வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் ரெசிபி பனை ஓலை கொழுக்கட்டை

DIN | Published: 22nd November 2018 04:16 PM

கார்த்திகை அப்பம்

தேவையானப் பொருட்கள்:
அரிசிமாவு - 1 கிண்ணம்
வெல்லப்பொடி - 1/2 அல்லது 3/4 கிண்ணம்
நன்கு கனிந்த வாழைப்பழம் - 1
பொடியாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் - 2 தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் - 1/2 அரைத்தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: 1/2 கிண்ணம் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வாழைப்பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும். பின்னர், அரிசிமாவு, மசித்த வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வெல்ல நீரை விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தேவையானால் சிறிது நீரையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் ஒரு தேக்கரண்டி மாவை எடுத்து ஊற்றவும். பொன்னிறமாக சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும். 

குறிப்பு: அரிசிமாவிற்குப் பதில், மைதா அல்லது கோதுமை மாவிலும், ரவாவிலும் கூட இந்த அப்பத்தை செய்யலாம். அல்லது எல்லா மாவிலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்தும் செய்யலாம். வெல்லத்திற்கு பதில் சர்க்கரையையும் பயன் படுத்தலாம். அப்பம் வெள்ளையாக இருக்கும். மேலும், இதை எண்ணெய்யில் பொரித்தெடுப்பதற்குப் பதில், குழிப்பணியாரச் சட்டியிலும் பணியாரம் செய்வதுபோல் சுட்டெடுக்கலாம்.

பனை ஓலை கொழுக்கட்டை

தேவையானப்பொருட்கள்:
பனை ஓலை(நடுப்பகுதி)- 10 முதல் 15 
துண்டுகள் (ஆறு அங்குல நீளம்)
பச்சரிசி மாவு - 3 கிண்ணம்
கருப்பட்டி அல்லது வெல்லத்தூள் - 2 கிண்ணம்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
சுக்குப்பொடி - 1/2 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 1கிண்ணம்

செய்முறை: கருப்பட்டியில் அரை கிண்ணம் தண்ணீரைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பச்சரிசி மாவுடன் ஏலக்காய்த் தூள், சுக்குப்பொடி, தேங்காய்த்துருவல், கருப்பட்டி நீர் ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்து கொள்ளவும். மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் சிறிது குழைவாக உள்ளவாறு நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். ஒரு ஓலையை விரித்து நடுவில் மாவை வைத்து, ஓலை அளவிற்கு நீளமாக அழுத்தி, மூடவும். ஓலை பிரிந்து விடாமல் இருக்க ஒரு நார் அல்லது நூல் கொண்டு கட்டி வைக்கவும். இதேபோன்று மீதமுள்ள மாவு அனைத்தையும் தயார் செய்து இட்லி தட்டில் வைத்து 15 அல்லது 20 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். சற்று ஆறியபின், ஓலையைப் பிரித்து கொழுக்கட்டையைத் தனியாக எடுத்து வைக்கவும். இந்தக் கொழுக்கட்டை, திருக்கார்த்திகைத் தினத்தன்று, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் செய்யப்படும் ஒரு சிறப்பு பலகாரம்.

கார்த்திகை பொரி

தேவையானப்பொருட்கள்:
அவல் பொரி - 8 கிண்ணம்
வெல்லம் பொடிசெய்தது - 2 கிண்ணம்
பொட்டுகடலை - 1 கிண்ணம்
தேங்காய் - ஒரு மூடி
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
சுக்குப்பொடி - 1/2 தேக்கரண்டி

