20 ஜனவரி 2019

F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ?

By வழக்கறிஞர் சி.பி. சரவணன்| DIN | Published: 20th August 2018 02:32 PM

 

First information report (Sec. 154 CrPC)     

காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது எவ்வாறு என்பது பற்றிய அடிப்படை அறிவு ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும்.

குற்றம் எந்த காவல்நிலைய எல்லைக்குள் நடந்ததோ அந்த காவல் நிலையத்தில் மட்டுமே புகார் கொடுக்கப்படவேண்டும்  ஒரு வேலை தவறுதலாக வேறு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால், அந்த காவல் நிலைய அதிகாரி முறையான காவல்நிலைய எல்லையை தெரியப்படுத்தி அறிவுறுத்த வேண்டும். கொலை செய்துவிட்டு முண்டத்தை கையில் எடுத்துக்கொண்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன.

குற்றங்கள், பிடியாணை இன்றி கைது செய்யக்கூடிய குற்றங்கள் (Cognizable  Offences), பிடியாணையுடன்  மட்டுமே கைது செய்யக்கூடிய குற்றங்கள் (Non Cognizable Offence) என்று இரண்டாக சட்டத்தால் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. பிடியாணையின்றி கைது செய்யக்கூடிய குற்றங்களுக்கு மட்டுமே காவல்துறை அதிகாரிகள் குற்றம் பற்றிய தகவல் கிடைத்ததும் முதல் தகவல் அறிக்கையை(FIR) CrPC பிரிவு 154  ன்கீழ் பதிவு செய்யமுடியும்.

காவல் நிலையத்திற்கு, ஒரு குற்றச் சம்பவம் தொடர்பான தகவலானது எழுத்து மூலமாக நேரடியாக கொடுக்கப்படவேண்டும். வாய்மொழியாக புகார் கொடுத்தால் அதை காவல்துறை அதிகாரி எழுத்தால் எழுதி புகார்தாரருக்குப் படித்துக் காட்டி கையெழுத்துப் பெறவேண்டும்.

புகாரில் தேதி, சம்பவ நேரம், சம்பவ இடம், சம்பவம் எப்படி நடந்தோ... அதை அப்படியே குறிப்பிடவேண்டும்.  புகாரில் சொல்லப்பட்ட குற்றச் சம்பவம்  இந்திய சட்டங்களில் ஏதேனும் ஒன்றிலாவது  குற்றமாக  இருக்கவேண்டும். சில சமயங்களில் புகார் கொடுக்கும் பொழுது சட்டப்பிரிவுகள் பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக,  புகார் எழுதுபவர் அல்லது புகாரை எழுத உதவி செய்பவர் புகாரில் சங்கதிகளை கூட்டியோ குறைத்தோ எழுதுவார்கள். இது தவறா? சரியா? என்பதைப்பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

புகார் கொடுப்பவருக்கு உடனடியாக இலவசமாக முதல் தகவல் அறிக்கை நகல் கொடுக்கப்படவேண்டும்.

புலன் விசாரணை

முதல் தகவல் அறிக்கை என்பது ஒரு குற்றம் சம்பந்தமாக காவல்நிலையத்திற்கு வரும் முதல் தகவல் பற்றிய அறிக்கையாகும்

முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தபின்பு தான் புலன்விசாரணை தொடங்கவேண்டும்

புகாரை பதிவு செய்யும் காவல்அதிகாரியே புலன் விசாரணையையும் செய்யக்கூடாது என்பது பெரும்பாலும் கடைபிடிக்கப்படும் நடைமுறை. அவ்வாறு செய்தால் உண்மையை கண்டறிய முடியாமல் போய்விட வாய்ப்புள்ளது.

போதை தடுப்பு பிரிவு காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன்பே புலன்விசாரணை சில வழக்குகளில் தொடங்கிவிடுகிறார்கள் காரணம் காவல்நிலையத்திற்கு வந்து முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துவிட்டு புலன்விசாரணை செய்வது போதைபொருட்கள் கடத்தல் வழக்கு நடைமுறைகளில் சாத்தியம் இல்லை.

FIR யார் யாருக்கு அனுப்பப்படும்?

ஒரு குற்றவழக்கை தொடங்கி வைப்பதே இந்த முதல் தகவல் அறிக்கை தான் ஒரு குற்றத்திற்கு ஒருமுறை தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும். ஒரே நேரத்தில் அல்லது தொடர்ச்சியாக ஒரே நபர்களால் செய்யப்பட்ட ஒரே வகையான அல்லது பல்வேறு வகையான குற்றங்களை ஒருங்கிணைத்தும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம். குற்றத்தை செய்தவரே காவல் நிலையத்தில் நேரடியாக சென்றும் புகார் கொடுக்கலாம்.

FIR மொழி

முதல் தகவல் அறிக்கை அந்தந்த மாநில மொழியில் பதிவு செய்யப்படும்.

ஒரே குற்றத்திற்கு இரண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாது. மத்திய புலனாய்வு அமைப்பிற்கு  ஒரு வழக்கு, புலன்விசாரணைக்கு மாற்றப்படும் போது அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் அப்பொழுது அதற்கு வேறு ஒரு எண் கொடுக்கப்படும்.

முதல்‌ தகவல் அறிக்கைக்கு கொடுக்கப்படும் வரிசை எண்ணிற்கு
குற்ற எண் (crime nunber) என்று பெயர். முதல் தகவல் அறிக்கை அச்சிட்ட
படிவத்தில் இருக்கும்.

