புதன்கிழமை 20 மார்ச் 2019

ஓட்டை, உடைசல் சீர்படுத்தும் கடைகள் - 2

By வழக்கறிஞர் சி.பி. சரவணன்| DIN | Published: 05th February 2018 12:46 PM

 

ஓட்டை, உடைசல் சீர்ப்படுத்தும் கடைகள் தொடர்ச்சி...

பழையபொருள் வியாபாரிகளும், இரண்டாங்கை பொருள் கையாளுநர்களும், தானியங்கி மோட்டார்வாகன பட்டறைகளின் அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடைகளின் உடைமையாளர்களும் கணக்குகளை வைத்து வருதலும் கணக்குப் புத்தகங்களைப் பேணி வருதலும் வேண்டும் என்பது: - (பிரிவு 7)

(1)பழைய பொருள் வியாபாரி அல்லது இரண்டாங்கை பொருள் கையாளுநர் ஒவ்வொருவரும் மற்றும் தானியங்கி மோட்டார் வாகன பட்டறையொறின் அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடையொன்றின் உடைமையாளர் ஒவ்வொருவரும், வகுத்துரைக்கப்படக்கூடிய முறையில், வகுத்துரைக்கப்படக்கூடிய கணக்குகளை வைத்து வருவதற்கும், கணக்குப் புத்தகங்களைப் பாதுகாத்து வருவதற்கும் கடமைப்பட்டவராதல் வேண்டும். அவர் அத்தகைய கணக்குகளையும் புத்தகங்களையும் சரியாகவும் நாளது தேதி வரையிலும் பேணி வருவதற்குப் பொறுப்புடையவராக இருத்தல் வேண்டும். அந்தக் கணக்குகளிலும், புத்தகங்களிலும் பின்வரும் விவரங்கள் அடங்கியிருக்க வேண்டும். அதாவது, 

(a) அந்த வியாபாரம் தொடர்பான சரக்குகள் எவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டனவோ அவர்களுடைய பெயர்களும் முகவரிகளும்; 

(b) அவ்வாறு கொள்முதல்கள் செய்யப்பட்ட தேதிகளும் அத்தகைய கொள்முதல்களுக்காகச் செலுத்தப்பட்ட தொகைகளும்;

(c) வகுத்துரைக்கப்படக்கூடிய பிற விசயங்களும்.

(2)பதிவுக் கட்டுகள் அனைத்தும் அல்லது (1)-ஆம் உட்பிரிவில் கட்டப்பட்டுள்ள கணக்குகளிலும் புத்தகங்களிலும் செய்யப்பட்டுள்ள பதிவுகள் அனைத்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ அல்லது வகுத்துரைக்கப்படக் கூடிய வட்டார மொழியிலோ இருத்தல் வேண்டும்; மற்றும் அத்தகைய கணக்குகள், மற்றும் புத்தகங்கள் அனைத்தும் உரிமை வழங்குகின்ற அதிகார அமைப்பினாலோ, அதிகார வரம்பு பெற்றிருக்கின்ற காவல் அலுவலராலோ எந்த நேரத்திலும் ஆய்வு செய்யப்படுவதற்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். 

பழைய பொருள் வியாபாரி அல்லது இரண்டாங்கை பொருள் கையாளுநர் மற்றும் தானியங்கி மோட்டார்வாகன பட்டறையின் அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடையின் உரிமையாளர் வேலைக்கு அமர்த்தியுள்ள வேலையாட்கள் பற்றிய பதிவோடு ஒன்றினை வைத்துவருதலும் வேண்டும் என்பது:- (பிரிவு 8.)

