புதன்கிழமை 17 ஜூலை 2019

உங்க எலும்பு எப்படி? வீக்கா/ஸ்ட்ராங்கா? சோதித்துப் பார்க்கலாம் வாங்க!

By உமா பார்வதி| DIN | Published: 10th May 2018 03:07 PM

 

வயதாக ஆக சிலருக்கு பல பிரச்னைகள், பலருக்கு சில பிரச்னைகள் இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் பொதுவான பிரச்னை என்னவென்றால் எலும்பு சார்ந்த பிரச்னைகள் எனலாம். 50 வயதுக்குமேல் நாம் வெளிப்பார்வைக்கு ஆரோக்கியமாகத் தென்பட்டாலும், உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டிய காலகட்டம் அது.

ஆஸ்டியோபொராஸிஸ் (osteoporosis) போன்ற வியாதிகள் அறிகுறியே காட்டாமல் திடீரென்று தாக்கிவிடக் கூடும். எனவே கூடுமானவரையில் எச்சரிக்கையுடன் இருப்பதுதான் நல்லது. அதுவும் குறிப்பாக பெண்கள் மேலும் கவனத்துடன் இருப்பது நலம். ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினர் என யாராக இருந்தாலும் அவரவர் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருந்தால் மருத்துவமனை செலவுகளை மிச்சப்படுத்தலாம்.

சுறுசுறுப்பான நடைபயிற்சி

காலை, மாலை, இரவு என தினமும் 10 நிமிடங்கள் நடைபயிற்சிக்காக நீங்கள் செலவழிக்க வேண்டும். வாக்கிங் அல்லது ரன்னிங் என எதில் உங்களுக்கு ஆர்வம் உள்ளதோ அந்த பயிற்சியை செய்யுங்கள். இதனை வெயிட் பேரிங் எக்ஸர்ஸைஸ் (Weight-bearing exercise) என்கிறார்கள் உடற்பயிற்சி நிபுணர்கள். இதில் முக்கியமானது என்னவென்றால் உங்கள் பாதம் பூமியில் நன்றாக அழுத்தமாக பதிய வேண்டும். அப்போதுதான் உடல் தசைகள் வலுவாகும். நீச்சல் பயிற்சி செய்வதும் மிகவும் நல்லது. 19 லிருந்து 49 வயதுள்ளவர்கள் ஏரோபிக் பயிற்சிகளில் தினமும் ஈடுபடலாம். 

புகைப் பழக்கம் வேண்டாம்

எலும்பு ஆரோக்கியத்துக்கு முக்கிய எதிரி புகை பிடிக்கும் பழக்கம். இளம் வயதில் புகைக்க ஆரம்பித்தவர்கள் வயதாக ஆக எலும்புப் பிரச்னைகளை எதிர் கொள்ள நேரும். நீண்ட கால புகைக்கும் பழக்கமுடையவர்களுக்கு ஆஸ்டியோபொராஸிஸ் வர அதிக வாய்ப்புள்ளது. பெண்களைப் பொருத்தவரை மெனோபாஸ் காலகட்டத்துக்குப் பிறகு ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன் சுரப்பு குறைந்து ஒருகட்டத்தில் நின்றுவிடும். அப்போது எலும்புத் தேய்மானங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. 

உடல் எடை குறைக்காதீர்கள்

உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையுடன் இருப்பது முக்கியம் அதே சமயம் எலும்புகள் வலுவுடன் இருப்பதும் முக்கியம். எனவே எடை குறைப்புச் சாதனை செய்கிறேன் பேர்வழி என்று எலும்பும் தோலுமாக மாறி விடாதீர்கள். சிலர் உடல் எடையை குறைக்க உணவைக் குறைத்துக் கொள்வார்கள். இது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.

உடல் பருமன் பிரச்னைகளுக்கு தகுந்த மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்ற பின்புதான் டயட்டிங், உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடவேண்டும். சுய மருத்துவம் எந்தளவுக்கு ஆபத்தோ அதே போலத்தான் சுயமாக எடை குறைப்பு விஷயங்களில் ஈடுபடுவதும். சத்துப் போதாமை ஏற்பட்டு எலும்பு வரை அந்த பாதிப்புக்கள் நீடிக்கும். எனவே பத்திரிகையில் படித்தும், ஆன்லைனில் பார்த்தும் கண்டடைந்த குறிப்புகளையும் பின்பற்றத் தொடங்கினால் உடல் எடை வேண்டுமானாலும் குறையலாம். ஆனால் உடல் மெலிந்து, எலும்புத் தேய்மானமும் இலவச இணைப்பாக சேர்ந்து வந்துவிடக் கூடும்.

