புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

தகவல் உரிமைச் சட்டம், 2005

By வழக்கறிஞர் சி.பி. சரவணன்| DIN | Published: 13th August 2018 12:02 PM

 

மக்களாட்சியில் அரசு மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வதற்கும், ஒளிவு மறைவற்ற நிலை மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்துவதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டது தகவல் உரிமைச் சட்டம், 2005 ஆகும்.

பெறக் கூடிய தகவல்கள் [பிரிவு 2(f)]...  (Information)

தகவல் என்பது பதிவுருக்கள், ஆவணங்கள், குறிப்பாணைகள், மின்னஞ்சல்கள், கருத்துரைகள், அறிவுறைகள், செய்தி வெளியீடுகள், சுற்றறிக்கைகள், ஆணைகள், பயணக்குறிப்புகள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், தாள்கள், மாதிரிகள், மாதிரிப்படிவங்கள், மின்னணு வடிவம் எதிலும் வைத்திருக்கப்பட்ட தகவல் விபரங்கள் மற்றும் அப்போதைக்கு செயலாற்றலில் உள்ள வேறு சட்டம் எதன்படியும் பொது அதிகார அமைப்பின் மூலம் பெறக்கூடிய தனியார் குழுமம் எதன் தொடர்பான தகவலை உள்ளிட்ட வடிவம் எதிலும் உள்ளவைகள் அனைத்தும் தகவல் ஆகும்.

இவற்றை தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறமுடியும்

பெறமுடியாத தகவல்கள் (பிரிவு.8)  (Exemption from disclosure of information)

(1) இந்த சட்டத்தில் அடங்கிய எது எவ்வாறிருப்பினும்

 1. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, இந்தியாவின் படைத்திறன் சார்ந்த விஞ்ஞான அல்லது பொருளாதார நலன்கள், அயல்நாட்டு உறவை பாதிக்கும் அல்லது குற்றமொன்றை தூண்டுவதாக அமையும் தகவல்கள்

 2. நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் எதனாலும் வெளிப்படையாக தடை செய்யப்பட்ட அல்லது நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்துகின்ற தகவல்கள்

 3. நாடாளுமன்ற அல்லது மாநில சட்டமன்ற சிறப்புரிமையினை மீறும் தகவல்கள்

 4. பொதுமக்களின் பேரளவு நலனுக்கு அவசியமானதன்றி, வணிகத்தின் நம்பகத்தன்மை, வியாபார இரகசியங்கள் அல்லது அறிவுசார் சொத்துடைமை உள்ளிட்டால், மூன்றாம் நபர் சந்தையில் போட்டியிடும் நிலைக்கு தீங்காகும் தகவல்கள்

 5. அறப்பொறுப்பினர் உறவில் கிடைக்கும் தகவல்கள்

 6. வெளிநாட்டு அரசிடம் ரகசியமாய் பெற்ற தகவல்கள்

 7. நபர் ஒருவரின் வாழ்க்கைக்கு அல்லது உடற்பாதுகாப்பிற்கு அல்லது தகவலின் மூலத்தை அடையாளம் காண்பதற்கு சட்ட நிறைவேற்றம் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக ரகசியமாய் கொடுக்கப்பட்ட உதவிக்கு அபாயம் விளைவிக்கக் கூடிய தகவல்கள்

 8. புலனாய்வு செயல்முறைக்கு அல்லது குற்றவாளிகளை கைது செய்தலுக்கு அல்லது குற்ற வழக்கு தொடருவதற்கு தடை செய்யும் தகவல்கள்

 9. அமைச்சர்கள் குழு, செயலாளர்கள் மற்றும் பிற அலுவலர்களின் பதிவுருக்கள் மற்றும் அமைச்சரவை ஏடுகள்.

 10. மேலும் அமைச்சரவை குழுவின் முடிவுகள், அவற்றிற்கான காரணங்களை விஷயம் நிறைவடைந்த பின்னர் பகிரங்கப்படுத்துதல் வேண்டும். பொது செயல்பாடு அல்லது நலனுக்கு உறவுடயாதாக இன்றியும், தனிநபரின் அந்தரங்கத்தில் நியாயமற்ற தலையீடு.

