புதன்கிழமை 23 ஜனவரி 2019

பகுதி - 895

By ஹரி கிருஷ்ணன்| Published: 16th August 2018 12:00 AM

 

பதச் சேதம்

சொற் பொருள்

புரை படும் செற்ற குற்ற மனத்தன் தவம் இலன் சுத்த சத்ய அசத்யன் புகல் இலன் சுற்ற செத்தையுள் நிற்கும் துரிசாளன்

 

புரைபடும்: குற்றத்தை உடைய; செற்ற(ம்): கோபம்; சுத்த: கலப்பற்ற; சத்ய: மெய்யாக; அசத்யன்: பொய்யன்; சுற்ற: சுற்றுகின்ற, சுழல்கின்ற; செத்தையுள்: குப்பையைப் போல; துரிசாளன்: துக்கத்தை உடையவன்;

பொறை இலன் கொத்து தத்வ விகற்பம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும் பொருளுடன் பற்று சற்றும் இல் வெற்றன் கொடியேன் நின்

 

பொறை இலன்: பொறுமை இல்லாதவன்; கொத்து: பலதரப்பட்ட; வெற்றன்: பயனற்றவன்;

கரை அறும் சித்ர சொல் புகழ் கற்கும் கலை இலன் கட்டை புத்தியன் மட்டன் கதி இலன் செச்சை பொன் புய வெற்பும் கதிர் வேலும்

 

கட்டைப் புத்தியன்: மழுங்கிய அறிவைக் கொண்டவன்; மட்டன்: மட்டமானவன்—மூடன்; செச்சை: வெட்சி மாலை;

கதிரையும் சக்ர பொற்றையும் மற்றும் பதிகளும் பொற்பு கச்சியும் முற்றும் கனவிலும் சித்தத்தில் கருதி கொண்டு அடைவேனோ

 

கதிரையும்: கதிர்காமத் தலத்தையும்; சக்ரப் பொற்றையும்: வட்ட மலையையும் (இது கோவைக்கு அருகிலுள்ளது); பதிகளும்: தலங்களும்; கச்சியும்: காஞ்சியையும்;

குரை தரும் சுற்றும் சத்த சமுத்ரம் கதறி வெந்து உட்க் கண் புர(ம்) துட்டன் குலம் அடங்க கெட்டு ஒழிய சென்று ஒரு நேமி

 

குரைதரும்: ஒலிக்கின்றதும்; சுற்றும்: சுற்றியுள்ளதும்; சத்த சமுத்ரம்: சப்த சமுத்திரம்—ஏழு கடல்; நேமி: அடுத்த அடியில் காண்க;

குவடு ஒதுங்க சொர்க்கத்தர் இடுக்கம் கெட நடுங்க திக்கில் கிரி வர்க்கம் குலிச துங்க கை கொற்றவன் நத்தம் குடி ஏற

 

நேமிக் குவடு: சக்கரவாளகிரி (நேமி: சக்கர); இடுக்கம்: துன்பம்; நடுங்கத் திக்கில் கிரிவர்க்கம்—திக்குகளில் உள்ள மலைகள் நடுக்கம் எய்த; குலிச: குலிசாயுதத்தை (வஜ்ராயுதத்தை); துங்க: தூய; நத்தம்: ஊர் (தன் ஊரில், தேவலோகத்தில்);  

தரை விசும்பை சிட்டித்த இருக்கன் சதுர் முகன் சிட்சை பட்டு ஒழிய சந்ததம் வந்திக்க பெற்றவர் தத்தம் பகை ஓட

 

சிட்டித்த: சிருஷ்டித்த, படைத்த; இருக்கன்: ரிக் வேதத்தை ஓதுபவன்—பிரமன்; சிட்சைபட்டு: தண்டிக்கப்ப்பட்டு; சந்ததம்: எப்போதும்; வந்திக்கப்பெற்றவர்: வணங்கப்படுபவர்கள்;

தகைய தண்டை பொன் சித்ர விசித்ர தரு சதங்கை கொத்து ஒத்து முழக்கும் சரண கஞ்சத்தில் பொன் கழல் கட்டும் பெருமாளே.

 

தகைய: அழகிய; சரண கஞ்சத்தில்: திருவடித் தாமரையில் (கஞ்சம்: தாமரை);

புரைபடுஞ் செற்றக் குற்றமனத்தன் தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன் புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் துரிசாளன்... தீராத கோபம் முதலான குற்றங்கள் அனைத்தையும் கொண்டிருக்கும் கறைபடிந்த மனத்தை உடையவன்; தவம் அற்றவன்; கலப்பற்ற பொய்யையே பேசுபவன்; கதியற்றவன்; காற்றில் சுழல்கின்ற குப்பையைப் போன்றவன்; துக்கத்தை உடையவன்;

பொறையிலன் கொத்துத் தத்வ விகற்பஞ் சகலமும் பற்றி பற்றற நிற்கும் பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன்...பொறுமையற்றவன்; மாறுபட்டிருக்கின்ற பலவிதமான உண்மைகளைப் பற்றிக்கொண்டவன்; பற்றில்லாமல் நிற்கின்ற மெய்ப்பொருளின்மீது பற்று வைக்காதவன்; பயனற்றவன்;

கொடியேன் நின் கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங் கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன் கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங் கதிர்வேலும்...கொடியவன்; உன்னுடைய எல்லையில்லாத அழகிய புகழைக் கற்கும் ஞானமற்றவன்; மழுங்கிய அறிவைக் கொண்டவன்; மட்டமானவன்; நற்கதியை அடைகின்ற பேறில்லாதவன்; வெட்சிமலரைச் சூடிய மலைபோன்ற தோள்களையும் ஒளிவீசுகின்ற வேலாயுதத்தையும்,

கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும் பதிகளும் பொற்புக் கச்சியு முற்றும் கனவிலும் சித்தத்தில் கருதிக்கொண்டு அடைவேனோ...கதிர்காமத்தையும், வட்டமலையையும்* மற்ற திருத்தலங்களையும், அழகான காஞ்சீபுரத்தையும் எப்போதும் கனவிலும் நனவிலும் தியானித்து உன்னை அடையப் பெறுவேனா? (அடையும்படி அருள்புரிய வேண்டும்.)

