செவ்வாய்க்கிழமை 19 மார்ச் 2019

பகுதி - 903

By ஹரி கிருஷ்ணன்| Published: 13th September 2018 12:00 AM

 

பதச் சேதம்

சொற் பொருள்

விந்து பேதித்தவடிவங்களாய்
எத்திசையும் மின் சரஅசர குலமும் வந்துஉலாவி

பேதித்த: பேதம், வேறுபட்ட; மின்: ஒளிபெற்ற; சராசர்க் குலமும்: சர, அசரக் குலமும்—அசையும், அசையாப் பொருட்கள்;

விண்டு போய் விட்டஉடல் சிந்தை தான்
உற்று அறியும் மிஞ்ச நீவிட்ட வடிவங்களாலே

 

விண்டுபோய்: பிரிந்து போய்;

வந்து நாயில் கடையன்நொந்து 
ஞான பதவி வந்து தா இக்கணமேஎன்று கூற

 

 

மைந்தர் தாவி புகழதந்தை தாய் 
உற்றுஉருகி வந்து சேயைதழுவல் சிந்தியாதோ

 

 

அந்தகாரத்தில் இடிஎன்ப வாய்விட்டு
வரும் அங்கி பார்வை பறையர்மங்கி மாள

 

அந்தகாரத்தில்: பேரிருளில்; வாய்விட்டு வரும்: கூச்சலிட்டு வரும்; அங்கி: அக்கினி; பறையர்: இழிந்தவர்களான அசுரர்கள்;

அம் கை வேல் விட்டுஅருளி இந்திரலோகத்தில் 
மகிழ் அண்டர் ஏற கிருபைகொண்ட பாலா

 

 

எந்தன் ஆவிக்கு உதவுசந்த்ர சேர்வை 
சடையர் எந்தை பாகத்துஉறையும் அந்த மாது

 

சந்த்ர சேர்வைச் சடையர்: சந்திரனைச் சேர்த்து வைத்துள்ள சடையார்;

எங்குமாய் நிற்கும் ஒருகந்தனூர் 
சத்தி புகழ் எந்தை பூசித்து மகிழ்தம்பிரானே.

 

 

விந்துபேதித்த வடிவங்களாய் எத்திசையு மின்சரா சர்க்குலமும் வந்துலாவி... விந்து, வெவ்வேறு உருவங்களாய் வடிவெடுத்து எல்லாத் திசைகளிலும், அசைகின்றனவும் அசையாதனவுமான கூட்டங்களாக இவ்வுலகிலே உலாவி, காலம் கழிந்து;

விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதான் உற்றறியு மிஞ்சநீ விட்டவடிவங்களாலே... அதன்பிறகு உடலை விட்டுப் பிரிவதை என் மனம் ஆராய்ந்து அறியும்.  இவ்வாறு நீ எனக்கு அளித்த பல வடிவங்களையுடைய பிறவிகளிலே,

வந்து நாயிற்கடையன் நொந்து ஞானப்பதவி வந்துதா இக்கணமெ யென்றுகூற... நான் நாயினும் கடையேனாக வந்து தோன்றி மனம் நொந்து, உன்னிடத்தில் ஞான நிலையை இப்போதே தரவேண்டும் என்று கோரும்போது,

மைந்தர்தாவிப்புகழ தந்தைதாய் உற்றுருகி வந்துசேயைத்தழுவல் சிந்தியாதோ... குழந்தைகள் பெற்றோர்களிடத்திலே தாவி வந்து புகழ்ந்தால் அவர்களுடைய மனம் உருகி, அக்குழந்தைகளை வாரித் தழுவிக்கொள்ளும் மனநிலையை நீ சிந்திக்க மாட்டாயா? (குழந்தைகளைத் தழுவிக்கொள்ளும் பெற்றோரின் மனநிலையை நீ அடைந்து அடியேனை ஆட்கொள்ள வேண்டும்.)