ஹார்மோன் பிரச்னைகள்

ஆண்களை விட பெண்களுக்குத் தான் எலும்புத் தேய்மானப் பிரச்னைகள் அதிகம் ஏற்படுகிறது. மெனோபாஸ் உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் இதனை எதிர்கொள்ள போதிய அளவுக்கு ஊட்டச் சத்துக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 700 மில்லிகிராம் கால்ஷியமும் 10 மைக்ரோ கிராம் அளவு வைட்டமின் டி உங்கள் எலும்புகள் பலமாகவும் உறுதியாகவும் இருப்பதற்குத் தேவை. எனவே கால்ஷியம் மற்றும் வைட்டமின் டி சத்துள்ள உணவுகளை மருத்துவரின் பரிந்துரைப்படி சாப்பிடுங்கள். அதற்காக அதிகப்படியான கால்ஷியம் உடலில் சேர்வதும் ஆபத்துதான். இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆரோக்கியமான சமச்சீரான உணவுதான் சிறந்தது. வைட்டமின் டி சூரிய ஒளியினால் 90 சதவிகிதம் கிடைத்துவிடும். 10 சதவிகிதம் மீன் உள்ளிட்ட சத்தான உணவின் மூலம் கிடைக்கும். 

ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால்

விபத்தினாலோ கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் அதிக கவனத்துடன் இருப்பது அவசியம். காரணம் பட்ட காலில் படும் என்பது போல் மீண்டும் அதே இடத்தில் அடிபட்டால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக நேரிடும். வீட்டில் கார்பெட், பாத்ரூம் போன்றவற்றை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். உங்களுக்கு நன்றாக குணம் ஆகும் வரையில் கூடுதல் ஜாக்கிரதை உணர்வுடன் இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினர்களின் உதவியை நாடுவதில் தவறில்லை.

வரும் முன் காத்துக் கொள்வதே புத்திசாலித்தனம்

பெண்கள் அதிக உடல் பருமனுடன் இருந்தால் உடல் எடையை மருத்துவரின் பரிந்துரைப்படி குறைப்பது நல்லது. ஏற்கனவே விபத்தினால் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள், புகைப் பிடிக்கு பழக்கம் உள்ளவர்கள், நோய்க்காக ஸ்ட்ராய்ட் எடுத்துக் கொள்பவர்கள், சிகிச்சை காரணமாக அதிகளவில் வலி நிவாரணி மருந்துகளை உட்கொண்டவர்கள் ஆகியோர் தற்காப்பு நடவடிக்கையாக ஒரு போன் டென்ஸிட்டி ஸ்கேன் (bone density scan) எடுத்துப் பார்ப்பது நல்லது. அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டில் எலும்புப் பிரச்னைகளின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனம். 

இந்த வழிமுறைகளைத் தவிர முக்கியமானது எதுவென்றால் நம்பிக்கைதான். எனக்கு அந்தப் பிரச்னை வருமோ இது வருமோ என்று கவலைப்பட்டுக் கொண்டே வேண்டாத பிரச்னைகளை எல்லாம் வரவழைத்துக் கொள்ளாதீர்கள். நல்ல எண்ணங்களும், நல்ல மனநிலையும்தான் முக்கியம். நெகடிவ் எண்ணங்கள் தான் பாதிக்கும் மேலான வியாதிகளுக்குக் காரணம். நமக்கு என்னவென்றே தெரியாத வியாதிகளையெல்லாம் இந்த நவீன யுகத்தில் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் பலியாகாமல் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று மனத்தை தெளிவாக வைத்திருந்தால் போதும். உடல் நலம் உள்ள நலம் என எல்லாமே சிறக்கும்.

Tags : bone bone density scan osteoporosis ஆஸ்டியோபொராஸிஸ் எலும்பு பிரச்னை

More from the section

பூச்செடிகள், காய்கறிச் செடிகளுடன் பேசும் வழக்கமிருக்கா உங்களுக்கு?
டோலிவுட் சின்னத்திரை, பெரியதிரை மைனர்களுக்கு ஒரு ஸ்ரீரெட்டி பத்தாது போல இருக்கே!
தரமற்ற மதிய உணவால் மூன்று ஆண்டுகளில் 900 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டார்கள், இறப்பு எண்ணிக்கை ‘0’: மனித வள மேம்பாட்டுத்துறை!
துடைப்பம் பிடிக்கத் தெரியாதா ஹேமாமாலினிக்கு! நெட்டிஸன்களின் நையாண்டி!
மயிர்க்கூச்செறியும் திகில் அனுபவத்தில் சிக்கி உயிர் பிழைத்த அதிர்ஷ்டசாலிகளா நீங்கள்? தினமணியில் பகிருங்களேன் உங்கள் அனுபவங்களை!