புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

பகுதி - 899

By ஹரி கிருஷ்ணன்| Published: 20th August 2018 12:55 PM

 

பதச் சேதம்

சொற் பொருள்

மகரம் அது கெட இரு குமிழ் அடைசி வார் ஆர் சரங்கள் என நீளும்

 

மகரம்: மகர மீன்; குமிழ்: குமிழம்பூ—நாசி(க்கு உவமை); அடைசி: அடைசுதல்—நெருங்குதல்;  வார் ஆர்: நீளமான; சரங்கள்: அம்புகள்;

மதர் விழி வலை கொ(ண்)டு உலகினில் மனிதர் வாழ் நாள் அடங்க வருவார் தம்

 

மதர்விழி: மதர்த்த விழி, செருக்குள்ள விழி;

பகர் தரு மொழியில் ம்ருக்மத களப பாடீர கும்பம் மிசை வாவி

 

ம்ருகமத(ம்): கஸ்தூரி; களப பாடீர: பாடீரக் களப—சந்தனக் கலவை (பாடீர(ம்): சந்தனம்; களப(ம்): கலவை; கும்பம்: குடம்—மார்பகம்; வாவி: தாவி, பாய்ந்து;

படி மனது உனது பரிபுர சரண பாதார விந்த(ம்) நினையாதோ

 

படி மனது: படிகின்ற மனது; பரிபுர(ம்): சிலம்பு; பாதாரவிந்தம்: பாத அரவிந்தம்—பாதத் தாமரை;

நகமுக சமுக நிருதரும் மடிய நானா விலங்கல் பொடியாக

 

நக(ம்): மலை; நகமுக சமுக: மலையிடங்களிலே வாழ்கின்ற குடி; நிருதரும்: அரக்கர்களும்; நானா: பலவிதமான; விலங்கல்: மலை;

நதி பதி கதற ஒரு கணை தெரியு(ம்) நாராயணன் தன் மருகோனே

 

நதிபதி: கடல்;

அகல் நக கனக சிவ தலம் முழுதும் ஆராம பந்தி அவை தோறும்

 

அகல்: அகன்ற; நக: மலையான; கனக: கனகனே—செம்பொன் ஆனவனே; ஆராம(ம்): சோலை; பந்தி: வரிசை;

அரி அளி விததி முறை முறை கருதும் ஆரூர் அமர்ந்த பெருமாளே.

 

அரி: அழகிய; அளி: வண்டுகள்; விததி: கூட்டம்;

மகரம் அது கெட இரு குமிழ் அடைசி வார் ஆர் சரங்கள் என நீளும் மதர் இருவிழி வலை கொ(ண்)டு... மகர மீனும் (தன் முன்னே) நிலைகெடும்படியாக; குமிழம்பூவை;ப போன்ற மூக்கின் இரு பகுதிகளையும் நெருக்கிச் சேர்த்து; நீளம் மிகுந்த அம்புகள் எனத்தக்க அம்புளைப் போல நீண்டதும் செருக்குள்ளதுமான கண்களாகிய வலையைக் கொண்டு,

உலகினில் மனிதர் வாழ் நாள் அடங்க வருவார் தம் பகர் தரு மொழியில் ம்ருக்மத களப பாடீர கும்பம் மிசை வாவிப் படி மனது உனது பரிபுர சரண பாதார விந்த(ம்) நினையாதோ... உலகத்திலுள்ள ஆண்களுடைய வாழ்நாள் சுருங்கும்படியாக எதிரிலே வருபவர்களான பெண்கள் பேசுகின்ற பேச்சின் மீதும்; கஸ்தூரியையும் சந்தனக் கலவையும் பூசிய குடம்போன்ற மார்பகங்களின் மீதும் தாவிப் படிகின்ற என்னுடைய மனம், உன்னுடைய சிலம்பணிந்த பாதத் தாமரைகளை நினைக்க மாட்டாதோ? (நினைக்கும்படி அருளவேண்டும்.)

நகமுக சமுக நிருதரும் மடிய நானா விலங்கல் பொடியாக நதி பதி கதற ஒரு கணை தெரியு(ம்) நாராயணன் தன் மருகோனே...மலைகளில் வாழ்பவர்களான அரக்கர்கள் இறக்கும்படியாகவும்; பலவகையான மலைகள் பொடியாகும்படியாகவும்; கடல் கதறும்படியாகவும் ஒப்பில்லாத அம்பை எய்தவனான ராமனுடைய மருகனே!

அகல் நக கனக சிவ தலம் முழுதும் ஆராம பந்தி அவை தோறும் அரி அளி விததி முறை முறை கருதும் ஆரூர் அமர்ந்த பெருமாளே.... அகன்ற மலைகளுக்கு உரியவனே!  செம்பொன் வடிவினனே! சிவதலங்கள் எல்லாவற்றிலும் அமர்ந்தவனே! வரிசையான சோலைகள்தோறும் வண்டுக் கூட்டங்கள் வரிசை வரிசையாக (மலர்த் தேனை) விரும்பி மொய்க்கின்ற திருவாரூரில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

மலை இடங்களில் வாழும் அரக்கர்கள் இறந்துபடும்படியாகவும்; பலவிதமான மலைகள் பொடிபடும்படியாகவும்; கடல் கதறும்படியாகவும்; ஒப்பற்ற அம்பை எய்தவனான ராமனுடைய மருகனே! அகன்ற மலையிடங்களுக்கு உரியவனே! செம்பொன்னின் வடிவினனே! எல்லாச் சிவதலங்களிலும் அமர்ந்திருக்கின்றவனே!  சோலைகளின் வரிசைதோறும் அழகிய வண்டுகளின் கூட்டம் மலர்தேனை எண்ணி மொய்க்கின்ற திருவாரூரில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

மகர மீனும் தன் நிலைகெடும்படியாக நெருக்கிச் சேர்க்கப்பட்ட இரு குமிழ மலர்களைப் போன்ற மூக்கும்; நீண்ட அம்புகளுக்கு இணையான கண்கள் என்னும் வலையை வீசுகின்ற பெண்களுடைய பேச்சிலும்; கஸ்தூரியையும் சந்தனக் கலவையையும் பூசிய மார்பகங்களிலும் சென்று சென்று படிகின்ற என் மனம், சிலம்புகளை அணிந்த உன் பாதத் தாமரைகளை நினைக்க மாட்டாவோ? (நினைக்கும்படியாக அருள வேண்டும்.)

More from the section

பானு சப்தமி: அரசாங்க வேலைக்குச் செல்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கிறீர்களா? சூரிய பகவானை வணங்குங்க!
பகுதி - 940
பகுதி - 939
பகுதி - 938
பகுதி - 937