சனிக்கிழமை 23 மார்ச் 2019

163. புன்னகை

By பா. ராகவன்| Published: 31st October 2018 10:00 AM

 

இருட்ட ஆரம்பித்துவிட்டது. வினய் வாசலுக்குப் போய் உட்கார்ந்துகொண்டான். நானும் வினோத்தும் ஆளுக்கொரு பக்கம் பிடித்து அம்மாவின் கட்டிலை அம்மாவோடு சேர்த்துத் தூக்கிக் கொண்டுவந்து கூடத்தில் வைத்தோம்.

‘ஐயோ ஏண்டா இப்பவே?’ என்று கேசவன் மாமா அலறினார்.

‘பரவாயில்லை மாமா. சிறிது நேரம் அவளோடு இருக்கலாம்’ என்று வினோத் சொன்னான். நாங்கள் மூவரும் அம்மாவின் அருகே அமர்ந்துகொண்டோம். அவள் கண்ணைத் திறக்கவேயில்லை. ஆனால் நினைவோடுதான் இருப்பாள் என்று எனக்குத் தோன்றியது.

‘அக்கா, எதாவது பேசேன்க்கா?’ என்று மாமா கேட்டார். எனக்கு அவரைப் பார்க்கத்தான் பரிதாபமாக இருந்தது. உண்மையிலேயே அம்மா போய்விட்ட பின்பு அவர் என்ன செய்வார்? அம்மாவை ஒரு சாக்காக வைத்துத்தான் அவர் இத்தனைக் காலம் உலவிக்கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். தன் வாழ்வின் சாரமாக வேறெதனைச் சொல்ல முடியும் அவரால்?

நான் மாமாவிடமே இதைக் கேட்டேன். சிறிது யோசித்துவிட்டு, ‘ஒரு விதத்துல உண்மைதான். அவளுக்காகத்தான் இருக்கேன். அவ போயிட்டா நானும் சீக்கிரம் போயிடுவேன்’ என்று சொன்னார்.

‘எங்கள பத்தி நீங்க அம்மாட்ட பேசியிருக்கேளா எப்பவாவது?’ என்று வினோத் கேட்டான்.

‘பேசாத நாள் ஏதுடா? இன்னியவரைக்கும் ஆறலியே. எந்தக் கழிச்சல்ல போறவன் உங்க தலைவிதிய எழுதினானோ அவன் நாசமா போவான்னு கோயில் வாசல்ல நின்னு மண்ண வாரி தூத்தியிருக்கேன்’.

‘நான் அதைக் கேக்கலே. நீங்க அப்படித்தான் சொல்வேள். அது தெரியும். அம்மா என்ன சொல்லுவா?’

‘என் புலம்பல கேட்டுப்பா. விடுடா, எங்க இருந்தாலும் நன்னா இருக்கட்டும்னு சொல்லிடுவா. அவ வேற என்ன சொல்ல முடியும்? ஆனா எனக்கென்ன வருத்தம் தெரியுமா? ஓடிப் போனேளே நாலு பேரும். நாலுல ஒருத்தனாவது குண்டா மேளத்துக்கு உறை போட்ட மாதிரி ஒரு வடக்கத்திக்காரியையோ கிறிஸ்துவச்சியையோ, துலுக்கச்சியையோ இவதான் என் பொண்டாட்டின்னு சொல்லி இழுத்துண்டு வந்து நிப்பேள்னு பைத்தியம் மாதிரி ரொம்ப காலம் நினைச்சு, எதிர்பார்த்துண்டிருந்தேன். பாழாப்போன சன்யாசத்துக்கு பலியாயிட்டேளேடா’.

நான் புன்னகை செய்தேன். அவர் கையைப் பிடித்துக்கொண்டு, ‘மாமி செத்துப்போய் எவ்ளோ வருஷமாறது மாமா?’ என்று கேட்டேன்.

‘எதுக்கு கேக்கறே? அது ஆயிடுத்தே ரொம்ப வருஷம்?’

‘என்னோட அஞ்சு வயசுல மாமி போனான்னு நினைக்கறேன்’.

‘இருக்கும். ஆமா. அப்போதான்’.

‘அறுவது வருஷமா நீங்க எப்படி இருக்கேள்? ஒண்டிக்கட்டையாத்தானே?’

‘ஆனா பாசத்த அறுத்துட்டு இல்லியேடா! பொண்டாட்டி குடும்பம் குட்டின்னுதான் எனக்கு இல்லே. அக்கா இருந்தாளே. அத்திம்பேர் இருந்தாரே. நீங்கள்ளாம் இருந்தேளே’.

