விகள் தந்த படிப்பினை. அதன்பின் வந்த பல வெற்றிகளுக்கு, ஆரம்பத்தில் கிடைத்த தோல்விகளே அடிப்படை.

இது இன்றும் பயன்படக்கூடிய ஒன்று. ஒரு துறையில் கடுமையாக உழைப்பது பல துறைகளில் வெற்றியைச் சேர்க்கும். 2018-ம் வருட மஹாராஷ்டிர உயர்நிலைப் பள்ளித் தேர்வினை நடத்தியவர் போர்டின் தலைவி திருமதி சகுந்தலா காலே. இவர், 14-வது வயதில் வறுமை காரணமாகத் திருமணம் செய்துகொடுக்கப்பட்டார். அதிகம் படிப்பறிவு அல்லாத கிராமச் சூழல். வீட்டு வேலைகளுக்குப் பின் படிப்பதை வழக்கமாகக் கொண்டார். டீச்சராகச் சேர்ந்தபின்னும், மாநில க்ளாஸ் 2 அலுவலர் வேலைக்குத் தயாராக முயன்றார். ஒரு புத்தகமோ, வழிகாட்டியோ இல்லாத நிலையில், ரேடியோ செய்திகளை மட்டுமே கேட்டுக் கேட்டுத் தன் பொது அறிவைப் பெருக்கினார். அவர் சொல்கிறார், ‘எதுவும் நமக்குச் சாதகமாக இல்லாத வேளையில், எல்லாம் நமக்கு எதிராகவே இருக்கும் வேளையில், எதிர்த்துப் போரிடத் தோன்றும் சக்தி உள்ளிருந்து கிடைக்கும்’.

சகுந்தலா காலே

சைமன் ரெனால்டு என்ற ஆஸ்திரேலியர், பல்துறைகளில் முன்னடத்திச் செல்பவர்களுக்குப் பயிற்சி அளிப்பவர் (Leadership Coach). விளையாட்டில் வெற்றி பெற்றவர்களைவிட தோல்வியடைந்தவர்களை மீண்டும் ஊக்குவிப்பது கடினம். விளையாட்டில் பயிற்சியளிக்கும் தலைவர்கள், தோல்வியடைந்தவர்களை மீண்டும் பயிற்சிக்கு அழைக்க படாத பாடு படவேண்டி இருந்தது. அந்தச் சிக்கலோடு போராடுபவர்களைப் பயிற்சி செய்விக்கும்போது, அவருக்கு இந்தக் கேள்வி தோன்றியது - ‘ஏன் மக்கள் தோல்வியடைகிறார்கள்?’ அதனை ஆராய்ந்து, பயனுள்ள புத்தகம் எழுதினார். Why People Fail என்ற அப்புத்தகம், இதுவரை அதிகம் பிரபலமடையாவிட்டாலும், காரணிகள் பற்றிய யதார்த்தமான எழுத்து எனப் பாராட்டப்படுகிறது.

கேள்வி காலம் காலமாகக் கேட்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் பதில், இம்முறை தொகுக்கப்பட்ட விதம் வித்தியாசமாக இருந்தது. சைமன் 16 காரணிகளைச் சொல்கிறார். அதோடும், பல ஆய்வாளர்கள் புத்தகங்களில் இருந்தும் அடிப்படையாக சில காரணங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவற்றில் முக்கியமானவை - புறக்காரணிகள் மீதான புகார் சுமத்தல், தன் மீதான கழிவிரக்கம், தன் குற்றத்தைப் பாராது விடுதல் / அதனை நியாயப்படுத்துதல்.

‘எனது தோல்விக்குக் காரணம் பிறரது தவறுகள். எனது கட்டுப்பாட்டில் இல்லாத இயற்கைக் காரணங்கள். விதி..’ என அடுக்கிக்கொண்டே போகிறோம். ஆனால், நானும், எனது தவறான சிந்தனையும், செயல்பாடும் காரணமாக இருக்குமெனச் சிந்திக்கத் தவறிவிடுகிறோம்.

