திங்கள்கிழமை 25 மார்ச் 2019

மாணவர்கள் அரசியல் பேசலாமா ? கல்லூரி கல்வி இயக்குனரின் சுற்றறிக்கை சட்டபூர்வமானதா ??

By வழக்கறிஞர் சி.பி. சரவணன்| DIN | Published: 04th May 2018 04:54 PM

 

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இயக்குனர் Dr.மஞ்சுளா வெளியிட்டுள்ள ந.க.எண்.17918/க்யூ1/2018 நாள் 25.04.2018 சுற்றறிக்கையில், ''கல்லூரியில் நடைபெறும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சிறப்பு அழைப்பாளர்கள் தங்களது கட்சி அல்லது இயக்கம் சார்ந்த கொள்கைகளை பேசி வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும். இதனால் மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மை பாதிக்கப்படுகிறது.

கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவோர் அரசியல் கட்சிகளின் கொள்கை மற்றும் கருத்துகளைத் தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி அவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறது
1.  அரசியலமைப்பின் முன்னுரையில்(Preamble.)
நாம், இந்தியாவின் மக்களாகிய நாம் இந்தியாவை இறையாண்மை பூண்ட சமதர்ம சமய சார்பற்ற மக்களாட்சிக் குடியரசாக அமைப்பதென உறுதிப் பூண்டுள்ளோம். இதன் மூலம் இந்தியாவின் அனைத்து குடிமக்களையும் பாதுகாப்போம்

நீதி, சமூக, பொருளாதார மற்றும் அரசியல்;

2. பகுதி - 4 அரசின் நெறியுறுத்துக் கோட்பாட்டுக் கொள்கை சரத்து 38. [(1)]  பொதுமக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் அரசு, நீதி, சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தவேண்டும், தேசிய வாழ்வில் உள்ள எல்லா அமைப்புகளிலும் அவற்றை தெளிவு படுத்த வேண்டும். எனவும்

3. பகுதி XV  சரத்து 324. (1) தேர்தல் ஒன்றைக் கண்காணிக்கை,  கட்டுப்பாடுத்த வாக்காளர் பட்டியலை தயாரித்தல், மற்றும் பாராளுமன்றத்திற்கும் அனைத்துத் தேர்தல்களையும் நடத்த தேர்தல் ஆணையம் உள்ளது. எனவும் 

4. சரத்து .326 “மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தலில் 18 வயதுக்கு குறையாத இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் வாக்காளராக பதிவு செய்ய உரிமை இருக்கிறது” எனவும் சொல்கிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 
பிரிவு.2 (e)    “வாக்காளர்’என்பவர் தொகுதி ஒன்றின் தொடர்பில் நபரிருவரின் பெயர் அந்நேரத்தில் அமலிலுள்ள வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்யப்படும் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவசட்டம் 1950, பிரிவு,16- இல் குறிப்பிடப் பெற்ற ஏதேனும் தகுதியின்மைகளுக்கு உட்படாத நபர் எனப் பொருள்படும்.

பிரிவு.2 (f) அரசியல் கட்சி என்பது பிரிவு.29 A இன் கீழ் தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சி என பதிவு செய்யப்பட்ட தனிப்பட்ட இந்திய குடிமகன்களின் கூட்டமைப்பு அல்லது கழகம் ஆகும் எனவும்

பிரிவு 4 (d). மக்களவை உறுப்பினருக்கான தகுதிகள் ஏதேனும் ஒரு இடம் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் போது, அவர் அந்த மக்களவைத் தொகுதியில் வாக்காளராகவும்; இருந்தாலன்றி தகுதியுடையவர் ஆகார் எனவும்

மாநில சட்டமன்றங்களின் உறுப்பினர்களின் தகுதிகள் [பிரிவு. 5 (c)] வேறு ஏதேனும் இடத்தின் போது, அந்த மாநிலத்தின் வேறு ஏதேனும் சட்டமன்ற தொகுதியில் வாக்காளராக; இருந்தாலன்றி தகுதியுடையவர் ஆகார் எனவும் சொல்கிறது.