பழைய பொருள் வியாபாரி அல்லது இரண்டாங்கை பொருள் கையாளுநர் ஒவ்வொருவரும் மற்றும் தானியங்கி மோட்டார்வாகன பட்டறையொன்றின் அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடையொன்றின் உடைமையாளர் ஒவ்வொருவரும் 7–ஆம் பிரிவில் கட்டப்பட்டுள்ள கணக்குகள், புத்தகங்கள் ஆகியவற்றோடு கூட, தாம் வேலையிலமர்த்தியுள்ள வேலையாட்கள் பற்றிய நாளது வரையிலான பதிவோடு ஒன்றை வைத்துப் பேணி வருதலும் வேண்டும். அத்தகைய பதிவேட்டில் பின்வரும் விவரங்கள் அடங்கியிருத்தல் வேண்டும். அதாவது: -

(1) வேலையாட்களின் பெயர்களும் முகவரிகளும்;
(2) கடவுச் சீட்டு (Passport)  அளவினையுடைய அவ்வேலையாட்களின் புகைப்படங்கள் (Photographs) அவர்களுக்கு எதிராக ஒட்டப்படுதல் வேண்டும்;
(3) அவ்வேலையாட்களின் குணம் மற்றும் நன்னடத்தைப் பட்டியல்;
(4) வகுத்துரைக்கப்படக்கூடிய பிற விசயங்கள்.

உரிமை ரத்து செய்வதற்கன அதிகாரம்.– (பிரிவு 9.)

(1) உரிமம் வழங்குகின்ற அதிகார அமைப்பு, உரிமம் எதனின் கால அளவின் போது எந்த நேரத்திலும் எழுத்துருவிலான ஆணையொன்றின் மூலமாக, 

(a) உரிமம் பெறுநர் இந்தச் சட்டத்தின் அல்லது அதன் கீழ் செய்யப்படுள்ள விதிகளின் வகைமுறைகளில் எதையும் அல்லது உரிம வரையறைகளில் எதையும் மீறி வியாபாரத்தைச் செய்து வருவாரானல், அல்லது,

(b) எந்தக் காரணத்திற்காக அத்தகைய அதிகார அமைப்பு 4–ஆம் பிரிவின் 2-ஆம் உட்பிரிவின் கீழ் உரிமம் வழங்குவதற்கு மறுத்திருக்கக் கூடுமோ அத்தகைய காரணம் ஏதேனும் இருப்பதாக அந்தக் உரிமம் வழங்கப்பட்ட பின்னர், அந்த அதிகார அமைப்பின் கவனத்திற்குக் கொண்டு வரப்படுமானால், அல்லது,

(c) உரிமம் பெறுநர் இந்தச் சட்டத்திற்கெதிரான குற்றம் எதற்காகவேணும் அல்லது பிடியாணையின்றி கைது செய்வதற்குரியதும் பிணையில் (ஜாமீனில்) விடுவதற்குரியதல்லாததுமான குற்றம் எதற்காகவேணும் தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பாரானால் அல்லது

(d) உரிமைப் பெறுநர் பொய்யான கணக்குகளை வைத்து வருவாரானால், அந்த உரிமத்தை ரத்து செய்யலாம். 

(2) (1)-ஆம் உட்பிரிவின்கீழ் உரிமமொன்றை ரத்து செய்வதற்கு முன்னர், உரிமம் வழங்குகின்ற அதிகார அமைப்பு எந்த ஆதாரங்களின் பேரில் நடவடிக்கை எடுக்கக் கருதப்பட்டுள்ளதோ அந்த ஆதாரங்களைக் குறிப்பிட்டும், அறிவிப்பில் குறித்துரைக்கப்படக்கூடிய காலத்திற்குள் அதற்கெதிராக் காரணம் காட்டவேண்டுமென்று உரிமம் பெறுநரைக் கோரியும் எழுத்துருவிலான அறிவிப்பொன்று அவருக்குக் கொடுத்தல் வேண்டும். 

(3) (1)-ஆம் உட்பிரிவின் கீழ் உரிமமொன்றை ரத்து செய்கின்ற உரிமம் வழங்கு அதிகார அமைப்பின் ஆணையொன்றின் மூலம் குறையுற்றுள்ள எவரும், வகுத்துரைக்கப்படக்கூடிய முறையிலும் இதன் பொருட்டு அரசு குறிப்பிடக்கூடிய அதிகார அமைப்பிடம் மேல்முறையீடு செய்துகொள்ளலாம், மற்றும் அத்தகைய அதிகார அமைப்பும் இந்த நேர்வில், தான் பொருத்தமென நினைக்கக் கூடிய ஆணையைப் பிறப்பிக்கலாம். 

