திங்கள்கிழமை 25 மார்ச் 2019

164. யாத்திரை

By பா. ராகவன்| Published: 01st November 2018 10:00 AM

 

வினய்யும் வினோத்தும் அம்மாவின் தலைமாட்டிலும் கால்மாட்டிலுமாக எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள். அவள் இறந்துவிட்டாள் என்று தெரிந்த கணத்திலேயே, இருவரும் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார்கள். எனக்கு அவர்களைத் தொந்தரவு செய்ய விருப்பமில்லை. நான் மாமாவைப் பார்த்தேன். அவர் அழுவார், கதறுவார், அவரைச் சமாதானப்படுத்தவேண்டி இருக்கும் என்று நினைத்திருந்தேன். எதிர்பாராதவிதமாக அவர் மிகவும் அமைதியாகிப் போனார். ஆனால் அவர் கண்களில் துயரத்தின் நிழல் இருந்தது. அது தனது வயது பற்றிய அச்சமாக இருக்கக்கூடும். யாருமற்றுப்போன வெறுமை உண்டாக்கிய பீதியாக இருக்கலாம். எனக்கென்னவோ வினோத் பத்மா மாமியை கயாவுக்கு அழைத்துச் செல்லும்போது கேசவன் மாமாவையும் சேர்த்து அழைத்துச் சென்றுவிடலாம் என்று தோன்றியது. ஆனால் வினோத்தின் முடிவை வினய் ஏன் துறவுக்கு எதிரான மனநிலையாகப் பார்க்கிறான் என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

நான் அம்மாவைப் பார்த்தேன். வீட்டுக்கு வந்தபோது பார்க்கையில் எப்படி இருந்தாளோ அதேபோலத்தான் இருந்தாள். மூச்சு மட்டும்தான் இல்லை. வலிகள் இல்லாமல், வேதனையில்லாமல் நிதானமாகச் சாப்பிட்டு எழுந்து கைகழுவிவிட்டு வந்து அமர்ந்து வெற்றிலை போட்டு மெல்வதுபோல வாழ்வை மென்று சுவைத்துத் துப்பிக் கொப்பளித்துவிட்டுப் போயிருக்கிறாள் என்று தோன்றியது. ஆனால் ஒரு வெறி இருந்திருக்கிறது. மூச்சுக் காற்றைப்போல அதுதான் அவளைச் செயல்பட வைத்திருக்கிறது. வினோத்திடம் அவள் சொன்ன தகவல்களை எத்தனை முயன்றும் ஒரு நேர்க்கோட்டில் என்னால் கொண்டுவர இயலவில்லை. தனக்கென அவள் வைத்திருந்த நியாயங்களை இறுதிவரை ரகசியமாகவே வைத்திருந்துவிட்டுத் தான் போகும்போது தன்னோடே எடுத்துச் சென்றுவிட்டாளோ என்று நினைத்தேன். அதே சமயம், கேசவன் மாமாவைக் குறித்து பத்மா மாமியிடம் அவள் சொல்லியிருக்கிறாள் என்ற தகவல் சிறிது அதிர்ச்சியளித்தாலும், ஆங்காங்கே எங்களுக்கோ அல்லது வேறு யாருக்கோ அவள் சங்கேதமாகத் தனது ரகசியங்களின் பகுதிகளைப் பிரித்துப் பிரித்துக் கலைத்துப் போட்டுத் தேட விட்டுவைத்திருக்கிறாளோ என்றும் நினைக்கத் தோன்றியது.

தலை வலித்தது. சரி போ என்று விட்டு விலகி வெளியே வந்து நின்று யோசித்துப் பார்த்தால், இத்தனைப் பூடகங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லாமல் மிகவும் எளிதாகவே அவள் வாழ்வைக் கடந்திருப்பாள் என்றும் பட்டது. என்னவானாலும் நான் இதில் என்னைப் பொருத்திக்கொள்வதில்லை என்று முடிவு செய்துகொண்டேன். இது ஒரு கடமை. இதை நான் செய்தே தீர வேண்டும். அவள் இருந்த உடலை இல்லாமல் ஆக்கும்வரை இங்கு இருக்கத்தான் வேண்டும். அதன்பின் ஒன்றுமில்லை.

‘நீ ஒண்ணும் பண்ணமாட்டியா?’ என்று மாமா கேட்டார். யோசனையில் இருந்ததால் அவரது குரல் சட்டென்று கவனத்தைத் தீண்டிக் கலைத்தது. கணப்பொழுது திடுக்கிட்டுப் போய், ‘ம்?’ என்றேன்.

‘இல்லே. அவா ரெண்டு பேரும் எதோ பண்றாளே, நீ ஒண்ணும் பண்ணலியான்னு கேட்டேன்’.