‘சன்யாசிக்கும் குடும்பஸ்தனுக்கும் அதான் மாமா வித்தியாசம். குடும்பம் இல்லேன்னாலும் உங்களுக்குப் பாசம் இருக்கும். எங்களுக்கு உலகமே குடும்பமா இருக்கும். ஆனா பாசம் இருக்காது. அவ்ளோதான்’.

அவருக்கு ஏதோ புரிந்தாற்போலத் தெரிந்தது. ‘தானா அதெல்லாம் இல்லாம போயிடும் போலருக்கு’.

‘சில பேருக்கு’.

‘எப்படிடா அது நடக்கறது? பொறக்கறப்பவே கூட வர்றது இல்லியா அதெல்லாம்?’

‘இல்லே மாமா. வலிய எடுத்து ஒட்டிக்கறது. அழகா இருக்கும்னு நினைச்சிண்டு கண்ணராவியா லிப்ஸ்டிக் போட்டுக்கறாளே சிலபேர், அந்த மாதிரி’.

‘ஆனா பாசத்த அக்கா ஒரு யோகமா பண்ணாளேடா! ஒரு தபஸ்வினியாட்டம் இருந்தாளேடா. நீங்க பாட்டுக்கு விட்டுட்டுப் போயிட்டேள். உங்க ஒவ்வொருத்தர் பொறந்த நாளுக்கும் ஒரு வருஷம் தவறாம கோயில்ல தளிகை விட்டா. உங்க பேர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை பண்ணா. கோயில் வாசல்ல இருக்கற பிச்சைக்காரா அத்தன பேருக்கும் வருஷத்துல நாலு நாள் வாழையிலை போட்டு வடை திருக்கண்ணமுதோட சாதம் போட்டா. ஒண்ணும் பண்ணாத பிள்ளைகள் மேல எங்கேருந்துடா அந்தப் பாசம் வரும்? லிப்ஸ்டிக்கா அது? ரத்தம்டா! நெஞ்சுலேருந்து விழற துளி’.

மாமா மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார். நான் படுத்திருக்கும் அம்மாவைப் பார்த்தேன். இதற்காவது அவள் கண்ணைத் திறக்கமாட்டாளா என்று எதிர்பார்த்தேன். நடக்கவில்லை. வினோத்துக்கும் அந்த ஏமாற்றம் இருந்ததாகவே தெரிந்தது. ஒரு கணம் யோசித்துவிட்டு நான் மாமாவிடம் கேட்டேன், ‘நான் என்ன நட்சத்திரம்?’

அவர் யோசித்துவிட்டு, ‘அப்ப அதெல்லாம் யோசிக்கத் துப்பில்லே. இப்ப தோணறது. சொல்லிவெச்ச மாதிரி நீங்க நாலு பேரும் ஒரே நட்சத்திரம். விசாகம்’ என்று சொன்னார்.

‘நீங்களும் அதானே?’ என்று வினோத் கேட்டான். சிறிது யோசித்தவர், ‘தெரியலே. என்னிக்குமே பொறந்த நாள் கொண்டாடினதில்லே’ என்று மாமா சொன்னார்.

‘அம்மா கொண்டாடியிருப்பாளே’.

‘ம்ஹும். மறந்தே போயிட்டேன், போனமாசம் உன் பொறந்தாள் வந்துட்டுப் போயிடுத்துடான்னுவா. சரி போ என்ன இப்போன்னு சும்மா இருந்துடுவேன்’.

‘ஆச்சரியமா இருக்கே? மாமி இருந்தப்போகூடவா கொண்டாடினதில்லே?’

‘இல்லே’ என்று சொன்னார். ‘அவ இருந்த வரைக்கும் அவளுக்காக இருந்தேன். அப்பறம் உங்க எல்லாருக்காகவும் இருந்தேன். நீங்கள்ளாம் போனப்பறம் அக்காவுக்காகவும் அத்திம்பேருக்காகவும் கொஞ்ச காலம். அவரும் போனப்பறம் அக்காதான் எல்லாமே’.

கேட்க வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் கேட்டுவிடுவதே நல்லது என்று தோன்றியது. மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு, ‘நாளையில் இருந்து?’ என்று கேட்டேன்.

மாமா யோசிக்கவேயில்லை. சட்டென்று புன்னகை செய்தார். ‘என்னமோ மனசுல ஒரு எண்ணம் தோணித்து. நீங்க மூணு பேரும் ரொம்ப எதிர்பார்த்துண்டு வந்திருக்கேள். உங்கண்ணன் இன்னும் வரலேன்னாலும் அவனும் அம்மா போயிடுவான்னு நினைச்சுண்டுதான் வரப்போறான். ஒனக்கும் பெப்பே, உங்க அத்தன பேருக்கும் பெப்பேன்னு சொல்லிண்டு அக்கா எழுந்து உக்காந்துட்டான்னா?’