பழையபொருள் வியாபாரிகள், இரண்டங்கை பொருள் கையாளுநர்கள், தானியங்கி மோட்டார்வாகன பட்டறைகளின் அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடைகளின் உடைமையாளர்களின் மற்றும் அத்தகைய வியாபாரி, வணிகம் செய்பவர் அல்லது உடைமையாளருக்கு விற்க முனைகின்றவர்கள் ஆகியோரின் ஒருசில செயல்கள் தண்டிக்கத்தக்கனவாகும் என்பது:- (பிரிவு 10.)

(1) (a) பொருள் எதையும் எந்த வழிவகைகள் மூலம் தம் கைவசம் பெற்றவரானார் என்பதற்கான நிறைவுரத்தக்க காரணமொன்றை அளிக்க முடியாமல் அல்லது அளிக்க மறுத்து, அந்தப் பொருளை விற்பனையின் மூலமாகவோ மற்றப்படியாகவோ பழைய பொருள் வியாபாரி ஒருவருக்கு அல்லது இரண்டாங்கை பொருள் கையாளுநர்கள் அல்லது தானியங்கி மோட்டார் வாகன பட்டறையொன்றில் அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடையொன்றின் உடைமையாளர் ஒருவருக்கு அளிக்க முனைகின்ற அல்லது,
   (b). விற்பனையின் மூலமாகவோ மற்றபடியாகவோ தாம் அளிக்க முனைந்த பொருள் ஒன்று தம்முடைய சொந்த சொத்தா அல்லது, இல்லையா என்பது குறித்து அல்லது தம்முடைய பெயர் மற்றும் முகவரி குறித்து அல்லது அந்த பொருளின் உடைமையாளரின் பெயர் மற்றும் முகவரி குறித்து அத்தகைய வியாபாரிக்கு வணிகருக்கு அல்லது உடைமையாளருக்கு பொய்யான தகவலை வேண்டுமென்றே அளிக்கிற,
    எவரொருவரும் ஆறு மாதங்கள் வரையிலான கால அளவுச் சிறைத் தண்டனையோ, 1000 ரூபாய்கள் வரையிலான அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

(2) (1)-ஆம் உட்பிரிவின் கீழ் வருகின்ற நேர்விலும் அத்தகைய வியாபாரிக்கோ, வணிகருக்கோ, உடைமையாளருக்கோ, விற்பனை வாயிலாகவோ மற்றபடியாகவோ பொருள் ஒன்று அளிக்க முனையப்பட்டு அது திருடப்பட்டிருப்பதாகவோ மற்றபடி சட்டத்திற்குப் புறம்பாக அல்லது திருட்டுத்தனமாகப் பெறப்பட்டிருப்பதாகவோ, நியாயமாகத் தாம் ஐயம் கொள்கிற நேர்வு எதிலும் கூட அத்தகைய வியாபாரியோ, வணிகரோ உடைமையாளரோ, நியாயமான காரணம் இல்லாத நிலையில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர் மற்றும் முகவரி குறித்து விசாரணை செய்தல் வேண்டும் என்பதோடு, உடனடியாக அது பற்றிய உண்மை விவரங்களை மிக்க அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தெரிவித்தலும் வேண்டும். 

