24 மார்ச் 2019

160. கொள்ளி எறும்பு

By பா. ராகவன்| Published: 26th October 2018 10:00 AM

 

‘நான் சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு வர விரும்புகிறேன்’ என்று வினய் சொன்னான். ‘கடற்கரைக்குப் போயேன்’ என்று நான் சொன்னதற்கு வேண்டாம் என்று உடனே மறுத்தான்.

‘ஏன்?’

‘சித்ராவைப் பார்க்க வேண்டி வரலாம்’.

அது ஒரு பிரச்னைதான். கோயிலுக்குள்ளேயே போய் உட்காரச் சொல்லலாம் என்றால் வந்துபோகிற மாமிகள் பொருட்காட்சி காண வந்தாற்போல நின்று நின்று முறைத்துவிட்டுப் போவார்கள். எனக்கும் வினோத்துக்குமே அது பிரச்னையாக இருக்கும்போது வினய்யின் தோற்றத்துக்குக் கேட்கவே வேண்டாம். மாமாவுக்கே அவனது தோற்றம் மிகுந்த சங்கடத்தை அளித்ததை உணர முடிந்தது. ‘ஏண்டா, உங்கண்ணனும் இப்படித்தான் இருப்பானாடா?’ என்று அவர் வினய்யிடம் கேட்டார்.

‘தெரியல மாமா’ என்று வினய் சொன்னான்.

‘நீ பார்த்தப்போ அவன் எப்படி இருந்தான்?’

‘அது பல வருஷம் ஆயிடுத்தே?’

‘பரவால்ல சொல்லு. அப்ப எப்படி இருந்தான்?’

‘இடுப்பு வரைக்கும் முடி தொங்கிண்டிருந்தது. ஆனா இப்படி ஜடை பிடிச்ச மாதிரி இல்லே. பொம்பனாட்டிகளுக்கு இருக்கற மாதிரி. தாடி மீசை இருந்தது. அதுவும் எனக்கு இருக்கற மாதிரி இல்லே. சின்னதாத்தான் இருந்தது. ஜிம்முக்குப் போய் எக்சர்சைஸ் பண்ண மாதிரி உடம்பை கிண்ணுன்னு வெச்சிண்டிருந்தான்’.

‘நடந்துண்டே இருந்தா அப்படி ஆயிடுமோ என்னமோ’.

‘அப்படித்தான்’.

‘நீ ஏன் இப்படி தலைவிரி கோலமா இருக்கே? சன்யாசிகள் லட்சணமா இருக்கப்படாதுன்னு சட்டமா? தோ, இவன் நன்னாருக்கானே. வினோத்கூட சின்னதா சிகை வெச்சுண்டு பாக்கற மாதிரிதான் இருக்கான்’.

வினய் சிரித்தான். பிறகு, ‘யாரும் பார்க்க வேண்டாம்னுதான்’ என்று சொன்னான்.

அவன் தியானம் செய்ய இடம் கேட்டபோது நான் வீட்டின் கிணற்றடியே சரியாக இருக்கும் என்று சொன்னேன். ஆனால் உடனடியாகச் செய்தே தீரவேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது? இதை நான் அவனிடம் கேட்டபோது, ‘கங்காதரன் பேச்சு சரியாக இல்லை. எனக்கு ஒரு சிறு சந்தேகம் உள்ளது’ என்று சொன்னான்.

‘எதற்கு நீ அவன் பின்னால் ஓடினாய்?’

‘சம்சுதீனைப் பற்றி ஒருவேளை அவனுக்குத் தெரிந்திருக்குமா என்று கேட்பதற்கு’.

நான் சிரித்தேன். ‘நல்ல ஆளைப் பிடித்தாய். அவன் யார் சம்சுதீன் என்று கேட்டிருப்பான்’.

‘ஆம். அப்படித்தான் கேட்டான்’.

‘வேறென்ன சொன்னான்?’

