24 பிப்ரவரி 2019

128. விட்டகுறை

By பா. ராகவன்| Published: 12th September 2018 10:00 AM

 

பேருந்து கேளம்பாக்கத்தை நெருங்கியபோது இரவு மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. இதற்குமேல் இன்னொரு வண்டிக்காகக் காத்திருக்க வேண்டாம் என்று வினோத் சொன்னான். திருவிடந்தைவரை நடந்தே போய்விடலாம் என்று முடிவு செய்து, நாங்கள் மன்னார் ஓட்டல் வழியாக இரட்டைக் குளத்தைத் தாண்டிக் கோவளம் சாலையில் நடக்க ஆரம்பித்தோம். குளமெல்லாம் ஒரு காலத்தில் இருந்ததுதான். இப்போது அந்த இடமெல்லாம் கட்டடங்களாகிவிட்டன.

உப்பளங்கள் வெகுவாகக் குறைந்து நிறைய அடுக்குமாடி வீடுகள் வரத் தொடங்கியிருந்தன. அழகான சாலையும் சாலை விளக்குகளும் சாலையோர நடைபாதை வசதியும் நடைபாதைச் செடிகளும் பிரமிப்பளித்தன. நாங்கள் அறிந்த கிராமச் சூழல் அங்கு முற்றிலும் இல்லாது போயிருந்தது.

எங்கள் சிறு வயதுகளில் கேளம்பாக்கத்தில் இருந்து திருவிடந்தை வருவதற்குச் சாலை கிடையாது. உப்பளங்களுக்கு இடையே பாத்தி கட்டியது போலப் போடப்பட்டிருக்கும் மண் மேட்டின் மீதுதான் நடந்து செல்ல வேண்டும். உப்பள முதலாளிகளும் அந்த ஒற்றையடிப் பாதையில்தான் குடை பிடித்துக்கொண்டு நடந்து சென்று மேற்பார்வை பார்ப்பார்கள். சில சமயம் அபூர்வமாக யாராவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கே வந்துவிடுவார்கள். உடனே ராஜமாணிக்க முதலியார் உப்பு குடோனின் பின்புறம் கவிழ்த்துப் போடப்பட்டிருக்கும் கட்டுமரத்தை எடுத்துத் தண்ணீரில் விட்டு, அதில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலோரம் வரை ஓர் உலா போய்விட்டு வருவார்கள். தலையில் வட்டவடிவமாகப் பெரிய குல்லாய் போட்டுக்கொண்டு சுருட்டு பிடித்துக்கொண்டு கட்டுமரத்தில் போகும் வெள்ளைக்காரர்களின் தோற்றம், அந்நாள்களில் எங்களுக்குப் பெரும் ஏக்கம் தரும். எத்தனை இன்பமான வாழ்வு இந்த வெள்ளைக்காரர்களுக்கு! விடிந்ததும் வீட்டுப்பாடம் செய்யும் நிர்ப்பந்தமில்லை. அடித்துப் பிடித்துக்கொண்டு பள்ளிக்கும் வேலைக்கும் ஓடும் அவசரமில்லை. ரேஷன் கடையில் கருங்கல் வைத்து இடம் பிடித்து நிற்கும் அவசியமில்லை. முடிவற்ற நீர்ப்பரப்பில் கட்டுமரம் ஏறி எங்கு வேண்டுமானாலும் சுற்றிக்கொண்டே இருக்கலாம். அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு வெள்ளைக்காரனாகப் பிறக்க வேண்டும் என்று எத்தனையோ முறை எண்ணியிருக்கிறேன்.

இதனை நினைவுகூர்ந்து நான் சொன்னபோது வினய் சிரித்தான். அப்படியொரு வெள்ளைக்காரத் துரை சுருட்டு பிடிப்பதைப் பார்த்த பின்புதான் முதல் முதலில் அவனுக்கும் புகைப்பிடித்துப் பார்க்கும் ஆசை உண்டானது என்று சொன்னான். தையூரில் சுருட்டு கிடைக்காததால்தான் அன்றைக்கு பீடி வாங்கிக் குடித்ததாகவும் சொன்னான்.

