புதன்கிழமை 16 ஜனவரி 2019

மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா' முறையைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN | Published: 29th August 2018 01:10 AM

முற்றிலும் சரி
மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் பிரதிநிதிகள் சார்ந்துள்ள அரசியல் கட்சி வேட்பாளர்களே கட்சி சார்பாக நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தமது கட்சி வேட்பாளரை ஆதரிக்க வேண்டியது கட்டாயமாகும். அங்கு சுயேச்சை பிரதிநிதிகள் இருக்க வாய்ப்பு இல்லை. இந்நிலையில் நோட்டா'விற்கு அங்கு வேலையில்லை. எனவே, மாநிலங்களவைத் தேர்தலில், நோட்டா' முறையைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது முற்றிலும் சரியே.
ச. கிருஷ்ணசாமி, மதுரை.

வலுவான அமைப்பு
மாநிலங்களவைத் தேர்தலில், நோட்டா' வைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது சரியே. மாநிலங்களவை என்பது ஜனநாயக மாளிகையின் வலுவான அமைப்பு. பொது வாழ்வில் நேர்மையான சேவையாளர்களாகவும், கலை, இலக்கியம், சமூகம் போன்றவற்றில் தீவிர ஈடுபடும் அக்கறையும் கொண்டவர்களே இதில் இருப்பது மரபு. வாக்களிப்போருக்கு யாரையும் பிடிக்காத நிலைக்கு இடமே இல்லை. எனவே, மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா' தேவையற்றது.
கி. பாஷ்யம், சலுப்பை.

தவறான முடிவு
மாநிலங்களவைத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கப் போவதில்லை என்றாலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் பெரும்பாலும் தாங்கள் சார்ந்த கட்சிக்கு ஆதரவான ஓட்டையே செலுத்துவார்கள் என்றாலும் கூட ஜனநாயக தத்துவத்தின்படி நோட்டா' முறையை சிலர் பயன்படுத்தக்கூடும். எனவே மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவைத் தடை செய்வது என்பது தவறான முடிவாகும்.
கு. பிரபாசந்த், செஞ்சிக் கோட்டை.

பாரபட்சம்
பொதுமக்கள் வாக்களிக்கும் பொதுத்தேர்தலிலோ, இடைத்தேர்தலிலோ யாருக்கும் வாக்கு அளிக்கும் எண்ணம் இல்லை என்கிற நோட்டா' பிரிவு இருப்பது பொருத்தமானதாம். நோட்டா' முறையை மாநிலங்களவை தேர்தலில் அனுமதிப்பது லஞ்சம், பாரபட்சமாக வாக்களிப்பது போன்றவைகளை ஊக்குவிப்பதாக அமையுமாம். மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்கள் மக்கள் அல்லவா? ஆகவே மாநிலங்களவைத் தேர்தலில், நோட்டா' முறையைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருப்பது சரியானதல்ல.
என்.கே. திவாகரன், கோயம்புத்தூர்.

தேவையற்றது
கட்சியின் பிரதிநிதிகளாக மாநிலங்களவைக்குச் செல்லும் உறுப்பினர்கள், ஒரு குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவர்களாக உள்ளதாலும் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் சேர்ந்து தேர்வு செய்யும் நிலை உள்ளதாலும் மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா' முறை தேவையற்றது. எனவே தடை விதிக்கப்பட்டிருப்பது சரிதான். பொதுத் தேர்தல் வேறு; மாநிலங்களவைத் தேர்தல் வேறு. நோட்டா' முறையை மாநிலங்களளைத் தேர்தலில் பயன்படுத்தக் கூடாது!
உ. இராசமாணிக்கம், கடலூர்.

ஜனநாயகக் கடமை
மாநிலங்களவைத் தேர்தல் உள்பட அனைத்துத் தேர்தல்களிலும், நோட்டா' முறையைப் பயன்படுத்தலாம். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரும் பிடிக்காத நிலையில் மட்டுமே நோட்டா'வைத் தேர்வு செய்கின்றனர். ஏதேனும் ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தை வாக்காளருக்கு ஏற்படுத்தக் கூடாது. ஒவ்வொரு வாக்காளரும் மனநிறைவாக வாக்களிக்க வேண்டும். அது அவரின் ஜனநாயகக் கடமை. 
வீ. வேணுகுமார், கண்ணமங்கலம்.

முன்னுதாரணம்
மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா'வை அனுமதிப்பது தவறு. அது லஞ்சம், பாரபட்சமாக வாக்களித்தல் போன்ற முறைகேடுகளுக்கே வழிவகுக்கும். மக்கள் பிரதிநிதிகள் வாக்களிக்கும் தேர்தலில் நோட்டா'வை அனுமதிப்பது முறையாக இருக்காது. இந்தப் போக்கு பின்னாளில் தவறான முன்னுதாரணத்திற்கு காரணமாகி விடக் கூடும். நோட்டா முறையைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை சரியானதே ஆகும்.
என். பி.எஸ்.மணியன், மணவாளநகர்.

நல்லதல்ல
மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா' முறையைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது சரியே. பொதுமக்கள் வாக்களிக்கும் தேர்தலில் நோட்டா'வைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா முறையை பயன்படுத்தக் கூடாது. ஒரு கட்சியின் கொறடா உத்தரவை மீறி அக்கட்சி உறுப்பினர் வாக்களிப்பது கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல. அது பல வகையான தவறுகளுக்கு இடமளித்து விடும். 
என்.எஸ். முத்துகிருஷ்ணராஜா, 
ராஜபாளையம்.

