வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

127. கடத்தல்

By பா. ராகவன்| Published: 11th September 2018 10:00 AM

 

அந்தப் பெண் அவன் எதிரே அமர்ந்திருந்தாள். அவளது தோழி அவனுக்குப் பக்கத்தில் இருந்தாள். வினய் தன்னெதிரே அமர்ந்திருந்தவளின் கண்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். நான்கு விநாடிகளுக்கு ஒருமுறை அவள் இமைப்பது அவனுக்கு இடைஞ்சலாக இருந்தது. ‘சிறிது நேரம் இமைக்காதிருக்க முயற்சி செய்’ என்று சொல்லவும் செய்தான். ஆனால் அது அவளால் முடியவில்லை. சிரமப்பட்டாள். அவளது தோழி, ‘நான் முயற்சி செய்கிறேன் சுவாமிஜி’ என்று சொன்னாள். எனவே, இமைக்கும் பெண்ணைத் தன்னருகே அமர்த்திக்கொண்டு, இரண்டாமவளை எதிரே வந்து அமரச் சொன்னான். அவளால் ஏழெட்டு விநாடிகள் இமைக்காதிருக்க முடிந்தது. அதற்கு மேல் முடியவில்லை.

வினய் யோசித்தான். பிறகு இருவரையுமே அருகருகே அமர்த்தி, கண்களை மூடிக்கொள்ளும்படி சொன்னான். அவர்களும் அப்படியே செய்தார்கள். வினய் தனது தீட்சண்யம் பொருந்திய பார்வையை அவர்கள் இருவரது புருவ மத்தியிலும் கொண்டு நிறுத்தினான். இதற்காகத் தனது கண்ணை ஒண்ணரைக் கண்ணாகச் செய்துகொண்டான். பிறகு மெல்ல மந்திரங்களை முணுமுணுக்க ஆரம்பித்தான்.

நெடுநேரம் அவன் தனது பார்வையைப் பிளந்து இரு புருவ மத்தியிலும் வைத்திருந்தபடியால் அவனுக்குத் தலை வலிக்க ஆரம்பித்தது. அடக்கிக்கொண்டு, தொடர்ந்து மந்திர உச்சாடனம் செய்துகொண்டிருந்தான். இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்தது நள்ளிரவு ஒரு மணி வரை இடைவெளியின்றி நீண்டுகொண்டே சென்றது. வினய் முதலில் அந்தப் பெண்களின் முகங்களை தியானம் செய்தான். பிறகு அங்கங்களைத் தனித்தனியே உற்று நோக்கி தியானம் செய்யத் தொடங்கினான். கழுத்தைக் கடந்து மார்பங்களின் மீது அவனது பார்வை படிய வந்தபோது, அவனே கைகளை நீட்டி அவர்கள் அணிந்திருந்த துப்பட்டாவை விலக்கிவிட்டான். கிட்டத்தட்ட ஆழ்மன உறக்கத்தின் நெருக்கத்தில் சென்றிருந்த அந்தப் பெண்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இயற்கையின் மிக வினோதமான படைப்புகளில் ஒன்று பெண்களின் மார்பகங்கள் என்று அவனுக்குத் தோன்றியது. ஆப்பிள் பயிரைத் தவிர வேறெதையும் அதற்கு உதாரணமாகச் சொல்லிவிட முடியாது. ஐந்தடி, ஆறடி உயரம் வளர்ந்த ஆப்பிள் மரங்களின் கிளைகள் மிகவும் மெலிதாக இருப்பதை அவன் உதகமண்டலத்தில் கண்டிருக்கிறான். ஒரு குருவி அதன் மீது அமர்ந்தாலும் லேசாக அசைந்துகொடுக்கக்கூடிய அளவுக்கு மெலிதாக அவை இருக்கும். ஆனால் அதில்தான் கொத்துக் கொத்தாக எத்தனை கனிகள் உருவாகின்றன. காற்றில் அசைந்தாலும் விழுவதில்லை. அசையும்போதெல்லாம் ஒவ்வொரு ஆப்பிளும் ஒரு பெண்ணைப்போல அவனுக்குத் தோன்றியிருக்கிறது. படைப்பின் உச்சம் என்று பெண்ணின் மார்பகங்களை மட்டுமே சொல்ல முடியும். அதன் மென்மையும் மிருதுத்தன்மையும் சுண்டி ஈர்க்கும் சுபாவமும். சட்டென்று கூடு விட்டுக் கூடு பாய்வதுபோல ஒரு பெண்ணின் கண்ணுக்குள் நுழைந்து நெஞ்சம் வரை இறங்கி உட்புறம் பார்த்துவிட முடிந்தால், அது எப்பேர்ப்பட்ட அனுபவமாக இருக்கும். நரம்புகள் ஊடோடும் சதைக் கோளம். கொதகொதவென்று முழுதும் பாய்ந்து நிரம்பிய உதிரம். எதுவும் வெளித்தெரியாதபடி போர்த்தப்பட்ட ஆயிரமாயிரம் அணுத்துகள்களால் நெய்த சதைப் பரப்பு. கோலத்தின் நடுவே பூவை வைத்தாற்போல அதன் நட்டநடுவில் சொருகப்பட்ட முலைக்காம்பு. உதிரம் பாலாகும் அவசியமில்லாது போயிருந்தால், காம்புக்கு அவசியமிருந்திருக்காது. அப்போது முலை ஒரு மொண்ணைத்தன்மை எய்தியிருக்கும். காம்பற்ற முலைகள் கவனம் தொடுமா? தெரியவில்லை.

