வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

தமிழ்நாடு சிறுநீரகங்கள் (நோய் குணப்படுத்தும் காரணத்திற்காக பயன்படுத்த அதிகாரமளித்தல்) சட்டம் 1987

By வழக்கறிஞர் சி.பி.சரவணன்| DIN | Published: 25th June 2018 09:24 AM

 

சிறுநீரகம் நிரந்தரமாக செயல் இழந்தவர்களுக்கு டயாலிசிஸ் ஒரு வரப்பிரசாதம் எனலாம். வயிற்றுக்குள்  சொருகப்பட்ட கெதீட்டரில் நோய்த்தொற்று, பெரிட்டோனியத்தில் அழற்சி போன்ற பல காரணங்களால், இவர்களில் நூற்றில் பத்து  பேருக்கு நாளாக நாளாக டயாலிசிஸ் சிகிச்சையும் பலன் தராது. அப்போது அவர்களுக்கு ‘சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை’  மட்டுமே கைகொடுக்கும். ஆரோக்கியமான சிறுநீரகம் நிமிடத்துக்கு 100 மில்லி லிட்டர் ஆரம்பநிலை சிறுநீரைப் பிரித்தெடுக்கிறது. இந்த வேகம் நிமிடத்துக்கு 5 மில்லி லிட்டர் என்ற அளவுக்குக் குறைந்துவிட்டால், சிறுநீரக செயலிழப்பு கடைசி கட்டத்துக்கு வந்துவிட்டது என்று அர்த்தம். இதை ‘இ.எஸ்.ஆர்.டி’ (End stage renal disease) என்று கூறுகிறோம். நீந்தும் மீனுக்குத் தண்ணீர் எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை இவர்களுக்கு அவசியம்.

ஒருவருக்கு சிறுநீரகம் முழுவதும் பழுதாகிவிட்டால், அதற்குப் பதிலாக ஆரோக்கியமாக உள்ள வேறொருவரின் சிறுநீரகத்தைப்  பெற்று, வயிற்றில் பொருத்துவதை ‘சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை’ (Kidney transplantation) என்கிறோம். சமயங்களில்  மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் சிறுநீரகத்தையும் பொருத்துவது உண்டு. இப்படி அடுத்தவரின் சிறுநீரகத்தைத் தானமாகப் பெறுவதை  ‘சிறுநீரக தானம்’ என்கிறோம். அது சம்மந்தமான தமிழ்நாடு சிறுநீரகங்கள் (நோய் குணப்படுத்தும் காரணத்திற்காக பயன்படுத்த அதிகாரமளித்தல்) சட்டம் 1987 பற்றிக் காண்போம்.

தமிழ்நாடு சிறுநீரகங்கள் (நோய் குணப்படுத்தும் காரணத்திற்காக பயன்படுத்த அதிகாரமளித்தல்) சட்டம் 1987

Tamil Nadu Kidneys (Authorities for Use for Therapeutic Purposes) Act, 1987

சட்ட எண் : 33/87

தமிழ்நாடு அரசிதழ் கூடுதல் இதழ் எண். 158 சென்னை 23.07.1987 பிரபவ வருடம் ஆடி மாதம் திருவள்ளுவர் ஆண்டு 2018. தமிழ்நாடு சட்டசபையில் இயற்றப்பட்ட கீழ்கண்ட சட்டமானது 21.07.1987 ல் ஆளுநரின் இசைவை பெற்று பொதுத் தகவலுக்காக இதன்படி வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் இறந்து போன நபர்களின் சிறுநீரகங்களை நோய் குணப்படுத்தும் பயன்பாட்டிற்காகவும் அது தொடர்பான விசயங்களுக்காகவும் பயன்படுத்த வகைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

1. குறுந்தலைப்பு அளாவுகை மற்றும் துவக்கம்

1. இந்த சட்டம் தமிழ்நாடு சிறுநீரகங்கள் (நோய் குணப்படுத்தும் காரணங்களுக்காக பயன்படுத்த அதிகாரமளித்தல்) சட்டம் என அழைக்கப்படும்.

2. இது தமிழகம் முழுவதுமாக பொருந்தும்.

