புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

வணிகக் குறிகள் சட்டம்,1999

By வழக்கறிஞர் சி.பி. சரவணன்| DIN | Published: 10th September 2018 04:13 PM

 

ஒரு தனிநபரோ, வணிக நிறுவனமோ, அல்லது பிற சட்டப்படியான நபரோ தமது பொருளையோ, சேவையையோ தனது வாடிக்கையாளர்களிடம் தனித்துவமாய் அடையாளப்படுத்தப் பயன்படுத்தும் தனிப்பட்ட சின்னம் அல்லது குறீயிடு வணிகச்சின்னம் அல்லது வர்த்தக்குறி (trademark)எனப்படும். இது ஒருவர் வழங்கும் பொருள் மற்றும் சேவையைப் பிறரிடமிருந்து தனிமைப்படுத்திக் காட்ட உதவும்.

ஒரு வணிகச்சின்னம் என்பது கீழ்கண்ட குறிகளின் மூலம் குறிக்கப்படுகிறது.

™ என்பது பொருளைத் தனித்துவப்படுத்தும் பதிவுசெய்யப்படாத வணிகச்சின்னத்தைக் குறிக்கவும்;

℠ என்பது சேவையைத் தனித்துவப்படுத்தும் பதிவுசெய்யப்படாத வணிகச்சின்னத்தைக் குறிக்கவும்,

® என்பது பதிவிட்ட வணிகச்சின்னத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

வணிகச்சின்னம் என்பது பொதுவாக பெயராகவோ, சொல்லாகவோ, சொற்றொடராகவோ, சின்னமாகவோ, இலச்சினையாகவோ, படமாகவோ, வடிவமைப்பாகவோ, அல்லது இவை கலந்தோ அமையப்பெறும். வழக்கமான இவை அல்லாது வண்ணம், மனம், ஓசை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட சில மரபுசாராத வணிகச்சின்னங்களும் உண்டு.

பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான பதிவிற்கு வகை செய்தல், மேலான பாதுகாப்பை வழங்குதல் மற்றும் மோசடியாக குறிகளைப் பயன்படுத்துவதை தடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக 1999 ஆம் ஆண்டின் வணிகக் குறிகள் சட்டம் இயற்றப்பட்டது.

வணிகக் குறிகள் சட்டம்,1999

Trade Marks act,1999

வணிகக் குறி (பிரிவு. 2(1) (zb)

வணிகக் குறி என்றால் படத்தோற்றம் போல் காட்டக்கூடிய ஒரு குறியாகும். அது ஒருவருடைய பொருள்கள் அல்லது சேவைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டக் கூடியது. மற்றும் பொருள்களின் அடைப்புமுறை மற்றும் வண்ணங்களின் சேர்க்கை ஆகியவற்றை உள்ளடக்கும்.

குறி (பிரிவு. 2(1) (m)

குறி என்பது அடையாளம்(Device), தொழிற்சின்னம் (Brand), தலைப்பு(Heading) முகப்பு சீட்டு(Label),எண் (Numeral),பொருள்களின் அமைப்பு (Shape of Goods) பொருள்களின் அடைக்கும்முறை(packaging), வண்ணங்களின் சேர்க்கை (Combination of Colors) அல்லது இவைகளின் இணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கும்.

சேவை பிரிவு.2(1) (Z)

சேவை என்பது பயன் படுத்தும் நபர்களுக்கு கிடைக்கக் கூடிய எவ்வித சேவையுமாகும். அவை வங்கி பணிகள், தகவல் தொடர்பு, கல்வி, நிதி, காப்புறுதி, சிட் பண்டுகள், ரியல் எஸ்டேட், போக்குவரத்து, சேமிப்பு, மூலப்பொருள் செய்முறை, மின்சார அல்லது மற்ற சக்தி வழங்குதல், உணவு வசதி, இருக்கை வசதி, கேளிக்கை, வேடிக்கை, கட்டுமானப் பணி, பழுது பார்த்தல்,செய்தி, தகவல் மற்றும் விளம்பரம் செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கும்.

