புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

திருகோணேஸ்வரர் திருக்கோயில், திருகோணமலை தொடர் - 3

By - கோவை.கு.கருப்பசாமி| Published: 24th August 2018 03:32 PM

 

இராவணன் அந்தப் பூமியை வெட்டிய உடனேயே அதைக் கண்டு அஞ்சிய தேவர்கள் மீண்டும் ஓடிச் சென்றனர் நாராயணனிடம். தமக்கு ஏற்பட்ட அச்சத்தை தேவர்கள் எடுத்துக் கூற நாராயணரும் உடனே இவர்களுடன் கிளம்பிச் சென்றார் திருகோணேஸ்வரர் ஆலயத்துக்கு. திருகோணிஸ்வரர் மலையில் உமையுடன் இருந்த சிவபெருமானை சந்தித்தனர்.

இராவணனின் செயலைக் கூறி அவன் அந்த லிங்கத்தை எடுத்துச்சென்று விட்டால், பிறகு அவனை யாராலுமே அடக்க முடியாமல் போய் விடுமே என்று கூற அவர்களுக்கு ஆறுதல் கூறினார் சிவபெருமான்.

இந்த நேரத்தில்தான் அவன் பிளந்து எடுத்த பர்வதப் பகுதியுடன் இருந்த சிவலிங்கத்தை தன் கைகளில் ஏந்திக் கொண்டு நாடு செல்லக் கிளம்பினான் இராவணன். அவன் பர்வதத்தை தனது கைகளில் தூக்கியவுடன் அந்த மலையை, தன் நுனிக் காலினால் அழுத்தினார் சிவபெருமான். அவ்வளவுதான், இராவணன் அருகில் இருந்த தேர் உடைந்து போனது. அவன் இடையில் வைத்திருந்த வாளும் இரண்டாக உடைந்து விழுந்தது.

உடைந்து விழுந்த மலையின் அடிப்பகுதியில் அதை தாங்கிக் கொண்டு இருந்த ராவணனின் கைகள் சிக்கிக் கொண்டது. கைகளை விலக்கிக் கொள்ள பிரயர்த்தனம் செய்தபோது அடிப்பட்ட கைகளில் இருந்து குருதி வெளியேறத் துவங்கியது. குருதி அதிகாரமாக வெளிவரவும், அப்படியே மயங்கி கடலுக்குள் விழுந்தான் ராவணன். அவன் பெயர்த்து எடுத்த மலைப்பகுதியும் சிவலிங்கத்துடன் சேர்ந்து அந்தக் கடலுக்குள் முழுகி மறைந்தது.

அதைக் கண்ட தேவர்கள் ஆஹா.., ராவணன் மரணம் அடைந்து விட்டான் என்று மகிழ்வு கொண்டு சிவபெருமானுக்கு நன்றி கூறி விட்டு தத்தம் இடங்களுக்கு திரும்பிச் சென்றார்கள். ஆனால் கடலில் விழுந்த ராவணனோ மரணம் அடையவில்லை. கடலுக்குள் விழுந்தவன் கடல் நீரினால் மயக்கம் களையப்பட்டான். மெல்ல நீந்தி வந்து கடல் ஓரத்தில் விழுந்து அப்படியே நெடுநேரம் மயங்கிக் கிடந்தான். அவன் பெற்று இருந்த வரங்களினால் அவன் உயிர் பிரியவில்லை. பல நாட்கள் அப்படியே கிடந்தவன் ஒருநாள் மயக்கம் முற்றிலும் தெளிந்து எழுந்தான்.

மயக்கம் தெளிந்து எழுந்தவன் அங்கும் இங்கும் தான் பெயர்த்து எடுத்த மலைப் பகுதியில் இருந்த சிவலிங்கத்தை தேடினான். மலைப் பகுதியும் காணவில்லை, சிவலிங்கமும் கண்களுக்கு தெரியவில்லை. நடந்ததை நினைத்துப் பார்த்தான். ஆனால் தனக்கு ஏற்பட்ட நிலைக்குக் காரணத்தை அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை.