3. இச்சட்டம் தமிழக அரசிதழில் வெளியிடப்படும் அந்நாளில் இருந்து அமுலுக்கு வரும்.

1. விளக்கங்கள்

இந்த சட்டத்தில் சூழ்நிலைகளுக்கு வேறு விதத்தில் தேவைப்பட்டாலொழிய...

3. இறந்த நபர்களின் சிறுநீரகங்களை அகற்றுவதற்கு அதிகாரமளித்தல்

  1. எந்த நபரேனும் தான் இறப்பதற்கு முன்பாக தன்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் உட்பட இரண்டு சாட்சிகள் முன்பாக தெளிவாக தன்னுடைய இறப்பிற்கு பின்பு தன் சிறுநீரகங்களை நோய் குணப்படுத்தும் காரணங்களுக்காக எடுத்து பயன்படுத்திக் கொள்ள எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மொழியாகவோ அனுமதியளித் திருப்பாராயின் (அவர் இதன்பின் கொடையாளர் என அழைக்கப்படுவார்) சட்டப்படி இறந்த நபரின் உடலை வைத்திருக்கும் நபர் அவ்வாறாக கொடையளித்த இறந்த நபர் பின்னர் அப்படிப்பட்ட அனுமதியை ரத்து செய்துவிட்டார் என்பதற்கு போதுமான சாட்சியம் அளித்தாலொழிய அல்லது இருந்தாலொழிய இறந்த நபரின் சிறுநீரகங்களை இறந்த நபரின் உடலிலிருந்து பதிவு பெற்ற மருத்துவர் எடுத்துக் கொள்ள தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும்.
  2. இறந்த நபர் அப்படியொரு அனுமதியை அளிக்காவிட்டாலும் கூட அவரது இறப்பிற்கு பின்பு அவரது சிறுநீரகங்களை பயன்படுத்தி கொள்ள மறுப்பேதும் தெரிவிக்காவிட்டாலும் நோய் சிகிச்சைக்காக அவரது உடலை சட்டப்படி வைத்திருக்கும் அந்நபர் சிறுநீரகங்களை எடுத்துக் கொள்ள அனுமதியளிக்க வேண்டும். இறந்த நபரின் உறவினர்களை எவரேனும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தால் அப்படி எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டியதில்லை.

4. சில நேர்வுகளில் சிறுநீரகங்களை எடுத்துக் கொள்ள அனுமதியளிக்க வேண்டியதில்லை.

                i. செயல்பாட்டிலுள்ள சட்டப்படி பிரேத விசாரணை ஏதும் இறந்த நபரின் உடலில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் பிரிவு 3(1)-ன்படியும் பிரிவு 3(2)-ன் படியும் எவ்வித அனுமதியும் தரப்படாத சூழ்நிலையில் அப்படி சிறுநீரகங்களை எடுத்துக் கொள்ள அனுமதியளிக்கத் தேவையில்லை.

                ii. இறந்த நபரின் உடல் புதைக்கப்படவோ எரிக்கப்படவோ அல்லது வேறு விதங்களில் அகற்றப்படவோ மட்டும் ஒரு நபரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தால் அவருக்கு இறந்தவரின் உடலிலிருந்து சிறுநீரகத்தை அகற்ற அனுமதியளிக்கப்படவில்லை.

5. சிறையிலோ மருத்துவமனையிலோ உரிமை கொண்டாடப்படாத அனாதை பிணங்களில் சிறுநீரகங்களை எடுத்துக் கொள்ளுதல்.

                i. மருத்துவமனையிலோ சிறையிலோ நெருங்கிய உறவினர்கள் எவராலும் கோரப்படாமல் கிடக்கும் உடலிலிருந்து இதன் உட்பிரிவு (2)-க்கு உட்பட்டு இதற்கென குறிப்பிடப்பட்ட படிவத்தில் மருத்துவமனை மற்றும் சிறையின் நிர்வகிப்போர் அல்லது நிர்வாகிகளால் இதற்கென அதிகாரமளிக்கப்பட்ட நீதிமன்றம் அல்லது பணியாளர்கள் சிறுநீரகங்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்கலாம்.

