சனிக்கிழமை 20 ஜூலை 2019

ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் (மினி தொடர்) - பகுதி 7. அபிமுகேஸ்வரர் திருக்கோயில்

DIN | Published: 20th April 2019 03:39 PM

 

தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ஆலங்குடி என்று பெயர் வந்தது. பல சிறப்புக்கள் கொண்ட ஆலங்குடியினை சுற்றி எட்டுத் திக்கிலும் சிறப்பான கோயில்கள் உள்ளன, அவையே அஷ்ட திக்குப் பாலகர்கள் வழிபட்டவை. இவர்கள் இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும், சிவலிங்கமும் நிறுவிப் பூஜித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கியும் பல நற்பேறுகளும் பெற்றார்கள்.

ஆலங்குடி கோயிலின் கிழக்கு, தென்கிழக்கு பகுதியில் அமைத்திருக்கும் ஊர் பூளையாயிருப்பு. தற்போது பூனாயிருப்பு என அழைக்கப்படுகிறது. பூளைசெடிகள் வளமாக இருக்கும் பகுதி ஆதலால் இப்பெயர். இவ்வூரில் இரு கோயில்கள் உள்ளன. ஆலங்குடி கோயிலின் நேர் கிழக்கில் உள்ளது அபிமுகேஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் அமைத்திருக்கும் இடம் பூளையாயிருப்பு, தற்போது பூனாயிருப்பு என அழைக்கப்படுகிறது.
 
ஆலங்குடியின் அஷ்ட திக்கு பாலகர் வழிபட்ட கோயில்களில் இது இந்திரன் பிரதிட்டை செய்து வழிபட்டது. இக்கோயில் முன்னர் ஆலங்குடி கோயிலின் தென்புறம் உள்ள அமிர்த புஷ்கரணி அருகிலிருந்ததாக கூறுகின்றனர். அன்று இருந்த விநாயகர் மட்டும் அங்கேயே வித்யா கணபதி எனும் பெயரில் அங்கேயே இருக்கின்றார். அங்கிருந்த சிவன் அம்பிகை சிலைகளை வைத்து இக்கோயிலைச் சிலநூறு ஆண்டுகளின் முன்னர் உருவாக்கியுள்ளனர். கிராமத்தினை விட்டு 2 கி.மீ தூரம் தனித்து இருப்பதால் காலப்போக்கில் வழிபாடுகள் நின்றுபோய் கோயில் சிதிலமாகிவிட்டது.

அன்று இந்திரன் வழிபட்ட இந்த இந்திரேஸ்வரர் என்ற லிங்க மூர்த்தி தற்போது மேற்கு நோக்கியபடி அபிமுகேஸ்வரர் எனப் பெயர் கொண்டுள்ளார். அபிமுகம் என்றால் வழமையான பார்வையிலிருந்து மாறுபட்ட முகம் அதாவது மேற்கு முகம் எனக் கொள்ளல்வேண்டும்.

கோயில் பழுதடைந்து போனாலும் அதன் லிங்கத்தின் கம்பீரம் குறையவில்லை, பெரிய ஆவுடையாரும் பெரிய பாணமும் கொண்டு விளங்குகிறது. இறைவி அபயாம்பிகை தென்திசை நோக்கி உள்ளார். ஓர் அழகிய நந்தி இறைவனை நோக்கியவாறு உள்ளது. கோயில் வாயில்பகுதி மட்டும் உள்ளது சுற்றுச் சுவர்கள் இடிந்து காணாமல் போய்விட்டன. வாயிலின் இருபுறமும் இருந்த விநாயகர், முருகன் சிலைகளையும் காணவில்லை, சண்டேசரும் காணவில்லை. 

ஒற்றையடிப் பாதையாக இருந்த இந்த வழி தற்போது ஒரு கார் செல்லும் அளவிற்கு அகலப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் கவலையின்றி எம்பெருமானை காரில் சென்று தரிசித்துத் திரும்பலாம். பூனாயிருப்பு செல்லும் வழியில் ஆலங்குடி VAO அலுவலகம் ஒட்டி செல்லும் சாலையில் கிழக்கு நோக்கி 1 கி.மீ தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம். 

அஷ்ட திக்கு பாலகர் எனும் இவர்கள் வழிபட்ட திக்கு இறைவர்களை அவர்களுக்குரிய காயத்ரி மந்திரத்தினை சொல்லி வழிபடும்போது அஷ்ட திக்கு புருஷர்களின் அருளும் நமக்குக் கிடைத்து விடும் என்பதில் ஐயமில்லை.  

இந்திரன் காயத்ரி மந்திரம் 

ஓம் சஹஸ்ரநேத்ராய வித்மஹி

வஜ்ர ஹஸ்தாய தீமஹி

தன்னோ இந்திர ப்ரசோதயாத் 

இதனைச் சொல்லி வணங்குவதன் மூலம் மனோ வசியம், திருஷ்டி முதலியவை நீங்கப் பெறலாம்.

- கடம்பூர் விஜயன் 
 

More from the section

மீனாட்சி -  சுந்தரேசுவரர் கோயிலில் ஆடிமுளைக்கொட்டுத் திருவிழா
ஆண்டாள் கிளியுடன் நீலப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்: ரூ.300 கட்டணத்தில் விரைவு தரிசனம் அறிமுகம்
திருப்பதி பக்தி சேனல் தலைவராக பிருத்வி பாலிரெட்டி நியமனம்
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.26 கோடி
திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் 25 முதல் திருவாடிப்பூர உற்சவம்