வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

குவியத்தின் எதிரிகள்: 10. விருப்பமும் முன்முடிவுகளும்

By சுதாகர் கஸ்தூரி.| Published: 03rd March 2018 12:00 AM

 

நண்பர் ஒருவரின் விருந்துக்கு நானும் என் மனைவியும், மும்பையின் நெரிசலான வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தோம். எங்கள் கார் மிக மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தது. ‘மாருதி டிஸையர்தான் மிக அதிகமாக விக்கிற காரோ?’ என்று கேட்டார் என் மனைவி.

சற்றே குழம்பினேன். புள்ளிவிவரப்படி, ரெண்டாவது அதிக விற்பனையாகும் கார் அதுதான். முதல் இடம் அல்டோ. பிரச்சனை அதுவல்ல. நான் பார்க்கும்போது, சாலையில் பலவிதமான கார்கள் தெரிந்தன. ஓபராய் மால் அருகே சென்றுகொண்டிருந்தோம் என்பதால், விலையுயர்ந்த, ஆடி, பி.எம்.டபிள்யூ, பென்ஸ் என பலதரப்பட்ட படகுக்கார்கள் இருக்கையில், எங்கிருந்து டிஸையர் வந்தது?

‘அங்க பாருங்க, ரெண்டு போகுது. இதோ, நமக்குப் பின்னால, ரெட் கலர்…’. இருபது கார்கள் செல்லுமிடத்தில் அதில் நான்கு கார்கள் டிஸையர். அது அவருக்குத் தெரிந்திருக்கிறது.

அதாவது, கவனத்தில் வந்திருக்கிறது. மற்ற கார்கள் கண்ணில் பட்டாலும், கவனத்தில் இடம்பெறவில்லை.

பின்னரே எனக்கு நினைவு வந்தது. ஒருநாள் முன்புதான் புதிய கார் வாங்குவதற்குச் சென்று, டிசையர் ஒன்றைப் பதிவு செய்துவிட்டு வந்திருந்தோம். அவரது கவனத்தில் டிஸையரின் தாக்கம் இருந்ததால், ரோடெல்லாம் டிஸையர் காரே தெரிந்திருக்கிறது.

நமக்குப் பிடித்த ஒன்றை உலகமே விரும்புவதாகத் தோன்றும் கவனப்பிழையை, பலவற்றிலும் பார்க்கலாம். நான் வாங்கிய கம்பெனியின் பங்குகள் ஒரு ரூபாய் உயர்ந்தாலும், மார்க்கெட் உயர்ந்ததாக நினைப்பது; நமக்குப் பிடித்த நடிகர் என்பதால் படம் குப்பையாக இருந்தாலும், நல்லா இருக்கு என்பது. டீச்சர்களிடமே இந்தக் கவனப்பிழை இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. தனது வகுப்பில் தனக்குப் பிடித்த மாணவனை அனைவருக்கும் பிடித்திருக்கும் என நினைப்பது அதன் நீட்சி.

சுருக்கமாகச் சொன்னால், ‘நாம் எதிலும், எதைப் பார்க்க விரும்புகிறோமோ, அதையே பார்க்கிறோம்’. இதில் முக்கியமான சொல், ‘பார்க்க விரும்புகிறோமோ’. ஒரு நிகழ்வு, காட்சி புலப்படும் முன்னரே, அதைக் குறித்தான கவனத்தில் ஒரு சாய்வு ஏற்பட்டுவிடுகிறது.

இதன் பிரச்சனை, தனக்குப் பிடித்திருக்கும் ஆள் அல்லது பொருளில் இருக்கும் குறையை நம் கவனத்தில் கொண்டுவராமல் செய்துவிடுவது. நாம் முதலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட், கம்பெனிப் பங்கு பலரிடமும் இருப்பதாகத் தேடி, அது உண்மையென நம்பி, கவனிக்காமல் விட்டுவிட்டு, நிதியை இழப்பது ஒரு உதாரணம்.{pagination-pagination}

முதலில் ஒன்றை முடிவெடுத்துவிடுகிறோம். அதன்பின் நம் முடிவு சரியாக இருப்பதாக உறுதிப்படுத்த, பலர் நம்மைப்போலவே இருப்பதாக நினைத்துவிடுகிறோம். அதன் எடுத்துக்காட்டாக, நம் முடிவுக்குச் சாதகமாக இருக்கும் நிகழ்வுகளில் நம் கவனத்தைச் செலுத்தி, நம்மை மீண்டும் நம்பவைத்துக்கொள்கிறோம். இது பொய்யான ஆறுதல் என்பதை நம் சிந்தனை சொல்வதே இல்லை.

பதின்மவயதில், தான் விரும்பும் ஒருவனை தன் தோழிகள் ‘நல்லவனா இருக்கான்டி’ என்று சொல்வதில், தன் விருப்பத்துக்குச் சாதகமாகப் பலர் சொல்வதாக மயங்கி, வீணே காதலில் வீழ்ந்து அழிந்தவர் பலர் உண்டு. ‘அவன் என்னையும் ஒருமாதிரிப் பாக்கறான். சரியில்ல’ என்று சொல்லும் தோழியை, ‘பொறாமைல சாகறா’ என்று விலக்கவே தோன்றும்.