தோல்விதான் பிற வெற்றிகளை, மாற்றங்களைக் கொடுக்கிறது என்றால், உலகில் பலரும் பெருவெற்றி பெற்றிருக்க வேண்டும். போட்டியில் ஒரு வெற்றி வீரனுடன், தோல்வியடைந்தவர்கள் பலர் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் வெற்றிபெறுகிறார்கள் என்றால், உலகம் இந்நேரம் பலமடங்கு நன்றாக இருக்க வேண்டும். ஏன் இல்லை?

எல்லாம் கிடைத்தவர்கள் முயற்சி செய்யத் தூண்டுதல் இல்லாதிருக்கும்போது, இல்லாதோர், தடையால் இறுகி, வலிமை பெறுகிறார்கள். வெற்றிக்கான முயற்சியில் வரும் தோல்விகள், அவர்களை வலிமை கொண்டவர்களாக, விற்பன்னர்களாக ஆக்குகின்றன. ஆனால், இல்லாதோர் அனைவரும் வெற்றிகொண்டு முன்னேறிவிடுவதில்லை. ஏன்?

தோல்வியடைந்தவர்கள் எல்லோருக்கும் வெற்றியடைய வேண்டிய மனப்பாங்கு இருப்பதில்லை. தோல்வி இருவரைத் தாக்குகிறது என்றால், ஒருவர் துவண்டு, தன் சக்தியைச் சிதற அடித்து மேலும் தோல்வியடைந்து, விலகிச் செல்லலாம். மற்றவர், தோல்வியை ஆராய்ந்து, எதில் நான் தவறு செய்திருக்கிறேன்? எனது காரணிகள் என்ன? என்று பட்டியலிட்டு, என்ன செய்தால் இத்தவறுகளைத் திருத்த முடியும் என்பதை உறுதி செய்யலாம்.

ஆனால், அவரும் தனது திட்டத்தை விடாமுயற்சியுடன் மீண்டும் மீண்டும் செயலாக்கி, பல படிகளில் மீண்டும் ஆராய்ந்து தவறுகளைத் திருத்தி, வெற்றி மனப்பான்மையுடன் செயலாற்றாவிட்டால், தோல்வி மீண்டும் நிச்சயம். எனவே, வெற்றி வேண்டுமெனில் மூன்று இயக்கப்படிகளைச் செய்தல் அவசியம். 1. தோல்விக்கான உண்மையான காரணங்களைக் கண்டுபிடித்தல். 2. அவற்றைத் தவிர்க்கச் செய்ய வேண்டிய படிமுறைகளை வகுத்தல். 3. படிமுறைகளை விடாமுயற்சியுடன், ஊக்கத்துடன் செய்து பார்த்துத் திருத்துதல்.

தோல்விக்காகச் சொல்லப்படும் காரணங்கள், புகார்களை ஒத்திருக்கும். அவற்றை மிகக் கவனமாக ஆராய்ந்து விலக்கிப் பட்டியலிட்டு, திருத்தங்களைக் கொண்டுவந்து, ஊக்கத்துடன் செயலாற்றுவதற்கு நேர்மறைச் சிந்தையுடன் நேராக யோசிக்க வேண்டும்.

(யோசிப்போம்)

Tags : psychology விடாமுயற்சி உத்வேகம் வெற்றியாளர் தோல்வியாளர் சைக்காலஜி motivation winner loser why people fail

More from the section

குவியத்தின் எதிரிகள்: 11. அறிதலும் அறிவும்
குவியத்தின் எதிரிகள்: 10. விருப்பமும் முன்முடிவுகளும்
குவியத்தின் எதிரிகள்: 9 சுய இரக்கம்
குவியத்தின் எதிரிகள்: 8 வண் நுகர்வு
குவியத்தின் எதிரிகள்: 7 இணைத்துப் பார்த்தல்