ஆகவே மீண்டும் தவறு செய்து சிவலிங்கத்தை இழந்து விட்டோமே என நினைத்து வருந்தியவன் விடா முயற்சியாக மீண்டும் ஒருமுறை சிவபெருமானிடம் இருந்தே நேரடியாக சிவலிங்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்தான்.

அங்கேயே தன் தலைகளில் ஒன்றை வெட்டி எடுத்தான். அந்தத் தலையை வீணையின் சுரைப் பகுதியாக வைத்துக் கொண்டான். இருபது கைகளில் ஒன்றை வெட்டி எடுத்தான். அதை இசைக்கும் பகுதியாகவும், அதன் நரம்புகளை அறுத்தெடுத்து வீணை நாண்களாகவும் மாட்டி  ஒரு வீணையைச் செய்தான். கடற்கரையிலேயே அமர்ந்து கொண்டு  சிவபெருமானை துதித்து சாமகான வேதப் பாடலை உரத்தக் குரலில் பாடத் துவங்கினான்.

சிவபெருமான் இசைக்கு மயங்குபவர்தானே!. அதுவும் இனிமையான சாமகான வேதப் பாடல்களில் மனதைப் பறி கொடுப்பவர். கண்களை மூடிக் கொண்டு, ராவணன் வீணையை மீட்டியபடி, மனதை உருக்கும் வகையிலான சிவனார் மீதான பாடல்களை  பாடப்பாட இன்னிசையில் மயங்கிய சிவனார் தனது ஒரு கணத்தை அனுப்பி திருகோணிஸ்வரர் ஆலயத்தின் அடிவாரத்தில் இருந்த கடற்கரையில் வெட்டப்பட்ட கை மற்றும் திருகி எடுத்த தலையில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டு இருந்த நிலையிலும் அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு பாடிக்கொண்டு இருந்த ராவணனை அப்படியே தூக்கி வருமாறு கூறினார்.

சிவகணங்கள் தன்னை மறந்து கண்களை மூடிக் கொண்டு இசைத்துக் கொண்டு இருந்த ராவணனை அப்படியே அந்த இடத்தோடு தூக்கிக் கொண்டு வந்து திருகோணிஸ்வரர் ஆலயத்தின் உள்ளே அமர்ந்திருந்த சிவனார் முன் கிடத்தினார்கள். அப்போதுதான் ராவணனுக்கு தன் சுயநினைவே வந்தது. சுயநினைவுக்கு வந்தவன் சிவபெருமானைப் பார்த்தான். அப்படியே சிவன் முன் விழுந்து வணங்கினான்.

அவன் நிலையைக் கண்ட சிவனாரும் அவனுக்கு அருள் புரிய, அவன் மீண்டும் பத்து தலைக் கொண்டவனாகவும், இருபது கைகள் கொண்டவனாகவும் பழைய நிலைக்கு மாறினான். மீண்டும் சிவபெருமானையும், உமையையும் கீழே விழுந்து விழுந்து நமஸ்கரிக்க, அவன் கேட்டபடி அவனுக்கு மூன்றாவது ஆத்ம லிங்கத்தை தந்தருளினார்.

அப்போது ஈசன் கூறினார்.... இராவணா, இனிமேலும் என்னால் உனக்கு ஆத்ம லிங்கம் கொடுக்க இயலாது. ஆகவே இதை பத்திரமாகக் கொண்டு சென்று உன் தாயாரிடம் கொடுத்து பூஜை செய்யச் சொல். இதை உன்னால் தூக்க முடியாமல் கீழே வைத்தாலும் ஒன்றும் ஆகாது. நீயே விரும்பினால் ஒழிய இது பூமியில் புதைந்து போகாது. ஆனால் நீயே அதை விரும்பி இங்கேயே புதைந்து இருக்கட்டும் எனக் கீழே வைத்தால் மட்டுமே அங்கேயே எடுக்க முடியாமல் அங்கேயே இருந்து விடும் இப்படியாகக் கூறியவர் உடைந்து போன வாளுக்குப் பதிலாக இன்னொரு வாளையும், உடைந்து போன தேருக்குப் பதிலாக இன்னொரு தேரையும் அவனுக்குத் தந்தார்.