‘இப்போது உண்டா அந்தப் பழக்கம்?’ என்று வினோத் கேட்டான்.

‘கஞ்சாவுக்காக மட்டும் பயன்படுத்துகிறேன்’ என்று வினய் சொன்னான்.

‘கஞ்சாவா!’

‘ஆம். தியானத்தின்போது அது அவசியம் எனக்கு’.

வினோத் அதன்பின் அந்த விஷயத்தைப் பற்றிப் பேசவில்லை.

கோவளம் சாலையில் நாங்கள் நடந்துகொண்டிருந்தபோது, சிறிது தூரத்தில் இருந்து லவுட் ஸ்பீக்கரில் அம்மன் பாடல் ஒலிக்கும் சத்தம் கேட்டது.

‘விமல், உனக்கு நினைவிருக்கிறதா? சிறு வயதில் நாம் செல்லியம்மன் கோயிலுக்கு வருடம் ஒருமுறை போய்வருவோம்’ என்று வினோத் சொன்னான்.

எப்படி மறப்பேன்? அன்றைக்குச் செல்லியம்மன் கோயில்தான் பிராந்தியத்திலேயே மிக அழகான இடம். சுற்றிலும் வேப்ப மரங்கள் அடர்ந்த நிலப்பரப்பின் நடுவே நிறைய வெட்டவெளி இடம் விட்டுக் கோயிலைக் கட்டியிருந்தார்கள். சிறிய கோயில்தான். ஆனால் வருடா வருடம் அங்கு நடைபெறும் ஆடித் திருவிழா, படூர் மயான கொள்ளைத் திருவிழாவைக் காட்டிலும் விசேடமானது. தெற்கே செங்கல்பட்டு முதல் வடக்கே திருவான்மியூர் வரை உள்ள எல்லா கிராமங்களில் இருந்தும் சனம் வந்துகொண்டே இருக்கும். மாட்டு வண்டிகளிலும் சைக்கிள்களிலும் ஜட்கா வண்டிகளிலும் வந்து சேரும் கூட்டம் கோயிலைச் சுற்றியுள்ள வெட்ட வெளியிலேயே இரண்டு மூன்று நாள்களுக்குத் தங்கிவிடும். பொங்கல் வைப்பார்கள். ஆடு, கோழி பலி கொடுப்பார்கள். சாமி வந்து ஆடுவார்கள். கரகம் நடக்கும். ஒயிலாட்டம் நடக்கும். பத்து நாள் திருவிழா அமர்க்களப்படும். அம்மாவிடம் தலா ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு நாங்கள் நான்கு பேரும் திருவிழாவுக்கு மாலை வேளைகளில் போவோம். கோயில் பூசாரி ஆறுமுகப் படையாச்சியின் மகன் கங்காதரன் அண்ணாவின் வகுப்புத் தோழன் என்பதால் எங்களுக்குப் பிரசாதமெல்லாம் தனியே பார்சலாக வரும். அண்ணாவுக்குக் கேசவன் மாமாவைச் சீண்டுவதற்கு அந்த ஒரு விஷயம் போதும். ‘மாமா, ஆயிரம் சொல்லுங்கோ. செல்லியம்மன் கோயில் பொங்கலாட்டம் உங்களோடது இல்லே’.

‘சீ போடா’ என்பார் கேசவன் மாமா.