(* வட்டமலை: கோவைக்கு அருகிலுள்ள தலம்.)

குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங் கதறிவெந்து உட்க கட்புர துட்டன் குலமடங்கக்கெட்டு ஒட்டொழிய... இரைச்சலிடுகின்ற ஏழு சமுத்திரங்களும் கதறி, வற்றிப் போக; வீரமகேந்திரபுரியை ஆண்ட துஷ்டனான சூரன் தன் குலத்தோடு முற்றவும் அழியவம்;

சென்று ஒருநேமிக் குவடு ஒதுங்க சொர்க்கத்தர் இடுக்கங் கெட நடுங்கத் திக்கிற் கிரி வர்க்கம் குலிச துங்கக்கைக் கொற்றவன் நத்தங் குடியேற... ஒப்பற்ற சக்ரவாளகிரி தன் இடத்தைவிட்டுப் பெயரவும்; தேவர்கள் தங்களுடைய துன்பம் நீங்கப் பெறவும்; எட்டுத் திக்குகளிளும் உள்ள மலைகளின் கூட்டங்கள் எல்லாம் நடுங்கவும்; வஜ்ராயுதத்தைத் தன் தூய கரத்தில் ஏந்தியிருக்கின்ற இந்திரன் தன்னுடைய ஊரான பொன்னகரத்திலே மீண்டும் குடியேறவும்;

தரைவிசும்பைச் சிட்டித்த இருக்கன் சதுர்முகன் சிட்சைப் பட்டொழிய சந்ததமும் வந்திக்கப் பெற்றவர் தத்தம் பகையோட... பூமியையும் ஆகாயத்தையும் படைத்தவனும், ரிக் வேதத்தில் வல்லவனுமான நான்முகப் பிரமன் தண்டனைபெற்று (குட்டப்பட்டு) விலகவும்; எப்போதும் வணங்கப் பெறுபவர்களான தேவர்களுடைய பகைவர்கள் (அசுரர்கள்) ஓட்டம்பிடிக்கவும்;

தகைய தண்டைப்பொற் சித்ரவி சித்ரந் தருசதங்கைக் கொத்து ஒத்துமு ழக்குஞ் சரண கஞ்சத்தில் பொற்கழல் கட்டும் பெருமாளே... அழகிய தண்டையும் பொன்னாலான சதங்கைக் கொத்துகளும் ஒலிக்கின்ற பாதத் தாமரைகளில் வீரக் கழலைக் கட்டிக்கொண்ட பெருமாளே!

சுருக்க உரை

ஒலிக்கின்றதும் உலகைச் சூழ்ந்திருப்பதுமான ஏழு கடலும் கதறி வற்றிப் போகும்படியும்; பெருமையுள்ள வீர மகேந்திரபுரத்திலிருந்த துஷ்டனான சூரபதுமன் தன்னுடைய குலம் முழுவதும் அழிபட்டு ஓடும்படியும்; சக்ரவாளகிரி தன்னுடைய இடத்தைவிட்டு ஒதுங்கும்படியும்; தேவர்களுடைய துன்பம் தொலையும்படியும்; திக்கிலுள்ள மலைக்கூட்டங்களெல்லாம் நடுங்கும்படியும்; குலிசாயுதத்தை ஏந்திய இந்திரன் தன்னுடைய அமராவதிக்குத் திரும்பும்படியும்; மண்ணையும் விண்ணையும் படைத்த நான்முகப் பிரமன் குட்டுப்பட்டு விலகும்படியும்; எப்போதும் வணங்கப்படுகின்ற தேவர்களுடைய பகைவர்களான அசுரர்கள் ஓட்டம்பிடிக்கும்படியும்,

தண்டையும் பொற்சதங்கையும் திகழ்கின்ற திருவடித் தாமரையில் வீரக்கழலைக் கட்டிய பெருமாளே!

தணியாத கோபம் முதலான குற்றங்களைச் சுமந்திருக்கும் மனத்தை உடையவனும்; தவம் இல்லாதவனும்; பொய்யனும்; கதியற்றவனும்; துக்கம் நிறைந்தவனும்; பொறுமையற்றவனும்; வேறுபடுகின்ற பலவிதமான உண்மைகளின் மீது பற்று வைத்தவனும்; தெய்வத்தின் மீது பற்று வைப்பதற்கான ஞானமற்றவனும்; மழுங்கிய அறிவை உடையவனும்; மூடனுமான நான் வெட்சிமாலையை அணிந்த அழகிய புய மலைகளையும்; ஒளிவீசும் வேலாயுதத்தையும்; கதிர்காமத் தலத்தையும்; வட்டமலையையும்; மற்றுமுள்ள தலங்களையும்; அழகிய கச்சிப் பதியையும் எப்போதும் என்னுடைய உள்ளத்தில் தியானித்துக்கொண்டு உன்னை அடையும் பேற்றைப் பெறவேண்டும்.

More from the section

பானு சப்தமி: அரசாங்க வேலைக்குச் செல்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கிறீர்களா? சூரிய பகவானை வணங்குங்க!
பகுதி - 940
பகுதி - 939
பகுதி - 938
பகுதி - 937