அந்தகாரத்தில் இடி யென்பவாய் விட்டுவரும் அங்கிபார்வைப்பறையர் மங்கிமாள... பேரிருட்டிலே வாய்விட்டுக் கூச்சலிட்டபடியும் கண்களில் பொறி பறக்கும்படியும் வருகின்ற இழிவான அசுரர்கள் மங்கி அழிந்து போகும்படியாக,

அங்கைவேல் விட்டருளி இந்த்ரலோ கத்தின்மகிழ் அண்டர் ஏறக்கிருபை கொண்டபாலா... அழகிய கையிலுள்ள வேலை எறிந்தருளி, தேவர்கள் மீண்டும் இந்திரலோகத்தில் குடியேறும்படி கிருபை செய்தருளிய குமரா!

எந்தன் ஆவிக்குதவு சந்த்ரசேர்வைச்சடையர் எந்தை பாகத்துறையும் அந்தமாது... என்னுடைய ஆன்மாவுக்கு உதவியவரும்* பிறைச்சந்திரனைச் சடையிலே சூடியுள்ளவரும் என் தந்தையுமான சிவபெருமானும் அவருடைய இடது பாகத்தில் அமர்ந்துள்ள உமையம்மையும்,

(அருணகிரிநாதரின் வாழ்விலே சிவபெருமானே அவர்முன் தோன்றி திருநீறு அளித்தருளியதை இது குறிக்கிறது.)

எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ் எந்தைபூசித்துமகிழ் தம்பிரானே.... எல்லா இடங்களுமாக நிறைந்து விளங்குகின்ற கந்தனூரில், தேவியால் புகழப்படுபவரான எந்தையான சிவபெருமான் பூசித்து மகிழ்கின்ற தம்பிரானே!

சுருக்க உரை

பேரிருளிலே, இடி இடிப்பதைப்போல கூச்சலிட்டு வருபவரும், தீப்பொறி பறக்கின்ற கண்களை உடையவர்களுமான அரக்கர்கள் அழிந்துபோகும்படியாக, திருக்கரத்திலுள்ள வேலை எறிந்தவனே!  அதனால் தேவர்களை மீண்டும் அமரலோகத்தில் குடியேற வைத்தவனே! என் ஆன்மாவுக்கு உதவியவரும் சந்திரனைச் சடையிலே சூடியவரும் எந்தையும் ஆன சிவபெருமானும் அவருடைய இடது பாகத்தில் வீற்றிருக்கும் உமையம்மையம் எங்கும் நிறைந்து வீற்றிருப்பதான ஒப்பற்ற கந்தனூரில் தேவியால் புகழப்படுபவரான எந்தை, சிவபெருமானால் பூசிக்கப்படுகின்ற தம்பிரானே!

பற்பல வடிவங்களான உயிர்களாக உருவெடுக்கின்ற விந்து, அசைகின்ற, அசையாத பொருள்களின் கூட்டமாக இந்த உலகத்திலே வந்து தோன்றி, சிலகாலம் வாழ்ந்து அதன்பின்னே மடிந்து, உடலைவிட்டுப் பிரிந்து போகின்றது என்பதை அடியேன் நன்கு ஆராய்ந்து; நீ எனக்குக் கொடுக்கின்ற பலவிதமான பிறவிகளில் நாயினும் கடையேனாக வந்து தோன்றியுள்ள இந்தச் சமயத்தில் அடியேனுக்கு ஞானநிலையைத் தந்தருள வேண்டும் என்றுவந்து முறையிடும்போது, தங்களிடத்திலே தாவிவந்து போற்றுகின்ற குழந்தைகளைப் பெற்றோர் வாரியெடுத்துக்கொள்வதைப் போல நீ என்னை ஆட்கொண்டருள வேண்டும்.

More from the section

பானு சப்தமி: அரசாங்க வேலைக்குச் செல்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கிறீர்களா? சூரிய பகவானை வணங்குங்க!
பகுதி - 940
பகுதி - 939
பகுதி - 938
பகுதி - 937