நான் வினய்யைப் பார்த்தேன். பத்மாசனமிட்டுக் கண்மூடி அம்மாவின் தலையருகே அமர்ந்திருந்தான். மூடிய கண்களுக்குள் அவன் உக்கிரமாக எதையோ தரிசித்துக்கொண்டிருப்பது போலப் புருவங்கள் குவிந்து ஒரு மரவட்டையைப் போலச் சுருண்டிருந்தது. வினோத்தும் கண்ணை மூடித்தான் அமர்ந்திருந்தான். ஆனால் அவன் மிகவும் சாதாரணமாக இருப்பவனைப் போலவே காணப்பட்டான்.

‘எப்படியோ அவள நல்லபடியா எம்பெருமான் திருவடில கொண்டு சேர்த்துடுங்கோடா’ என்று மாமா சொன்னார்.

‘அதான் அவளே கெளம்பிப் போயிட்டாளே’.

‘நான் கர்மாக்களைச் சொன்னேன்’.

நான் இதற்குப் பதில் சொல்லவில்லை. பேச்சை மாற்றும்விதமாகக் காலை விடிந்ததும் யார் யாருக்குத் தகவல் சொல்ல வேண்டும் என்று கேட்டேன்.

‘வாசல்ல போய் நின்னுண்டு கொரல ஒசத்தி ஒருவாட்டி சொல்லிட்டு வந்துட்டா போதும். நமக்கு வேற யார் மனுஷா?’

‘சரி. அதைப் பண்ணிடுங்கோ’.

‘வாத்யார்தான் கவலையா இருக்கு’.

‘என்ன கவலை?’

‘இந்த ஏரியாவுலே சாம வேத வாத்யார் யாரும் இருக்கறதா தெரியல்லே. பட்டாச்சாரியார்ட்ட சொல்லி வெச்சிருக்கேன். யோசிச்சிப் பாக்கறேன்னு சொன்னார்’.

‘கவலைப்படாதிங்கோ. வினய் பார்த்துப்பான்’.

‘அவன் வேதம் படிச்சிருக்கானாடா?’

‘எனக்குத் தெரியாது மாமா. ஆனா நான் பண்றேன்னு அவந்தானே சொன்னான்?’

‘அது தப்பு. பிள்ளை அதெல்லாம் பண்ணப்படாது’ என்று மாமா சொன்னார்.

‘சன்யாசிக்கு இந்த எந்த விதியும் பொருந்தாது’ என்று நான் சொன்னேன்.

‘அம்மா பொருந்தறாளோல்யோ? அப்பறம் என்ன?’

ஒரு மணி நேரத்தில் வினோத் கண்ணைத் திறந்தான். இறந்துகிடந்தவளை விழுந்து ஒருமுறை சேவித்தான். பிறகு என்னருகே வந்து அமர்ந்துகொண்டான்.

‘டேய், விஜய் இன்னும் காணமேடா?’ என்று மாமா மீண்டும் அந்தக் கவலைப்பட ஆரம்பித்தார்.

‘வருவான் மாமா’ என்று இம்முறை நான் சொன்னேன்.

‘அவன் என்ன செய்கிறான்?’ என்று வினோத் என்னைக் கேட்டான்.

‘நீ என்ன செய்தாய்?’

‘நான் கீதை முழுவதையும் ஒருமுறை சொன்னேன். சரம ஸ்லோகம் சொல்லி நிறைவு செய்தேன்’.

‘அந்த மாதிரி அவன் ஏதாவது வைத்திருப்பான்’.

‘அதைத்தாண்டா கேட்டேன், நீ ஒண்ணும் பண்ணலியா?’ மாமா மீண்டும் கேட்டார். நான் புன்னகை செய்தேன்.

‘என்ன வேண்டுமானாலும் செய்யலாம் மாமா. ஆனால் எதற்குச் செய்ய வேண்டும் என்ற தெளிவு வேண்டும்’.

‘இதென்னடா அபத்தக் கேள்வி? உங்கம்மாவுக்குத்தான்’.

‘அம்மாதான் போய்விட்டாளே’.

‘நீ விழுந்து சேவிக்கக்கூட இல்லே’.

‘அம்மாதான் போய்விட்டாளே. எதைச் சேவிப்பது?’

‘பெருமாள் புறப்பாடு ஆச்சுன்னா கர்ப்பகிரகத்துக்கு மதிப்பில்லேன்னு சொல்லிடுவியோ?’