அண்ணா வீட்டை விட்டுப் போன பிறகு நாங்கள் வீதியை விட்டு வெளியேறுவதே குறைந்து போனது. வினய் வெளியேறியதும் அம்மா என்னையும் வினோத்தையும் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே தான் வைத்திருந்தாள். கடைக்குப் போகவேண்டுமென்றால்கூட அவளேதான் போவாள். அல்லது மாமாவைப் போகச் சொல்லுவாள். ஆபீஸ் போய்வருவது தவிர வேறெந்த வேலையும் தனக்குரியதல்ல என்று எண்ணிய அப்பாவே பல சமயம் சைக்கிள் எடுத்துக்கொண்டு மார்க்கெட்டுக்குப் போய்வருவாரே தவிர, என்னையோ வினோத்தையோ வெளியே போகச் சொன்னதில்லை. நான் போன பின்பு அம்மாதிரியான நெருக்கடி ஏதும் தனக்கு வீட்டில் இருக்கவில்லை என்று வினோத் சொன்னான். அம்மாவும் அப்பாவும் சோர்ந்துபோயிருப்பார்கள். இழுத்துப் பிடிப்பதன் மீதான நம்பிக்கை விட்டுப்போயிருக்கும். அதனால்தான் வினோத் திருமணக் காலம் வரை வீட்டிலேயே இருந்தானோ என்னவோ?

வினய்தான் சொன்னான், ‘எத்தனை வருடங்கள் ஆனால் என்ன? இதெல்லாம் நமக்கு மறப்பதே இல்லை அல்லவா?’

எப்படி மறக்கும்?

‘நாம் செல்லியம்மன் கோயிலுக்குப் போய்விட்டுப் போகலாமா?’ என்று கேட்டான். நான் உடனே சரி என்று சொன்னேன்.

கோயிலுக்குச் செல்வதற்கு நாங்கள் அறிந்த பாதை அப்போது இல்லை. வழித்தடங்கள் வெகுவாக மாறிவிட்டிருந்தன. வேப்பமரம் ஒன்றுகூடக் கண்ணில் தென்படவில்லை என்பது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பகுதி முழுவதும் வீடுகள் நிறைந்திருந்தன. செல்லியம்மனே ஒரு வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கத் தொடங்கிவிட்டாளோ என்ற சந்தேகம் வந்தது. ஆனால் திருவிழா நடக்கிறது. அதில் சந்தேகமில்லை. வேட்டுச் சத்தம் இடைவிடாமல் கேட்டது. லவுட் ஸ்பீக்கர் அம்மன் பாடல்கள் அவள் அங்கேதான் இருக்கிறாள் என்பதைத் தெரியப்படுத்தின.

நாங்கள் கோயிலை நெருங்கியபோது ஒரே ஒரு வேப்பமரம் மட்டும் மிச்சம் இருந்ததைக் கண்டோம். அது சற்று ஆறுதலாக இருந்தது. அம்மனை அங்கே கொண்டுவந்து அமர்த்தியிருந்தார்கள். சுற்றிலும் மக்கள் கூட்டம். சொல் புரியாத மொத்த சத்தம். இலக்கின்றி அலைந்துகொண்டிருந்த கூட்டத்துக்குள் நுழைந்து நாங்கள் வேப்பமரத்தடியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தோம். நல்ல இருட்டு, குறைவான வெளிச்சம் என்பதால் எங்களை யாரும் சரியாகப் பார்த்திருக்க முடியாது என்று தோன்றியது.

‘பார்த்தால் மட்டும் உடனே அடையாளம் தெரிந்துவிடுமா என்ன?’ என்று வினோத் கேட்டான்.

அதுவும் நியாயம்தான். ஆனால் மூன்று பேர் காவி உடையில் நடமாடினால் கண்டிப்பாக அது கவனம் ஈர்க்கும். அதன்பொருட்டாவது திரும்பிப் பார்ப்பார்கள். அப்படிப் பார்ப்பவர்களுள் எத்தனை பேருக்கு எங்களைத் தெரிந்திருக்கும்?

யாரும் கவனிக்காதிருந்தால் மகிழ்ச்சி என்று நான் சொன்னேன். நாங்கள் வேப்பமரத்தடியில் அம்மன் வீற்றிருந்த இடத்துக்குப் பத்தடி தூரத்தில் இருந்த தண்ணீர்த் தொட்டியின் அடியில் சென்று நின்றுகொண்டு கவனிக்க ஆரம்பித்தோம்.