‘குறிப்பாக ஒன்றுமில்லை விமல். ஆனால் அவனிடம் ஏதோ ஒரு பூடகம் உள்ளது. நம்மை செல்லியம்மன் திருவிழாவுக்கு வரவழைத்தது, அவனைச் சந்திக்கச் செய்தது எல்லாமே அந்த நீலாங்கரை சாமியின் வேலைதான் என்பது போலச் சொன்னான்’.

‘என்னால் இதை நம்ப முடியவில்லை’.

‘என்னாலும்தான். நீலாங்கரை சாமி வெறும் வைத்தியர். நான் கவனித்தவரை அவருக்குத் தனித்திறமைகள் ஏதுமில்லை. ஆனால் சொரிமுத்து தன்னோடு பேசுவதாக அவர் என்னிடம் சொன்னார்’.

‘இதை நீ சொரிமுத்துவிடமே கேட்டிருக்கலாமே?’

‘ஏனோ கேட்கத் தோன்றவில்லை. ஆனால் சொரிமுத்துவை அறிந்தவன் என்ற முறையில் இம்மாதிரியான அரை வேக்காடுகளோடு அவர் தொடர்பு கொள்ள மாட்டார் என்பது எனக்குத் தெரியும்’.

‘பிறகு?’

‘ஆனால் சொரிமுத்து வந்திருப்பது அந்த சாமிக்குத் தெரிந்திருக்கிறது. நமது வருகை குறித்து சொரிமுத்துதான் தனக்குத் தெரிவித்ததாகச் சொன்னார்’.

‘ஓ’.

‘எங்கோ ஒரு கண்ணி இடறுகிறது விமல். அதை நான் கண்டறிய வேண்டும். அதற்குத்தான் தனியே உட்கார வேண்டும் என்றேன்’.

நாங்கள் பேசியபடி வீடு போய்ச் சேர்ந்தபோது அம்மா மீண்டும் கண் விழித்திருந்தாள். நாங்களிருவரும் அவள் அருகே சென்று நின்றோம். ஆனால் ஒன்றும் பேசவில்லை. அம்மா எங்களைப் பார்த்துச் சிரித்தாள். ‘சாப்ட்டிங்களா?’ என்று கேட்டாள். ‘கேசவன கூப்டு’ என்றாள். நான் மாமாவை உள்ளே அழைத்தேன்.

‘என்ன?’

‘அம்மா உங்கள கூப்பிடறா’.

‘பேசறாளா! பெருமாளே!’ என்று பரிதவித்து ஓடி வந்து, ‘என்னக்கா?’ என்று கேட்டார்.

‘இவாள்ளாம் சாப்ட்டாளா?’

‘நீ பேசறியேக்கா. இதுவே வயிறு நிறைஞ்சிடுமே. எப்படிக்கா இருக்கே? உடம்புக்கு என்ன பண்றது?’ என்று மாமா கேட்டார். அவரையறியாமல் கண்ணில் நீர் வழிந்துகொண்டிருந்ததைக் கண்டேன். அம்மா புன்னகை செய்தாள். என்னை அருகே அழைத்துத் தடவிக் கொடுத்தாள். வினய்யைக் கூப்பிட்டு அவனது ஜடாமுடியைத் தொட்டுப் பார்த்தாள்.

‘ஒன்னத்தான் அடையாளமே தெரியலே’ என்று சொன்னாள்.

‘நாலு பேரும் நன்னாருக்காக்கா. பெரிய ரிஷிகளாயிட்டா. வயசும் உறவும் தடுக்கறது. இல்லேன்னா விழுந்து சேவிச்சிடுவேன்’ என்று மாமா சொன்னார். ‘ஆனா பாத்தியா? உனக்கு ஒண்ணுன்னு தெரிஞ்சதும் எங்கெங்கேருந்தோ ஓடி வந்துட்டா. அதெப்படிக்கா பாசம் இல்லாம போயிடும்? திருப்தியா உனக்கு? சந்தோஷமா?’

திருப்தி என்ற ஒற்றைச் சொல்லை அவளிடம் இருந்து உருவிவிட வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருந்ததைப் புரிந்துகொள்ள முடிந்தது.