(3) திருடப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்ற பொருட்களைப் பற்றிய பட்டியல் ஒன்று இந்தச் சட்டத்தின் கீழ் உரிமம் அளிக்கப்படுள்ள அத்தகைய வியாபாரி, வணிகர் அல்லது உடைமையாளார் எவருக்கும் காவல் துறையினரால் கொடுக்கப்படலாம்; மற்றும் அதன்பேரில் 

(a) அத்தகைய பட்டியல் எதிலும் விவரிக்கப்பட்டுள்ள பொருட்களின் ஏதொன்றின் விவரணத்திற்கும் ஒப்ப அமைந்துள்ள பொருள் ஏதேனும் விற்பனையின் மூலமாகவாயினும் மற்றபடியாயினும் நபர் எவராலேனும் தமக்கு அளிக்கப்பட முனைந்தால், (2)-ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்கிணங்க நடவடிக்கை எடுப்பதும் மற்றும்;

(b) அத்தகைய பொருள் ஏதேனும் ஏற்கனவே தம்முடைய வசத்தில் இருக்குமானால்(அவ்வியாபாரியிடமோ, வணிகரிடமோ, உடைமையாளரிடமோ அந்தப் பொருள் ஒப்படைக்கப்படுவதில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர் மற்றும் முகவரி குறித்த முழு விவரங்கள் உள்ளடங்கலாக) அது பற்றிய உண்மை விவரங்களை மிக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு உடனடியாகத் தெரிவிப்பது மற்றும் காவல் துறையினரிடம் அந்தப் பொருள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அவர்களால் கோரப்படுமானால் அவ்வாறே ஒப்படைப்பதும், அத்தகைய வியாபாரி, வணிகர் அல்லது உடைமையாளரின் கடமையாக இருத்தல் வேண்டும். 

(4) திருடப்பட்ட சொத்து என்று அறிந்து அல்லது அவ்வாறு நம்பக் காரணம் பெற்றிருந்து பொருள் எவையேனும் விலைக்கு வாங்குகின்ற பழைய பொருள் வியாபாரிம் இரண்டாங்கை பொருள் கையாளுநர் அல்லது தானியங்கி மோட்டார் வாகன பட்டறையொன்றின் அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் உடைமையாளர் ஒவ்வொருவரும், மூன்றாண்டுகள் வரையிலான கால அளவுக்கு சிறைதண்டனை வகைகளில் ஏதொன்றும் மற்றும் அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படல் வேண்டும்.

உரிமம் இல்லாமல் வியாபாரத்தைச் செய்து வருவதற்கான தண்டனை:-
(பிரிவு 11.)

பழைய பொருள் வியாபாரத்தை அல்லது இரண்டாங்கை பொருள் கையாளுதலை அல்லது தானியங்கி மோட்டார்வாகன பட்டறையொன்றை அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடையொன்றை நடத்தி வருகின்ற வியாபாரத்தை உரிமம் ஒன்று இல்லாமலோ அல்லது உரிமம் ஒன்றின் வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்கியவாறல்லாமல், மற்றபடியாகவோ செய்து வருகின்ற எவரொருவரும் ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனையோ ஐயாயிரம் ரூபாய் வரையிலான அபராதமோ விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும். 

நிறுவனங்களால் செய்யப்படும் குற்றங்கள்:- (பிரிவு 12) 

(1) சட்டத்தின் கீழ் குற்றமொன்று ஒரு நிறுவனத்தால் செய்யப்பட்டிருக்கின்ற விடத்து அக்குற்றம் செய்யப்பட்ட நேரத்தில் அந்த நிறுவனத்தின் அலுவலை நடத்திவருவதைப் பொறுப்பில் கொண்டிருந்த மற்றும் அந்த நிறுவனமும் கூட அந்தக் குற்றத்திற்குச் குற்றவாளியாக இருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் என்பதோடு, அதன்படியே மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப் படுவதற்கும் உள்ளாதலும் வேண்டும். ஆனால் அந்தக் குற்றமானது தாம் அறியாமலேயே செய்யப்பட்டது என்றோ அத்தகைய குற்றம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கான உரிய முயற்சி அனைத்தையும் தாம் மேற்கொண்டதாகவோ அவர் மெய்ப்பிப்பாரானால் இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும் அத்தகையவர் எவரையும் தண்டனைக்கு உள்ளாக்குதல் ஆகாது. 