நான் அப்படியே அவரைக் கட்டித் தழுவிக்கொண்டேன். இதற்குமேல் இம்மனிதரைத் துன்புறுத்துவது தகாது என்று தோன்றியது. சன்யாசம் ஒரு தருமம் என்றால் பாசம் ஒரு தருமம். உயர்வென்ன தாழ்வென்ன.

வினய் உள்ளே வந்தான். ‘என்னடா அவன் இன்னும் வரலியா?’ என்று கேசவன் மாமா கேட்டார். அவன் இல்லை என்று தலையசைத்தான்.

‘கவலைப்படாதிங்கோ. எப்படியும் வந்துடுவான்’ என்று வினோத் சொன்னான்.

‘கவலையென்ன? அதான் மூணு பேர் இருக்கேளே. எல்லாம் போதும் போ’ என்று சொல்லிவிட்டு எழுந்து உள்ளே போனார். நான் உடனே அவரை, ‘மாமா..’ என்று கூப்பிட்டேன்.

‘என்ன?’

‘இது, நான்கில் ஒரு பங்கு சன்யாசம்’ என்று சொன்னேன்.

ஒன்பது மணிக்கு மாமா எங்களை சாப்பிடக் கூப்பிட்டார். நாங்கள் மறுக்கவில்லை. அவர் ஒரு பெரிய வெண்கலப் பானையில் அரிசி உப்புமா கிளறியிருந்தார். வீட்டுக்குப் பின்னால் உள்ள பாதாம் மரத்தின் இலைகளைப் பறித்து வந்து வைத்து எங்கள் மூன்று பேருக்கும் உப்புமாவைப் பரிமாறினார். ‘தொட்டுக்க எலுமிச்சங்கா ஊறுகா இருக்கு. பரவால்லியா?’ என்று கேட்டார். நான் வேண்டாம் என்று சொன்னேன். வினய்யும் வினோத்தும் மறுக்காமல் போட்டுக்கொண்டு சாப்பிட்டார்கள். உப்புமா நன்றாக இருக்கிறது என்று சொல்லி வினய் இன்னொரு தரம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டான். கைகழுவி, தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் அம்மாவின் அருகே வந்து உட்கார்ந்தோம்.

‘சரி, ஒரு பதினைந்து நிமிடங்கள் யாரும் எதுவும் பேசவேண்டாம்’ என்று வினோத் சொன்னான். அம்மாவின் எதிரே சென்று அமர்ந்து கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்து போனான். வினய் அம்மாவின் இடது கையைப் பிரித்து வைத்துக்கொண்டு ரேகைகளை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘ஜோசியம் தெரியுமா?’ என்று நான் அவனிடம் கேட்டேன்.

‘ஏதோ கொஞ்சம் தெரியும்’ என்று சொன்னான்.

‘ஆனால், உலகிலேயே போகப் போகிறவளுக்கு ரேகை பார்க்கிற முதல் மனிதன் நீதான்!’

அவன் சிரித்தான். மீண்டும் அவள் கையை உற்றுப் பார்க்கத் தொடங்கினான். நான் என்னவாவது செய்யலாம் என்று நினைத்து அவளது வலக்கரத்தை இழுத்து வைத்துக்கொண்டு நாடி பார்த்தேன். கணிப்பு சரிதான். எப்படியும் ஓரிரு மணி நேரங்களுக்குள் அவளது வாழ்வு முடிந்துவிடும் என்று மனத்தில் பட்டது. மாமாவிடம் சொல்லி சிறிது தண்ணீர் எடுத்துவரச் சொன்னேன்.

‘பாலா?’ என்று அவர் கேட்டார். நான் சிரித்தேன். ‘தண்ணீர் போதும்’ என்று சொன்னேன். அவர் எழுந்து சென்று ஒரு சொம்பு நீர் எடுத்து வந்து கொடுத்தார்.

‘நீங்களே ஒருவாய் முதலில் கொடுங்கள்’ என்று சொன்னேன். வினய் அம்மாவின் வாயைப் பிடித்துத் திறக்க, மாமா அதில் சில சொட்டுகள் நீரை விட்டார். பிறகு வினய் அதைச் செய்தான். நானும் செய்து முடித்துவிட்டு வினோத்துக்காகக் காத்திருந்தேன். அவன் தியானத்தில் இருந்து இன்னும் எழுந்திருக்கவில்லை. சரி, கண்ணைத் திறக்கட்டும்; அதன்பின் சொல்லலாம் என்று சொம்பைக் கீழே வைத்துவிட்டு அமர்ந்தேன். அம்மா நாங்கள் விட்ட நீரை அருந்தியிருந்தாள். ஒரு சொட்டுக்கூட கீழே சிந்தாமல் நீர் உள்ளே போயிருந்தது.