கடந்த 1988-ம் ஆண்டு அரசியல் சாசனம் 61-வது சட்டத் திருத்தத்தில், வாக்களிக்கும் வயது 21-ல் இருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது. இக்கால இளைஞர்கள் பெரிதும் அரசியல் ஞானம் பெற்றுள்ளதால், வாக்களிக்கும் வயது குறைக்கப்பட்டதாக அந்தச் சட்டம் கூறுகிறது.

தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21 ஆகக் குறைக்க மாணவர்கள் கடிதம் 
தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21 ஆகக் குறைத்திடும் சட்டத்திருத்தம் உடனே கொண்டு வர வேண்டும். கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடத் தடை என்ற பிரச்னை வெடித்தபோது உடனடியாக நாடாளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதாவைக் கொண்டு வந்து சட்டத்தைத் திருத்தினீர்கள். அதே அக்கறையை இளைஞர்களின், நாட்டின் எதிர்காலத்துக்காகவும் காட்டுவீர்கள் என்று நம்புகிறோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இதைச் செய்யாவிட்டால், போராடவும் தயங்க மாட்டோம்”  என்று மதுரையைச் சேர்ந்த மாணவர்கள் 100 பேர் கையெழுத்திட்டு சோனியா, அத்வானி, மோடி, மம்தா பானர்ஜி, பிரகாஷ் காரத், கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் உள்பட 13 தலைவர்களுக்கு கடந்த 2013-ம் வருடம் கடிதம்  அனுப்பிய செய்தியை அறிவோம்.

மனித மனமோ அல்லது மனித இனமோ, சமூகம், அரசியல் மற்றும் மதம் என்ற கட்டுப்பெட்டியான கட்டமைப்பிற்குள் பிரிக்க முடியாது என்பதை நான் உரைக்கிறேன். அவை எல்லாமே ஒவ்வொன்றும் தனித்தனியாகவும் இணைந்து செயல்படுகின்றன. 

அரசியல் என்பது உரிமை
அரசியலமைப்புச் சட்டம் தன் முகவுரையிலே அரசியல் நீதி (Political Justice) பாதுகாக்கப்பட வேண்டும் என சொல்லியிருக்கிறது. 18 வயதை அடைந்த ஒரு குடிமகன் ஒரு நாட்டின் மக்கள் பொது வாழ்வில் பதவிகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனி நபரைத் தேர்ந்தெடுக்க, தேர்தலில் வாக்களிக்க உரிமை பெறுகிறான். அதுவே அரசியல் உரிமையை உறுதிபடுத்துகிறது. மேலும் இந்த தேர்ந்தெடுக்கும் செயல்முறையை ஒழுங்குபடுத்தவும், நடைமுறைப்படுத்தவும் ஒரு அரசியலமைப்பின் அங்கீகாரம் பெற்ற அமைப்பான தேர்தல் ஆணையமும் உள்ளது.

தேர்தலில் வாக்களிக்க, போட்டியிட என்ன உரிமை உள்ளதோ அதே உரிமை அரசியல் பேச, ஆலோசிக்க உள்ளது என்பதே சட்டபூர்வ உண்மை. இதனால் மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மை அதிகரிக்கும் என்பதே நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

அதன்படி, கல்லூரிக் கல்வி இயக்குனரின் சுற்றறிக்கை முற்றிலும் அசரியலமைப்புச் சட்டத்திற்கும், உரிமைக்கும் முரண்பாடானது எதிரானது.

More from the section

தேர்தல் ஸ்பெஷல்-5 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைப்புத் தொகைகள் எவ்வளவு?
தேர்தல் ஸ்பெஷல்- 4 வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள், அவசியம் கவனிக்க வேண்டிய விதிகள்....
தேர்தல் ஸ்பெஷல் - 3 புதிய அரசியல் கட்சி தொடங்குவது எப்படி?
தேர்தல் ஸ்பெஷல் -2 பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?
தேர்தல் ஸ்பெஷல்-1 பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் என்னென்ன?