புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

தக்டுஷேத் ஹல்வாய் கணபதியைத் தெரியுமா? இதோ விபரங்கள்!

By மாலதி சந்திரசேகரன்.| Published: 12th September 2018 02:40 PM

 

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் 

விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே 

விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால் 

கண்ணிற் பணிமின் கனிந்து. 

-  கபிலதேவநாயனார் .

தெய்வ நம்பிக்கை உடையவர்களாகிய நாம், எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் பிள்ளையாரை வணங்காமல் தொடங்குவது இல்லை. எடுத்த காரியம் சுலபமாக, இன்பமாக முடிய வேண்டுமென்றால், அதை நினைத்தபடி நிறைவேற்றி வைக்கும் கடவுள் பிள்ளையார்தான் என்பது எல்லோருடைய மனதிலும் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாகவும் உள்ளது என்பது தான் உண்மை.

மனிதனைப் பல பெயரிட்டு அழைப்பது வழக்கமில்லை. ஆனால் கடவுளை மட்டும் பல பெயரிட்டு அழைக்கிறோம். கடவுள் எந்தப் பெயரையும், எப்பொழுதும்  தானாகவே உகந்து வைத்துக் கொள்வதில்லை. மனிதனானவன், கடவுள் அருள் வழங்கும் நிலையை எண்ணி, அவருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, ஆனந்த நிலையில் பெயரிட்டு அழைக்கிறான். 

அப்படி அமைந்ததுதான், மஹாராஷ்டிரா மாநிலம், பூனேயில் அமைந்துள்ள கோயிலில், ஒரு  விநாயகரின் பெயர்.  கணங்களுக்கெல்லாம் தலைவனான கணபதிக்கு,  'தக்டுஷேத்  ஹல்வாய்  கணபதி' என்று திருநாமம்.  [ஹல்வாய் என்றால் மராத்தியில் இனிப்பு என்று பொருள்] இனிப்பு என்னும்  பெயர் எதற்காக அவர் பெயரோடு சேர்ந்தது? காரணம் இருக்கிறது.

புனே நகரில், தக்டுஷேத் என்னும் பெயரைக் கொண்ட தனவந்தர் ஒருவர் இருந்தார். அவர் இனிப்புக்கள் விற்பதை வியாபாரமாகக் கொண்டிருந்தார். அவருடைய கடையில் எப்பொழுதும் திருவிழாக் கும்பல் போல இனிப்புக்களை வாங்க கும்பல் கூடி இருக்கும். நாணயமான முறையில் கலப்படம் செய்யாத பண்டங்களை விற்று வந்தார் [அந்நாட்களில் கலப்படம் என்பது இருந்ததாகத் தெரியவில்லை.]

அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவரும், அவர் மனைவி லக்ஷ்மி பாயும் மகனின் மேல் அளவிட முடியாத பாசம் வைத்திருந்தார்கள்.ஆனால் விதி ஏனோ அவர்களின் வாழ்வில் விளையாட எண்ணம் கொண்டது.

1800-ஆம் வருடம். ஊரில் அப்பொழுது பிளேக் நோய் பரவி இருந்தது. அவருடைய செல்வ மகன், பிளேக் நோயினால் பீடிக்கப்பட்டான். எத்தனையோ வைத்தியம் செய்தும் மகனைக் காப்பாற்ற முடியவில்லை. ஒரே மகனை இழக்கும்படி நேரிட்டது. அவர்களின் வாழ்வில் அந்த இழப்பு மிகப் பெரிய வடுவை ஏற்படுத்தியது.

கணவன், மனைவி இருவரும் அந்த துக்கத்திலிருந்து மீள முடியாமல் பல வருடங்கள் தவித்தனர். அவர்களின் குருநாதரான, மாதவநாத் மகராஜ் என்பவரை  அணுகி உபாயம் கேட்டார்கள். அவர், கணபதிக்காக ஆலயம் ஒன்றைக்  கட்டினால் மனம் அமைதி பெறும் என்று கூறினார்.

தன்னுடைய குருநாதர் கூறியதை சிரமேற் கொண்டு,  கணபதிக்காக ஆலயம் ஒன்றை கட்டும் பணியைத் தொடங்கினார். தான் சேர்த்த பணம், சொத்து அனைத்தையும் யாருக்காக சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணினார். எல்லா பணத்தையும் கோயில் காரியத்திற்காகவே செலவழித்தார். 1893-ஆம் வருடம் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. அவர் கணபதியை பக்தி சிரத்தையுடன்  பூஜிக்க பூஜிக்க மேலும் செல்வந்தர் ஆனார். கோயிலும் வளர்ந்தது.