பதிவினை மறுத்தல்

ஒரு வணிகக் குறியை பதிவு செய்ய மறுப்பதற்கு முழுமையான காரணங்கள் (Absolute grounds) மற்றும் தொடர்புடைய காரணங்கள்(Relative Grounds) என இரண்டு காரணங்கள் உள்ளன.

அ) பதிவினை முழுமையாக மறுக்கப்படுவதற்கான காரணங்கள்[பிரிவு.9]

ஒரு வணிகக் குறி தனித்தன்மை கொண்டதாக இல்லையெனில் அல்லது பொதுநலனுக்கு எதிராக இருப்பினும் அல்லது முழுமையாக பொருள்களின் அமைப்பை மட்டும் குறித்திருந்தால் அந்த வணிகக் குறியை பதிவு செய்ய முடியாது.

(i) பொதுமக்களை ஏமாற்றும் வகையில் அல்லது குழப்பம் விளைவிக்கும் வகையில் அமைந்தவை (ii) இந்தியாவிலுள்ள எந்தப் பிரிவிலுள்ள மக்களின் சமய உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைந்தவை: (iii) அவதூறு அல்லது ஆபாச(வெறுப்பூட்டும்) பொருள் கொண்டவை (iv) 1950 ஆம் ஆண்டின் சின்னங்கள் மற்றும் பெயர்கள்(தவறாக பயன்படுத்துதலைத் தடுக்கும்) சட்டத்தின் (Emblem and Names(Prevention of Improper Use) Act,1950} கீழ் தடைசெய்யப்பட்டவை பொதுநலனுக்கு எதிரானவை என்பது பிரிவு.9(2) இல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆ) பதிவு செய்யப்பட மறுப்பதற்கு தொடர்புடைய காரணங்கள் (பிரிவு.11)

ஒரு வணிகக் குறி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய சாத்தியக்கூறு உள்ளவை அல்லது முந்தய வணிக குறிகள் போல் அல்லது ஒத்த தன்மை அல்லது நன்கு அறியப்பட்ட வணிக குறிகள் போன்று அல்லது ஒத்து அமைந்திருந்தாலோ அல்லது முந்தைய வணிககுறி உடைமையாளரால் சட்டத்தின் வாயிலாக தடுக்கப்பட சாத்திய கூறு இருந்தாலோ, சட்டநடவடிக்கையால் பதிவினை மறுக்கலாம்.

வேதியியல் மூலக்கூறுகளின் அல்லது பன்னாட்டு நிறுவனங்களின் பெயர்களைப் பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. (பிரிவு.13)

உயிரோடு இருக்கும் அல்லது இறந்த நபர்களின் பெயர்களை உருவமைப்பை பதிவு செய்ய, உயிரோடு இருக்கும் அல்லது இறந்த நபரை அல்லது நபர்களின் பிரதிநிதியின் ஒப்புதலை பெற்றுத்தர பதிவாளர் கோறுவார். அவ்வாறு கொடுக்கத் தவறும் போது, அந்த பதிவுக் குறியை பதிவு செய்ய மறுக்கலாம். (பிரிவு.14)

வணிகக் குறியை பதிவு செய்வதற்கான நடைமுறை...

1.மனுவைத் தாக்கல் செய்தல் ( பிரிவு.18)

பல்வகைப்பட்ட பொருள்கள் அல்லது சேவைகளுக்கான வணிகக் குறிக்கான பதிவிற்கு ஒரே ஒரு மனுவைத் தாக்கல் செய்யலாம். அதற்கான பிரத்யேக மனுவில் விண்ணப்பிக்க வேண்டும்.

2. மனுவை ஏற்றல் (பிரிவு.18(4)}

மனுவின் பதிவு செய்யவிருக்கும் குறியானது, வணிகக்குறி பதிவேட்டில் அதேபோன்று ஒற்றுமை கொண்ட நோக்கத்துடன் தேடுதல் நடைபெறும். ஆய்விற்குபின் மனுவை பதிவாளர் ஏற்கலாம் அல்லது திருத்தங்கள் அல்லது நிபந்தனைகள் அல்லது வரையறைகளுக்குட்பட்டு மனுவை ஏற்கலாம்.

