வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

சதா சர்வ காலமும் ஸ்மார்ட்ஃபோனும் கையுமாக இருக்கிறீர்களா? இது உங்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட்!

By சினேகா| DIN | Published: 24th October 2018 05:53 PM

 

ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும் பெரும்பாலான இளைஞர்கள் சதா சர்வகாலமும் அதிலே லயித்துக் கிடக்கிறார்கள். இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் இதற்கு அடிமையாகிக் கிடப்பதைப் பார்க்கிறோம். உண்ணும் போதும் உறங்கும் போதும் கூட இந்த ஃபோனுடன் தான் பொழுதுகள் கழிகின்றன. இது எத்தகைய ஆபத்துக்களை வரவழைக்கும் என்று தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் அந்தத் தவறுகளைத் திரும்பத் திரும்பச் செய்கின்றனர். தேவையான சமயங்களில் மட்டும் போனில் பேசிவிட்டு அல்லது பயன்படுத்திவிட்டு அதைத் தூர வைப்பது உடல் மற்றும் மனதுக்கு நல்லது. அண்மையில் வெளிவந்த இந்த செய்தியைப் படித்தாலாவது அலைபேசியை சற்று அணைத்து வைக்கிறோமா என்று பார்க்கலாம்.

ஒரு வாரமாக ஓய்வின்றி தொடர்ந்து ஸ்மார்ட்போன் உபயோகித்து வந்த பெண்மணி, திடீரென விரல்களை மடக்க முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் ஃபோன்களை மிக அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைக்கு உதாரணமாக சீனாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சீனாவில் சங்ஷா என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே தனது ஸ்மார்ட்ஃபோனில் மூழ்கியிருந்துள்ளார். உறங்கும் நேரத்தைத் தவிர மற்ற சமயங்கள் முழுவதும் போனும் கையுமாக கிட்டத்தட்ட ஒரு வாரம் இருந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக அவருக்கு வலது கையில் தாங்க முடியாத அளவிற்கு வலியெடுத்துள்ளது. கைவிரல்கள் அதிக வலி எடுத்தது மட்டுமல்லாமல் இயங்கவும் இல்லை. பதறியடித்து மருத்துவமனைக்குச் சென்றவருக்கு அதைவிட அதிர்ச்சி காத்திருந்தது. 'டெனோசினோவிடிஸ்' என்ற நரம்பியல் நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததை பரிசோதித்து கண்டறிந்தனர். தொடர் சிகிச்சைக்குப் பிறகே மருத்துவர்களின் அதீத கவனிப்பில் அந்தப் பெண்மணிக்கு மீண்டும் விரல்கள் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது. முக்கியமாக இனி இந்தப் பிரச்னை மறுபடியும் வராமல் இருக்க வேண்டுமெனில் ஸ்மார்ட்போனை தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்த கூறியுள்ளனர்.

உலகம் முழுவதும் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அடிமையாவோர் எண்ணிக்கை அதி விரைவாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் அவர்களுக்கு நோய்களும் பிரச்னைகளும் கண்ணுக்குத் தெரியாமல் உருவாகி வருகிறது. சீனப் பெண்மணிக்கு நேர்ந்தது போல் நீண்ட நேர செல்ஃபோன் பயன்பாட்டால் கை விரல் பாதிப்பு யாருக்கு வேண்டும்னாலும் வரலாம். 

Tags : Smart phone phone cell phone செல்ஃபோன் ஸ்மார்ட்ஃபோன் அலைபேசி

More from the section

கிருஷ்ணர் பூமியில் அவதரித்த போது சாட்ஷாத் அச்சு அசலாக இப்படித்தான் இருந்தாராம்!
அசத்தும் ருசியுடன் அடை செய்ய இதைப் பின்பற்றுங்கள்!
அலுவலக ஆண்களை, பெண்கள் நெருங்கிய உறவுகளாகப் பாவிக்க வேண்டிய அவசியமில்லை: திலகவதி ஐபிஎஸ்! 
உலக கதை சொல்லல் தினம், எக்ஸ்பர்ட்ஸ் என்ன சொல்றாங்க கேளுங்க!
பொள்ளாச்சி சம்பவத்துக்கு காரணம் என்ன? திலகவதி ஐபிஎஸ் அதிர்ச்சித் தகவல்