சனிக்கிழமை 23 மார்ச் 2019

பாடலாசிரியர்களை "வாத்தியார் ஐயா' என்று அழைத்தவர்!

By கவிஞர் முத்துலிங்கம்| DIN | Published: 24th October 2017 12:00 AM

 

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -24

நான் பாடல் எழுதிய இசையமைப்பாளர்களில் மிகவும் குறிப்பிட வேண்டியவர் எம்.எஸ். விசுவநாதன்.

நமது உடல் தசையால் ஆனது என்றால் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் உடல் இசையால் ஆனது. இசையை வேள்வியாகச் செய்தவர். இசையைத் தவிர வேறு எதுவும் அவருக்குத் தெரியாது.

எந்த அளவுக்குப் பெயரும் புகழும் இருந்ததோ அந்த அளவுக்கு அடக்கம் உடையவராகவும் இருந்தார். ஆர்ப்பாட்டமோ ஆணவமோ அணுவளவும் இல்லாதவராக இருந்த ஒரே இசையமைப்பாளர் நான் அறிந்தவரை அவர்தான்.

"நிலையில் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது' - என்பார் திருவள்ளுவர். அவர் வகுத்த இந்த இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர் எம்.எஸ்.வி.

அடக்கத்தை முந்தைய தலைமுறைக் கலைஞர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த வகையில் பண்பாட்டுப் பாடத்தை ஏனைய இசையமைப்பாளர்களுக்கும் கற்றுத் தருகின்ற கலைக்கூடமாகத் திகழ்ந்தவர் எம்.எஸ்.வி. ஆனால் இவரைப் பார்த்துப் பலர் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் எனது வருத்தம்.

இவர் போட்ட ராஜபாட்டையிலே தான் இன்றைய இசையமைப்பாளர்களின் இசைத் தேர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. பல்வேறு வகையான மெட்டுக்களை வித்தியாசமாகப் போட்டு வெற்றி பெற்ற வித்தியாசாகரம் இவர்.

இவர் ஒருவர்தான் எழுதிய பாடலுக்கு இசையமைக்கக் கூடியவர். அதனால் இவர்தான் உண்மையான இசையமைப்பாளர். மற்றைய இசையமைப்பாளர் பெரும்பாலும் எழுதிய பாடலுக்கு இசையமைப்பதில்லை. அவர்கள் போடுகின்ற மெட்டுக்களுக்குத்தான் நாங்கள் பாடல்கள் எழுதுகிறோம். ஆகவே அவர்களை மெட்டமைப்பாளர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இதே கருத்தை வாலியும் சொல்லியிருக்கிறார்.

மெட்டும் ஒருவகையான இசைதான் என்றாலும் எழுதிய பாடலுக்கு இசையமைத்து அதை வெற்றி பெறச் செய்வதற்கு அதிகத்திறமை வேண்டும். பல்வேறு மொழிகளில் பல்வேறு இசையமைப்பாளர்கள் போட்ட மெட்டுக்களைக் காப்பியடித்துக் கூட மெட்டுப் போட்டுவிடலாம். ஆனால் எழுதிய பாடலுக்கு காப்பியடித்து யாரும் மெட்டுப் போட முடியாது. அதிலும் வெவ்வேறு வகையான மெட்டுப் போட முடியாது.

ஒரு காலத்தில் இந்திப்பட மெட்டுக்களைக் கையாண்டு மெட்டுப் போட்டவர்கள் உண்டு. அப்படி அந்தப் படத்தில் உள்ள மெட்டைப் போடுங்கள் என்று தயாரிப்பாளரோ இயக்குநரோ கேட்டுக் கொண்டால் கூட எம்.எஸ்.வி. ஒத்துக் கொள்ளமாட்டார். புதிதாகத்தான் மெட்டுப் போடுவார்.

ஜி. ராமநாதன் எஸ்.எம்.சுப்பையாநாயுடு கே.வி. மகாதேவன் இவர்களுக்குப் பிறகு எழுதிய பாடலுக்குப் பலவகையான மெட்டுக்களைப் போட்டுக் காட்டக்கூடிய வல்லமை பெற்றிருந்தவர் இவர்தான். பாடலாசிரியர்களை "வாத்தியார் ஐயா' என்று மரியாதையோடு அழைத்தவரும் இவர்தான். அவர் இசையில் பாடல் எழுதியது எங்களுக்கெல்லாம் ஒரு பொற்காலம்.

என்னுடைய ஆரம்பகாலப் பாடல்கள் பிரபலமானதற்கு எம்.எஸ்.வியின் இசைதான் காரணம். என்னதான் கருத்துக்கள் பாடல்களில் இருந்தாலும் அதற்கு அமைக்கக்கூடிய இசை இனிமையாக இல்லாவிட்டால் பாடல் எடுபடாது. இசை இனிமையால் பாடல்களை வெற்றி பெற வைத்தவர் அவர்.

