செவ்வாய்க்கிழமை 19 மார்ச் 2019

நவீன கால ஓட்டத்தில் இறைவனிடம் அதிகம் கையேந்தி நிற்பது இதற்காகத்தான்! 

Published: 21st September 2018 03:33 PM

 

இறைவன் சோதித்து அளிப்பவராக இருந்தாலும், அம்பிகை கேட்காமலேயே கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டவள் அல்லவா. இன்று நவீன கால ஓட்டத்தில் நாம் அதிகம் இறைவனிடம் கையேந்தி நிற்பது குழந்தைப்பேறுக்காக.

இப்படிக் கையேந்தி நிற்கும் தம்பதிகளுக்கு அருள்பாலிக்கும் அற்புதத் திருத்தலம் இது. குழந்தை வரம் தருவதுடன், கருப்பையில் வளரும் கருவையும் பாதுகாப்பவள் ஆதலால் அம்பிகைக்கு, 
'கருவளர்நாயகி' என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் இவ்வூருக்கே கரு-வளர்-சேரி எனப் பெயர்.

கும்பகோணத்தின் தெற்கில் திருவாரூர் சாலையில் 6 கி.மீ தூரத்தில் மருதாநல்லூர் உள்ளது, இந்த இடத்தில் இருந்து கிழக்கு நோக்கிய சாலை நாச்சியார்கோயில் செல்கிறது. இந்தச் சாலையில் இரண்டு கி.மீ தூரத்தில் உள்ளது கருவளர்ச்சி தரும் கருவளர்ச்சேரி.

கோயில் சிறிய கோயில் தான் ஆனால் கீர்த்தி பெரிது. கிழக்கு நோக்கிய இறைவன் அகஸ்தீஸ்வரர், அவரின் இடப்பாகத்தில் அம்பிகையும் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். இறைவன் அகத்தியர் லோபமுத்திரையால் வழிபடப்பட்ட அழகிய நடுத்தர அளவிலான லிங்கம். இறைவி புற்று மண்ணால் ஆன சுயம்புத் திருமேனி ஆதலால் அம்பிகைக்கு அபிஷேக ஆராதனைகள் கிடையாது. புனுகுச் சட்டம், சாம்பிராணி மற்றும் தைலக்காப்பு மட்டுமே செய்யப்படுகிறது.

ஆவணி மாதம் புனர்பூச நட்சத்திரம், நவராத்திரி நாட்கள், மாசி மாதம் மகா சிவராத்திரி ஆகிய நாட்களில் மட்டுமே அன்னையின் முழு உருவத்தைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் திருமுக தரிசனம் மட்டுமே. திருமுகம் தவிர கீழ்ப் பாதியை பூச்சரங்கள் கொண்டு மறைத்துள்ளனர்.

மாதந்தோறும் பௌர்ணமி அன்று அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு தைலக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. குழந்தை வரம் தவிர, திருமணம் விரைவில் கைகூடவும் இவளை மனமுருகி வேண்டிச் செல்கின்றனர்.அம்மனின் பாதத்தின் அருகே, காஞ்சி மகா பெரியவர் வழங்கிய ஸ்ரீசக்கரமும், மேருவும் உள்ளன.

அம்பிகை கருவறை வாசற்படியில், பித்தளைக் காப்பு போடப்பட்டுள்ளது. அம்பாளை உளமார வேண்டிக் கொண்டு இந்தப் படியை சுத்தம் செய்து பசு நெய்யால் மெழுகிக் கோலமிட்டு வழிபட்டால், பிரார்த்தனைகள் பலிக்கும் என்கின்றனர். இந்த அம்பிகையின் அருளால் கருவுற்றவர்கள், வளைகாப்பு விழாவின்போது, அகிலாண்டேஸ்வரிக்கு ஏழு வளையல்களை காணிக்கையாகச் செலுத்தி செல்கின்றனர். தொட்டில் காணிக்கை செலுத்தும் வழக்கமும் உண்டு.

நூற்றுக்கணக்கானோர் இப்படி வழிபட்டு பேறுகள் பெற்றுள்ளனர். அவர்களால் அவ்வப்போது திருப்பணிகள் செய்யப்பட்டு கோயில் ராஜகோபுரம், முகப்பு மண்டபம் என வளர்ந்துள்ளதே இதற்குச் சான்று. அகத்திய முனிவரும் அவர் மனைவி லோபமுத்திரையும் பூஜித்ததால் இங்கு அருள்பாலிக்கும் இறைவனுக்கு, அகஸ்தீஸ்வரர் என்று பெயர், அகஸ்தியர், லோபமுத்திரைக்கு வடகிழக்கில் சிலைகள் உள்ளன. இறைவன் கருவறைக்கு பின்புறம் மகாவிஷ்ணு தன தேவியை மடியில் இருத்தியவாறு காட்சியளிக்கிறார்.

வழமை போல் விநாயகர், முருகன், லக்ஷ்மி சன்னதிகள் உள்ளன. வடகிழக்கு மூலையில் நாகதேவிக்கும், நாக ராஜனுக்கும் சிலைகள் உள்ளன. பல சிறப்புக்கள் கொண்ட இக்கோயில் பூசையை செய்து வருபவர் எமது கோயில் குருக்களின் சகோதரர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களது வேண்டுதல்கள் நிறைவேற முறையாக வழிகாட்டி உதவுவார்.

அவரது பெயர் திரு.விக்னேஷ் குருக்கள் - கைபேசி எண் 93448 95538

இந்தக் கோயிலுக்கு அருகிலேயே லட்சுமிநாராயண பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது. ஹரியையும், சிவனையும் வழிபட விரும்பிய அகத்தியருக்காக இருவரும் இப்படி அருகருகே கோயில் 
கொண்டதாக ஐதீகம். உங்களது உறவினர் எவரேனும் குழந்தை பேறுகள் இல்லாமல் இருந்தால் கவலை வேண்டாம் கருவளர்ச்சேரி செல்லுமாறு சொல்லுங்கள்.

- கடம்பூர் விஜயன்
 

Tags : அகத்தியர் குழந்தைப்பேறு கருவளர்நாயகி மருதாநல்லூர் அகஸ்தீஸ்வரர் சுயம்புத் திருமேனி கருவளர்ச்சேரி

More from the section

பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
கோயில் சொத்துகளை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
திருமலையில் 3-ஆம் நாள் தெப்போற்சவம்: ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி வலம்
திருமலையில் பௌர்ணமி கருட சேவை ரத்து
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.2.77 கோடி