புதன்கிழமை 23 ஜனவரி 2019

உழவாரப் பணிக்கு காத்திருக்கும் போழக்குடி சிவன்கோயில்! 

By - கடம்பூர் விஜயன்| Published: 27th August 2018 02:25 PM

 

கொல்லுமாங்குடி- திருநீலக்குடி சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்றால் போழக்குடி நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து ஒரு கிமீ தூரம் தென்புறம் உள்ள சாலையில் சென்றால் போழக்குடி அடையலாம். போழர்கள் எனும் குடிகள் வாழ்ந்த ஊர் என்பதால் இவ்வூருக்கு போழக்குடி எனப் பெயர் வந்திருக்கலாம்.

ஆதிசேஷன், வாயு இருவருக்கும் யார் பலசாலி எனப் போட்டி வந்து இருவரும் போட்டியிட்டுக்கொண்டு நின்றதனை கண்ட இறைவன், இருவரையும் சபிக்கிறார், அது போல் பிரம்மனும் தன்னிலை மறந்து உறங்கியதால் படைப்பு தொழில் நின்றதனால் சாபம் பெறுகிறார். இப்படி பிரம்மன் சாபம் பெற்று பிடாரனாகவும், ஆதிசேஷன் பாம்பாகவும் திரிய, திருஞானசம்பந்தர் பதிகத்தில் கூறியபடி போழக்குடி தீர்த்த சிறப்பை அறிந்து, இந்த போழக்குடி வந்து இங்குள்ள தீர்த்த குளத்தில் மூழ்கி எழுந்ததால் பிரம்மன் சாப விமோசனம் பெற்றான். (இது எந்த அளவுக்கு உண்மை என அறிய முடியவில்லை)

கோபுர வாயிலில் இருந்து கருவறை செல்லும் வழியில் உள்ள மண்டபத்தில் தல வரலாறு வரையப்பட்டுள்ளது. இறைவன் சன்னதி வாயிலில் விநாயகர், முருகன் இருவரும் உள்ளனர். இங்குள்ள இறைவன் எதிரில் உள்ள நந்தியின் அருகில் பாம்பு ஒன்றும் பலி பீடம் ஒன்றும் உள்ளது. அந்தப் பாம்பே ஆதிசேஷன் எனவும், இங்கும் திருப்பாம்புரம் போல நாக தோஷ நிவர்த்திகள் செய்து பலன் பெறலாம் எனக் கூறுகின்றனர்.

இறைவன் கிழக்கு நோக்கிய பிரம்மபுரீஸ்வரர் எனும் லிங்க மூர்த்தியாகவும், அம்பிகை இறைவனுக்கு இடப்புறமாகத் தனி ஆலயம் கொண்டு கிழக்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறார். இறைவி இங்கு அதுல்ய குசாம்பிகை என அழைக்கப்படுகிறார்.

விநாயகர் தனி சிற்றாலயம் கொண்டுள்ளார், கருவறையின் நேர் பின்புறம் முருகன் வள்ளி தெய்வானையுடன் தனி சன்னதியில் உள்ளார். சண்டேசர் சன்னதி தனியாகவும், துர்க்கை கருவறை கோட்டமாக தனி மண்டபம் முன்னிழுக்கப்பட்டு உள்ளது.

தென்முகன் சன்னதியில் இரு முனிவர்கள் அமர்ந்திருக்கும் கோலம் காணலாம். அதனை ஒட்டி உள்ள பகுதியில் நான்கு நாகர் சிலைகள் உள்ளன. கோயில் பூசைக்கு சரியான குருக்கள் இல்லை, கோயில் பணியாளர் சார்ந்த ஒரு பெண்மணியே அனைவரையும் வரவேற்கிறார்.

தீர்த்தம், நாக தோஷ பரிகாரம் என இரு சிறப்பு கொண்ட திருக்கோயில் முறையான பராமரிப்பின்றி உள்ளது. உழவார அன்பர்கள் ஒருமுறை இக்கோயிலை தூய்மைப்படுத்தி தருமாறு அன்புடன் வேண்டுகிறோம். 

- கடம்பூர் விஜயன்
 

More from the section

திருமலையில் பிப். 12-இல் ரதசப்தமி 
ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.25 கோடி
வரதராஜப் பெருமாள் கோயில் தெப்போற்சவம்
கருக்காத்தம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்
குமரி வெங்​க​டா​ஜ​ல​பதி கோயி​லில் யாக​சாலை பூஜை தொடக்​கம்