‘அம்மா, எங்களைப் பெற்றவள் யாராக இருந்தாலும் நீதான் எங்களுக்கு அம்மா. அம்மா என்பவள் பெறுபவள் அல்ல. உருவாக்குபவள். நீ எங்களை இவ்வாறாக உருவாக்கினாய்’ என்று நான் சொன்னேன்.

‘நீ எதையும் பேச அவசியமில்லை அம்மா. ரகசியங்கள் எங்களுக்கு முக்கியமில்லை. உறவுகளை உதறிவிட்ட பின்பு எதுவுமேகூட முக்கியமில்லை’ என்று வினய் சொன்னான்.

‘அம்மா நீ உன் இறுதிக் காலத்தில் இருக்கிறாய். உன்னை நல்லபடியாக நாங்கள் வழியனுப்பி வைத்துவிட்டுத்தான் போவோம். சந்தோஷமா?’ என்று நான் கேட்டேன்.

அவள் மீண்டும் புன்னகை செய்தாள். சிறிது நேரம் கண்மூடி இருந்துவிட்டு மீண்டும் கண்ணைத் திறந்து, ‘இதை உங்கள் அப்பாவுக்கும் செய்திருக்கலாம்’ என்று சொன்னாள்.

‘மன்னிக்க வேண்டும் அம்மா. அது கடமை அல்ல’.

‘அவர்தான் எங்களைப் பெற்றவர் என்றாலுமே கடமை அல்ல’ என்று நான் அழுத்திச் சொன்னேன்.

‘வேறு எது கடமை? எனக்குக் கொள்ளி வைப்பதா?’

‘சொல்லக் கஷ்டமாக உள்ளது. ஆனால் அதுதான். அது ஒன்றுதான் கடமை’.

‘யார் வகுத்த தர்மம் இது?’

‘தெரியாது. காலம் காலமாக உள்ளது’.

‘அப்படியா?’

‘ஆம்’.

‘நான் வேண்டாம் என்று நினைத்தால்?’

நாங்கள் அதிர்ந்து போனோம். ‘அம்மா..?’ என்று வினய் அழைத்தான்.

‘இதைத்தான் உங்ககிட்டேல்லாம் சொல்லணும்னு நினைச்சேன். எனக்கு கேசவன் கொள்ளி போடட்டும். நீங்கள்ளாம் பக்கத்துல இருந்தேள்னா போதும்’.

அக்கா என்று அவள் காலைப் பிடித்துக்கொண்டு மாமா கதற ஆரம்பித்தார். எங்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பேசியது போதும் என்று அவள் முடிவு செய்துவிட்டது புரிந்தது. கண்ணை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்துவிட்டாள். மாமா மட்டும் நெடுநேரம் அழுதுகொண்டே இருந்துவிட்டு, பிறகு எழுந்து வெளீயே வந்தார்.

‘தப்பா நினைச்சிக்காதீங்கோடா. அவ எதோ சித்தக் கலக்கத்துல பேசிட்டா. பாத்யப்பட்டவா நீங்க இருக்கேள். நல்லபடியா பண்ணி முடிங்கோ. நான் இருக்கேன் ஒத்தாசைக்கு’ என்று சொன்னார்.

‘இல்லை மாமா. அநேகமாக இது அம்மாவின் இறுதி விருப்பம் என்று தோன்றுகிறது. அதை ஏன் நிராகரிக்க வேண்டும்?’ என்று நான் கேட்டேன்.

‘விட்டுது சனின்னு நினைக்கறியா?’ என்று கேசவன் மாமா சீறினார்.

‘சேச்சே, அப்படியில்லை. அவளுக்காக நாங்கள் ஒன்றும் செய்ததில்லை. இந்த விருப்பத்துக்குக் குறுக்கே நிற்காதிருந்தால் போதாதா?’

