புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

ஜாமீன் (Bail)   முன் ஜாமீன் (Anticipatory Bail)

By வழக்கறிஞர் சி.பி.சரவணன்| DIN | Published: 23rd July 2018 12:26 PM

 

பிணை ஆணை அல்லது பிணைய ஆணை(bail) ஓர் நீதிமன்றத்தில் சொத்து அல்லது வைப்புத்தொகையை பிணையாக வைத்து குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை சிறையிலிருந்து வெளிக்கொணர வகை செய்யும் நீதிமன்ற ஆணையாகும். குற்றஞ் சாட்டப்பட்டவர் நீதிமன்ற விசாரணைக்கு திரும்ப வருவார் என்றும் அவ்வாறில்லையெனில் அவரால் வைக்கப்படும் பிணையை இழப்பார். மேலும் பிணை மீறியவர்கள் என்ற குற்றமும் சேரும் என்பதும் கொண்ட புரிதலின் பேரிலேயே இவ்வாணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு பிணை ஆணை பிறப்பிக்கப்படும் முன்னர் பிணையில் வெளியே வந்தால் அவரால் புலானாய்விற்கு எந்த பாதிப்பும் உண்டாகாது என்ற கருத்தும் ஆராயப்படும். குற்றஞ்சாட்டப்பட்டவர் திரும்பி வருவார் என்பதில் ஐயங்கள் இருப்பினும் பிணை மறுக்கப்படலாம்.

பொதுவாக குற்ற விசாரணை முடிந்த பின்னர், அனைத்து நீதிமன்ற வருகைகளும் முடிந்தபின்னர், குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டால் பிணை விடுவிக்கப்படும். சில வழக்குகளில் பிணைப்பணம் திரும்பக் கிடைக்காது.

ஜாமீன் கொடுக்கக்கூடியவை (Bailable), ஜாமீன் கொடுக்க இயலாதவை (Non  bailable) 

குற்றங்கள் பொதுவாக ஜாமீன் கொடுக்கக்கூடியவை (Bailable), ஜாமீன் கொடுக்க இயலாதவை (Non  bailable)  என்றே பிரித்துப் பார்க்கப்படுகிறது. 

நம் நாட்டின் பல சட்டங்கள் ஆங்கிலேயரால் இயற்றப்பட்டு சில சட்ட திருத்தங்களுடன் நடைமுறையில் உள்ளவையே. இந்திய தண்டனை சட்டத்துக்கும் இது பொருந்தும். சமுதாயத்துக்கு எதிரான குற்றங்களையும் அதற்கான தண்டனைகளையும் குறிப்பிடும் சட்டமே இந்திய தண்டனை சட்டம். இதில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் முதல் ஷெட்யூலின் கீழ், ஜாமீன் கொடுக்கக்கூடிய அல்லது ஜாமீன் கொடுக்க இயலாத குற்றங்களாக வகையறுக்கப்பட்டுள்ளன.  குற்றம் இழைத்தவனுக்கு, அது சட்டத்தின் முன் சாட்சியத்தின் அடிப்படையில் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தண்டனை என்பது நிச்சயமாக உண்டு. எந்தவொரு சமுதாயத்திலும் குற்றங்களை தடுப்பதிலும் அதனை குறைப்பதிலும் பெரும்பங்கு வகிப்பது காவல் துறையே. 

குற்றம் நடைபெற்றவுடன் அந்த இடத்தில் காவல் துறையினரின் சேவை அவசியம் தேவை. குற்றவாளியை யாரென கண்டுபிடித்து, தேவையிருப்பின் அவர்களை கைது செய்வது, குற்றம் பற்றிய விசாரணை மேற்கொண்டு துப்பு துலக்குவது. சட்டத்தின் முன் குற்றவாளியான ஒரு நபருக்கு, ஜாமீன் வழங்கக்கூடிய அதிகாரம், அதிலும் குறிப்பிட்ட சில குற்றங்களுக்கு மட்டுமே ஜாமீன் கொடுப்பதற்கு காவல் துறைக்கு அதிகாரம் உள்ளது.  ஜாமீன் கொடுக்கும் அதிகாரம் ஒரு குற்றவி யல் நடுவர் நீதிபதிக்கு இணையானது.   சட்டத்தின் முன் ஜாமீன் கொடுக்கக்கூடிய குற்றம், ஜாமீன் கொடுக்க இயலாத குற்றம் - இவை இரண்டுக்கும் ஜாமீன் வழங்கும் அதிகாரம் இருப்பினும், ஜாமீன் வழங்கக்கூடிய வழக்குகளுக்கு மட்டுமே காவல் துறையினர் ஜாமீன் வழங்கி வருகிறார்கள்.

பெயிலில் விட மறுக்க காவல்துறை பொதுவாக கூறும் காரணங்கள்...