(2) அலுவல்சார் ரகசியங்கள் சட்டம்,1923 [Official Secrets Act,1923] இன் படி விளக்களிக்கப் பட்ட தகவல்களை பொதுநலனுக்காக பெறலாம்.

(3) ஆனாலும் பிரிவு 8(1)(a,c,i) போன்ற தகவல்கள் விண்ணப்ப தேதிக்கு 20 ஆண்டுகள் முன்னர் நிகழ்ந்த, நடந்த, ஏற்பட்ட தகவல்களை அளிக்கலாம்.

நபர் ஒருவரிடம் நிலை பெற்றிருக்கும் பதிப்புரிமையின் (Copy Right) மீறுகையாயிருப்பின் தகவல் நிராகரிக்கப்படலாம். (பிரிவு.9)

மூன்றாம் தரப்பினர் தகவல் [பிரிவு.11]  (Third party Information)

1. மூன்றாம் தரப்பினர் தொடர்புடைய அல்லது அவரால் அளிக்கப்பட்டிருப்பதாக மற்றும் அவரால் இரகசியமாக கருதப்பட்டு வருவதாக உள்ளதோ அத்தகவலை அளிக்கும் வேளையில் விண்ணப்பம் பெறப்பட்ட 5 நாட்களுக்குள் மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலர் மூன்றாம் தரப்பினரை முறையீடு செய்வதற்கு அழைப்பு விடுத்து, தகவல் அளிக்கும் முன் மூன்றாம் தரப்பினரின் முறையீட்டை கருத்தில் கொள்ள வேண்டும்

மூன்றாம் தரப்பினரின் வியாபார அல்லது வணிக இரகசியங்கள் தவிர பொதுநலன் கருத்தில் கொண்டு வெளிப்படுத்தலாம்.

2. மூன்றாம் தரப்பினரின் தகவல் அறிவிப்பு பெற்ற தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள் முறையீடு செய்ய மூன்றாம் தரப்பினருக்கு வாய்ப்பளிக்கப்படும்

3. மூன்றாம் தரப்பினர் தொடர்பான தகவலை கொடுக்கலாமா, வேண்டாமா என்ற முடிவினை விண்ணப்பம் பெற்ற 40 நாட்களுக்குள் முடிவினை கொடுக்க வேண்டும்

4. முறையீட்டின் மேல் எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து மூன்றாம் தரப்பினர் மேல்முறையீடு செய்ய உரிமை கொண்டவர் என்ற அறிக்கை அடங்கியிருக்க வேண்டும்.

தகவல் பெறுவது எப்படி [பிரிவு.6] (Request for obtaining information.)

1) தகவல் உரிமைச் சட்டத்தின் படி தகவல் பெற விழையும் நபர், ஆங்கிலம் அல்லது அப்பகுதியின் அலுவல் மொழியில் எழுத்து வடிவில் அல்லது மின்னனு வழியில் கேட்கலாம்.

தகவல் தேவைப்படும் தொடர்புடைய அமைப்பின் மத்திய அல்லது மாநில தகவல் அலுவலருக்கு கோரப்படும் தகவலின் விபரங்களை குறிப்பிட்டு வேண்டுகோள் ஒன்றை செய்ய வேண்டும்

2)தகவலுக்காக வேண்டுகோள் செய்யும்பொழுது விண்ணப்பதாரர் தகவல் காரணத்தையோ அல்லது விண்ணப்பதாரரை தொடர்பு கொள்ள அவசியமான விபரங்களைத் தவிர சொந்த விபரங்கள் எதையும் கேட்கக் கூடாது.

3) ஒரு தகவலுக்காக பொது அதிகார அமைப்பிடம் வேண்டுகோள் செய்யும் பொழுது

(i) அத்தகவல் வேறொரு அலுவலகம் வைத்திருப்பதாக அல்லது

(ii) அதன் கருப்பொருள் வேறொரு அலுவலக பணிகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்குமிடத்து, அந்த விண்ணப்பத்தை அல்லது அதன் பகுதியை சம்மந்தப்பட்ட அலுவகத்திற்கு மாற்றி அனுப்புதல் வேண்டும் மற்றும் அத்தகைய மாற்றல் குறித்து விண்ணப்பதாரருக்கு தெரிவித்தல் வேண்டும்.

மாற்றல் நடைமுறையானது விண்ணப்பம் பெறப்பட்ட 5 நாட்களுக்கு அதிகமாக ஆகக் கூடாது.