அம்பாஸிடர் கார், கிட்டத்தட்ட அதன் முடிவு நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் வேளையில், ஒரு முதிய நண்பர் ‘வெள்ளை அம்பாஸிடர், நாலு லட்சம் சொல்றான். வாங்கலாம்னு இருக்கேன்’ என்றபோது, ‘அது என்னிக்குமே ஓடும் சார். கிளாஸிக் காராச்சே அது?’ என்று சொன்ன நண்பர்கள், அவர் காருக்கு உதிரி பாகம் இல்லாமல் திண்டாடியபோது, ‘அப்பவே நினைச்சேன். கொஞ்சம் நிதானிச்சிருக்கலாம்’ என்றார்கள். இதை ஏன் அப்பவே சொல்லல என்றால், ‘வாங்கணுங்கறாரு. அதுக்கு நாம ஏன் முட்டுக்கட்டை போடணும்? நல்லதா சொல்லணும். இல்ல, சொல்லக் கூடாதுன்னு ஒரு பாலிஸி’ என்றார்கள். தாங்கள் அறியாமலே, சமூக ஒத்துணர்வுப் பிழை ஒன்றைச் செய்திருக்கிறோம் என்பதை அவர்களும், அவரும் அறியவில்லை.

இதனாலேயே, திருக்குறள் போன்ற பதினெண்கீழ்க் கணக்கு அறிவுரை நூல்கள், தோழமை பற்றிச் சொல்லும்போது, ‘இடித்துரைப்பவன் தோழன்’ என்றன. நாம் சமூக ஒத்துணர்வுப் பிழையில் அழுந்தும்போது, அதனை நீக்கும்விதமான பின்னூட்டத்தைத் தருபவர்களே உண்மையான நலம் விரும்பிகள். ஆனால், அவர்களை அந்த நேரத்தில் பிடிக்கவே பிடிக்காது.

சமூக ஊடகங்கள், ஒரு சாய்வு நிலையிலேயே செய்திகளை வெளியிடுவதில், இந்த சமூக ஒத்துணர்வுப் பிழையை வளர்க்கிறது. நமக்கு ஒரு அரசியல்வாதியைப் பிடிக்கவில்லை என வைத்துக்கொள்வோம். அவருக்கு எதிராக வரும் செய்திகளே நம் கவனத்தில் அதிகம் படும். நமது சிந்தனை, ‘நிஜமாகவே அந்தாளு ரொம்ப மோசம்தான். நாம நினைச்சது சரிதான். இந்தாளு ஆட்சியில நல்லதே நடக்கல’ என்றே செல்லும். அதே ஊடகத்திலோ, அல்லது பிற ஊடகங்களிலோ, அவர் செய்த நிஜமான நற்பணி பற்றி வந்திருந்தாலும், நாம் அதனைப் பார்த்திருந்தாலும், கவனத்தில் பதிக்கமாட்டோம்.

ஒரு கருத்து பற்றி அடிக்கடி, அதற்குச் சாதகமாகவே செய்திகள் வந்தபடி இருந்தால், சட்டென ஒரு கணம் நாம் பின்வாங்க வேண்டும். உலகத்தில், ஒரு நிகழ்வுக்கு எதிர் நிகழ்வுகள் நிகழப் பல சாத்தியங்கள் உண்டு. எனக்கு மட்டும் ஏன் ஒரே சாத்தியம் தென்படுகிறது?

அந்தச் சிந்தனையிலிருந்து சற்றே விலகி சில நாள்கள் இருந்தால், பிற நிகழ்வுகள் கவனத்தில் வரும். நாம் சாய்வற்று சிந்திக்கச் சாதகமான சூழ்நிலை ஏற்படுகிறது. சில மணி நேர அவகாசம் போதாது என்கின்றனர் ஆய்வாளர்கள். சில வேளைகளில், சூழ்நிலையை மாற்றுவதும் சாதகமாக இருக்கிறது. கொதிப்படைந்து வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு இருப்பவர்கள், அந்த இடத்தை விட்டுத் தாற்காலிகமாக விலகுவது, விவாதங்களைத் தவிர்க்கும்.

நேராக யோசிப்பதில் ஒரு முக்கிய உணர்வு நிலை, நாம் சிந்திப்பதைக் குறித்து சிந்திப்பது. நான் சிந்திப்பதன் தூண்டுதல்கள் என்ன? என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டுமென்றால், நமது சிந்தனை பற்றிய தன்னிலை விமர்சனம் தோன்ற வேண்டும். இதற்குத் தனியாகப் பயிற்சி தேவை. எவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும் என்பது, அவரவர் தன்னிலை உணர்வைப் பொறுத்தது என்றாலும், ஒரு நாளில் ஒரு முறையேனும், தன் சிந்தனை குறித்தான விமர்சனம் செய்வது உகந்தது.

More from the section

குவியத்தின் எதிரிகள்: 11. அறிதலும் அறிவும்
குவியத்தின் எதிரிகள்: 9 சுய இரக்கம்
குவியத்தின் எதிரிகள்: 8 வண் நுகர்வு
குவியத்தின் எதிரிகள்: 7 இணைத்துப் பார்த்தல்
குவியத்தின் எதிரிகள்: 6 முன் அனுபவம்