3. மனுவின் விளம்பரம் (பிரிவு.20)

பதிவிற்கான மனு ஏற்கப்படிருப்பின், அவ்வாறு ஏற்கப்பட்டது என்பதை விளம்பரப்படுத்தப்பட வேண்டும். சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மறு அறிவிப்பு வழிவகையும் உள்ளது.(பிரிவு.20(2))

4. பதிவிற்கான எதிர்ப்பு (பிரிவு.21)

பதிவிற்கான மனுவின் பேரிலான விளம்பர அல்லது மறு விளம்பரத் தேதியில் இருந்து நான்கு மாதத்திற்குள் பதிவாளருக்கு அறிவிக்கை கொடுத்து, எவர் வேண்டுமானாலும் எதிர்க்கலாம். மேற்படி அறிவிக்கை மனுதாரருக்கு அனுப்பப்படும். அந்நகலை பெற்ற நாளிலிருந்து 2 மாதத்திற்குள் பதில் அனுப்ப வேண்டும். இல்லையெனில் மனு கைவிட்டதாக கருதப்படும். மனுவில் உள்ள தவறுகளை களைவதற்கு அனுமதி வழங்கலாம்.

5.மனுவின் பதிவு (பிரிவு.23)

மனு எதிர்க்கப்படாமல் இருந்து மற்றும் எதிர்ப்பிற்கான அறிவிக்கையின் கால அளவு முடிவுற்றிருந்தால் அல்லது மனுவானது எதிர்க்கப்பட்டு, அந்த எதிர்ப்பு மனுதாரருக்கு சாதகமாக முடிவுற்றிருந்தால் மனுவை ஏற்று பதிவு செய்வார்.

கூட்டாக உடைமை உரிமை (பிரிவு.24(1))

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூட்டு உடமையாளராக பயன்படுத்தப் பதிவு செய்யப்படமாட்டாது. எனினும், அனைவரது சார்பாக அன்றி தனியாக பயன்படுதப்படமாட்டாது என்கின்ற போது பதிவு செய்யலாம்.

வணிகக் குறிக்கான கால அளவு

வணிகக் குறியின் பதிவு 10 ஆண்டு காலத்திற்கு செல்லுபடியாகும் (பிரிவு.25(1)). உரிய கட்டணம் செலுத்தி பதிப்பித்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு புதுப்பித்துக் கொள்ளலாம். (பிரிவு.24(2))

பதிவினால் கிடைக்கும் உரிமைகள் (பிரிவு.28)

1. பொருள்கள் அல்லது சேவைகள் குறித்து அதனை பயன்படுத்தப் பெறும் தனிமுறையிலான உரிமை

2. வணிக குறியின் உரிமை மீறுகையில், வழக்குத் தொடுக்கப்பெறும் உரிமை

வணிகக் குறியின் உரிமை மீறல்

வணிகக் குறியானது, வணிகத்தின் போது கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் மீறப்படுகிறது:

1. (i)ஒரு குறியானது பதிவு செய்யப்பட்ட குறியை போல ஒன்றுபட்ட தன்மை, ஏமாற்றுவகை ஒற்றுமையாக இருந்து அதை பயன்பட்டதாக இருக்கும் போது(பிரிவு.29(1))

(ii) (அ)பதிவு செய்யப்பட்ட வணிக குறியுடனான ஒன்றுபட்ட தன்மை அல்லது

(ஆ) பொருள்களின் அல்லது சேவைகளின் ஒத்த தன்மை ஒன்றுபட்ட தன்மை

(இ) வணிகக் குறியுடன் ஒத்த தன்மை(பிரிவு.29(2))

(iii) பொதுமக்களிடம் குழப்பம் விளைவிக்க, இந்தியாவில் நன்ப்மதிப்பு பெற்று இருந்து அதற்கு கெடுதல் விளைவிப்பதாக இருக்கும் போது (பிரிவு.29(4))

