சனிக்கிழமை 16 பிப்ரவரி 2019

திருமலையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்

DIN | Published: 12th September 2018 02:38 AM
திருமலையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு கோயில் கோபுரம், பலிபீடத்தை சுத்தம் செய்யும் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள். 


திருமலையில் செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
திருமலையில் ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவம், ஆனிவார ஆஸ்தானம், உகாதி, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட 4 உற்சவங்களுக்கு முன்பு வரும் செவ்வாய்க்கிழமையன்று கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். இந்த நடைமுறை, கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று அழைக்கப்படுகிறது. வைணவ சம்பிரதாயப்படி, ஏழுமலையான் குடிகொண்டிருக்கும் கோயிலையும் ஆழ்வாராக கருதுவது வழக்கம். அதனால், கோயிலை சுத்தம் செய்வதை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று அழைக்கின்றனர்.
திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 13ஆம் தேதி தொடங்க உள்ளது. அதனால், கோயில் முழுவதும் செவ்வாய்க்கிழமை சுத்தம் செய்யப்பட்டது. இதற்காக கோயிலுக்குள் உள்ள உற்சவர் சிலைகள், பூஜைப் பொருள்கள், விளக்குகள், திரைச் சீலைகள் அனைத்தும் வெளியில் கொண்டு வரப்பட்டு அவற்றின் மீது கூடாரம் எனப்படும் வெள்ளைப் போர்வையை அர்ச்சகர்கள் போர்த்தினர். அதன்பின் கோயிலில் உள்ள பூஜைப் பொருள்கள், சுற்றுச்சுவர்கள், தரிசன வரிசைகள், உயர் மேடைகள், கதவுகள், கோபுரங்கள், தூண்கள் உள்ளிட்டவை வாசனைத் திரவிய கலவையால் சுத்தம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
கோயில் சுத்தம் செய்யப்பட்ட பின், கருவறையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பொருள்கள் மீண்டும் கருவறையில் வைக்கப்பட்டன. வாயில்களுக்கு புதிய திரைச் சீலைகள் அணிவிக்கப்பட்டன. ஏழுமலையான் சிலை மீது போர்த்தப்பட்டிருந்த போர்வை அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, பூஜைகள் வழக்கம் போல் தொடங்கின.
இதையொட்டி காலை 6 மணி முதல் 11 மணி வரை தேவஸ்தானம் தரிசனங்களை ரத்து செய்தது. மதியம் 12 மணிக்கு பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். அதிகாலையில் நடைபெற்ற சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்கு தனிமையில் நடைபெற்றன.


 

More from the section

கே.சி.எஸ். ஐயர் கணித்த ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்- 2019 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்? வாங்க பார்க்கலாம்..!!
திருமலை திருக்குளத்தில் புதிய இரும்புத் தடுப்பு அமைக்கும் பணி தொடக்கம்
திருப்பதி தெப்போற்சவம்: 2ஆம் நாளில் பார்த்தசாரதி பெருமாள் பவனி
காளஹஸ்தி கோயிலில் 19-இல் அனைத்து சேவைகளும் ரத்து