செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

அதிகாரம் - 16. பொறைஉடைமை

By சிவயோகி சிவகுமார்| Published: 08th July 2018 12:00 AM

 

அதிகார விளக்கம்

பொறுத்துக்கொள்ளும் பண்பு அவசியம். தன்னை வெட்டும் மனிதனையும் தாங்கும் பூமித் தாய்போல் வாழ் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. நமது தகுதியால் அடுத்தவர் தவிர்க்கப்படுவார். மேலும், அடுத்தவரின் அசட்டுத்துத்தனமாக வார்த்தைக்கு மதிப்பளிக்காதவரே நோன்பில் சிறந்தவர்.

 

151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

தோண்டுபவரையும் தாங்கும் பூமியைப்போல், தன்னை தரக்குறைவாகப் பேசுபவரையும் பொறுத்துக்கொள்வதே தலை சிறந்தது.

 

152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று.

மரணம் வரை பொறுத்துக்கொள்வதைக் காட்டிலும், அதனை மறந்துவிடுவதே நன்று.

 

153. இன்மையுள் இன்மை விருந்துஒரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை.

இன்னலில் இன்னல், விருந்தை கவனிக்க முடியாமை; வலிமையில் வலிமை, மடையர்களைப் பொறுத்தல்.

 

154. நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை

போற்றி ஒழுகப் படும்.

நிறைவுத்தன்மை நீங்காமல் இருக்க, பொறுமையைப் போற்றி ஏற்று நடக்க வேண்டும்.

 

155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.

பொறுக்காதவரை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை; பொறுத்துக் கொள்பவரைப் பொன்போல் போற்றுவார்கள்.

 

156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றும் துணையும் புகழ்.

பொறுக்காதவருக்கு ஒரு நாள் கிடைக்கும் இன்பம்; பொறுத்தவருக்குத் துணையாகவும் போற்றும் புகழாகவும் இருக்கும்.

 

157. திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து

அறன்அல்ல செய்யாமை நன்று.

திறன் இல்லாதவற்றைப் பிறர் செய்தாலும், துன்பப்பட்டு அறம் அல்லாதவற்றைச் செய்யாமல் இருப்பதே நன்று.

 

158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்

தகுதியான் வென்று விடல்.

மிகைப்படுத்தி துன்பம் செய்தவரை நாம் நமது தகுதியால் வென்றுவிடலாம்.

 

159. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்

இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

துறவியைவிடத் தூய்மையானவர், தீய சொற்கள் பேசுபவரை இறந்தவர் வாய்ப் பேச்சி என்று பார்ப்பவர்.

 

160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

உண்ணாநோன்பு இருக்கும் பெரியவர்களும், பிறர் சொல்லும் இழிவான சொல்லை அலட்சியம் செய்பவருக்குப் பின்தான்.

 

குறிப்பு

இந்த அதிகாரத்தில் உள்ள குறள்கள் குறித்த விரிவான, தெளிவான விளக்கத்துக்கு தொடர்புகொள்ள - சிவயோகி சிவகுமார் (9444190205).

Tags : திருவள்ளுவர் thiruvalluvar திருக்குறள் thirukkural அதிகாரம் பொறைஉடைமை adhikaaram poraiyudaimai

More from the section

அதிகாரம் - 21. தீவினையச்சம்
அதிகாரம் - 20. பயனில சொல்லாமை 
அதிகாரம் - 19. புறம்கூறாமை
அதிகாரம் - 18. வெஃகாமை
அதிகாரம் - 17. அழுக்காறாமை