செய்முறை: தேங்காயைச் சிறு துண்டுகளாக வெட்டி வெறும் வாணலியில் போட்டு சிறிது சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும். பொரியை நன்றாக புடைத்து அல்லது சலித்து, சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த பொரி, பொட்டுக்கடலை இரண்டையும் ஒன்றாகக் கலந்துக் கொள்ளவும். அடி கனமான ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் அரை டம்ளர் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி கெட்டி பாகு காய்ச்சவும். சிறிது பாகை தண்ணீரில் விட்டால், அது கரையாமல் அப்படியே கெட்டியாக இருக்கும். அதை கைகளால் எடுத்து உருட்டினால் உருட்ட வரும். இதுதான் சரியான பதம். இப்பொழுது அதில் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, தேங்காய்த்துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி, கீழே இறக்கி வைக்கவும். உடனே அதில் பொரியைக் கொட்டி நன்றாகக் கிளறி விடவும். பொரி சூடாக இருக்கும் பொழுதே உருண்டைப் பிடிக்கவும். ஆறினால் பிடிக்க வராது. உருண்டை பிடிக்க வரவில்லை என்றால், அப்படியே உதிரியாக விட்டு விடவும். இதுதான் கார்த்திகைப் பொரி.

குறிப்பு: நெல்பொரியிலும் மேற்கண்டப் பொரியைச் செய்யலாம். 
 

- பாலாஜிகணேஷ் 

கோதுமை பாயசம்

தேவையான பொருள்கள்: 
உடைத்த கோதுமை - 1 கிண்ணம்
உலர்ந்த பழங்கள் (பாதாம் பருப்பு , முந்திரி, பருப்பு, 
திராட்சை ) - 8-10 
வெல்லம் - 1 கிண்ணம் 
நெய் - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 கிண்ணம் 
பால் - அரை டம்ளர்
தண்ணீர் - 3 கிண்ணம்
பாப்பி விதைகள் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன் 

செய்முறை: ஒரு பாத்திரத்தில் உடைத்த கோதுமை மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி கொள்ளவும். பின்னர், ஊற வைத்த கோதுமையை குக்கரில் வேக வைக்கவும். 3 விசில் வந்ததும் குக்கரைத் திறக்காமல் அப்படியே பத்து நிமிடங்கள் வரை ஆற வைக்க வேண்டும். பின்னர், வாணலியில் கசகசாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். அதனுடன் வெல்லத்தைச் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வெல்லம் முழுவதுமாக கரையும் வரை சூடுபடுத்தவும். வெல்லப்பாகு ரெடியாகிக் கொண்டிருக்கும்போதே மிக்ஸியில் தேங்காய்த் துருவல் மற்றும் வறுத்த கசகசாவை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கிற வெல்லப்பாகில் சேர்த்து, நன்றாகக் கிளறவும். பின்னர், மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் அந்த கலவையை வேகவிடவும். அதன்பின், அந்த கலவையோடு வேகவைத்த கோதுமையைச் சேர்க்கவும். பின்னர் நன்கு கிளறி 5 நிமிடங்கள் வரை வேகவிட்டு, ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்கு கிளறவும். பின்னர், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை வதக்கி அதனுடன் சேர்க்கவும். கடைசியாக அதில் காய்ச்சியப் பாலை சேர்த்து 5 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து கொதிவிட்டு இறக்கவும். கோதுமை பாயசம் தயார். 
- தவநிதி

Tags : karthigai deepam karthigai recipe food கார்த்திகை தீபம் அப்பம் ரெசிபி

More from the section

காஷ்மீர் ஸ்பெஷல் பிரேக்பாஸ்ட்... சால்ட் டீ & கந்தூர் ரொட்டி லவாசா!
இடுப்பு  வலி, வெட்டைச் சூட்டைப் போக்கும் அல்லி அரிசிப் புட்டு!
கடும் ஜலதோஷமா? மஞ்சள் கலந்த பூண்டுப்பால் அருந்துங்கள் உடனடி ரிலீஃப்!
சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிக்க அம்மாவின் கைமணத்தில் டேஸ்ட்டி சத்துமாவு ரெஸிப்பி!
உணவுப் பொருட்களில் எப்படியெல்லாம் கலப்படம் செய்கிறார்கள் பாருங்கள்! எளிதில் கண்டறிய சில உபாயங்கள்...