1) குற்றவாளி விசாரணையின் போது ஆஜராக மாட்டார்.

2) சாட்சிகள் அல்லது முக்கிய சாட்சியங்களில் அவர் குறுக்கிடுவார்.

3) பெயிலில் வந்த பிறகு அவர் மேலும் குற்றம் புரிவார்.

4) காவல் துறையின் விசாரணை இன்னும் முடியவில்லை

5) திருட்டு போன பொருட்கள் இன்னும் கைப்பற்ற படவில்லை.

6) குற்றம் புரிய பயன்படுத்திய ஆவணங்கள் இன்னும் கைப்பற்ற படவில்லை.

7) சக குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் போலீசார் கூறும் இத்தகைய கூற்றுகளை மறுக்க வேண்டும். அவற்றை மறுக்காவிடில் பெயில் கிடைப்பது கடினம். பெயிலில் வர மனு அளிக்கும் குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு பெயில் அப்ளிகேஷன் போட ஒரு வழக்கறிஞரை நியமிப்பது நல்லது.

பெயில் மனுவில் பொதுவாய் சொல்லப்படுகின்ற காரணங்கள்...

1) பெயிலில் செல்லாவிடில் தனது வேலையை இழக்க நேரிடும்.

2) தான் மட்டுமே குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் என்பதால், தனது குடும்பம் பாதிக்கப்படுகிறது.

3) காவலில் இருப்பவருக்கு உடல்நலமில்லை, சிகிச்சை எடுப்பது வெளியில் தான் சாத்தியம்.


ஜாமீன் வழக்கும் சூழ்நிலைகள்...

ஜாமீன் கொடுப்பது என்பது சட்டத்தின் வழிமுறை. ஜாமீனை மறுப்பது என்பது ஒரு விதிவிலக்கே. அவ்வாறு ஜாமீன் கொடுப்பதற்கு காவல் துறையோ, நீதிமன்றமோ மறுக்கும் பட்சத்தில் அவ்வாறு மறுப்பதற்கான காரணத்தை பதிவு செய்ய வேண்டும். பொதுவாக, ஒரு வழக்கின் தன்மை, அதன் வீரியம், குற்றம் சாட்டப்பட்டவரின் எதிராக இருக்கும் சாட்சியம், குற்றவாளி சாட்சியத்தை அழிக்கக்கூடிய அல்லது கலைக்கக்கூடிய வாய்ப்பு, குற்றவாளியால் சமுதாய அமைப்புக்கு பங்கம் ஏற்படக்கூடிய ஒரு நிலை, குற்றவாளியின் சுதந்திரம், மேலும் குற்றம் புரிய வாய்ப்பாக அமைதல், இவற்றையெல்லாம் மனதில் இருத்தியே ஜாமீன் வழங்கப்படுகிறது. 

ஜாமீன் மறுப்பும் மேல் முறையீடும்

ஜாமீனில் விட நீதிபதி மறுத்தால் அதற்கான காரணங்களை அவர் தனது தீர்ப்பில் கூறவேண்டும். அதன் அடிப்படையில் தான் குற்றம் சாட்டப்பட்டவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும். ஒருவரது பெயில் தள்ளுபடி ஆனால் அதே நீதிமன்றத்தில் சில காலம் கழித்து மீண்டும் மனு போடலாம் அல்லது உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்யலாம்.

ஜாமீன் ரத்து

குற்றவாளிகள் ஜாமீன் கிடைக்கப் பெற்றவுடன், ஏதோ குற்றத்திலிருந்தே விடுதலை அடைந்தவர் போல நடந்து கொள்ளும் சில நேரங்களில், கொடுக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதற்கோ, மீண்டும் ஜாமீன் கொடுக்காமல் இருப்பதற்கோ வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. மேலும், ஜாமீனிலிருக்கும் போது அதே குற்றத்தையோ, புதிய குற்றத்தையோ புரிதல், விசாரணைக்கு குந்தகம் விளைவித்தல். சாட்சிகளை கலைப்பது அல்லது பொய் சாட்சி தயாரிப்பது, ஜாமீன் கையொப்பமிட்டவரின் பாதுகாப்பிலிருந்து தப்பிப்பது, காவல் துறையினரின் மீதோ, அரசு தரப்பு சாட்சியின் மீதோ, வழக்குக்கான புகார் கொடுத்தவரின் மீதோ தாக்குதல் நடத்துவது, காயம் பட்டவரின் உடல்நிலை மாற்றத்தால் ‘ஜாமீன் மறுப்பு குற்றம்’ ஆக மாறக்கூடிய வாய்ப்பு, அதனால் ஜாமீன் மறுப்பு, கீழமை நீதிமன்றம் தவறான ஜாமீன் அளித்திருப்பின், தவறான நபர்களின் ஜாமீன் கையெழுத்து, ஜாமீன் ரத்தாக வாய்ப்புள்ளது.

