புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மீண்டும் சந்திக்க கிம் ஜாங் உன் கடிதம்

DIN | Published: 11th September 2018 09:34 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையே மீண்டும் இரண்டாவது சந்திப்பிற்காக விருப்பம் தெரிவித்து வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கடிதம் எழுதி உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் வடகொரிய நாடுகள் இருதுருவங்களாக விளங்கி வந்தன. வடகொரிய அதிபர் அணுகுண்டு மூலம் அமெரிக்காவை அழித்துவிடுவதாக அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வந்தார். அதன்பிறகு, பல சமாதானங்களுக்கு பிறகு இருநாட்டு அதிபர்களான டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் சிங்கப்பூரில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி சந்திக்க ஏற்பாடு செய்தனர். 

அமெரிக்கா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையில் அமைதியை நிலை நாட்ட, உலகமே காத்திருந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை இருநாட்டு அதிபர்களும் கடந்த ஜூன் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் உள்ள கோபெல்லா ஹோட்டலில் 2,500 பத்திரிகையாளர்களுக்கு முன்பு இந்த சந்திப்பு நடைபெற்றது. 

இந்த சந்திப்பின்போது கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற வடகொரியா ஒப்புக்கொண்டது. வட கொரியா தனது அணு சோதனைகளை நிறுத்துவது மற்றும் அணு ஆயுத குறைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுதாகின. 

அந்த ஒப்பந்தத்தில் அணு ஆயுதங்களை வடகொரியா கைவிடுவது தொடர்பாக கூடுதலான தகவல்கள் இல்லை. இருப்பினும், அதன் பின்னர் வடகொரியா இதுவரையில் அணுகுண்டு வெடிக்கவும் இல்லை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தவும் இல்லை.

அதே நேரத்தில் அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான அந்த நாட்டின் நடவடிக்கையில் முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதன் எதிரொலியாகத்தான் சமீபத்தில் அந்த நாட்டுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ மேற்கொள்ளவிருந்த பயணத்தை  டிரம்ப் ரத்து செய்தார்.

இதனிடையே வடகொரியா தனது 70-வது ஆண்டு விழாவை எப்படி நடத்தப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று முன் தினம் காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு விழா தொடங்கியது. ராணுவ வீரர்கள், வீராங்கனைகள் அணிவகுப்பில் கலந்து கொண்டு வீர நடை போட்டனர்.

அதே நேரத்தில் அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறவில்லை. பிற பாரம்பரிய ஆயுதங்கள், தளவாடங்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தன. அணிவகுப்பை வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், சீன அதிபர் ஜின்பிங்கின் சிறப்புத்தூதர், லி ஜான்சுவுடன் பார்வையிட்டார்.

ராணுவ அணுவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறாதது அமெரிக்காவுக்கு நிம்மதியை அளிப்பதாக அமைந்தது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்து கிம் ஜாங் உன் கடிதம் எழுதி உள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறியிருப்பதாவது: 

கிம் ஜாங் உன் அதிபர் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளார். மிகவும் நல்ல விஷயங்களை உள்ளடக்கிய நேர்மறையான கடிதமாக அமைந்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிகைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தின் பிரதான நோக்கம் அதிபருடன் மீண்டும் சந்திப்பை திட்டமிடுவதே ஆகும், இந்த சந்திப்பை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஏற்கெனவே நாங்கள் ஈடுபட தொடங்கிவிட்டோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சமீபத்தில் நடைபெற்ற வடகொரியாவின் 70-வது ஆண்டு விழாவில் அவர்களின் அணுசக்தி ஆயுதங்களைப் பற்றியது அல்ல என்பதும் அமெரிக்காவை விரோதமாக்குவதற்கான நடவடிக்கை எதுவும் இல்லை என்பதற்கான அறிகுறிகள் வெளியாகி உள்ளதால் இரு நாட்டின் உறவின் முன்னேற்றம் இன்னும் கூடுதலான ஆதாரமாக உள்ளது என சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். 

Tags : White house North Korea President Trump  Trump and Kim Jong Un

More from the section

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி: த.மா.காவுடன் அதிமுக பேச்சுவார்த்தை
அமேஸான் பிரைமில் திங்களன்று ‘விஸ்வாசம்’ வெளியீடு!
நிலுவைத் தொகையை அளிக்காத விவகாரம்: அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வர்மா படத்துக்குப் புதிய தலைப்பு: படக்குழுவினரை அதிகாரபூர்வமாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்!
ரூ. 2000 வழங்கும் திட்டம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று தொடக்கம்