(2) (1)-ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்த போதிலும் இந்த சட்டத்தின் கீழ் குற்றம் ஏதேனும் ஒரு நிறுவனத்தால் செய்யப்பட்டிருந்து அக்குற்றமானது அந்த நிறுவனத்தின் இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் எவரின் இசைவுடன் அல்லது மறைமுக ஆதரவுடன் செய்யப்பட்டுள்ளது என்றோ அவர்கள் பாலான கவனமின்மை எதற்கும் காரணமாக சாட்டத்தக்தாய் இருக்கின்றது என்றோ மெய்ப்பிக்கின்றவிடத்து, அந்தக் குற்றத்தைச் செய்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் என்பதோடு, அதன்படியே எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுதல் வேண்டும். 
விளக்கம்: இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக:-

(a) “நிறுவனம்” என்பது கூட்டு நிறுவனம் எதுவும் என்று பொருள்படுவதோடு, நிறுவனம் ஒன்றையோ தனிநபர்களின் பிற கழகத்தையோ உள்ளடக்கும்; மற்றும்

(b) நிறுவனம் ஒன்று தொடர்பாக “இயக்குநர்” என்பது அந்த நிறுவனத்திலுள்ள ஒரு கூட்டாளி என்று பொருள்படும். 

தண்டனைகள் (பிரிவு 13.)

இந்தச் சட்டத்தின் வகைமுறைகளில் எதையும் அல்லது அதனின் கீழ் செய்யப்படும் விதி எதையும் அல்லது வழங்கப்பட்டுள்ள உரிமம் அல்லது அனுமதி ஒன்றின் வரையறைகள் மற்றும் நிபந்தனைகளில் எதையும் மீறுகின்ற எவரும் அத்தகைய மீறுகைக்காக இந்தச் சட்டத்தின் பிற தண்டனை எதற்கும் பிறிதெங்கேனும் வகை செய்யப்படவில்லையானால், ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனையோ, ஐயாயிரம் ரூபாய் வரையிலான அபராதமோ விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்பதோடு அத்தகைய நபர் இந்தப் பிரிவின் கீழாயினும் அல்லது இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள பிற வகைமுறை எதனின் கீழாயினும் முன்னர் தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பாரானால், இரண்டாண்டு வரையிலான சிறைத்தண்டனையோ பத்தாயிரம் ரூபாய் வரையிலான அபராதமோ விதித்துத் தண்டிக்கப்பட வேண்டும். 

குற்றங்களை விசாரணை செய்வதற்கான அதிகாரம் : -  (பிரிவு 14.)

(1) பெருநகரக் குற்றவியல் நடுவரொருவரின் அல்லது முதல் வகுப்பு நீதிமன்றத்திற்குக் கீழல்லாத நீதிமன்றம் எதுவும், இந்தச் சட்டத்தின்கீழ் தண்டிக்கத்தக்க குற்றம் எதையும் விசாரணை செய்தல் ஆகாது. 

(2) 1973-ஆம் ஆண்டு குற்ற விசாரணை முறை தொகுப்புச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 2/1974) 29-ஆம் பிரிவில் என்ன அடங்கியிருந்த போதிலும் (1)-ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றவியல் நடுவர்கள், பத்தாயிரம் ரூபாய்க்கு மேற்படாத பண அபராத தண்டனையொன்றை வழங்குவது சட்டப்பூர்வமானதாக இருத்தல் வேண்டும். 

(3) நீதிமன்றம் எதுவும் 10-ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கத்தக்க குற்றமொன்றில்லாத, இந்தச் சட்டத்தில் கீழ் தண்டிக்கத்தக்க ஏனைய குற்றமொன்றை, வகுத்துரைக்கப்பட்ட அதிகார அமைப்பு எதனாலேனும் செய்து கொள்ளப்படும் எழுத்துருவிலான முறையீடொன்றின் பேரில்லாமல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுதல் ஆகாது. 

குற்றங்களை விசாரணக்கு எடுத்துக்கொள்ளுதல்: -( பிரிவு 15.)