சுய சிந்தனை
மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா' முறையைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது சரியல்ல. ஒரு கட்சியில் தேர்வு செய்யப்பட்ட ஒரு மாநிலங்களவை உறுப்பினர் அந்த பதவிக் காலம் முழுவதும் அந்த கட்சிக்கு கட்டுப்பட்டு அடிமையாக இருக்க வேண்டும் என்பது நமது ஜனநாயக நாட்டில் ஏற்புடையதல்ல. அவருக்கென்று சுயசிந்தனையோடு வாக்களிக்கும் உரிமை வேண்டும். அதுவும் கட்சி மாறி ஒட்டுப் போடாமல் நோட்டா'வைக் கூட தேர்வு செய்யும் உரிமை அவருக்கு இல்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.
பொன். கருணாநிதி, கோட்டூர்.

கடமை
மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டா'வுக்கு வாக்களிப்பது அவர்களின் கடமை தவறிய செயலாகவே கருதப்படும். ஒருவரை ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்களிக்குமாறு அவர்கள் சார்ந்த கட்சித் தலைவர் காட்டும் அறிவுறுத்தலுக்குக் கட்டுப்பட்டு வாக்களிப்பது அந்த உறுப்பினரின் கடமையாகும். நோட்டா'வைப் பயன்படுத்தவா உறுப்பினர்களை மாநிலங்களவைக்கு அனுப்பினார்கள்? எனவே நோட்டா'வுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது சரியானதேயாகும்.
மு.அ.ஆ. செல்வராசு, வல்லம்.

குதிரை பேரம்
மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவை அனுமதிப்பது தவறு. இது குதிரை பேரத்திற்கே வழி வகுக்கும். எல்லாக் கட்சிகளிலும் சில அதிருப்தி உறுப்பினர்கள் இருந்தே தீருவர். இதனால் கட்சியின் கொறடா உத்தரவிற்கு பலனின்றிப் போய்விடும். பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் நோட்டா' முறை சரியாக இருக்குமே தவிர, மாநிலங்களவை தேர்தலுக்கு அது உகந்ததல்ல.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.
ஏற்கத்தக்கதே
மக்களாட்சியில் குடியுரிமை, வாக்குரிமை இரண்டும் இரு கண்கள் போன்றவை. எவரொருவரும் தான் விரும்பும் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும். தேர்தலையும், வேட்பாளர்களையும் புறக்கணிப்பது கொடிய பாவம். நாட்டில் மக்கள் உரிமை உள்ள அனைவரும் வாக்குரிமை பெற்று வாக்களிப்பது தான் சரி. இந்த முடிவு ஏற்தக்கத்ததுதான்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

முறைகேடுகள்
மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா'வை அனுமதிக்க முடியாது என்பது சரிதான். உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது, முறைகேடுகளில் ஈடுபடுவது, லஞ்சம் தருதல், கட்சி மாறி வாக்களிப்பது போன்றவை இதனால் உருவாகும். பொதுமக்கள் வாக்களிக்கும் தேர்தலில் நோட்டாவைப் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதே. மக்கள் பிரதிநிதிகள் வாக்களிக்கும் தேர்தலில் தேவையற்றது.
கோ. மோகனமணி, குளித்தலை.

மக்கள் பிரதிநிதி
பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களில் எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என நோட்டா'வை பயன்படுத்த பொதுமக்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், மாநிலங்களிவையில் வாக்களிக்கும் வாக்காளர்கள் அவையின் மாண்பைக் காக்கவும், தாம் சார்ந்த கட்சியின் கட்டளையை ஏற்கவும் வேண்டியுள்ளதால் மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா' பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பது சரியே.
சி. பால்மணி, கொட்டாரம்.

ஜனநாயகத்திற்கு எதிரானது.
மாநிலங்களவை உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள். அவர்கள் மக்கள் சார்பில்தான் வாக்களிக்கிறார்கள். அந்தத் தேர்தலில் நோட்டா'வை அனுமதிப்பது முறையாக இருக்காது. நோட்டா'வை அனுமதித்தால், மாநிலங்களவைத் தேர்தலில் லஞ்சம் பெறுதல், வேறு கட்சிக்கு வாக்களித்தல் போன்ற ஜனநாயகத்துக்கு எதிரான நடைமுறைகள் அரங்கேறும். அவற்றை ஊக்குவிப்பதாகவே நோட்டா' அமைந்து விடும். எனவே, 
மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா' வேண்டாம்.
சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.


 

More from the section

சிறார்களுக்கு பாலியல் தொல்லை அளித்தால் மரண தண்டனை அளிக்கும் வகையில் போக்சோ' சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
கடந்த வாரம் கேட்கப்பட்ட "அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்துவது குறித்து, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது நல்ல யோசனையா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
ஐந்து மாநில பேரவைத் தேர்தல்களின் முடிவுகளை வைத்து மக்களவைத் தேர்தலை கணிக்க முடியாது என்ற கருத்து சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
ரிசர்வ் வங்கி, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது சரிதானா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்கிற கருத்து சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...