நான் சிரித்தேன். அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘நீங்கள் ஒரு யாத்திரை போய் வாருங்கள் மாமா. சிறிது மனமாற்றம் ஏற்படும். நான் வேண்டுமானால் ஏற்பாடு செய்து தருகிறேன்’ என்று சொன்னேன். சில விநாடிகள் என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர், அதுவரை அடக்கிவைத்திருந்த கண்ணீரை அப்போது வெளியே விட்டார். நான் அவரை ஆரத் தழுவிக்கொண்டேன். தட்டிக் கொடுத்தேன்.

காலை ஆறு மணிக்கு மாமா வீட்டை விட்டு வெளியே போனார். பத்து நிமிடங்களில் திரும்பி வந்தார். அதன்பின் வரிசையாகப் பல பேர் வர ஆரம்பித்தார்கள். நாங்கள் மூன்று பேரும் அம்மா இருந்த அறையின் ஓரமாக நின்றுகொண்டோம். கூடத்தின் நடுவே துணி விரித்து அம்மாவைக் கிடத்திவிட்டு, மாமாதான் அருகே அமர்ந்திருந்தார். தலைமாட்டில் எரிந்துகொண்டிருந்த விளக்கின் திரியை அடிக்கடித் தூண்டிவிட்டுக்கொண்டே இருந்தார். அது அவரது பதற்றத்தின் வெளிப்பாடு என்று நினைத்தேன். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், கோயில் ஊழியர்கள், ஊர்க்காரர்கள் என்று எப்படியும் இருபது இருபத்து ஐந்து பேர் இரண்டு மணி நேரத்துக்குள் வந்து போய்விட்டார்கள்.

‘பத்மா மாமி ஏன் வரவில்லை?’ என்று நான் மாமாவிடம் கேட்டேன்.

‘சொல்லிட்டேன்’ என்று மாமா சொன்னார். வந்த அனைவரும் எங்கள் மூன்று பேரையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். எல்லோருக்குமே எங்களிடம் பேசுவதற்கு விருப்பம் இருந்தது. ஆனால் தயங்கினார்கள். ஒரு சிலர் மட்டும் மாமாவிடம் போய் துக்கம் கேட்டுவிட்டு எங்கள் அருகே வந்து, ‘அடையாளமே தெரியலே. இதுல யார் மூத்தவன், யார் அடுத்தவன்?’ என்று கேட்டார்கள். நாங்கள் பொதுவாக அவர்களுக்குக் கைகுவித்து வணக்கம் சொல்லிவிட்டு அமைதியாக இருந்தோம்.

‘இன்னும் அரை மணி நேரம் இருக்கலாம். அதன்பின் ஆரம்பித்துவிட வேண்டியதுதான்’ என்று வினய் சொன்னான்.

மாமா யார் யாரிடமோ சாம வேத வாத்யாருக்காக மெனக்கெட்டுக்கொண்டிருந்தார். நாவலூர் வாத்தியார், ‘ரிக் வேதம்னாக்கூட சமாளிச்சுடலாம். சாமம் தெரியாதே’ என்று சொல்லிவிட்டாராம்.

‘அக்காவ கடைத்தேத்தி அனுப்பியாகணும்டா! யாராவது எதாவது பண்ணுங்கோ’ என்று வந்திருந்த சிலரிடம் மாமா வெடித்து அழுதபடி முறையிட்டுக்கொண்டிருந்தார். வினய்க்குப் பொறுக்கவில்லை. சட்டென்று முன்னால் சென்று அவர் தோளைத் தொட்டான். மாமா திரும்பிப் பார்த்தார்.

‘வாத்யார் வேண்டாம். நான் சொன்னா சொன்னதுதான். நான் பார்த்துப்பேன்’.

மாமா மிரண்டுவிட்டார். அவன் குரலில் தொனித்த கட்டளைத் தொனி அதுவரை அவர் கேட்டறியாதது. அமைதியாகிப்போனார்.

வினய் என்னிடம் வா என்று சொல்லிவிட்டு வெளியே போனான். நான் அவன் பின்னால் போனேன். வசந்த மண்டபத்துக்குப் போகிற வழியில் இருந்த ஒரு தென்னை மரத்தின் மீது அவனே ஏறினான். ஒரு மட்டையை வெட்டிக் கீழே போட்டான். நான் அதை எடுத்துக்கொண்டேன். நாங்கள் வீடு வந்து சேர்ந்தபோது வினோத் எங்கிருந்தோ மூங்கில் கட்டைகளை ஏற்பாடு செய்து வரவழைத்திருந்தான். வினய், அவனே அமர்ந்து ஓலையைப் பின்னி, கட்டைகளை முட்டுக் கொடுத்துப் பாடையைத் தயார் செய்தான். பிறகு ஒரு மண் கலயத்தை எடுத்து வந்து செங்கல் வைத்து நெருப்பு மூட்டி, அதன் மீது வைத்தான். வீதியில் அத்தனை பேரும் நின்று அவன் செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

சில நிமிடங்களில் அவன் ஆயத்தப் பணிகளை முடித்துவிட்டு மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தான்.

