வியாழக்கிழமை 21 மார்ச் 2019

இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்!

DIN | Published: 30th June 2018 12:29 PM

வைணவ திவ்யதேச வரிசையில் தொண்டை நாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகத் திகழ்கின்றது திரு இடவெந்தை (திருவிடந்தை). காஞ்சி மாவட்டம் திருப்போரூர் வட்டத்தில் உள்ளது.

வெகுகாலத்திற்கு முன் சரஸ்வதி நதிக்கரையில் "குனி' என்ற ரிஷி இருந்தார். அவருக்கு தொண்டுகள் புரிய ஒரு கன்னிப்பெண் இருந்தாள். ரிஷியின் காலம் முடிந்த பிறகு, சுவர்க்கம் வேண்டி அவள் கடுந்தவம் புரிந்தாள். அவள் முன்பு நாரத மகரிஷி தோன்றி, "பெண்ணே! நீ கன்னிப்பெண், எனவே சுவர்க்கம் கிட்டாது, மணம் புரிந்துகொள்க!" என அறிவரை கூறிவிட்டுச் சென்றார்.

நதிக்கரையில் உள்ள முனிவர்களிடம் தன்னை யாரேனும் மணந்து கொள்ள வேண்டினாள். யாரும் செவிசாய்க்கவில்லை. ஆனால் காலவமகரிஷி என்ற முனிவர் அப்பெண்ணை ஏற்று மணம் புரிந்து கொண்டார். ஒரு வருடத்தில் அப்பெண் மூலம் பெரியபிராட்டியின் அம்சமாய் சுமார் 360 கன்னிகைகள் தோன்றினர். பின்னர் அப்பெண் சுவர்க்கம் அடைந்தாள். அப்பெண்களைக் காப்பாற்றி கரையேற்ற காலவரிஷி பெரிதும் சிரமப்பட்டார்.

ஒரு சமயம், அந்நதிக்கரைக்கு தீர்த்தமாட வந்த யாத்ரீகர்களின் நல்வழிக்காட்டுதலின்படி தன் மக்களுடன் புறப்பட்டு புண்ணிய தீர்த்தங்கள் பல கொண்டதும், நெடிது உயர்ந்த மரங்களும் பல அழகான சோலைகளும், அழகிய குடியிருப்புகள் நிறைந்ததும், பவ்யமாய் யாகம் செய்யும் அநேக மகரிஷிகள் வாசம் செய்வதுமான திருவிடந்தை தலத்திற்கு வந்தடைந்தார் காலவமுனிவர். அவருக்கு ஸ்தலாதிபதியான ஸ்ரீவராக மூர்த்தியின் வரலாற்றை ரிஷிகள் எடுத்துரைத்தனர்.

மேகநாதன் என்று ஓர் அசுரராஜனின் மகனான பலி என்பவன் நீதிமானாய் அரசாண்டான். ஒரு சமயம், மாலி, ஸீமாலி, மால்யவான் என்ற மூன்று அரக்கர்கள் தேவர்களுடன் போர்புரிய அவனிடம் உதவி வேண்டி வந்தனர். முதலில் மறுத்த பலி பின்பு மனம் மாறி அவர்களுக்காக தேவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றான். தேவர்களுடன் போரிட்ட சாபம் தீர, இந்த வராஹ தீர்த்தக் கரையில் கடுந்தவம் புரிந்தான். இவனுடைய தவத்திற்கு மெச்சி ஸ்ரீமந்நாராயணன் வராஹ மூர்த்தியாய் காட்சியளித்ததாக வரலாறு.

இத்தலபெருமானை காலவமகரிஷி தினமும் வழிபட்டு தன் மக்களுடன் இன்புற்று இருந்து வந்தார். பெண்கள் திருமண வயதை நெருங்கவும் மிகவும் கவலையுற்றார். அவரின் துயர் தீர்க்கும் பொருட்டு ஸ்ரீமந்நாராயணன் ஒரு பிரம்மச்சாரி வேடம் பூண்டு அவர் முன் தோன்றினார். அந்த பிரம்மாச்சாரியைப்பற்றி மகரிஷி விசாரிக்கலானார். திவ்ய தேச யாத்திரையாக, தான் அவ்விடம் வந்ததாகவும் பிரம்மச்சாரி பதிலளித்தான். மகரிஷி அவனிடம் தன் பெண்கள் 360 பேரையும் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். பிரம்மச்சாரியும் சம்மதித்து தினமும் ஒரு பெண்ணாக திருமணம் செய்து கொண்டு கடைசி தினத்தில் எல்லோரின் முன்னிலையில் எல்லாப் பெண்களையும் ஒரு சேர அணைத்து ஒரே பெண்ணாக்கித் தன் இடப்பக்கத்தில் வைத்து வராக ரூபத்துடன் சேவைபுரிந்து அருளினார் என்கின்றது புராண வரலாறு.

திரு(லட்சுமி) வை தம் இடப்பாகத்தில் பெருமாள் கொண்டுள்ளதால் இத்திருத்தலத்திற்கு திருவிடவெந்தை எனப்பெயர் ஏற்பட்டு பின் மருவி திருவிடந்தை ஆயிற்று. மூலவர் ஆதிவராகப் பெருமாள் பூமிதேவி அம்சமான அகிலவல்லி தாயாரை தம் இடப் புஜத்தில் ஏந்திக் கொண்டு, ஒரு காலை பூமியிலும், மற்றொரு காலை ஆதிசேஷன் தம்பதியினரின் சிரசிலும் வைத்துக் கொண்டு கிழக்கே திருமுக மண்டலக்கொண்டு ஆறரை அடி உயர திருக்கோலத்தில் அற்புத சேவை. உற்சவருக்கும் மூலவருக்கும் இயற்கையிலேயே திருஷ்டி பொட்டு இருப்பதால் திருஷ்டி நீக்கம் தரவல்லவர். இது ஒரு திருமண பிரார்த்தனை தலம். ராகு - கேது சுக்கிர தோஷ நிவர்த்தி தலம். திருமங்கையாழ்வார் 13 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். மணவாளமுனிகள் இங்கு வந்து எம்பெருமானை தரிசித்து சென்றிருக்கிறார்.

பழம்பெருமைக்குச் சான்றாக பல கல்வெட்டுக் குறிப்புகளுடன் திகழுகிறது நித்ய கல்யாணப் பெருமாள் ஆலயம். இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பிலும், தமிழக இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இருப்பதுமான இவ்வாலயத்தில் மஹாசம்ப்ரோக்ஷண வைபவம் ஜூலை 5 - ஆம் தேதி காலை 9.00 மணிக்கு மேல் நடைபெறுகின்றது. பூர்வாங்க ஹோமங்கள், பூஜைகள் ஜூலை 3 -ஆம் தேதி ஆரம்பமாகின்றது.

தொடர்புக்கு: 044 - 2747 2235.

Tags : திருவிடந்தை ஆதிவராகப் பெருமாள் அகிலவல்லி தாயார் திருமணம்

More from the section

காமாட்சியம்மன் கோயிலில் சண்டி ஹோமம்: ஸ்ரீ விஜயேந்திரர் பங்கேற்பு
கோயில்களில் பங்குனி உத்திர விழா
திருமலை: வருடாந்திர தெப்போற்சவம் நிறைவு
ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ4.39 கோடி
திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா