புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

பரோல் (Parole) என்றால் என்ன?அது யாருக்கெல்லாம்? எப்போதெல்லாம் வழங்கப் படுகிறது?!

By வழக்கறிஞர் சி.பி.சரவணன்| DIN | Published: 16th July 2018 11:26 AM

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மேலும் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு, 2017 ஆகஸ்ட்டில் ஒரு மாதத்திற்கு பரோல் வழங்கப்பட்டு, ஜோலர்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தனது குடும்பத்துடன் இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது என்பன போன்ற செய்திகளை எல்லாம் ஊடகங்கள் வாயிலாக நாமறிவோம்.

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான நடராஜன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி  இறந்த கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வந்தார் என்பதையும் நாம் அறிவோம். மேற்கண்ட விஷயங்களில் குறிப்பிடப்படும் பயன்படுத்தப் படுகிறதே, பரோல் என்றொரு வார்த்தை... அதன் அர்த்தம் என்ன? சசிகலா பரோலில் எப்படி வந்தார். பரோல் என்றால் என்ன? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

பரோல் என்ற சொல் குற்ற விசாரணை முறைச் சட்டத்தில் காணப்படவில்லை. ஆனால், இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 130-இன் விளக்கத்தில் காணப்படுகிறது

வரையறை:

சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவரை இடையில் நிபந்தனையின் பேரில் தற்காலிகமாக விடுவித்தல் ‘பரோல்’ எனப்படும். அந்த விடுவிப்பை... அதற்குரிய ஆணைய அதிகாரி எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்.

பரோலில் எப்போது விடுவிக்கலாம்?

 

உச்சநீதிமன்றம் Smt.Poonam lata Vs Wadhawan and other (AIR 1987 SC 1383) என்ற வழக்கில் “பரோல்’ பற்றி விளக்கமளிக்கிறது;

பரோலில் கைதி ஒருவரை விடுதலை செய்வதென்பது நிர்வாகத் துறை சார்ந்ததாகும். அது பற்றிய விவரம் நீதிமன்றத்திற்கு தெரியாததாகவே இருந்தது. அண்மைக் காலங்களாக சில உயர்நீதிமன்றங்கள் மனிதாபிமானத்தைக் கவனத்தில் கொண்டு கைதிகளை பரோலில் விடுவித்து வருகின்றன.

வரலாற்று அடிப்படையில், பரோல் என்பது இராணுவச் சட்டத்திற்கு உரியதாகும். இராணுவத்தில் போர்க்கைதி (War Prisoner) திரும்ப வருவதற்கு உறுதியளித்ததன் பேரில் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

‘பரோல்’ என்பது இங்கிலாந்து மற்றும் அமெரிக்க குற்றவியல் நீதிமுறையில் உள்ள ஒரு சொல்வழக்காகும், குற்றம் மற்றும் குற்றவாளிகளின் மீதுள்ள சமூகத்தின் மனநிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக பரோல் முறை அந்த நாடுகளில் கொண்டுவரப்பட்டது.

பரோலில் விடுதலை செய்வது அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், 18 மாதங்களுக்கு மேல் தண்டனை அடைந்தவர்கர்கள் உரிமத்திற்குட்பட்டு விடுவிக்கப்படுவார்கள்.

அதாவது தண்டனையை அனுபவிக்கும் மூன்றாவது பருவத்திற்குப் பின்னர் பரோலில் விடுவிக்கப்படுவார்கள்.

அந்த நாடுகளில் பரோல் என்பது கருணையின் அடிப்படையில் வழங்கப்படுவதாகும். அதனை உரிமையாகக் கொண்டாட முடியாது.
தண்டனைக் கைதி பரோலில் விடுவிக்கப்படும் போது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு விடுவிக்கப்படலாம். அவர் அந்த நிபந்தனைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளுதல் வேண்டும்.