அன்றைய திருவிழா நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்துகொண்டிருந்தன. பூசாரி மணியடித்து, கற்பூரம் காட்டிக்கொண்டிருந்தது தெரிந்தது. மக்கள் கலைய ஆரம்பித்திருந்தார்கள். நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தபோது வினய்க்கு இடது புறம் இருந்து ஒருவன் எங்களை நோக்கி நடந்து வந்தான். அவன் அருகே வந்தபோது நாங்கள் உற்றுப் பார்த்தோம். அவனும் நின்று எங்களைக் கவனித்தான்.

‘டேய், நீ கங்காதரன்தானே?’ என்று வினய் கேட்டான்.

‘ஆமா நீங்க...’ என்று அவன் சந்தேகத்தோடு எங்கள் மூவரையும் மீண்டும் உற்றுப் பார்த்தான். பிறகு அவனே அடையாளம் தெரிந்துகொண்டு, ‘நீங்க விஜய் தம்பி வினய் இல்லே?’ என்றான்.

வினய் புன்னகை செய்தான்.

‘அப்ப இவன்?’

‘வினோத். நான் விமல்’ என்று சொன்னேன்.

அவனால் நம்பவே முடியவில்லை. வயதும் தோற்றமும் வாழ்வும் வேறு வேறாகிவிட்டிருந்தாலும், நினைவில் பெயர்களும் உருவங்களும் ஒருவாறு உட்கார்ந்துவிடத்தான் செய்கின்றன. கங்காதரன் மகிழ்ச்சியோடு வினய்யை நெருங்கிக் கட்டியணைக்க வந்தான். என்ன நினைத்தானோ. சட்டென்று நிறுத்திக்கொண்டு, ‘சாமி ஆயிட்டியா?’ என்று கேட்டான்.

வினய் சிரித்தான்.

‘ஊருக்கே தெரியும்டா உங்க கதையெல்லாம். பாவம் உங்கம்மாதான் உசிரும் போகாம, கெடக்கவும் முடியாம இளுத்துகிட்டுக் கெடக்குறா. போய் பாத்திங்களா?’ என்று கேட்டான்.

‘இல்லை. இப்போதுதான் வருகிறோம்’.

‘விஜய் வந்திருக்கானா?’ என்று கேட்டான்.

‘தெரியவில்லை. வருவான்’ என்று வினோத் சொன்னான்.

‘எப்பிடி மாறிப் போயிட்டிங்கடா எல்லாரும்! நல்லாருக்கிங்கல்ல?’ என்று அன்போடு விசாரித்தான். நாங்கள் புன்னகை செய்தோம். அவனைக் குறித்தும் அவனது அப்பா அம்மா குறித்தும் விசாரித்தோம்.

‘அவங்கல்லாம் இல்லே. போய்ச் சேந்தாச்சு’ என்று சொன்னான். அவனுக்குத் திருமணமாகி ஒரு பெண் பிறந்து அவளுக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்து நாவலூரில் இருப்பதாகச் சொன்னான்.

‘நீதான் இப்பவும் இங்க பூசாரியா?’ என்று வினய் கேட்டான்.

‘அப்பா காலத்தோட முடிஞ்சிது அதெல்லாம். நமக்கு தையூர்ல பலசரக்கு வியாபாரம் இருக்கில்ல?’ என்று சொன்னான். எங்களை அவசியம் வீட்டுக்கு வரச்சொல்லி அவன் கேட்டுக்கொண்டிருந்தபோது, யாரோ அவன் பேரைச் சொல்லி உரக்க அழைத்தபடி வருவது தெரிந்தது.