‘அதெல்லாம் இல்லே. அதெல்லாம் நடக்காது. அவன் விஜய் வந்துடுவான். நீங்க விடுங்கோ, நான் அவண்ட்ட பேசிக்கறேன்’ என்று மாமா சொன்னார். மிகவும் பதற்றமாகக் காணப்பட்டார். மீண்டும் அம்மாவின் அறைக்குள் ஓடி, ‘ஏன்க்கா இப்படி பேசறே? உனக்கென்ன பைத்தியமா? நீ பெத்த நாலும் உனக்காக வந்து நிக்கறப்போ நான் யார் இதையெல்லாம் செய்யறதுக்கு?’ என்றார். அம்மா கண்ணைத் திறக்கவில்லை. நான் மெல்ல மாமாவின் அருகே சென்று, ‘அந்த நான்காவதாக வரவேண்டிய மூத்தது வரட்டும். அப்போது பேசுவாள்’ என்று சொன்னேன்.

மாமா நெடுநேரம் அழுதார். என்னென்னவோ சொல்லி எங்களை சமாதானப்படுத்தப் பார்த்தார். அதற்கு அவசியமில்லை என்று நாங்கள் சொன்னது அவர் சிந்தைக்குச் செல்லவேயில்லை.

‘எம்மேல அவளுக்கு அவ்ளோ பாசம்டா. கேசவன்னா உசிரையே குடுப்பா. அக்காவா அவ? என் அம்மாடா!’ என்று சொன்னார்.

‘அப்படியானால் அவள் முடிவு சரிதான்’.

‘அதெப்படி? அதெல்லாம் இல்லை’ என்று சட்டென்று சொல்லிவிட்டு எழுந்து அடுக்களைக்குச் சென்றார். ‘ராத்திரிக்கு என சாப்பிடுவேள்?’ என்று கேட்டார்.

‘சிரமப்படாதிங்கோ. ஒரு தம்ளர் பால் இருந்தா போதும்’ என்று வினய் சொனான்.

‘எனக்கு அதுவும் அவசியமில்லை’ என்று நான் சொன்னேன்.

‘சும்மா இருங்கோடா. நான் ஒரு உப்மா கெளர்றேன்’ என்று சொல்லிவிட்டு சமையலில் மூழ்கிப் போனார். சிறிது நேரம் கழித்து வினோத் வீட்டுக்கு வந்தான்.

‘மாமி தூங்கிவிட்டாளா?’ என்று வினய் கேட்டான்.

வினோத் அடுக்களையைப் பார்த்தான். பிறகு அம்மாவின் அறையைப் பார்த்தான். ‘பரவாயில்லை சொல்’ என்று நான் சொன்னேன்.

‘என்ன சொல்ல? நாம் இங்கு வந்திருக்கவே வேண்டாம்’ என்று சொன்னான்.

வினய் விழுந்து விழுந்து சிரித்தான். ‘போகிற போக்கைப் பார்த்தால் மரணம் நிகழும்போது நாம் யாரும் இங்கே இருக்கமாட்டோம் போலிருக்கிறது’.

‘நான் கிளம்புகிறேன் வினய்’ என்று வினோத் சொன்னான்.

‘டேய், அவசரப்படாதே. பத்மா மாமி என்ன சொன்னாள்? அதைச் சொல் முதலில்’.

‘என்னென்னவோ’.

‘அப்படியென்றால்?’

‘அம்மாவின் அப்பாவுக்கு நமது அப்பாவின் பழைய வாழ்க்கை நன்றாகத் தெரியுமாம்’.

‘அம்மாவுக்கு முந்தைய பெண் தொடர்பைச் சொல்கிறாயா?’

‘ஆம்’.

‘நம்ப முடியவில்லையே?’

‘ஆனால் அதுதான் உண்மை என்று அவள் சொன்னாள். அவர் வாழ்விலும் அப்படியொரு ரகசியத் தொடர்பு இருந்ததே அவரை அப்படியொரு முடிவு எடுக்க வைத்திருக்கிறது’.

