21 ஏப்ரல் 2019

ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்

Published: 22nd March 2019 02:39 AM
திருக்கல்யாண உற்சவத்தில் எழுந்தருளிய ஏகாம்பரநாதர், ஏலவார் குழலி அம்மை.


காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணப் பெருவிழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. 
ஏகாம்பரநாதர் கோயிலில் கடந்த 11-ஆம் தேதி பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா, வெள்ளி ரதம் மற்றும் திருத் தேரோட்டம், 63 நாயன்மார்களுடன் சுவாமி எழுந்தருளல், கைலாசபீட ராவணன் உள்ளிட்ட வாகனங்கள், தேர்களில் ஏலவார்குழலி அம்மையுடன் ஏகாம்பரநாதர் எழுந்தருளல் ஆகியவை நடைபெற்று வந்தன.
அத்துடன், ராஜவீதிகளில் சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர திருக்கல்யாணப் பெருவிழா வியாழக்கிழமை அதிகாலை விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, காலையில் சபாநாதர் தரிசனம் அளித்தார். அப்போது, வாத்தியக் கலைஞர்கள் வாத்தியங்களை இசைக்க, சிவகாமி அம்மையுடன் நடராஜர் எழுந்தருளி, 4 ராஜவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
தொடர்ந்து, மேற்கு ராஜ வீதியில் உள்ள காஞ்சிபுரம் ஆடிசன்பேட்டை சத்திர மண்டப சங்கம் அருகில் சுவாமி வந்தபோது, மண்டகப்படி நடந்தது. அப்போது, சுவாமிக்கு மாலை மாற்றப்பட்டு, தீபாராதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஏகாம்பரநாதர் சந்நிதித் தெருவில் உள்ள ஒக்கப்பிறந்தான் குளத்தில் ஏலவார் குழலி அம்மை எழுந்தருளி, வீதியுலா மண்டகப்படி நடைபெற்றது. பின்பு, அங்கிருந்து ஏகாம்பரநாதர் கோயில் வளாகத்தில் உள்ள சம்பா நதிக் குளத்தில் எழுந்தருளி ஏகாம்பரநாதரை நினைந்து அம்பாள் வேண்டினார்.  அப்போது, ஏகாம்பரநாதர் அங்கு எழுந்தருளினார். அம்பாள் தரிசனம் செய்தார். பின்பு, ஏகாம்பரநாதருக்கும், ஏலவார் குழலி அம்மைக்கும் விசேஷ உற்சவமான பங்குனி உத்திர திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, திருமணக் கோலத்தில் தங்க ரிஷப வாகனத்தில் உற்சவர் எழுந்தருளினர். பின்பு, ராஜவீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இவ்விழாவையொட்டி, புதன்கிழமை மாலையிலிருந்தே காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோயிலில் திரண்டனர். அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 
பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள், விழாக் குழுவினர் ஆகியோர் செய்திருந்தனர்.


 

More from the section

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணெய்த் தாழி உற்சவம்
திருப்பதியில் 24 மணி நேர ரத்த வங்கி திறப்பு
ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் (மினி தொடர்) - பகுதி 7. அபிமுகேஸ்வரர் திருக்கோயில்
குழந்தை பாக்கியம் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!
மண்டகப்படி சுடலைமாடசாமி கோயிலில் ஏப். 22ல் கும்பாபிஷேகம்