வினய் மேலும் அதை தியானித்தான். இதே பெண்கள் இன்னும் நாற்பது வருடங்களுக்குப் பிறகு எப்படி இருப்பார்கள்? வளர்ந்து செழித்து, பூரித்து நிற்கும் இந்த முலைகள் அப்போது எப்படி இருக்கும்? வாடி உதிர்ந்த ஆப்பிள்களுக்கு வடிவ சேதாரம் பெரிதாக இராது. ஆனால் முலைகள் அப்படியா? ஒரு சுருக்குப் பையில் அடைத்த பொருள்களை ஒவ்வொன்றாக உருவி வெளியே எடுக்கும்போது எய்தும் தோற்றத்தையல்லவா அது பெறவிருக்கிறது? சுருங்கிய சதைகள். முனை மழுங்கிய காம்புகள். கூர்மையற்ற வெளித்தோற்றத்தைக் கடந்து அப்போது உள்ளே போக முடியுமானால் அதே ரத்தம், அதே நரம்புகள். ஆனால் அதே வீரியம் இராது. பிராணன் விலகியோடிக்கொண்டிருக்கும் தருணத்தில், அவயவங்களின் அலங்கார பூஷித சேதாரம் தவிர்க்க இயலாதது.

ஆக சுண்டியிழுக்கச் செய்வது முலைகளா, பிராணனா? உதிரம் கெட்டு நரம்புகள் வலுவிழந்து கிருமிகளின் வாசஸ்தலமாக உடல் மாறக்கூடுமானால், இந்தக் கவர்ந்திழுக்கும் முலைகளின் உட்புற வாயிலைத் திறக்கத் தோன்றுமா? சட்டென்று அவன் தன்னெதிரே இருந்த இரு பெண்களின் ஒருத்தியின் விழிகளுக்குள் நுழைந்து அவள் நெஞ்சத்தை நெருங்கி அதை அழுகிய நிலையில் காண முற்பட்டான். நெளியும் புழுக்களும் குடலைப் புரட்டும் நெடியும். உதிரம் முழுவதும் கரேலென்று சாக்கடைத் திரவமாக மாறிப் பாய்ந்துகொண்டிருந்த நிலையில், வினய் அதில் மெல்ல மெல்ல இடுப்பளவு ஆழத்தில் நடந்து அவளது முலைகளின் மையத்தைத் தொடச் சென்றான். புழுக்கள் அவன் மீது ஏறி நெளிந்தன. சாக்கடைத் திரவம் அவனது நாசித் துவாரங்கள் வழியே உட்புகுந்து மூளை முழுவதையும் சுற்றி வரத் தொடங்கியது. அதன் நெடி அவன் நினைவெங்கும் படர்ந்து குமட்ட ஆரம்பித்தது. சகித்துக்கொண்டு அவன் மையத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தான். தலை சுற்றியது. கண்கள் இருண்டு போயின. கால்கள் படர்ந்து புதைந்த இடமெங்கும் மலக்கிடங்கே போலத் தோன்றின. இன்னும் சில கணங்களில் தொட்டுவிடுவோம் என்று அவனுக்குத் தெரிந்த நேரத்தில் அவனது கரங்கள் அவளது முலைகளை வருடிக்கொண்டிருந்தன.

‘சுவாமிஜி...’ என்று அவள் மெல்ல அழைத்தாள்.