2. பதிவு பெற்ற வணிகக் குறியை தனது வணிகக்குறி அல்லது தனது தொழில் நிறுவனத்தின் பெயர் போல் பயன்படுத்தப் படும்போது (பிரிவு.29(5))

3. முகப்பு சீட்டாக ஒட்டுவதற்கு அல்லது பொருள்களின் அடைப்பு முறைக்கு பொருள்களின் அல்லது சேவைகளின் விளம்பரத்திற்கு பயன்படுத்தப்படும் போது(பிரிவு.29(7))

4. அவ்வாறு விளம்பரத்திற்கு பயன்படுத்தப்படும் போது குறியின் நன்மதிப்பை கெடுப்பதாக இருக்கும்போது (பிரிவு.29(8))

பதிவு பெற்ற வணிகக் குறியின் தனிப் பண்புக் கூறாக மற்றும் காட்சி தோற்றமாக இருக்கும் போது அல்லது பேசப்படும் போது (பிரிவு.29(9))

ஒரு வணிகக் குறியானது மீறுகைக்கு ஆளாகிறது.

உரிமை மீறுகையாக அமையாத பயன்பாடு...

குறிப்பிட்ட சில செயல்கள், உரிமை மீறுகையாக அமையாது. அவையாவன: (பிரிவு.30)

1.தொழிற்சாலை மற்றும் வர்த்தக செயல்களில் நேர்மையான நடைமுறைகள்:

2. வணிக குறியை பயன்படுத்துவதில் நேர்மையற்ற முறையில் ஆதாயம் தேடிக் கொள்ளாமலும் நன்மதிப்பிற்கு கேடு விளைவிக்காமலும் பயன்படுத்துவது:

3. பொருள்கள் அல்லது சேவைகளின் பண்புகூறு, இயல்பு அல்லது புவியியலின் தோற்றம் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டி பயன்படுத்துவது.

4.பதிவு பெற்ற பயன்படுத்துபவரின் நோக்கத்தை சுட்டிக் காட்டுவது

5. வணிகக்குறியின் வரையரைகள் மற்றும் நிபந்தனைகளை தாண்டி பயன்படுதுவது. (மேலும் எல்லைகளை தாண்டிய பகுதிகளில் பயன்படுத்துவது உரிமை மீறல் ஆகாது. எனினும், அது வணிக போலி செயலுக்கு ஒப்பாகும். (பிரிவு. 30(2)(b))

6.வணிக குறியை சட்டப்படி அல்லது உரிமையாளரின் ஒப்புதலுடன் பயன்படுத்தும் பொழுது ,சில்லறை விற்பனையில் பயன்படுத்தும் பொழுது

7. வணிகக் குறியை பொருள்களின் பாகங்களுக்கு அல்லது துணைபொருட்களுக்கு பயன்படுத்தும் பொழுது

8. ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு பதிவு உரிமை வழங்கப்பட்டிருக்கும் போது

9. மாற்றாக்கம் ஒன்றை பெற்றிருக்கும் போது (பிரிவு.30(3))

உரிமை மீறலுக்கு எதிராக கிடைக்கும் தீர்வழிகள்

(அ) உரிமையியல் தீர்வழிகள் (Civil Remedies)

(i) உறுத்துக் கட்டளை (Injunction)

(ii) இழப்பீடு மல்லது ஆதாய கணிப்பு (Damages or Account of Profit) (iii) ஒப்படைப்பிற்கான உத்தரவு

(ஆ) குற்றவியல் தீர்வழிகள் (Criminsl remedies)

(இ) நிர்வாக தீர்வழிகள் (Administrative remedies)

 