நான் எனக்குள் ஒடுங்கி அடங்கிப் போனேன். என்னால் இப்போது அனைத்தையும் விளங்கிக்கொள்ள முடிந்தது. மூட்டம் விலகிய வானம் போலாகிவிட்டது மனம். அம்மாவின் அக்கா புருஷன் ஏன் இவர்கள் குடும்பத்தோடு இருந்த உறவை முறித்துக்கொண்டு போயிருப்பான் என்ற வினாவுக்கு பதில் தெரிந்தது. அமெரிக்காவில் இருக்கும் அவளுடைய மகன் யாரென்றே கேசவன் மாமாவுக்குத் தெரியாதிருப்பதன் நியாயமும் புரிந்தது.

‘தனது சிரமம் புரிந்த ஒரு மாப்பிள்ளையை அம்மாவின் அப்பா தனது மகளுக்குத் தேடியிருக்கிறார். அவர் ஜாதகம் பார்க்கவில்லை. ஆனால் இதைக் கவனித்திருக்கிறார்’.

‘ஆனால் தன் மகள் வாழ்க்கை வீணாகிவிடுமே என்று ஒரு தந்தை நினைக்கமாட்டாரா?’

‘அது முடிந்து போன உறவு என்று அப்பா சொல்லியிருக்கிறார்’.

‘முடிந்ததன் மிச்சங்களைப் பற்றியுமா?’

வினோத் என்னை உற்றுப் பார்த்தான். ‘மாமா நம் குடும்பத்தைச் சேர்ந்தவரல்ல என்று அண்ணா சொன்னது எத்தனை சரி!’ என்று வியந்தான்.

‘அம்மா இதை அறிவாளா?’ என்று வினய் கேட்டான்.

‘மூச்சைப் பிடித்துக்கொள். அம்மாதான் பத்மா மாமியிடம் இதைச் சொல்லியிருக்கிறாள்’.

நான் அவன் கரங்களைப் பற்றிக்கொண்டேன். ‘நமக்கு இங்கே பெரிய வேலைகள் இல்லை வினோத். சொன்னேனே, ஒரு பார்வையாளனாக நீ நிறுத்தி நிதானமாக ஒரு மரணத்தை தரிசிக்கலாம். அதன் வெறுமைக்குள் தெரியும் கிருஷ்ணனை சேவிக்கலாம். கிருஷ்ணனேதான் பூரண வெறுமை என்பதை அப்போது நீ தரிசனமாக உணர்வாய்’.

‘என்ன சொல்கிறாய்?’

‘அம்மாவின் இறுதி ஆசை, தனக்குக் கேசவன் கொள்ளி வைக்க வேண்டும் என்பது’.

‘அப்படியா? சொன்னாளா?’

‘ஆம்’.

வினோத் திகைத்திருந்தான். அவனுக்குப் பேச்சு வரவில்லை. எழுந்து சென்று வாசலில் சிறிது நேரம் அமர்ந்திருந்தான். முற்றிலும் இருட்டி, வீதி கரேலென ஆகிவிட்டிருந்தது. வீதி விளக்குகள் ஏதும் வந்திருக்கவில்லை. ஒரு நாய் குரைத்தது. ‘சொரிமுத்துவா பார்’ என்று வினய் உள்ளிருந்து சத்தமிட்டான். வினோத் அதைக் கண்டுகொள்ளவில்லை. நான் வெளியே வந்து அவன் அருகே அமர்ந்தேன். ‘வேறென்ன சொன்னாள்?’ என்று கேட்டேன்.

‘தனக்கும் கேசவன் மாமாவே கொள்ளி வைப்பார்’ என்று சொன்னாள்.

‘நீ என்ன சொன்னாய்?’

‘வேண்டாம், உங்களை நான் கயாவுக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்’.

நான் திகைத்துப் போனேன்.

(தொடரும்)

Tags : பா. ராகவன் யதி தொடர் கயா சன்னியாசி தியானம் pa. raghavan yathi serial gaya meditation

More from the section

167. திருமுக்கூடல்
166. சாம்பலின் குழந்தை
165. அடங்கல்
164. யாத்திரை
163. புன்னகை