ii. உட்பிரிவு (1)-ன் படியான அனுமதி இதற்கென குறிப்பிடப்பட்ட காலக் கெடுவிற்கு முன்பாக கொடுக்கக் கூடாது.

iii. குறிப்பிட்ட காலத்தில் நெருங்கிய உறவினர்கள் இறந்த நபரின் உடலை கோராவிடிலும் கூடிய விரைவில் அவ்வாறு கோருவார்கள் என்ற சூழ்நிலையிலும் இதற்கென உட்பிரிவு 1 ன் படி அதிகாரமளிக்கப்பட்ட நபர் தக்க காரணங்களால் கருதினால் அப்போதும் சிறுநீரகங்களை எடுக்க அனுமதியளிக்க வேண்டியதில்லை.

விளக்கம் : இந்த பிரிவின் பயன்பாட்டிற்காக மருத்துவமனை என்பது நர்ஸிங் ஹோம், செவிலியர்மனை, மருத்துவமனை, மருத்துவ கல்வியளிக்கும், சிகிச்சையளிக்கும் மற்ற நிறுவனங்களையும் குறிக்கும்.

6. சட்ட மருத்துவத்திற்காக பிரேத பரிசோதனை நோய்குறியியல் ஆகியவற்றிற்காக அனுப்பப்பட்டுள்ள உடல்களிலிருந்து சிறுநீரகங்களை எடுத்துக் கொள்ள அதிகாரமளித்தல்.

இறந்து போன நபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கும் போது. 

i.              விபத்து அல்லது இயற்கைக்கு புறம்பான காரணங்களால் அவரின் இறப்பு நிகழ்ந்திருந்து சட்ட மருத்துவ காரணங்களுக்கு அல்லது நோய்க்குறியியல் காரணங்களுக்காக இச்சட்டத்தின் பிரிவுகளின்படி இறந்த நபரின் உடலிலிருந்து சிறுநீரகங்களை அகற்ற தகுதி அளிக்கப்பட்டுள்ள  அந்நபர் எந்த காரணத்திற்காக பிரேத பரிசோதனை செய்ய அந்த உடல் அனுப்பப்பட்டிருக்கிறதோ அந்த காரணத்திற்கு பயன்படாது எனக் கருதினால் சிகிச்சையளிக்கும் காரணத்திற்காக சிறுநீரகங்களை எடுத்துக் கொள்ள அனுமதியளிக்கலாம். ஆனால் இறந்து போன நபர் இறப்பதற்கு முன்பு அதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளார் என நம்பத் தகுந்த காரணங்கள் இருக்கிறதெனில் அப்படி சிறுநீரகங்களை அகற்ற அனுமதியளிக்கத் தேவையில்லை. இறந்த நபரின் உடலை சட்டப்படி வைத்திருக்கும் நபர் இறந்து போன நபர் தன் இறப்பிற்கு முன்பே தன் சிறுநீரகங்களை எடுத்துக் கொள்ள அனுமதியளித்து அதை இறக்கும் வரை இரத்து செய்யவில்லை என்றாலும் அப்படி சிறுநீரகங்களை எடுத்துக் கொள்ள அனுமதியளிக்கலாம்.

7. பதிவு பெற்ற மருத்துவராலும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலும் சிறுநீரகங்களை அகற்ற வேண்டும்.

                i. சிறுநீரகங்களை அகற்றும்முறையில், ஒரு பதிவு பெற்ற மருத்துவர் சிறுநீரகங்களை அகற்றும் முன்பு தனிப்பட்ட சோதனையின் மூலம் அந்த உடம்பில் உயிர் வாழ்க்கை இல்லாமல் போய்விட்டது என்பதை உரிய வகையில் சோதித்து உடலில் உயிர் இல்லை என்பது நிரூபணமான பிறகே சட்டப்படி  சிறுநீரகங்களை அந்த உடலிலிருந்து அகற்றும் பணியைத் தொடங்க வேண்டும்.

ii. உதவி ஆய்வாளர் நிலைக்கு குறைவற்ற காவல்துறை ஆய்வாளர் முன்பாக சிறுநீரகங்கள் அகற்றப்பட வேண்டும்.