ஆத்ம லிங்கத்தை பெற்றுக் கொண்ட இராவணன் பெரும் மகிழ்ச்சியுடன் அங்கேயே இன்னும் சில நாட்கள் அமர்ந்து கொண்டு மேலும் சிவ பூஜைகளை செய்து விட்டு இலங்கைக்குக் கிளம்பினான். நடந்தது அனைத்தையும் மறைந்து நின்றவாறு நாராயணன் பார்த்துக் கொண்டே இருந்தார். 

இராவணன் இலங்கைக்குப் போகும் முன்னர் அவனைத் தடுத்து நிறுத்த என்ன வழி செய்யலாம் என யோசனை செய்தார். அவருக்கு ஒரு உபாயம் தோன்றியது. அதற்கேற்ப ராவனணன் இலங்கைக்கு கிளம்பிய உடனேயே அவசரம் அவசரமாக ஒரு அந்தணர் உருவில் கடல் கரைக்குச் சென்று, அவனது தேருக்கு அருகிலேயே சென்று அமர்ந்தவாறு சிரார்த்தம் செய்வது போல ஒரு சடங்கை செய்யத் துவங்கினார்.

ஆலயத்தில் இருந்து வெளிவந்த இராவணன் தேரில் ஏறிக்கொள்ளக் கடற்கரைக்கு வந்தான். அங்கு ஒரு அந்தணர் சிரார்த்தம் செய்வதைக் கண்டு, இதென்ன கிளம்பும் நேரத்தில் அபசகுனம் போல இருக்கிறதே!, சரி சிரார்ததைப் பார்த்து விட்டதினால், அந்த தோஷத்தைக் களைந்து கொள்ளக் கடலில் குளித்து விட்டுப் போய் விடலாம் என எண்ணியவன் கடலில் குளித்தான்.

அந்த அந்தணர் கைகேசி, கைகேசி என்ற பெயரைக் கூறி சிரார்த்தம் செய்து கொண்டு இருந்ததைக் கண்டு இராவணன் துணுக்குற்றான். அந்த அந்தணர் அவன் தேர் இருந்த இடத்தின் அருகில் காரியங்களை செய்து கொண்டு இருந்ததினால் அவர் காரியங்களை முடிக்கும் வரை அவன் அங்கேயே காத்திருந்தான். ஆனாலும் மனதில் இருந்த சந்தேகம் மறையவில்லை. காரியம் முடிந்து கிளம்பிய அந்தணர் அருகில் சென்று ராவணன் கேட்டான்.

அந்தணரே, நீங்கள் யாருக்காக இங்கு இறுதிக் காரியங்களை செய்தீர்கள்…இடை இடையே கைகேசி, கைகேசி  என்ற பெயரைக் உச்சரித்தீர்களே! அந்த கைகேசி யார்? என்றார். இதையே எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தணர் உருவில் இருந்த விஷ்ணு கூறினார்.

ஐயா, நான் பல இடங்களுக்கும் சென்று சிவ தரிசனங்களை செய்து கொண்டு இருக்கிறேன். இப்போது திருகோனீஸ்வரர் ஆலய மகிமையைக் கேள்விப்பட்டு இலங்கை வழியாக இங்கு வந்து கொண்டு இருந்தேன். இங்கு யாரோ ராவணன் எனும் ஒரு மன்னனாம், அவனது தாயாரான கைகேசி என்பவர் அவரது மகன் ராவணன் கடலில் விழுந்து இறந்து விட்டான் என கேள்விப்பட்டு அப்படியே மயக்கம் அடைந்து விழுந்து மரணம் அடைந்து விட்டாளாம்.

அவளுக்கு திதிகளை செய்ய அவளுடைய பிள்ளை இல்லை என்பதினால் திருகோனீஸ்வரர் கடலில் திதி செய்வது பெரும் விசேஷம் என்றும், அங்குச் சென்று அதைச் செய்தால் அவளது ஆத்மா நேரடியாக சொர்கத்துக்குப் போகும் என்று நினைத்த அவளது உறவினர்கள் நினைத்தனர். திருகோனீஸ்வரர் ஆலயத்துக்கு வந்து கொண்டு இருந்த என்னிடம் அவளுக்கு திதி செய்யுமாறு கூறிவிட்டு அதற்கான தட்ஷணயையும் எனக்குத் தந்தனுப்பினார்கள்.