நான் மாமாவிடம் சொன்னேன், ‘உங்கள் அக்கா உலக மகா அழுத்தக்காரி. இந்தக் கணம் வரை நினைவோடு இருக்கிறாள். ஆனால் கண்ணைத் திறந்து பார்க்க அவளுக்கு விருப்பமில்லை’.

‘அவன் வரணும்டா. வந்தா திறந்துடுவா’ என்று மாமா சொன்னார். கவலையுடன் ஒருதரம் வாசலுக்குப் போய் சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தார். அப்போது வினோத் கண்ணைத் திறந்து என்னைப் பார்த்தான்.

‘முடிந்ததா? வா. வந்து ஒரு வாய் தண்ணீர் கொடு அவளுக்கு’.

அவன் அம்மாவுக்கு ஒருவாய் தண்ணீர் கொடுத்தான். அதையும் அவள் அருந்தினாள். ஆனால் அசையவில்லை. கண்ணைத் திறக்கவில்லை.

‘நடந்துவிடும் அல்லவா?’ என்று கேட்டேன்.

‘ஆம். இன்னும் ஒரு மணி நேரத்தில்’.

‘அவன் வந்துவிடுவானா அதற்குள்?’

‘வரமாட்டான்’ என்று வினோத் சொன்னான்.

‘என்ன சொல்கிறாய்?’

‘விமல், அன்றொருநாள் அண்ணா என் மனத்துக்குள் ஒரு செய்தியைப் புதைத்து வைத்தான். என்றைக்குத் தேவையோ அன்றைக்கு அது சொற்களாக மாறி என் சிந்தையை எட்டும் என்று சொன்னான்’.

‘ஆம். இதை முன்பே சொன்னாய்’.

‘இப்போது அது நடந்தது’.

நாங்கள் இருவருமே வியப்படைந்தோம். ‘சொல், என்ன அது?’

‘அம்மா மரணமடையும் கணத்தில் அவன் இங்கு இருக்கப்போவதில்லை. ஆனால் அவளது இறுதிச் சடங்கை அவன்தான் நடத்திவைப்பான்’.

கூடத்தில் ஒரு ஈ பறந்துகொண்டிருந்தது. அது எங்களைச் சுற்றிச் சுற்றி வந்தது. ஒரு கட்டத்தில் எங்களைச் சுற்றுவதை நிறுத்திவிட்டு அம்மாவின் நெற்றியின் மீது சென்று அமர்ந்தது. வினய் அதைக் கையசைத்து விரட்டினான். ஹக் என்று அம்மாவின் தொண்டைக்குள் இருந்து ஒரு சிறு ஒலி வெளிப்பட்டது. ‘போய் மாமாவைக் கூப்பிடு’ என்று நான் சொன்னேன். வினோத் வாசலுக்குச் சென்று மாமாவை அழைத்து வந்தான்.

‘என்னடா?’ என்று அவர் கேட்டார்.

நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. அம்மாவையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த ஒரு ஒலிக்குப் பின் வேறெந்த சத்தமும் வெளிப்படவில்லை. கிட்டத்தட்ட ஒன்றே கால் மணி நேரம் அவள் அப்படியேதான் இருந்தாள். சுவாசம் இருந்தது. அதைத் தவிர வேறொன்றும் இல்லை. நான் மீண்டும் நாடி பிடித்துப் பார்த்தபோது அது முற்றிலும் நின்றுபோகும் தருவாயை நெருங்கிவிட்டிருந்ததை உணர்ந்தேன். எங்கோ பார்த்துக்கொண்டு, ஏதோ யோசித்தபடி இருந்த வினய் சட்டென்று என் தோளைத் தொட்டான்.

‘இன்னும் பத்து விநாடிகள்’ என்று சொன்னான்.

‘பெருமாளே..’ என்று பரிதவித்துப்போய், மாமா அம்மாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தார். நாங்கள் அவள் கண்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தோம். மிகச் சரியாக எட்டாவது விநாடி அவள் கண்ணைத் திறந்தாள். ஒரு புன்னகை செய்தாள். பிறகு மூடிக்கொண்டாள்.

இப்போது வினய் அவள் நாசியில் கை வைத்துப் பார்த்தான். போய்விட்டாள் என்று சொன்னான்.

‘இனி நீங்கள் வாத்யாருக்கு போன் செய்யலாம் மாமா’ என்று நான் சொன்னேன்.

(தொடரும்)

Tags : பா. ராகவன் யதி தொடர் மரணம் விசாகம் சன்யாசம் ஜோதிடம் கைரேகை நாடி pa. raghavan yathi serial jothidam visagam நட்சத்திரம்

More from the section

167. திருமுக்கூடல்
166. சாம்பலின் குழந்தை
165. அடங்கல்
164. யாத்திரை
162. கண்ணீரின் குழந்தை