வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

குவியத்தின் எதிரிகள்: 11. அறிதலும் அறிவும்

By சுதாகர் கஸ்தூரி.| Published: 10th March 2018 11:47 AM

 

‘‘பங்குச்சந்தை கீழே விழுந்துகிட்டே இருக்கு. எல்லாம் இந்த ஜி.எஸ்.டினாலதான்”.

‘‘போன வாரம் நிஃப்ட்டி முந்நூறு பாயின்ட் மேலே ஏறிச்சு. ஏங்கறீங்க? நாலு புரோக்கர் திட்டம்போட்டு மேல ஏத்தியிருக்கான்”.

இதுபோன்ற உரையாடல்களில், பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பவர்கள் அதிகம் பேசுவதைக் கவனித்திருக்கலாம். பங்குச்சந்தை என்றல்ல, எதிலும் சற்றே அறிவு கொண்டு இயங்குபவர்கள், அத்துறையில் விற்பன்னர்போலப் பேசுவதைக் காணமுடியும்.

இந்தப் பேச்சின் ஆதாரம் என்ன என்று கேட்டுப் பார்த்தால், ‘‘டி.வில சொன்னானே? அதுவும், காலைல பத்து மணிக்கு ஒருத்தர் வருவாரு. ரெண்டு வருசம் முன்னாடியே ரியல் எஸ்டேட் விழும்னாரு. விழுந்துருச்சு பாருங்க. கில்லாடி. அவர் சொன்னது அப்படியே பலிக்குது’’.

முன்கூட்டியே கணிப்பது, செய்தி சார்ந்தது மட்டுமல்ல. அவரது சாய்வு நிலையும் சார்ந்தது என்பதை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். ஒரு பங்கு ஏறுவதற்கும் இறங்குவதற்கும் மிகத் துல்லியமான காரணிகளைச் சொல்லிவிடும் விற்பன்னர் இன்னும் பிறக்கவில்லை.

அமெரிக்காவில், பங்குச்சந்தை பற்றி ஊடகங்களில் கருத்து கூறும் விற்பன்னர்களின் கணிப்புகளைக் கவனமாக ஒரு வருடம் பதிவுசெய்து, அக்கணிப்பின் லாப விகிதத்தைக் கணக்கிட்டார்கள். இக் கணிப்பின் மூலம் கிட்டிய லாபம், கவனமாக ஒருவர் செய்திகளை ஆராய்ந்து எடுத்த முடிவின் லாபத்தைவிட அதிகமாக இல்லை. சுருங்கச் சொன்னால், சராசரி லாபம், விற்பன்னர்களின் பரிந்துரையால் அதிகம் மாறிவிடவில்லை.

ஏன்,  சிலர் சொல்வதை நம்பி நாம் நம் கருத்துகளை மாற்றுகிறோம்?

ஊடகத்தின் நம்பிக்கைத்தன்மை மட்டுமல்ல. ‘இன்னார், இன்ன பதவியில் இருப்பதால், அவரது திறமை இத்துறையில் ஓங்கியிருப்பதால், அவர் சொல்வது சரியாக இருக்கும்’ என்ற சாய்வு நிலை. இது நம்பிக்கை இல்லை. நமது அறிவின் மேல் நமக்கு நம்பிக்கை இல்லாததால், விற்பன்னர் என்று நாம் கருதும் ஒருவரைச் சார்ந்து முடிவெடுக்கிறோம். இது சமூகக் கட்டமைப்பு கொண்ட விலங்குகளிலிருந்து பரிணாம வளர்ச்சியில் வந்த உணர்வு.

வலிமைமிக்க ஒன்று, தனது கூட்டத்துக்குத் தலைவனாகிறது. அதனைப் பின்தொடர்ந்து, அக்கூட்டத்தில் உள்ள விலங்குகள் செல்கின்றன – பல சமயங்களில் கண்களை மூடியபடி. தன்னிச்சையான சிந்தனை என்பதை, குழுவின் சிந்தனைக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, தன் முடிவில் தோல்வியிருக்கலாமோ என்று தாற்காலிகமாகப் பயமின்றிச் செல்லும் பண்பு அது. இதன் மற்றொரு வடிவம், குழும சிந்தனை (GroupThink). ஒரு குழுமம் ஒரு கோணத்தில் சிந்திக்கும்போது, உறுப்பினர்கள் அதனை விடுத்து வேறு பாதையில் சிந்திக்கத் தயங்குவார்கள். தான் சொல்வது தவறாகிவிடுமோ என்ற அச்சம் மட்டுமல்ல, குழுமத்தின் ஆதரவிலிருந்து நீங்கிவிடுவோமோ என்ற அடிப்படைப் பய உணர்வு.

குழுமம் என்பது பிறரால் மட்டுமே உண்டாக்கப்பட வேண்டியதல்ல. நாமே, மனத்தளவில் ஒரு குழுமத்தை உருவாக்கிக்கொண்டு அதன் உறுப்பினராகிறோம். நன்றாக விற்கும் டி.வியை வாங்கும்போது, அதனை வாங்கிய அத்தனை வாடிக்கையாளர்களுடன் நாமும் மனத்தளவில், நமது முடிவினால் சேர்ந்துகொள்வதான ஒரு கற்பனை நிம்மதி.