ஆகவேதான் அவளுக்காக  இதை இங்கு செய்தேன் என்று கூறவும் அதைக் கேட்ட இராவணன் விக்கி விக்கி அழத் துவங்கினான். அவரைத் தேற்றிய அந்தணர் அவன் அழுவதற்கான காரணத்தைக் கேட்டார். இராவணனும் அவர் திதி செய்தது அவருடைய தாயாருக்குத்தான் என்று கூறிவிட்டு, தான் யார் என்பதையும், தன்னைப் பற்றியும் விவரமாக எடுத்துரைத்தார். பின் எவளுக்காகத் தான் அத்தனைக் கஷ்டப்பட்டு அந்த சிவலிங்கத்தை எடுத்துப் போக முயன்றேனோ, அவளே இல்லை என்ற பின், அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனக் கூறி அழுதார்.

உடனே அந்தணர் உருவில் இருந்த விஷ்ணுவும் அவனுக்காகப் பரிதாபப்படுவது போலப் பாசாங்கு செய்து பின்.... இராவணா, நீதான் கைகேசியின் மகன் என்பது தெரிந்து நான் மன ஆறுதல் அடைகிறேன். உன் தாயார் மீது உனக்குள்ள பாசமும், உன் தாயாருக்கு உன் மீது உள்ள பாசமும் இதில் இருந்து தெரியவில்லையா?

நான் அவளுக்கு திதி கொடுக்க வந்த இடத்தில் நீயும் இருந்து அதைப் பார்த்துள்ளாய். போகட்டும், நல்லதே நடந்துள்ளது. நீ இந்த திருகோனீஸ்வரர் மலையின் மகத்துவத்தை அறியவில்லை என்று நினைக்கிறேன். குபேரன், அதாவது உன்னுடைய தம்பி முதல் அனைத்து தேவர்களும் இங்கு வந்து சிவபெருமானை வேண்டிக் கொண்டு யாகங்கள் செய்த இடம்.

இந்த ஆலயத்தின் அருகில் உள்ள கடலில் வந்து காரியங்களை செய்தால் இறந்தவர்கள் மோட்ஷம் அடைவார்கள். அதற்குக் காரணம் சிவபெருமானும், உமையும் இங்கே தங்கி இருப்பதினால் அந்த அருள் அவர்களது ஆத்மாக்களுக்குக் கிடைக்கிறது.

மேலும் இங்கு வந்து தவம் செய்தாலோ, பூஜைகள் செய்தாலோ அதை விடப் பெரிய புண்ணியம் வேறு எங்குச் செய்தாலும் யாருக்கும் கிடைக்காது. இங்குப் பல யோகிகளும் முனிவர்களும் தவத்தில் இருக்கிறார்கள். இந்த மலையைச் சுற்றி பைரவர்களும், காளி தேவியும் காவலுக்கு உள்ளார்கள். இந்த மலையைச் சுற்றித்தான் சிவபெருமானின் மகனான கதிர்காமரும் தனது மனைவியோடு தங்கி இருக்கிறார்.

அகத்திய முனிவர் போன்ற பெரும் முனிவர்களும் இங்கு வந்து சிவபெருமானை வணங்கி உள்ளார்கள். சிவபெருமானைத் தரிசிக்க பிரம்மாவும், விஷ்ணுவும் இங்கு அடிக்கடி வருவதுண்டு. இப்படிப்பட்ட சிறந்த இடத்தில் உன் தாயாருக்கு இறுதிக் கிரியை நடத்தப் பேறு பெற்றது உன் அதிருஷ்டமே. எந்த தாயாருக்காக நீ சிவலிங்கத்தை எடுத்துச் செல்கிறாயோ, அவளே இல்லை எனும்போது, அவளுக்கு கிரியை நடந்த இடத்தின் அருகில் அவள் சார்ப்பில் இதை இந்த ஆலயத்துக்கே தானம் செய்து விட்டு அவளுக்காக இறைவனை வணங்குவதே அவளுக்கு நீ செய்யும் மரியாதை ஆகும் ‘ என்று கூறினார்.