வணிகக் குறிகள் மாற்றாக்கம் உரிமை மாற்றம்

Assignment and transmission of Trade marks

வணிக குறிகளை மாற்றாக்கம் மற்றும் உரிமை மாற்றம் செய்ய வழி வகுத்துள்ளது.வணிக நற்பெயருடன்(Goodwill) சேர்த்தோ சேர்க்காமலோ இருக்கலாம். மாற்றக்கம் செய்வதற்கான உரிமை, உடைமையாளருக்கு மட்டுமே உள்ளது.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்குத் தனிபட்ட உரிமைகள் வழங்கப்பட்டிருக்கும் போது, மாற்றாக்கம் அல்லது உரிமை மாற்றம், நிலப்பகுதிகளின் அடிப்படையில் வணிகக் குறியை பிளவு படச் செய்து பல்வேறு நபர்களுக்கு பல்வேறு பகுதிகளுக்கு உரிமைகள் ஏற்படுவதை தடுக்கிறது. (பிரிவு.41)

பதிவுபெற்ற பயன்படுத்துபவர்

Registered User

பதிவு பெற்ற உடைமையாளர் மற்றும் பயன்படுத்தப்பட்டவிருக்கும் நபர் இருவரும் கூட்டாக மனுவினை பதிவாளரிடம் அளிக்க வேண்டும். (பிரிவு.41). அனைத்து நிபந்தனைகளின் நிறைவேற்றம் குறித்து பதிவாளர் மனநிறைவடைதால் அந்நபரை பயன்படுத்த அனுமதிப்பார்.[பிரிவு.49(2)]

குற்றங்களுக்குத் தண்டணை...

  1. பொய்யாக வணிகக் குறியை, வணிக விவரிப்புகளை பயன்படுத்தியதற்கான 6 மாதம் வரை சிறை தண்டணையும், ரூ.50,000 முதல் 2 இலட்சம் வரை அபராதமும் விதிக்கப் படும் [பிரிவு.103]

2.பொய்யாக வணிகக் குறியை, வணிக விவரிப்புகளை கொண்ட பொருட்களை    விற்றால் பயன்படுத்தியதற்கான 6 மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறை       தண்டணையும், ரூ.50,000 முதல் 2 இலட்சம் வரை அபராதமும் விதிக்கப் படும் [பிரிவு.114]

  1. வணிகக் குறி பதிவு செய்யப்பட்டுள்ளது என பொய்யாக உரைத்தால் 3 ஆண்டு வரை சிறை தண்டணை அபராதமும் விதிக்கப்படும் [பிரிவு.107]

  2. தொழிலுக்கான இடமானது, வணிகக் குறிகள் அலுவலகத்துடன் தொடர்புள்ளாதாக முறையற்று கூறினால் 2 ஆண்டு வரை சிறை தண்டணையும் அபராதமும் விதிக்கப்படும் [பிரிவு.108]

  3. பதிவேட்டில் பொய்யான குறிப்புகளை ஏற்படுத்தினால் 2 ஆண்டு வரை சிறை தண்டணையும் அபராதமும் விதிக்கப்படும் [பிரிவு.109]

  4. கம்பெனிகள் இழைக்கும் குற்றத்திற்கு பொறுப்புள்ள ஓவ்வொரு நபரும் பொறுப்பாவார்கள் [பிரிவு.114]

 

முகவரிகள்

Controller General of Patents, Designs & Trade Marks

Bhoudhik Sampada Bhavan

Antop Hill, S.M. Road, Mumbai-400037

 

Intellectual Property Office

Intellectual Property Office Building

G.S.T. Road, Guindy, Chennai-600032

 

Intellectual Property Appellate Board

Annexe-I, Guna Complex, II Floor

443 Anna Salai

Teynampet

Chennai

 

Tags : Trade Marks act1999 வணிகக் குறிகள் சட்டம்1999

More from the section

தேர்தல் ஸ்பெஷல் - 3 புதிய அரசியல் கட்சி தொடங்குவது எப்படி?
தேர்தல் ஸ்பெஷல் -2 பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?
தேர்தல் ஸ்பெஷல்-1 பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் என்னென்ன?
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - விளையாட்டு வீரர்களுக்கு செய்யும் உதவிகள் என்னென்ன?
நோட்டா (NOTA) - 49-O வாக்கு என்றால் என்ன?