"ஒரு குழந்தை நடைவண்டி ஓட்டிப் பழகும்போது அந்தக் குழந்தை விழுந்துவிடாமல் எப்படி நடைவண்டி குழந்தையைக் கூட்டிச் செல்கிறதோ அப்படி இசை இருக்க வேண்டும்' என்பார் அவர்.

குழந்தையாகப் பாடல்களும் அந்தக் குழந்தையைக் கூட்டிச் செல்லுகின்ற நடைவண்டியாகவும் இருந்ததுதான் எம்.எஸ்.வி.யின் இசை.

இன்றைய சிலரது இசை வேகமாக வந்து குழந்தையை மோதி வீழ்த்திவிட்டுப் போகின்ற கார்களின் ஓட்டத்தைப் போன்ற இசை, இது ஓட்டுபவனுக்கே சமயத்தில் ஆபத்தை ஏற்படுத்தும்.

விஸ்வநாதன் இசையில் எழுந்த பாடல்கள் எல்லாம் இசையோடு பாடினாலும் கவிதை வடிவில் இருக்கும். இசையில்லாமல் பாடலைச் சொன்னாலும் கவிதையாக இருக்கும். அப்படிப்பட்ட வடிவிலே அமைந்தவைதான் அவரது இசையில் மலர்ந்த அனைத்துப் பாடல்களும்.

கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வாலி போன்றவர்களின் பாடல்கள் சாகாவரம் பெற்ற பாடல்களாக இருக்கின்றன என்றால் அதற்கு எம்.எஸ்.வி.யின் சிரஞ்சீவித் தன்மையான இசைதான் காரணம்.

ஒரு பாடல் நன்றாக வரும்வரை எம்.ஜி.ஆர். கவிஞர்களைவிட மாட்டார். பாடகர்கள் நன்றாகப் பாடும் வரை எம்.எஸ்.வி.யும் விடமாட்டார்.

இருவரும் நடனமும் பயின்றவர்கள். இது பலருக்குத் தெரியாது. எம்.ஜி.ஆர். கத்திச் சண்டை போடுகின்ற லாகவத்தைப் பார்த்தாலே அவருக்கு நடனமும் தெரியும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். உயரம் குறைவாக இருந்த காரணத்தால் நடனம் தனக்கு சரிப்பட்டு வராது என்று இசையில் மட்டுமே அக்கறை காட்டத் தொடங்கினார் எம்.எஸ்.வி. இது நடன இயக்குநர் பி.எஸ். கோபாலகிருஷ்ணன் சொல்லித்தான் எனக்குத் தெரியும். "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்தில் நான் எழுதிய மூன்று பாடல்களில் ஒரு நாட்டியப் பாடலுக்கு நடனம் அமைத்தபோதுதான் பி.எஸ். கோபால கிருஷ்ணன் இதைக் கூறினார்.

எம்.எஸ்.வி.யைப் பொருத்தவரை பல்லவியை நாங்கள் எழுதினாலும் சரணத்திற்கு அவர் போடுகின்ற மெட்டுக்குத்தான் பாடல் எழுதுவோம். அப்படி இல்லாமல் முழுப் பாடலையும் எழுதி ஒரு வார்த்தையைக் கூட மாற்றாமல் அப்படியே இசையமைத்த பாடல்களும் உண்டு.

அப்படிப்பட்ட பாடல்களில் "வயசுப் பொண்ணு' என்ற படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலைக் குறிப்பிட வேண்டும். இந்தப் பாடலை ஜெமினி ஸ்டுடியோவில் இயக்குநர் கே. சங்கரின் எடிட்டிங் அறையில் இருந்து எழுதினேன்.

"திருக்குற்றாலம், கன்னியாகுமரி, பூம்புகார் ஆகிய இடங்களில் படமாக்கப் போகிறோம். அதற்குத் தகுந்தபடி சரணங்கள் இருக்க வேண்டும். முதலில் பொதுவாக ஒரு பல்லவி எழுது'' என்று அந்தக் காட்சிக்கான சூழலைச் சொன்னார் கே.சங்கர்.

நான் யோசித்துக் கொண்டிருந்தேன். உடனே சங்கர்,  "நான் ஒரு வார்த்தை சொல்லட்டுமா... அதிலிருந்து ஆரம்பிக்கிறாயா?''  என்றார். "சொல்லுங்கள்'' என்றேன். "காஞ்சிப் பட்டுடுத்தி... என்று ஆரம்பித்துப் பார்'' என்றார். அவர் சொன்னதுதான் தாமதம்;  உடனே பல்லவி முழுவதையும் வாயாலே சொன்னேன். அவ்வளவு வேகம் அப்போது.