தண்டனைக் கைதி பரோலில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், அதை ஒரு பகுதி சிறை வைப்பாகவே மேற்கொள்ளுதல் வேண்டும்.

பரோலில் விடுதலை செய்வதென்பது சீர்திருத்தத்திற்கான நடைமுறையாகும். கைதி தன்னை திருத்திக் கொண்டு பயனுள்ள குடிமகனாக ஆவதற்குப் பரோல் மூலம் கைதிக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

பரோல், கைதிக்கு பகுதியளவு சுதந்திரத்தை அளிக்கிறது அல்லது கைதிக்கு வரையரைகளைக் கற்பிக்கிறது. ஆனால், அவர் பரோலில்  விடுவிக்கப்படுவதால், கைதி என்ற தகுதியினின்று மாறுபடமாட்டார்.
பரோலில் விடுவிக்கப்பட்ட கைதிகளைப் பரோல் வழங்கும் அதிகாரி கண்காணிப்பதற்கு விதிகள் இயற்றப்பட்டுள்ளன. பரோலில் விடுதலையான கைதி ஒருவர் பரோல் வழங்கும் அதிகாரியிடம் உறுதியளித்திட்டபடி நடந்து கொள்ளாத போது, அந்த அதிகாரி, அந்தக் கைதியை சரணடையும்படி கட்டளையிடலாம்.

பரோல் என்பது நீண்டகால தண்டனையைப் பெற்ற கைதி ஒரு பகுதியளவு தண்டனையை அனுபவித்திருக்கும் போது மட்டுமே வழங்கப்படுகிறது.
மேலும், உயர்நீதிமன்றங்களோ, உசநீதிமன்றமோ காவலில் வைக்கப்பட்டவரை (Detenu) பரோலில் விடுவிக்கக் கூடாது. 

பிரத்யேகமான சூழ்நிலைகளில் கைதியை உயர்நீதிமன்றம் குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 482-இன் படி விடுதலை செய்யலாம். (Prisoner can be released on Parole by the High Court U/s 482 in Extra ordinary circumstances)
Masilamani Vs State of Tamilnadu (1987 LW(Cri) -1987 1 crimes (601) mad-என்ற வழக்கில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302, உடன் பிரிவு 34-குற்றத்தின் கீழ் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கைதியை, மரணப்படுக்கையில் இருந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த தாயாரைப் பார்ப்பதற்கு மனிதாபிமான அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் இரு வாரங்கள் பரோலில் விடுவிக்க உத்தரவிட்டது. பரோல் காலம் முடிவடைந்த பின்னர்  

அவர் சிறைக்குத் திரும்ப வேண்டும் என்றுமந்த நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது.

இயல்பாகவே, பரோலில் செல்கின்ற கைதி சிறை அதிகாரியை அணுக வேண்டும். அதன் பிறகு அரசாங்கம் பரோல் வழங்குவதற்கான  Tamilnadu Suspension of the Sentence Rules-இன் படி தண்டனையை நிறுத்தி வைத்துக் கைதியை பரோலில் விடுவித்தல் வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. கைதி பரோலில் செல்வதற்கான காலம் இன்னும் கனியவில்லை. இது நிலைநிற்கத் தக்கதல்ல என்று உரைத்தது. அதனால் கைதி குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 482-இன் படி மனு தாக்கல் செய்தார். அரசின் ஆட்சேபணையை புறக்கணித்து கைதியை பரோலில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது

Tags : sattamani what is parole? சட்டமணி பரோல் என்றால் என்ன?

More from the section

தேர்தல் ஸ்பெஷல் - 3 புதிய அரசியல் கட்சி தொடங்குவது எப்படி?
தேர்தல் ஸ்பெஷல் -2 பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?
தேர்தல் ஸ்பெஷல்-1 பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் என்னென்ன?
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - விளையாட்டு வீரர்களுக்கு செய்யும் உதவிகள் என்னென்ன?
நோட்டா (NOTA) - 49-O வாக்கு என்றால் என்ன?