‘டேய், கர்த்தா இல்லாம எப்படிடா’ என்று மாமா சொன்னார்.

‘மூணு பேரும்தான் இருக்கோமே மாமா?’

‘அவன் வரலியே இன்னும்?’

‘அவன் வரமாட்டான்’ என்று இப்போது வினோத் சொன்னான். மாமா திகைத்துப்போனார்.

பதினைந்து நிமிடங்கள் மூச்சுவிடாமல் வினய் மந்திரங்களைச் சொல்லி முடித்துவிட்டு மாமாவைப் பார்த்தான். அவருக்கு வேறு வழி இல்லாமல் போனது. மாடவீதிப் பெண்கள் சிலரைக் கூப்பிட்டுப் பேசினார். பத்மா மாமி வந்து சேர்ந்தாள். யாரும் குரலெடுத்து உரக்க அழவில்லை என்பது சற்று நிம்மதியாக இருந்தது. பெண்கள் உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டார்கள். பிறகு சிறிது நேரம் கழித்து  என்னை உள்ளே அழைத்தார்கள். நான் அம்மாவின் உடல் மீது நீர் ஊற்றிக் குளிப்பாட்டினேன். வெளியே வந்து நின்றுகொண்டேன். அவர்கள் மீண்டும் கதவை மூடிக்கொண்டு ஏதோ செய்தார்கள். எல்லாம் முக்கால் மணி நேரத்துக்குள் நடந்தேறியது.

‘வரமாட்டானா? நெசமாவே வரமாட்டானா!’ என்று மாமாதான் திரும்பத் திரும்பப் புலம்பிக்கொண்டிருந்தார்.

நான் அவர் கையைப் பிடித்து நிறுத்தினேன். ‘கொள்ளி நீங்க வெக்கணும்னு அவ சொன்னா. அது அவளோட ஆசை. அப்பறம் உங்க இஷ்டம்’.

யாரோ தீப்பந்தம் ஏந்தினார்கள். நாங்கள் மூவருமாக மாமாவோடு சேர்ந்து அம்மாவைப் பாடையில் ஏற்றி வெளியே கொண்டுவந்தோம். ‘இவாதான் பிள்ளைகளா! இவாதான் பிள்ளைகளா!’ என்று வழியெங்கும் ஆண்களும் பெண்களும் எங்களையே வேடிக்கை பார்த்தார்கள். நாங்கள் யாருடனும் எதுவும் பேசவில்லை. மயானத்தைச் சென்றடையும்வரை மாமாவின் முகத்தைக்கூடப் பார்க்கவில்லை.

இறக்கி வைத்தபின், வினய் மீண்டும் சில மந்திரங்களைச் சொன்னான். மாமாவுடன் மயானம் வரை மூன்று பேர் ஊர்க்காரர்கள் வந்திருந்தார்கள். அவர்களை விலகியிருக்கச் சொல்லி அவன் முதலில் வாய்க்கரிசி போட்டான். பிறகு எங்களைப் போடச் சொன்னான். இறுதியாக மாமாவையும் உடன் வந்திருந்தவர்களையும் அழைத்து, போடச் சொன்னான். ‘இது சாஸ்திரத்துல உண்டா?’ என்று மாமா கேட்டார்.

‘அவன் சொல்றதுதான் சாஸ்திரம். போடுங்கோ’ என்று வினோத் சொன்னான். மாமா அழுதபடியே அரிசியைப் போட்டார்.

குவித்து வைக்கப்பட்டிருந்த விறகுப் படுக்கையின்மீ து அம்மாவை நாங்கள் தூக்கி வைத்தோம். உதவிக்கு வந்த வெட்டியானை வினய் வேண்டாம் என்று சொல்லி நகர்ந்து நிற்கச் சொன்னான். ஒரு வறட்டியின் மீது கற்பூரக் கட்டியை வைத்து, அதை அம்மாவின் நெற்றியின் மீது வைத்தான். திரும்பி, மாமாவைப் பார்த்தான்.

(தொடரும்)

Tags : பா. ராகவன் யதி தொடர் ரிக் வேதம் சாம வேதம் வாத்யார் பட்டாச்சாரியார் வேதம் vedham rig sama pa. raghavan yathi serial

More from the section

167. திருமுக்கூடல்
166. சாம்பலின் குழந்தை
165. அடங்கல்
163. புன்னகை
162. கண்ணீரின் குழந்தை