சனிக்கிழமை 25 மே 2019

‘கேன்சருக்கு பசு மூத்திரம் சிறந்த மருந்து’: சாத்வி பிரக்யா கருத்து!

By RKV| DIN | Published: 24th April 2019 11:34 AM

 

போபால் பாஜக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள சாத்வி பிரக்யா இந்திய அரசியலில் பசுவின் புனிதத் தன்மை குறித்தும் அதன் பாதுகாப்பு குறித்தும் சமீபத்தில் தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு தான் அளித்த நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு மாலேகான் குண்டு வெடிப்பு பயங்கரத்தில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருந்த பிரக்யா தற்போது பெயிலில் வெளிவந்துள்ளதோடு மத்தியப் பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளராகவும் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த திங்களன்று வேத மந்திரங்கள் முழங்க 11 துறவிகளின் ஆசீர்வாதத்துடன் சாத்வி பிரக்யா தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அத்தொகுதியில் பிரக்யாவை எதிர்க்கும் காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங்.

பிரக்யா தனது நேர்காணலில் பசுவின் புனிதம் குறித்துப் பகிர்ந்து கொண்ட தகவல்கள்...

பஞ்ச கவ்யம், கேன்சருக்கான அருமருந்து!
 
பசுவின் சிறுநீர், பசுஞ்சாணம், பால், தயிர் மற்றும் நெய் இந்த மூன்று பொருட்களையும் குறிப்பிட்ட அளவு கலந்து தயாரிக்கப்படும் பஞ்ச கவ்யம் எனும் ஆயூர்வேத திரவம் கேன்சருக்கு மிகச்சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது. அதை சோதித்துப் பார்க்க விரும்பினால், சிறந்த உதாரணமாக நானே உங்கள் முன் நிற்கிறேன். கடந்த காலங்களில் நானொரு கேன்சர் பேஷண்ட். மார்பகப் புற்றுநோயால் கடும் அவஸ்தைகளுக்கு உள்ளான எனக்கு பசு மூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பஞ்ச கவ்யம் கொடுத்துத் தான் மருத்துவர்கள் குணப்படுத்தினார்கள்.

இப்போது என் நோய் குணமாகி விட்டது. ஏனெனில் தொன்று தொட்டு நமது வேதங்களும், புராணங்களும் பசு மூத்திரத்தின் புனிதம் மற்றும் இன்றியமையாமை குறித்து அதிகமாகப் பேசியே வந்திருக்கின்றன.

பசு மூத்திரம் மட்டுமல்ல...

வீட்டில் பசு வளர்ப்பதும் தெய்வீகமானது தான்.

பசுவை அதன் பின்புறத்திலிருந்து மென்மையாக முகம் வரைக்கும் நீவிக் கொண்டே வந்தால் அது பசுவுக்கு சுகமாக இருக்கும். பசு மனம் மகிழும். பசுவின் மனம் மகிழ்வதற்கு ஈடாக நமது வீடுகளில் நிம்மதியும், செல்வமும் கொழிக்கத் தொடங்கும். அதே சமயம். பசுவை முகத்தில் இருந்து நீவிக் கொண்டே பின்புறம் வரை சென்றால் அது அசூயையாக உணரும். காப்பாளர்களை மீறித் திமிறிக்கொண்டு ஓட முயலும். அப்போது அதன் மனம் சஞ்சலத்திலும் பயத்திலும் நிலைகொள்ளும். அதற்கு ஒப்பாக மனிதர்களான நமது வாழ்வும் சதா சஞ்சலத்துடன்  அமைவதாக மாறிப் போகும். சுருக்கமாகச் சொல்வதென்றால் மனிதனின் ரத்த அழுத்தத்தை முறையாகப் பேணுவதில் பசு மசாஜ் மிகச்சிறந்த சிகிச்சைமுறையாகக் கருதப்படுகிறது.

பசு குறித்துப் போற்றிப் பேச சுவாரஸ்யமான இத்தனை விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், நம் நாட்டிலோ பசுவை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறோம். தெய்வமாகப் பூஜிக்க வேண்டிய பசுவை நாள்தோறும் கஷ்டப் படுத்தி அதை வதைத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கொரு முடிவு கட்டவேண்டும். என்றார் பிரக்யா.

Tags : சாத்வி பிரக்யா கோமியம் பசு மசாஜ் மார்பகப் புற்றுநோய் ரத்த அழுத்தம் sadhvi pragya breast cancer cow urine panchgavya blood pressure rubbing a cow

More from the section

தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைமை பதவியை துறக்க ராகுல் முடிவு: செயற்குழு மறுப்பு!
ராகுல் நாஜிநாமா விவகாரத்தில் வதந்திகளை நம்பாதீர்: ரன்தீப் சிங் சுர்ஜிவாலா
மக்களவையில் அதிகரித்த முஸ்லிம் எம்.பி.க்கள்!
மக்களவைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட 3-ஆம் பாலினத்தவர்கள்!
பிரதமர் அலுவலக ஊழியர்கள் முன்னிலையில் மோடி நன்றி உரை