அவர் கூறியதை எல்லாம் கேட்ட இராவணன் உயிருடன் இல்லாத தாயாருக்காக இதை ஏன் கொண்டு செல்ல வேண்டும், அந்தணர் கூறியதே சரியானதாகும் என்று எண்ணிக் கொண்டு அதை அந்த அந்தணர் உருவில் இருந்த விஷ்ணுவிடம்‘ அந்தணரே, நீர் கூறியதே சரியான வழி ஆகும்.

உம்முடைய அறிவுரையை நான் பரிபூரணமாக ஏற்றுக் கொள்கிறேன். இந்தாருங்கள். இதை என்ன செய்ய வேண்டுமோ அதன்படி என் தாயாரின் ஆத்மா சாந்தி அடைய நீங்கள் செய்யவும் என்று கூறிவிட்டு அதை அவரிடம் கொடுக்க அவரும் அதை திருகோனீஸ்வரர் மலையின் வடக்கு திக்கில் ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு, மீண்டும் அவனை அழைத்துக் கொண்டு போய் அவன் கையினாலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்து வைத்து ஆலயத்துக்கு அழைத்துச் சென்று அவனை தானங்களை செய்யுமாறு கூறினார்.

இராவணனும் தனது தேரில் வைத்திருந்த பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் ஆலயத்துக்குள் இருந்த அனைத்து அந்தணர்களுக்கும் தானம் செய்தான். பாவம் அவனுக்கு அப்போது தெரியாது அங்கிருந்த அனைத்து அந்தணர்களும் விஷ்ணுவின் ஆலோசனைப் படி பல்வேறு அந்தணர்கள் வடிவில் வந்திருந்த பல்வேறு கடவுள்கள் என்பது. ஆனாலும் இராவணன் உண்மையில் மிகப் பெரிய சிவபக்தன் என்பதினால் அவன் கொடுத்த தானத்தைப் பெற கடவுள்களே அந்தணர் உருவில் வந்திருந்தது அவன் பக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவே இருந்தது.

அதன் பின் இராவணன் அந்த அந்தணர் கூறியபடி ஆலயத்தின் மூன்று திசைகளிலும் மூன்று சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து விட்டு அங்கிருந்து கிளம்பி தன் நாட்டை அடைந்தான்.

உண்மையில் அவன் இல்லாத நேரத்தில் அங்கு கைகேசி மரணம் அடைந்துதான் இருந்தாள். ஆனால் அதற்குக் காரணம் சிவலிங்கத்தை தனக்காக கொண்டுவரக் கைலைக்கு சென்ற ராவணன் ஆயிரமாயிரம் வருடங்களாகியும் திரும்பி வரவில்லையே என்ற ஏக்கத்தில் அவள் தன்னைத் தானே வருத்திக் கொண்டு ராவணன் நல்லபடி திரும்பி வர வேண்டும் என்ற விரதம் இருந்து உயிர் துறந்து இருந்துள்ளாள் என்பதும் யாருக்கும் தெரியாது.

அவளுக்கு, ராவணனுக்கு ஏற்பட்ட எந்த சம்பவமும் தெரியாது.  இப்படியாக ராவணன் அதிபலசாலியாக யாருமே வெல்ல முடியாதவனாக இருக்க இருந்த நிலையை வினாயகரும், விஷ்ணுவும் தந்திரமாக முறியடித்து, அவனுக்கு சிவபெருமான் கொடுத்திருந்த ஆத்மலிங்கங்களை எடுத்துச் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தினார்கள்.

(மேலும் அடுத்து, நான்காவது தொடரில்....)

- கோவை.கு.கருப்பசாமி
 

More from the section

காமாட்சியம்மன் கோயில் வெள்ளித் தேரோட்டம்
மாமல்லபுரம் கடற்கரையில் பெருமாளுக்கு தீர்த்தவாரி உற்சவம்
மாமல்லபுரத்தில் இருளர் திருவிழா கோலாகலம்
மாசி மக உற்சவம்: கருட வாகனத்தில் ஆதிகேசவப் பெருமாள் வீதியுலா
ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் பௌர்ணமி பூஜை