ஜெர்மன் நிறுவனத் தயாரிப்பு கார் வாங்கத் திட்டமிட்ட என் நண்பரை, “அதற்கு பராமரிப்புச் செலவு அதிகமாகுமாம். எதுக்கும் கேட்டுக்கொள்ளுங்கள்” என்றார் மற்றொரு நண்பர். வாங்க நினைத்திருந்தவர், “இத்தனை பேர் வாங்கியிருக்கான். அவ்வளவு பேரும் முட்டாளா? அதுவும் ஜெர்மன் கார். ஒரு போலித்தனமும் இருக்காது” என்றார். அடுத்த இரண்டே வாரத்தில், மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்களை பொய்யாகத் தயாரித்திருந்ததாக உலகளவில் அந் நிறுவனம் தண்டிக்கப்பட்டது. இந்தியாவில், இன்றும் அதன் உபரி பாகங்களின் விலை மிக அதிகம் என்ற கருத்து உண்டு. ஜெர்மன் தயாரிப்பு, எனவே தரம் வாயந்தது; நிறையப் பேர் வாங்கியிருக்கிறார்கள், எனவே நல்ல தயாரிப்பு என்பது, தொடர்பில்லாதவற்றை நமது அளவீடுகளில் புகுத்தி ஒரு மாய ஆறுதலைப் பெறுகிறோம்.

ஒன்றின் தன்மையை மற்றதில் நீட்டிப்பதில் பல அபாயங்கள் உண்டு. எனினும், நம் மூளை அதனை உடனே செயலாற்றுகிறது. இதன் முக்கியக் காரணம், மூளை ஒரு சோம்பேறி. அது அதிகம் சிந்திப்பதை விரும்புவதில்லை. முன் முடிவுகளை தருக்கத்துடன் நீட்டித்து, நம்பிக்கையைத் தூண்டிவிடுகிறது. அடுத்த காரணம், சந்தேகிப்பதில், தாமதிப்பதில் சில நேரம் தவறுகள் வந்துவிட வாய்ப்பு இருக்கிறது. ‘நீங்க தயங்கிட்டீங்க. ஒருநாள் முந்தி, அட்வான்ஸ் 10 பர்சன்ட் குடுத்திருந்தீங்கன்னா, வீட்டு விலையில ரெண்டு லட்சம் குறைஞ்சிருந்திருக்கும்” என்ற வீட்டுத்தரகரின் பேச்சை நாம் கேட்க விரும்புவதில்லை.

அடுத்தது,  ஆராயாமல், பெரும்பான்மை, பொதுமைப்படுத்துவது. ‘‘உலகத்துல பல அறிவாளிகள் இந்த சிந்தனையைச் சார்ந்தவர்கள்தான். எனவே, அவர்கள் எழுதினதுன்னா சரியாத்தான் இருக்கும்” என்ற சிந்தனைத் தூண்டலில் பின்னே, ‘இவர்கள் எழுதுவது அறிவாளித்தனமானதுதான் என யார் சொன்னார்கள்?’ என்ற கேள்வி எழுமானால், அது குறித்து ஆராய நேரமும், முயற்சியும் செலவிட வேண்டும். எனவே பொய்யோ, நிஜமோ ஒரு பெரும்பான்மை, பொதுத்தன்மையை வலியச் சென்று ஏற்கிறோம்.

அடுத்து, இப்படி அனுமானிக்கப்பட்ட பொதுத்தன்மையை, பெரும்பான்மையைக் கேள்வி கேட்கும் நாம் முட்டாளாகப் பார்க்கப்படுகிறோம் என்ற உணர்வு. ‘‘இத்தனை பேர் சொன்னா கேக்கணும். நீயா சந்தேகப்பட்டே, அனுபவி” என்று நமது சந்தேகம் சரியல்ல என்று உறுதிப்படுமானால், நமது தோல்வியை எள்ளுவார்களோ? என்ற அச்சம். இந்தச் சமூக அந்நியப்படுத்தல் குறித்த பிரமை நம்மை பல சமரசங்களைச் செய்யத் தூண்டுகிறது.

இதேதான், “அந்த தலைவரோட தாத்தா பெரிய தியாகி. எனவே இவரும் நமக்காக உழைப்பார்’’ என்பதும், “இவர் பற்றி ஒரு செய்தியை வாட்ஸப்பில் படித்தேன். எனவே, இவர் நல்ல அமைச்சராக இருக்கமாட்டார்’’ என்பதும், தொடர்பில்லாத செய்திகள் நம் முடிவில் நீள்வதன் அடையாளம். எதன் அளவுகோலாக எது இருக்க வேண்டும் என்பதைச் சரியாகச் சிந்திப்பது, நேராக யோசிப்பதன் மற்றொரு அடையாளம்.

More from the section

குவியத்தின் எதிரிகள்: 10. விருப்பமும் முன்முடிவுகளும்
குவியத்தின் எதிரிகள்: 9 சுய இரக்கம்
குவியத்தின் எதிரிகள்: 8 வண் நுகர்வு
குவியத்தின் எதிரிகள்: 7 இணைத்துப் பார்த்தல்
குவியத்தின் எதிரிகள்: 6 முன் அனுபவம்