அவன் அப்படியே அவளை இழுத்துத் தன் மடியின் மீது கிடத்திக்கொண்டான். குனிந்து அவள் பின்கழுத்தில் முத்தமிட்டான். இப்போது துர்நாற்றங்கள் மறைந்தன. அவளது கூந்தல் மிகவும் வாசனையாகத் தெரிந்தது. வியர்வை கலந்த அவளது சருமத்தின் நெடியும் கூந்தல் தைலத்தின் நெடியும் இணைந்து புதுவித போதையளித்தன. அவன் நெடு நேரம் அவளை முகர்ந்துகொண்டே இருந்தான். அப்படியே இருவரும் சுருண்டு தரையில் விழுந்து புரளத் தொடங்கினார்கள். இப்போது அவன் அவளது மார்பகங்களை வருடியபோது ரத்தமோ சதையோ நரம்புகளோ நெளியும் புழுக்களோ அவனுக்குத் தெரியவில்லை. மேகத்தின் பொதியில் இருந்து பிய்த்தெடுத்த ஒரு துண்டின் உலகில் அவன் தன்னை மறந்து திளைக்கத் தொடங்கியிருந்தான்.

எவ்வளவு நேரம் அவன் அப்படியே இருந்தானோ தெரியாது. சுய உணர்வடைந்து மீண்டபோது, அவன் அந்தப் பெண்ணின் மீதும், அவன் மீது அவளது தோழியும் படுத்துக் கிடப்பதை உணர்ந்தான்.

வினய் இந்தச் சம்பவத்தைச் சொல்லிவிட்டுக் குமுறிக் குமுறி அழுதான். ‘நான் கல்கத்தாவில் இருந்த காலத்தில் எப்படியாவது பெண்ணுடலைக் கடந்து சென்றுவிட மிகவும் ஏங்கினேன். ஆனால் ஒவ்வொரு முறை நான் முயற்சி செய்தபோதும் சறுக்கினேன். அது என் சுய தீட்சைக்கான தண்டனை என்று எண்ணிக்கொண்டேன்’ என்று சொன்னான்.

‘அழாதே’ என்று சொல்லிவிட்டு வினோத் அவன் கழுத்தின் பின்புறமாகத் தனது வலக்கரத்தை நீட்டி அவன் நெற்றிப் பொட்டைத் தொட்டான். அந்தக் காட்சி திருமணங்களில் மணமகன், பெண்ணுக்குத் திலகமிடும் காட்சியைப்போல எனக்குத் தோன்றியது. பிறகு கண்ணை மூடிக்கொண்டு ஏதோ ஜபித்தான். சில விநாடிகள்தாம். பிறகு கையை எடுத்துவிட்டு, ‘வினய், எனக்குத் திரும்பத் திரும்பத் தோன்றுவதெல்லாம் ஒன்றுதான். கிருஷ்ணனைத் தவிர உனக்கு மீட்சியளிக்கக்கூடியவன் வேறு யாருமில்லை’ என்று சொன்னான்.

‘இனி நான் மீள முடியும் என்று எனக்கே நம்பிக்கையில்லையே?’

‘அப்படி இல்லை. கணம்தோறும் நாம் பிறக்கிறோம். உன் பிறப்புக்கான நேரத்தை நீயே குறி. கிருஷ்ணனைப் பக்கத்தில் வைத்துக்கொள். மிச்சத்தை அவன் பார்த்துக்கொள்வான்’.

மெட்ராஸில் அப்போது டிஜிஎஸ் தினகரன் என்றொரு கிறிஸ்தவப் பிரசங்கி பிரபலமாகிக்கொண்டிருந்தார். எனது சீடர்களுள் ஒருவன் அவரது பிரசங்க கேசட் ஒன்றை எனக்கு அனுப்பி, இதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டிருந்தான். நான் அந்த கேசட்டைப் பொறுமையாகக் கேட்டேன். எனக்கு தினகரனின் பிரசங்கம் மிகவும் பிடித்திருந்தது. இயேசு வருகிறார் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தபோது, அவர் வந்தேவிட்டது போன்ற தோற்ற மயக்கத்தை அவரது பிரசங்கம் செய்வதை உணர்ந்தேன். அது சட்டென்று நினைவுக்கு வந்து, ‘வினோத், நீ ஒரு நல்ல தினகரன்’ என்று சொன்னேன்.

அவனுக்கு அது புரியவில்லை.

(தொடரும்)

Tags : பா. ராகவன் யதி தொடர் பெண் மார்பகங்கள் ஸ்ரீகிருஷ்ணர் டிஜிஎஸ் தினகரன் pa. raghavan yathi serial breast women DGS Dinakaran

More from the section

167. திருமுக்கூடல்
166. சாம்பலின் குழந்தை
165. அடங்கல்
164. யாத்திரை
163. புன்னகை