1973-ஆம் ஆண்டு குற்ற விசாரணை முறைத் தொகுப்புச் சட்டத்தில் (மத்தியச் சட்டம் 2/1974) என்ன அடங்கியிருந்தபோதிலும், 10-ஆம் பிரிவின்கீழ் தண்டிக்கத்தக்க குற்றமேதும், அந்த தொகுப்புச் சட்டத்தின் பொருளின்படி, விசாரணக்கு எடுத்துக்கொள்ளத்தக்க குற்றமொன்றாக இருத்தல் வேண்டும். 
ஆனால் அந்தத் தொகுப்புச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்த போதிலும், உதவி ஆய்வாளரின் படிநிலைக்குக் கீழல்லாத காவல்துறை அலுவலரொருவரும் 10-ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கத்தக்க குற்றமெதையும் புலனாய்வு செய்தலோ அல்லது கைது செய்தலோ ஆகாது. 

விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்: - (பிரிவு 16.)

(1) அரசு, இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதையும் நிறைவேற்றுவதற்காக விதிகளைச் செய்யலாம்.
(2) (a) இந்த சட்டத்தின் கீழ் செய்யப்படும் அனைத்து விதிகளும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் என்பதோடு, குறிப்பிட்டதொரு நாளில் அவை நடைமுறைக்கு வருதல் வேண்டும் என் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்படும் நாளிலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும்,

(b) இந்த சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்படும் அனைத்து அறிவிக்கைகளும் குறிப்பிட்டதொரு நாளில் அவை நடைமுறைக்கு வருதல் வேண்டும், எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி அவை வெளியிடப்படும் நாளிலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும். 

(3) இந்தச் சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும், அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில், சட்டமன்றத்தின் இரண்டு அவைகளின் முன்பும் வைக்கப்படுதல் வேண்டும் என்பதோடு, அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடரோ அல்லது அதற்கடுத்த கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு முன்னர் இரண்டு அவைகளும் அத்தகைய விதி அல்லது அறிவிக்கை எதிலும் மாற்றம் எதையும் செய்வதில் ஏதும் உடன்படுமானால் அல்லது அறிவிக்கை எதிலும் மாற்றம் எதையும் செய்வதில் உடன்படுமானால் அல்லது அந்த விதியோ அறிடிக்கையோ அதன்பின்னர் அத்தகைய மாற்றியமைக்கப்பட்ட படிவத்தில் மட்டுமே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப நடைமுறைக்கு வராது போதல்வேண்டும்; எனினும், அத்தகைய மாறுதல் அல்லது ரத்து(Annulment) எதுவும் அந்த விதியின்படியோ அல்லது அறிவிக்கையின்படியோ முன்னதாகச் செய்யப்பட்ட எதனின் செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல் வேண்டும்.
காப்பு- (பிரிவு 17)

இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் அப்போதைக்கு நடைமுறையுள்ள பிற சட்டம் எதற்கும் கூடுதலாக ஆனால் அதைக் குன்றச் செய்யாவண்ணம் இருத்தல் வேண்டும் என்பதோடு, இதில் அடங்கியுள்ள எதுவும் இந்தச் சட்டத்தின் கீழ் நபர் எவருக்கும் எதிராக தொடுக்கப்பட்டிருக்கக் கூடிய நடவடிக்கையோடு கூட புலனாய்வு வாயிலாகவோ மற்றபடியோ எடுக்கப்படும் நடவடிக்கை எதிலிருந்தும் அவருக்கு விலக்களித்தலாகாது. 


 

Tags : சட்டமணி ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடைகள் - 2 sattamani Regulation Control and Licensing Act 1985

More from the section

தேர்தல் ஸ்பெஷல்-5 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைப்புத் தொகைகள் எவ்வளவு?
தேர்தல் ஸ்பெஷல்- 4 வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள், அவசியம் கவனிக்க வேண்டிய விதிகள்....
தேர்தல் ஸ்பெஷல் - 3 புதிய அரசியல் கட்சி தொடங்குவது எப்படி?
தேர்தல் ஸ்பெஷல் -2 பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?
தேர்தல் ஸ்பெஷல்-1 பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் என்னென்ன?