வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

அகத்தீஸ்வரர் கோயில் சனிப் பிரதோஷ வழிபாடு

By  பொன்னேரி,| DIN | Published: 23rd September 2018 12:38 AM

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில், கும்மமுனிமங்கலம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றங்கரையோரம், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. அகத்திய முனிவர் இங்குள்ள ஆனந்த புஷ்கரணி எனப்படும் திருக்குளத்தில் நீராடி, ஈசனை வழிபட்டதால் இக்கோயிலில் உள்ள ஈசன் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுவதாக ஐதீகம்.
 இக்கோயில் ஆனந்தவல்லித் தாயார் அகத்தீஸ்வர பெருமானுக்கு வலது பக்கத்தில் நின்ற நிலையில் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். மேலும் கோயிலில் சண்டிகேஸ்வரர், துர்க்கை, பைரவர், விநாயகர், முருகர், பிரம்மா, குரு பகவான், சூரியர், சந்திரர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சந்நிதிகள் உள்ளன. அத்துடன் அப்பர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. இந்தக் கோயில் முன்பு 16 கால் மண்டபமும், அதன் அருகில் எப்பொழுதும் வற்றாத ஆனந்த புஷ்கரணியும் உள்ளது.
 சனிப்பிரதோஷத்தையொட்டி, கோயிலில் உள்ள கணபதி, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் நந்தி மற்றும் அகத்தீஸ்வரருக்கு இளநீர், பால் உள்ளிட்டவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அகத்தீஸ்வரர், ஆனந்தவல்லி தாயார் சமேதராய் கோயிலை மூன்று முறை வலம் வந்தார். இந்த பிரதோஷ விழாவில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. சனிப் பிரதோஷம் காரணமாக சந்நிதித் தெருவில் ஏராளமான நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் சிரமப்பட்டு கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டனர்.

More from the section

திருமலையில் வன விலங்குகளின் சிலைகள் அமைப்பு
வால்மீகீஸ்வரர் கோயிலில்  திருக்கல்யாண உற்சவம்
திருப்பதி: 69,054 பேர் தரிசனம்
ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்
ராகவேந்திர பிருந்தாவனத்தில் பெளர்ணமி பூஜை