வேண்டுகோளை முடிவு செய்தல் ( பிரிவு.7) (Disposal of Request)

(1) மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலர் விரைந்து, விண்ணப்பம் கிடைக்கப் பெற்ற 30 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் அல்லது பிரிவு. 8 மற்றும் 9- இல் குறித்துறைக்கப்பட்ட காரணங்களின் அடிப்படையில் இருப்பின், அச்சாரம்சங்களை நிராகரிக்க வேண்டும்.

(2 )மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் தகவல் தர தவறினால், மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலர் நிராகரித்துவிட்டதாக கருதப்படுதல் வேண்டும்.

(3) அந்த தகவலை அளிப்பதற்கான செலவுத் தொகையுடன், கூடுதல் கட்டணம் அளிக்க வேண்டிய நிலையில், மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலர் செய்தி அறிவிப்பு அனுப்பி அதில் பின்வருவனவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்

(அ) அந்த தகவலை அளிப்பதற்கான செலவுத் தொகையை குறிப்பிட்டு, நிர்ணயம் செய்யப்பட்ட கூடுதல் கட்டணத்தின் விவரங்களை கணக்கீடுகளுடன் அனுப்பிய செய்தி அறிப்பு அனுப்பபட்டதற்கும், கட்டணம் செய்வதற்கும் ஆன கால அளவை குறிப்பிட்ட 30 நாட்களிலிருந்து விலக்கப்படுதல் வேண்டும்.

(ஆ) விண்ணப்பத்தின் முடிவுடன், மேல்முறையீட்டு செயல்முறை, மேல்முறையீட்டு அலுவலரின் முகவரி, காலவரை, வேறு ஏதாவது வடிவமுறைகள், கட்டணத்தொகை மற்றும் தகவல் பெற அணுகும் முறை போன்ற தகவல்களை குறிப்பிட வேண்டும்

(4) விண்ணப்பதாரர் புலன் ஊனமுற்றவராக இருக்கும்பட்சத்தில் மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலர் தகவலைப்பெற உதவிகள், பார்வையிட தேவையான உதவிகளை அளித்திட வேண்டும்.

(5) மின்னணு வடிவத்தில் தகவலை பெற வேண்டியிருக்கும் பட்சத்தில், அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

(6) காலவரை தவறி அளிக்கும் தகவல்களுக்கு, அந்த தகவல் செலவு தொகையின்றி அளிக்கப்பட வேண்டும்

(7) மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலர் தகவல் அளிக்கும் பொழுது, மூன்றாம் தரப்பினரின் முறையீட்டை கருத்தில் கொள்ள வேண்டும்.

(8) தகவல்கள் நிராகரிக்கும் வேளையில் மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலர் விண்ணப்பதாரருக்கு

நிராகரிப்பிற்கான காரணங்கள்...

 1. நிராகரிப்பினை எதிர்த்து மேல்முறையீட்டு கால அளவு

 2. மேல்முறையீட்டு அலுவலரின் முகவரி

 3. வினாக்கள் தகவல் பதிவுருக்களின் பாதுகாப்பிற்கு அல்லது பேணுகைக்கு தீங்காக இருந்தாலன்றி, தகவல் சாதாரணமாக இருக்க வேண்டும்.

மேல்முறையீடு பிரிவு.19

 1. மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலர் தகவல் முடிவினால் குறையுற்ற அல்லது திருப்தியில்லாத நபர், அத்தகைய கால அளவு முடிவுற்ற அல்லது முடிவை பெற்றதிலிருந்து 30 நாட்களுக்குள் மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலரின் பதவியில் முதுநிலையில் உள்ளவரிடம் முதல் மேல்முறையீடு செய்யலாம்.

போதுமான காரணத்தால் மேல்முறையீடு செய்யமுடியாமல் இருந்தார் என மேல்முறையீடு அலுவலர் உளநிறைவடைந்தால் 30 நாட்கள் முடிவடைந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளலாம்.

 1. மூன்றாம் தரப்பினரால் முறையீடு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், மேற்படி ஆணையின் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ள வேண்டும்.

