சனிக்கிழமை 23 மார்ச் 2019

கமுதி மக்களுக்கு சாபமாக மாறிப்போன, அதானியின் பசுமை ஆற்றல் சூரிய எரிசக்தி ஆலை!

By RKV| DIN | Published: 06th June 2017 06:10 PM

 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் 2500 ஏக்கர் பரப்பளவில் அதானி குழுமத்தால் நிறுவப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி ஆலையானது, அவர்கள் குறிப்பிட்ட படி அப்படியொன்றும் நிலையானதாகவும், பசுமையை நிலை நிறுத்தக்கூடியதாகவும் இல்லை என அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 648 மெகா வாட் புதுப்பிக்கத் தக்க ஆற்றலை உருவாக்கும் தன்மை கொண்ட இந்த ஆலையானது மிக அதிக அளவில் நீரை விழுங்கக் கூடியதாக உள்ளது.

இந்த எரிசக்தி ஆலையின் 25 லட்சம் சூரிய அலகுகளைச் சுத்தமாக்க நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர்கள் சுத்தமான தண்ணீர் தேவைப்படுகிறது. இப்படித் தேவைப்படும் தண்ணீர், மாவட்ட நிர்வாகத்தின்  அனுமதியின்றி சம்மந்தப்பட்ட எரிசக்தி ஆலைகள் அமைந்துள்ள இடங்களில் இருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள இடங்களில் இருந்து ஆழ்துளைக் குழாய் கிணறுகள் வழியாக உறிஞ்சப் பட்டு பயன்படுத்தப் படுகிறது என ஊர் மக்கள் கூட்டாகத் தெரிவித்தனர்.

ஆழ்துளைக்கிணறுகள் வழியாக அனுமதியின்றி நல்ல நீர் உறிஞ்சப்பட்டு டிராக்டர்களுடன் இணைக்கப்பட்ட 6,000 முதல் 8000 வரை கொள்ளளவு கொண்ட பெரிய பெரிய டேங்குகளில் சேகரிக்கப்பட்டு கொண்டு செல்லப் படும் காட்சியை; கோட்டை மேடு பகுதியிலிருக்கும் கமுதி- முதுகுளத்தூர் சாலையின் வறண்ட குண்டாறு சாலையில் பயணிக்கும் யார் வேண்டுமானாலும் இரவும், பகலும் இடைவிடாது தொடர்ச்சியாக காண முடியும்.

சூரிய சக்தி ஆலையின் ராட்சத சூரிய அலகுகள் ஒவ்வொன்றையும் சுத்தம் செய்வதற்காக அதானி குழுமத்தின் பசுமை ஆற்றல்( தமிழ்நாடு) மூலமாக சுமார் 40 டிராக்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.

ராட்சத சூரிய அலகுகள் ஒவ்வொன்றும் சுமார் 125 அடி நீளமும் 28 அடி அகலமும் கொண்டவை. நாளொன்றுக்கும் இருமுறை இரண்டு பணியாளர்கள் இந்த சூரிய அலகு பேனல்களைச் சுத்தப் படுத்தும் பணியில் ஈடுபடுகிறார்கள். இந்தப் பேனல்கள் தினமும் சுத்தப் படுத்தப் படாவிட்டால் மொத்த உற்பத்தியில் 25 % குறையக் கூடும் என்கிறார்கள்.

அதானி எரிசக்தி ஆலையின் பாதுகாப்பு அதிகாரியான எஸ்.கே. ஷர்மாவிடம் கிராம மக்களின் புகாரை முன் வைத்ததில் அவர் அளித்த பதில்; கிராமங்களில் இருந்து அதானி குழுமம் நேரடியாக தண்ணீரை ஆழ்துளைக் கிணறுகள் மூலம் உறிஞ்சவோ அல்லது விலைக்கு வாங்கவோ இல்லை எனவும், சூரிய அலகு பேனல்களை சுத்தப் படுத்தும் பணி அவுட் சோர்ஸிங் முறை கையாளப்படுவதால் அது ஒப்பந்ததாரர்களுடைய பொறுப்பாகி விடுகிறது. இந்த விவரத்தை அதானி குழுமம் தங்களது ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இது பற்றி அதானி குழும உயரதிகாரிகளின் கருத்தை அறிய முயன்ற போது அவர்களில் எவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. 

இது குறித்துப் பேசிய, கமுதி தாலுவுடன் இணைந்த ஒரு வருவாய் அதிகாரி ஒருவர், "எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ நிலத்தடி நீர் விற்க அனுமதிக்கப்படவில்லை, ஆனால் அவை சோலார் தொகுதிகள் சுத்தம் செய்ய ஒப்பந்தக்காரர்களுக்கு விற்கப்படுகின்றன." என்று கூறினார்.

தற்போது கமுதி கோட்டை மேடு பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 100 முதல் 150 அடி ஆழம் வரை அதானி குழும சூரிய பேனல்களை சுத்தம் செய்வதற்காக ஒப்பந்ததாரர்கள் மூலமாகத் தண்ணீர் உறிஞ்சப் பட்டுக் கொண்டிருக்கிறது. இதை அந்த கிராம மக்களுக்கு கிட்டிய சாபம் என்று தான் சொல்ல வேண்டும். தொடர்ந்து சூரிய எரிசக்தி ஆலைக்காக இப்படி அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வீணடிக்கப் பட்டால் அந்தப் பிரதேசங்களில் நிச்சயம் நிலத்தடி நீரே இல்லாத நிலை ஏற்பட்டு விடும். என ஆரம்பம் முதலே இந்த விசயத்தில் சம்மந்தப்பட்ட கிராம மக்களுக்காக குரல் கொடுத்து வரும் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் ராஜு தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இது குறித்துப் பேசும்போது; மாநில அரசு தேவைப்படும்  நில விஸ்தீரணம் உட்பட,  அதானி குழுமத்தின் சூரிய எரிசக்தி ஆலையின் செயல்பாடுகளுக்கான அனைத்து வசதிகளையும் முன்னரே செய்து கொடுத்துள்ளது. அப்படி இருந்தும் அந்த குழுமம் அனுமதியின்றி முறைகேடாக கிராம மக்களின் நீராதாரமான நிலத்தடி நீருக்கு ஊறு விளைவிக்க முயல்வது நிச்சயம் கண்டனத்துக்குரியது. சட்டத்திற்குப் புறம்பான இச்செயல் நிறுத்தப்படவில்லை எனில் மக்களை ஒருங்கிணைத்து போராட்டத்தில் குதிப்போம் என எச்சரித்துள்ளார்.

Tags : adhani green energy worlds largest solar energy unit kamudhi naam thamizhar katchi seeman அதானி பசுமை ஆற்றல் உலகின் மிகப்பெரிய சூரிய எரிசக்தி ஆலை கிராம மக்களுக்கு கிடைத்த சாபம் நாம் தமிழர் கட்சி சீமான்

More from the section

மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை: ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபேஸல் அறிவிப்பு
ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரி பணியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு
பணக்காரர்களை கட்டிப்பிடிக்கும் மோடி ஏழைகளை கட்டிப்பிடிக்காதது ஏன்? ராகுல்
ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரி பணியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு
சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்ய முடியாத ஆத்திரத்தில் சகோதரனை படுகொலை செய்த பயங்கரவாதிகள்