8. இறந்த உடம்பிலிருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகங்களை பதப்படுத்துதல் சேமித்து வைத்தலும்...

                சிறுநீரகங்களை இறந்த உடம்பிலிருந்து அகற்றியபின்பு அவற்றை பதப்படுத்தவும், சேமித்து வைக்கவும் இதற்கென குறிப்பிட்டுள்ள விதத்தில் அரசு சிறுநீரக வங்கிகளில் இதற்கென செய்யப்பட்ட விதிகளின்படி பதிவு பெற்ற மருத்துவர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

9. காத்தல்

                1. இந்தச் சட்டம் இயற்றப்படாத நிலையில் இறந்த நபரின் உடல் குறித்து பேரங்களில் எவையெல்லாம் சட்டப்படியானதோ அவைகளை இச்சட்டத்தின் வகைமுறைகள் எவையும் சட்டப்புறம்பானதாக ஆக்காது.

         2. அப்படி இறந்த நபரின் உடலிலிருந்து சிறுநீரகங்களை எடுத்துக் கொள்ள அதிகாரமளித்தலோ அல்லது ஏற்பாடு செய்து கொடுப்பதோ அல்லது அப்படி வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி சிறுநீரகங்களை அகற்றுவது பிரிவு 297 இந்திய தண்டனை சட்டத்தின்படி குற்றமாகாது.

10 நன்னம்பிக்கையின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு

                சிவில் வழக்கு  குற்ற வழக்கு தொடர்பு அல்லது சட்டப்படியான நடவடிக்கைகள் எவையும் இச்சட்டத்தின்படி நன்னம்பிக்கையில் செய்யப்பட்ட அல்லது செய்ய கருதப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக எடுக்க முடியாது.

11. விதிகளை ஏற்படுத்த அதிகாரம்

                1. இந்த சட்டத்தின் பலன்கள் சென்றடையச் செய்வதற்காக தக்க விதிகளை அரசாங்கம் செய்யலாம்.

2. மேற்கண்ட பொதுவான அதிகாரத்திற்கு குந்தகம் விளைவிக்காத வகையில் அப்படிப்பட்ட விதிகள் குறிப்பாக கீழ்கண்ட அனைத்து அல்லது ஏதேனும் ஒன்றிற்காக செய்யப்படும் அவை.

3. இச்சட்டத்தின்படி செய்யப்படும் விதிகள் (அவ்வாறு நடைமுறைக்கு அந்நாளில் வராது என தெரிவிக்கப்பட்டாலொழிய) தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு அந்நாளிலிருந்து நடைமுறைக்கு வரும்.

4. இச்சட்டத்தின்படி இயற்றப்பட்ட விதிகள் சட்டசபையின் முன்பு அவை வைக்கப்பட வேண்டிய அமர்வு அல்லது அதற்கு அடுத்த அமர்வில் வைக்கப்பட வேண்டும். சட்டசபையில் ஏதேனும் மாறுதல்கள் செய்யப்பட்டால் அந்த மாறுதல் செய்யப்பட்ட வகையிலும் வேறு மாற்றம் தேவையில்லை எனக் கருதினால் மாற்றம் இல்லாமலும் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட விதியின் செல்லுந்தன்மைக்கு குந்தகம் விளைவிக்காமலும் நடைமுறைக்கு வரும்.

 

 

Tags : சட்டமணி தமிழ்நாடு சிறுநீரகங்கள் சட்டம் 1987 sattamani Tamil Nadu Kidneys (Authorities for Use for Therapeutic Purposes) Act 1987

More from the section

தேர்தல் ஸ்பெஷல் - 3 புதிய அரசியல் கட்சி தொடங்குவது எப்படி?
தேர்தல் ஸ்பெஷல் -2 பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?
தேர்தல் ஸ்பெஷல்-1 பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் என்னென்ன?
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - விளையாட்டு வீரர்களுக்கு செய்யும் உதவிகள் என்னென்ன?
நோட்டா (NOTA) - 49-O வாக்கு என்றால் என்ன?