 2. இரண்டாம் மேல்முறையீடானது அந்த முடிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் மத்திய அல்லது மாநில தகவல் ஆணையத்திடம் செய்து கொள்ளலாம். போதுமான காரணத்தால் மேல்முறையீடு செய்யமுடியாமல் இருந்தார் என மத்திய அல்லது மாநில தகவல் ஆணையம் உளநிறைவடைந்தால் 90 நாட்கள் முடிவடைந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளலாம்.

 3. மூன்றாம் தரப்பினரால் முறையீடு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், மத்திய அல்லது மாநில தகவல் ஆணையம் மூன்றாம் தரப்பினர் முறையீடு கேட்கப்படுவதற்கு வாய்ப்பு அளித்தல் வேண்டும்.

 4. மேல்முறையீட்டு நடவடிக்கைகளில், வேண்டுகோளின் நிராகரிப்பு நியாயமானதே என நிரூபிக்கும் சுமை, வேண்டுகோளை மறுத்த மத்திய அல்லது மாநில தகவல் அலுவலரையே சார்ந்து இருக்கும்

 5. முதல் மற்றும் இரண்டாம் மேல்முறையீடு பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அல்லது அதை தாக்கல் செய்ததிலிருந்து 45 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்

 6. மத்திய அல்லது மாநில தகவல் ஆணையத்தின் முடிவானது கட்டுப்படுத்தக் கூடியதாகும்.

தகவல் ஆணையத்தின் அதிகாரங்கள்...

மத்திய அல்லது மாநில தகவல் ஆணையம்

a) சட்டத்தின் வகைமுறைகளை உறுதி செய்வதற்கு, குறிப்பிட்ட வடிவத்தில் தகவலை பெறவும், மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலரை நியமிக்கவோ, சில தகவலை பதிப்பித்து வெளியிடவோ, பதிவுருக்கள் பராமரித்தலில் அவசியமான மாற்றங்களை செய்தல், அலுவலர்களை பயிற்சிக்கு வகை செய்தல், ஆண்டறிக்கை அளித்தல்

புகார்தாரருக்கு இழப்பீடு அளிக்க வேண்டுறுத்தவும், தண்டங்கள் விதிக்கவும், விண்ணப்பத்தை நிராகரிக்கவும் அதிகாரம் கொண்டுள்ளது.

அபராதம்

மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலர் தீய எண்ணத்துடன் மறுத்திருப்பதாக அல்லது தவறான அல்லது முழுமையுறாத தகவலை கொடுத்திருப்பதாக அல்லது தகவல் அளிப்பதை தடுத்திருப்பதாக கருதப்படுமிடத்தில், விண்ணப்பம் பெறப்படுகிற அல்லது தகவல் அளிக்கும் வரை நாளொன்றுக்கு ரூ.250/- வீதம் அதிகப்படியாக ரூ.25,000/- வரை விதிக்கலாம்.

மேலும் மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலருக்கு அவருக்குப் பொருந்தும் பணி விதிகளின் படி ஒழுங்கு நடவடிக்கைக்காக பரிந்துரையும் செய்ய வேண்டும்.

நீதிமன்ற அதிகாரவரம்பிற்கு தடை [பிரிவு.23]

இச்சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஆணை குறித்து நீதிமன்றம் உரிமை வழக்கு, விண்ணப்பம் அல்லது பிற நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளலாகாது. இச்சட்டத்தின் மேல்முறையீடு தவிர வேறுவகையில் வாதிட கூடாது.

கட்டணங்கள்

 

Central Information Commission

Room No. 326, 2nd Floor

August Kranti Bhawan,

Bhikaji Cama Place

New Delhi-110066

 

Tamil Nadu Information Commission

No.2, Theagaraya Salai

Near Aalai Amman Koil

Teynampet

Chennai - 600 018

Tags : Right to Information Act2005 தகவல் உரிமைச் சட்டம் 2005

More from the section

தேர்தல் ஸ்பெஷல் - 3 புதிய அரசியல் கட்சி தொடங்குவது எப்படி?
தேர்தல் ஸ்பெஷல் -2 பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?
தேர்தல் ஸ்பெஷல்-1 பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் என்னென்ன?
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - விளையாட்டு வீரர்களுக்கு செய்யும் உதவிகள் என்னென்ன?
நோட்டா (NOTA) - 49-O வாக்கு என்றால் என்ன?