‘தோ வர்றேன் ஆச்சாரி’ என்று பதிலுக்குக் குரல் கொடுத்துவிட்டு, ‘அடையாளம் தெரியுதா பாரு. ரங்கநாத ஆச்சாரி’ என்று சொல்லிச் சிரித்தான். ஒரு எழுபது வயதுக் கிழவர் நெருங்கி வந்தார். எங்கள் மூவருக்குமே அவரை அடையாளம் தெரியவில்லை.

‘தெரியலியா? நம்ம நீலாங்கர வைத்தியர்ட்ட அசிஸ்டெண்டா இருந்தவருடா. ஆயிரம் பேரக் கொன்னு இவரும் அர வைத்தியராயிட்டாரு’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.

‘யாரு?’ என்றார் அந்தக் கிழவர்.

‘ஆச்சாரி, இவுக திருவிடந்தப் பசங்க. அண்ணந்தம்பிங்க நாலு பேரு வீட்ட விட்டு ஓடிப்போனாங்களே.. இப்பம்பாருங்க, சாமியாருங்களா திரும்பி வந்திருக்கானுக’.

‘ஓ...’ என்று சொல்லிவிட்டு, ‘மூணுல ஆருடா விஜய்?’ என்று கேட்டார்.

மூன்று பேருமே அவனில்லை என்று சொன்னோம். அண்ணாவை இவர்கள் யாரும் இன்றுவரை மறக்கவில்லை என்பது வியப்பாக இருந்தது. இத்தனைக்கும், அவன் ஊரில் இருந்த காலத்தில் யாருடனும் அதிகம் பேசிப் பழகி நாங்கள் அறிந்ததில்லை. எப்படியோ ஒரு நினைவுச் சின்னமாகிவிடுவதும் ஒரு கலைதான் என்று தோன்றியது.

‘செரி. உங்களாண்ட அப்பறமா பேசிக்குறேன். இங்கதானே இருப்பிங்க?’

ஆம் என்று சொன்னோம்.

67செரி. டேய் கங்காதரா, இந்தா. சாமி உன்னாண்ட இந்த லெட்ர குடுக்க சொல்லிச்சி’ என்று சொல்லி அவன் கையில் ஒரு துண்டுச் சீட்டை வைத்துவிட்டுக் கிழவர் நகர்ந்து போனார்.

‘எந்த சாமி?’ என்று வினய் உடனே கேட்டான்.

‘நீலாங்கர வைத்தியருதான்’ என்று கங்காதரன் சொன்னான்.

67அவர் எப்போது சாமி ஆனார்?’

‘சும்மா சொல்றதுதான். சாமியாரெல்லாம் இல்லே’ என்று சொல்லிவிட்டு கெக்கெக்கே என்று சிரித்தான். விளக்கு வெளிச்சத்தில் அந்தக் கடிதத்தைத் தூக்கிப் பிடித்துப் படித்தான். பிறகு என்ன நினைத்தானோ, ‘டேய், நாளைக்குப் பாப்பம்டா. இப்பம் ஒரு அவசர சோலி’ என்று சொல்லிவிட்டு சட்டென்று கிளம்பிப் போனான்.

அவன் போனபின்பு வினய் சொன்னான். அந்தக் கடிதத்தில் ஒரு வரிதான் எழுதியிருந்தது.

ஒரு பெரிய காரியம் ஆகவேண்டி இருக்கிறது, உடனே வரவும்.

‘நீ எப்படிப் படித்தாய்?’

‘முடியும். விட்ட குறை’ என்று சொன்னான்.

(தொடரும்)

Tags : பா. ராகவன் யதி தொடர் திருவிடந்தை சாமி கேளம்பாக்கம் உப்பளங்கள் கஞ்சா தியானம் செல்லியம்மன் கோயில் selliamman koil kovalam dhiyanam kanja pa. raghavan yathi serial

More from the section

167. திருமுக்கூடல்
166. சாம்பலின் குழந்தை
165. அடங்கல்
164. யாத்திரை
163. புன்னகை