வியாழக்கிழமை 21 மார்ச் 2019

கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களா நீங்கள்?

By - கடம்பூர் விஜயன்| Published: 20th September 2018 05:56 PM

 

ஊர்த்தலைவர்களைப் பட்டக்காரர் என அழைப்பர். இச்சமூகத்தினரிடையே ஏற்படும் பிணக்குகளை, இவர் ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி பேசித் தீர்த்துவைப்பர். இவரது தீர்ப்புக்கு இருதரப்பாரும் கட்டுப்படுவர். இவர்கள் குடியிருந்த பகுதி என்பதால் பட்டக்காரர் தெரு என அழைக்கப்படுகிறது.

மன்னார்குடியில் இருந்து பாமணி கோயில் செல்லும் ஆற்றுப் பாலத்தினை கடந்து வலதுபுற சாலையில் சென்றால் பட்டகாரதெருவை அடையலாம். இங்கு கிழக்கு நோக்கிய பழமையான சிவன்கோயில் ஒன்றுள்ளது. கிழக்கு நோக்கி பிரதான வாயில் தென்புறமே உள்ளது. இறைவன் சோழேஸ்வரர் கிழக்கு நோக்கியும், இறைவி வாலாம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர். இறைவன் கருவறை வாயிலில் சுதையாலான துவாரபாலகர்களும் ஓர் சிறிய விநாயகர் சிலை ஒன்றும் உள்ளது.

கருவறை கோட்டத்தில் தென்முகன் துர்க்கை மட்டும் உள்ளார். பிரகார கோயில்களாக விநாயகரும், முருகனும் உள்ளனர். இக்கோயிலின் மற்றொரு சிறப்பாக வடகிழக்கில் சித்திரகுப்தர் தனி சன்னதியில் மேற்கு நோக்கி நின்றபடி அருள்பாலிக்கிறார்.

சித்திரகுப்தர் மானிடர்கள் பிறந்து இறக்கும் தருணம் வரை அவர்களது வாழ்க்கையில் அவர்கள் செய்த அனைத்துக் காரியங்களினையும் எழுதிவைக்கின்றார். இவ்வாறு இவர் எழுதும் குறிப்புகளினை ஆகாஷிக் குறிப்புகள் என அழைப்பர்.

நவக்கிரகங்களில் கேதுவுக்கு சித்திரகுப்தன்தான் அதிபதி என்றும் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால், அத்தோஷம் நீங்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

சித்ரா பவுர்ணமி தினத்தன்று பெண்கள் விரதமிருந்து உப்பில்லாத உணவு உண்டு இவரை வேண்டிக் கொண்டால் அவர்களுடைய வாழ்க்கைக் காலம் அதிகமாகும் என்பது ஜோதிடங்கள் கூறும் தகவலாகும். இவை தவிர பைரவர், சனி, சூரிய சந்திரர்கள் மேற்கு நோக்கிய மாடங்களில் உள்ளனர்.

- கடம்பூர் விஜயன்

More from the section

காமாட்சியம்மன் கோயிலில் சண்டி ஹோமம்: ஸ்ரீ விஜயேந்திரர் பங்கேற்பு
கோயில்களில் பங்குனி உத்திர விழா
திருமலை: வருடாந்திர தெப்போற்சவம் நிறைவு
ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ4.39 கோடி
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தும்புரு தீர்த்தத்தில் நீராடக் குவிந்த பக்தர்கள்