நன்றாக இருக்கிறது.  "முழுப்பாடலையும் இங்கேயே இருந்து எழுது. விஸ்வநாதனிடம் கொடுத்து டியூன் போடுவோம்'' என்றார். அங்கேயே இருந்து இரண்டு மணிநேரத்தில் அந்தப் பாடலை எழுதினேன்.

எம்.எஸ்.வி.யிடம் கொடுத்து டியூன் போடச் சொன்னபோது அவர் முக்கால் மணிநேரத்தில் மூன்று வகையான மெட்டுக்களை அந்தப் பாட்டுக்குப் போட்டார். அதில் ஒரு மெட்டைத்தான் டைரக்டர் தேர்ந்தெடுத்தார்.

இந்தப் பாடலை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அந்தப் படத்தின் பைனான்சியர் சடையப்பச் செட்டியார் "இது ரொம்ப சுலோவாக இருக்கிறது. இந்த மெட்டு வேண்டாம். இந்தப் பாட்டும் வேண்டாம். வேறொரு பாட்டெழுதி அதற்கு மெட்டுப் போடுங்கள்'' என்றார். அந்தப் படத்தில்,
அதோ அதோ ஒரு செங்கோட்டை
இதோ இதோ ஒரு தேன்கோட்டை
எதோ எதோ உன் மனக்கோட்டை
என்றும் என்றும் நான் உன் வேட்டை
என்றொரு பாட்டு முதலில் எழுதியிருந்தேன். ரிதம் கொஞ்சம் வேகமாக இருக்கும். செட்டியாருக்கு அந்தப் பாட்டுப் பிடித்திருந்தது. அதுபோல் இந்தப் பாட்டிலும் ரிதம் வேகமாக இருக்க வேண்டும் என்றார்.

உடனே எம்.எஸ்.வி.  "செட்டியார், இந்தப் பாட்டை ஓ.கே. செய்யுங்கள். இதை நான் ஹிட் பண்ணிக்காட்டுகிறேன்'' என்று சவால் விட்டுச் சொன்னார். அவர் சொன்னதுபோல் அந்தப் படத்தில் அதுதான் ஹிட்டான பாடலாக அமைந்தது. படம் நான்கு வாரம்தான் ஓடியது. படத்தின் பெயரையே அந்தப் பாடல்தான் இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தப் பாடல்தான்.
காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் 
                                                           பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும் -  
                                                                                  அந்தத்
திருமகளும் உன்னழகைப் பெற
                                                                       வேண்டும்...
என்ற பாடல்.
சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை 1978-79-ஆம் ஆண்டு எனக்குப் பெற்றுத் தந்த பாடல்களில் இதுவும் ஒன்று. இன்னொரு பாடல் "கிழக்கேபோகும் ரயில்', படத்தில் இடம் பெற்ற "மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ' என்ற பாடல்.

பாடல்களுக்காக எங்களுக்கு ஆண்டுதோறும் ராயல்டி கொடுக்கின்ற அமைப்பு ஒன்று இருக்கிறது. அதற்கு ஐ.பி.ஆர்.எஸ். என்று பெயர். அந்த அமைப்பின் சார்பில் ஒருமுறை எனக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இந்தித் திரைப்பட இசையமைப்பாளர் நெளஷத் அதற்குத் தலைமை தாங்கினார். நெளஷத்தை மானசீகக் குருவாகக் கொண்டவர் எம்.எஸ்.வி.

அதனால் நான் பேசும்போது, "தென்னாட்டு நெளஷத் என்று போற்றப்படுகின்ற எம்.எஸ்.வி. அவர்களே'' என்றேன். எல்லாரும் கைதட்டினர். பக்கத்தில் இருந்த நெளஷத் அருகில் இருந்த இசையமைப்பாளர் புகழேந்தியிடம் நான் என்ன பேசுகிறேன் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு உடனே எழுந்து, "அவர் தென்னாட்டு நெளஷத் என்றால் நான்தான் வடநாட்டு எம்.எஸ்.வி.'' என்று கூறினார். இப்படிப்பட்ட பெருந்தன்மை இன்றைய இசையமைப்பாளர்கள் எவரிடமாவது இருக்கிறதா? உண்மையிலே அவர்கள் காலம் திரையுலகில் பொற்காலம் தான். அவர்கள் காலத்தில் நாங்களும் பணியாற்றினோம் என்பதுதான் எங்களுக்குள்ள பெருமை!
(இன்னும் தவழும்)

Tags : anandha thenkatru thalatuthe- 24 poet muthulingam ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே- 24 கவிஞர் முத்துலிங்கம்

More from the section

நானும் மருதகாசியும் சேர்ந்து பாடல் எழுதிய படம்!
எப்போதும் அவரை நான் நினைக்க வேண்டும்!
கங்கை அமரனுக்கு வந்த வாய்ப்பு பாக்யராஜூக்கு மாறியது!
மாஞ்சோலைக் கிளிதானோ? மான்தானோ?
எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்!