முன் ஜாமீன்... பெரும்பாலான வேளைகளில் குற்றம் சாட்டப் பட்டிருக்கும் நபர் கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பிருக்கும் ஒரு நிலையில் அதனை தவிர்க்க நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறும் முயற்சியில் ஈடுபடுவது அவர்களை பாதுகாத்துக் கொள்வதற்கே. முன் ஜாமீன் என்பது ஏதோ எளிமையாக கிடைக்கக்கூடிய ஒரு விஷயம் அல்ல. 

முன் ஜாமீன் (Anticipatory Bail)

ஒருவர் தன் எதிராளிகளால் பொய்யான வழக்கு தன் மீது போடப்பட்டு சில நாட்களாவது தன்னை சிறை வைக்க முயல கூடும் என எண்ணினால் ஆண்டிசிபேட்டரி (Anticipatory Bail ) பெயில் கேட்டு மனு செய்ய சட்டத்தில் இடமுண்டு.

இதற்கான மனுவை அவர் மாவட்ட நீதிமன்றம் அல்லது உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யலாம்.வாரன்ட் இல்லாமல் காவல்துறையால் கைது செய்யப்பட்டால் , அவர் ஜாமீன் தர தயார் என்றால் அவரை ஜாமீனில் விட வேண்டும் என்று இந்த ஆண்டிசிபேட்டரி (Anticipatory Bail ) பெயில் மூலம் நீதிமன்றம் உறுதி செய்கிறது.

முன் ஜாமீன் கொடுக்க அதிகாரமுள்ள நீதிமன்றங்கள்...

குற்றத்தின் தன்மை, குற்றம் சாட்டப்பட்டவரின் நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டே முன் ஜாமீன் வழங்கப்படும். மேலும்...ஜாமீன் மறுக்கக்கூடிய (Non  bailable) வழக்கில்தான் முன் ஜாமீன் கொடுக்கப்படும் செஷன்ஸ் அல்லது உயர் நீதிமன்றத்துக்கு மட்டுமே முன் ஜாமீன் கொடுக்கக்கூடிய அதிகாரம் உண்டு.நீதிமன்றத்தில் கொடுக்கப்படும் முன் ஜாமீன் ஆணையில் ‘ஒருவேளை கைது செய்யக்கூடிய நிலையில் ஜாமீன் தர வல்லதே’ என்று இருக்கும். முன் ஜாமீன் உத்தரவில் அதற்கான கட்டளையும் பிறப்பிக்கப்பட்டிருக்கும்.

எனினும் சாமானியனுக்கும் சட்டத்தின் உதவிக் கரம் நீட்டப்படும் என்பது இன்றளவும் ஒரு எட்டாக் கனியாகவேதான் இருக்கிறது. பொதுவாக பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் தாக்கல் செய்யப்படும் ஜாமீன் மனுக்களின் மீது, காவல் துறையும் நீதித்துறையும் விழிப்புடன் செயல்பட்டு முடிவெடுக்க வேண்டியது அவசியம்.   சமுதாயத்தின் நன்மைக்காக ஒரு தனி மனிதனின் உரிமை பறிக்கப்படும் போது சட்டம் தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறது என்பது திண்ணம். பெரும்பாலும் பெண்களுக்கு எதிராக குற்றம் புரிபவர்களுக்கு, அந்த குற்றத்தின் தன்மையை பொருத்தே ஜாமீன் மறுக்கப்படுகிறது. 

பெண்களுக்கு எதிராக குற்றம் புரிந்து விட்டு ஒரு நபர் முன் ஜாமீனோ, ஜாமீனோ பெற்றுக்கொண்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் எண்ணம் ஈடேறுவது மிகவும் கடினம். ஒரு நல்ல சமுதாயம் அமைதியை விரும்பும் சமுதாயமாக திகழ பெண்மையைப் போற்றி அவர்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்குப் பாடுபட வேண்டும்.    

எந்த வகை குற்றமாக இருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படும் ஒரு நபர் ஜாமீன் கோருவதும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலையில் முன் ஜாமீன் கோருவதும் சட்டம் அவர்களுக்கு கொடுத்திருக்கும் வழிவகையே.

Tags : ஜாமீன் (Bail)   முன் ஜாமீன் (Anticipatory Bail) சட்டமணி bail & anticipatory bail

More from the section

தேர்தல் ஸ்பெஷல் - 3 புதிய அரசியல் கட்சி தொடங்குவது எப்படி?
தேர்தல் ஸ்பெஷல் -2 பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?
தேர்தல் ஸ்பெஷல்-1 பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் என்னென்ன?
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - விளையாட்டு வீரர்களுக்கு செய்யும் உதவிகள் என்னென்ன?
நோட்டா (NOTA) - 49-O வாக்கு என்றால் என்ன?