தக்டுஷேத் ஹல்வாயிற்கு, அரசியல்வாதியும், சிறந்த சமூக சீர்திருத்தவாதியும், இந்தியாவை செதுக்கிய சிற்பிகளில் ஒருவருமான,  லோகமான்ய பாலகங்காதர் திலக் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். அவர்தான்,  கணபதி திருஉருவத்தினை திருவீதி உலாவாகக் கொண்டு போனால் என்ன? என்னும் புதுமையான முறையை நடைமுறைப் படுத்தினார்.

லோகமான்ய பாலகங்காதர் திலக் தொடங்கி  வைத்த விநாயகர் ஊர்வலம் தான் இன்றும் எல்லோராலும் அனுசரிக்கப்படுகிறது. வேறு எந்த பகவானுக்கும் இல்லாத அளவு இப்படி ஒரு பிரும்மாணட ஊர்வலத்தை அமல்படுத்தி நாம் எல்லோரும் கொண்டாடும்படி ஏற்படுத்திய லோகமான்ய பால கங்காதர் திலக்கிற்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறோம்.

இப்பொழுது, இந்தியாவில் உள்ள பணக்காரக் கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தக்டுஷேத் ஹல்வாய் இக்கோயிலைக் காட்டியதால், இங்கு அருள் பாலிக்கும் கணபதி, 'தக்டுஷேத் ஹல்வாய் கணபதி' என்று கட்டியவர் பெயராலேயே வணங்கப்படுகிறார்.

நினைத்தது நடக்கும். கேட்டது கிடைக்கும் என்று எல்லோராலும் வணங்கப்பட்டு வரும் இக்கணபதியின் ஆலயம் மிகப் பெரியது என்று கூறிவிட முடியாது. கணபதிக்கு எதிரிலேயே தியானம் செய்ய ஹால் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஹாலிற்கு வெளிப்புறம் மோதகத்தை ஏந்திய மூஞ்சூறைத் தவிர  மற்றபடி இதர கடவுளரின் சிலையோ கர்பக்கிரகமோ கிடையாது. 

தென்னகக் கோயில் போல இல்லாமல், அரண்மனைப் பாணியில் இவ்வாலயம் கட்டப்பட்டு உள்ளது. ஏழு அடி உயரமும், நான்கு அடி அகலமும் கொண்ட இம்மூர்த்தி, எட்டு கிலோ தங்கத்தால் ஆனவர்.  மேலும் பல விலை மதிக்க முடியாத உயர்ந்த ஜாதி கற்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறார்.

விநாயக சதுர்த்தி அன்று அந்தத் தெருவிற்குள் நுழையக் கூட முடியாது. தரிசனம் செய்ய வருபவர்கள், காணிக்கையாக தேங்காயை படைத்துவிட்டுச் செல்கிறார்கள். சாதா நாட்களிலேயே காலை ஆறு மணி முதல் இரவு பதினோரு மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

இங்கு கணபதிக்கு அபிஷேகம் செய்ய வேண்டுமானால், முக்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். 

வட இந்தியாவில் பல  பிரபலங்களின் [அமிதாப்பச்சன் உட்பட] ஆராத்தியக் கடவுள் தக்டுஷேத் கணபதிதான். பிரபலங்களும், தனவான்களும் கிராம் கணக்கில் தங்கத்தை பகவானுக்கு காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.

மஞ்சளில் பிடித்து வைத்தாலும், மண்ணினால் சமைத்து வைத்தாலும், தங்கத்தால் இழைத்தாலும் எல்லோருக்கும் அனுக்கிரகம் ஒரே மாதிரிதான் செய்கிறார். மும்பை செல்பவர்கள்,  மும்பையிலிருந்து சுமார் நூற்று இருபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள 'ஸ்ரீமத் தக்டுஷேத் ஹல்வாய் சார்வஜனிக் கணபதி' கோயிலுக்கு அவசியம் சென்று வாருங்கள். 

Tags : vignesh vinayagar pillaiyar தக்டுஷேத்  ஹல்வாய்  கணபதி கணபதி பிள்ளையார் வினாயகர் சதுர்த்தி

More from the section

தண்ணீர் பிரச்னை போக்கியருளும் தீர்த்தபாலீஸ்வரர்! மாசி மகம் கூறும் ஜோதிட ரகசியங்கள்!
கேது - சனி சேர்க்கை நல்லதா கெட்டதா? மீள்வது எப்படி? 
மாசி மகத்தன்று 7 கடலில் நீராடினால் எண்ணிலடங்கா புண்ணியம்!
நாளை வருடத்திற்கு ஒருமுறை வரும் மாசிமகம்: எந்த தெய்வத்தை வழிபடலாம்?
மாசி மாதப்படி நன்மை அடையும் ராசிக்காரர்கள் எவை?