ஓடும் ரயிலில் குற்றம் நடந்தால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வசதியாக ரயிலிலேயே ரயில்வே அதிகாரியிடம் முதல் தகவல் அறிக்கையின் படிவம் இருக்கும்.

முதல் தகவல் அறிக்கையை மட்டுமே வைத்து ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கிட முடியாது. இந்திய சாட்சிய சட்டத்தின் படி முதல் தகவல் அறிக்கையை சாட்சியங்களை முரண்படுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

முதல் தகவல் அறிக்கை தவறாக, கவனக்குறைவாக சட்டத்திற்கு புறம்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புலன்விசாரணை அதிகாரிக்கு தெரியவந்தால் நீதிமன்றத்தில் CrPC 173 ன் படி இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்பொழுது முதல் தகவல் அறிக்கையை முடிவுக்கு கொண்டுவரலாம்.

முதல் தகவல் அறிக்கையை தகுந்த காரணமின்றி பதிவு செய்யாமல் மறுப்பு தெரிவிக்க காவல் அதிகாரிக்கு அதிகாரமில்லை. புகாரில் கையெழுத்திட மறுக்கவும் புகார்தாருக்கு உரிமையில்லை.

பொய்யாக முதல் தகவல் அறிக்கை வேண்டும் என்றே குற்றச்சம்பவம் எதுவும் நடக்காமல் சம்பவம் நடந்ததாக புனைந்து பதிவு செய்யப்பட்டால் அதற்கு காவல்துறை அதிகாரியும் உடந்தையாக இருந்தால் புகார்தாரர் மற்றும் காவல்துறை அதிகாரி மீது குற்றநடவடிக்கை தொடரமுடியும்.


குற்றமுறையீடு (Private complaint)    200 CrPC

காவல் நிலையத்தில் மட்டுமே ஒரு குற்ற வழக்கு சம்பந்தமாக புகார் கொடுக்க முடியும் என்பதல்ல, நீதிமன்றங்களிலும் புகார் கொடுக்கலாம்.

சில குற்றங்களை பொருத்து நீதிமன்றத்தில் மட்டுமே புகார் கொடுக்க முடியும் என்று சட்டம் தெளிவாக இருக்கும் போது  நீதிமன்றத்தில் மட்டுமே புகார் கொடுக்கமுடியும்.

உதாரணமாக காசோலை மோசடி வழக்கை மாற்று முறை ஆவணச் சட்டத்தின் படி  குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மட்டுமே தாக்கல் செய்யவேண்டும். காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடியாது.

அவதுறு செய்துவிட்டதாக குற்றவழக்கு நீதிமன்றத்தில் மட்டுமே தாக்கல் செய்யமுடியும்

நீதிமன்றங்களில் மட்டுமே தாக்கல் செய்யப்படும் புகார்களை காவல்நிலையங்களில் தாக்கல் செய்யமுடியாது. ஆனால் காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்களை காவல்துறையினர் ஏற்க மறுக்கும் பொழுது நீதிமன்றத்தில் புகார் கொடுக்க முடியும்.

குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 200  குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் கொடுப்பதை வரையறுக்கிறது.

நீதிமன்றத்தில் புகார் கொடுக்கும் போது நீதிமன்றம் அந்த புகாரை காவல்துறை விசாரணைக்கு உத்தரவிடுவது உகந்தது என கருதினால் குற்றம் நடந்தாக கருதப்படும் எல்லைக்குட்பட்ட காவல்நிலைய அதிகாரிக்கு புலன் விசாரணைக்கு உத்தரவிடலாம்.CrPC56(3)

காவல்துறை அதிகாரி நீதிமன்றத்தால் புலன்விசாரணைக்கு உத்தரவிடும் புகார்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவேண்டும்

நீதிமன்றத்தில் குற்றவழக்கு யார் வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம். வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கட்டாயம் இல்லை. புகார் கொடுப்பவர் நேரிடையாக நீதிமன்றத்தில் ஆஜராகலாம்.

நீதிமன்றத்தில் குற்றவழக்கு தாக்கல் செய்வது என்பது ஒரு திறமையான கலை. சட்டமும் சங்கதிகளும் சரியாக பொருந்தக்கூடியதாக புகார் தயாரிக்கப்பட வேண்டும். இதற்கு திறமையான வழக்கறிஞரின் உதவி கட்டாயம் தேவை.

ஒவ்வொரு வழக்கறிஞர் அலுவலகமும் ஒரு காவல் நிலையத்தை போல தான் ஒரு சட்ட அலுவலகம் ஆகும், ஆனால் முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

இந்தியாவில் நிறைய விதவிதமான குற்றங்கள் தினம்தோறும் நடந்துவருகிறது அனைத்து வகையான குற்றங்களுக்கும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு போதிய பயிற்சியும் சட்டறிவும் இல்லை என்றே சொல்லலாம்.

Lr. எம்.ரஹ்மத்துல்லா B.A.B.L.,
வழக்கறிஞர், மேட்டுப்பாளையம்

Tags : What is F I R? know how to register FIR? F I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன ?

More from the section

அரசுப் பணியாளர் தனிப்பட்ட வணிகம் அல்லது வேலை செய்யலாமா?
அமைச்சரவைச் செயலகம் என்றால் என்ன?
கணிணி கண்காணிப்பு தனிமனிதனை பாதிக்குமா?
“வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதா, 2016” இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
உளவுத் துறை பற்றி ஓர் அறிமுகம்...