20 ஜனவரி 2019

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களையும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN | Published: 12th September 2018 01:31 AM

சரியானதே
பெட்ரோல் - டீசல் போன்ற எரி பொருள்களையும் ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்பது சரியானதே. பெட்ரோலுக்கு நாம் செலுத்தும் விலையில் - மத்திய - மாநில அரசுகளில் வரிகள் சுமார் 86% அந்த வரி கடந்த 4 ஆண்டுகள் 11% வரை அதிகரித்து உள்ளது. தற்போது பெட்ரோல் -டீசல் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. அதனால், விலைவாசியும் அதிகரித்துள்ளது. அரசுகள் கலால் வரியைக் குறைக்க வேண்டும். அரசுகள் குறைக்காத நிலையில் பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

தவறான செயல்
பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்களையும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அரசுக்கு வருமானமாவது கிட்டும். மக்கள் நலத் திட்டங்களுக்கு அதை உபயோகப்படுத்தலாம். பெட்ரோல், டீசல் விலையும் கட்டுக்குள் இருக்கும். பெட்ரோல் நிலையங்களையும் ரசீது தரும்படி கேட்க முடியும். பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலையை நிறுவனங்களே தீர்மானிப்பது தவறான செயல்.
கி. சந்தானம், மதுரை.

ஏன் பொருந்தாது?
ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டதே பன்முக வரி விதிப்பைக் கட்டுப்படுத்தி ஒரே விதமான வரி வசூலிக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஒரே தேசம், ஒரே வரி என்கிற கோஷம் பெட்ரோல், டீசலுக்கு ஏன் பொருந்தாது? சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போது இங்கே பெட்ரோல் விலை உயருகிறது. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லை. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதே சரி.
பொன். கருணாநிதி, கோட்டூர்.

பாதிப்பு
பெட்ரோல், டீசலையும் பிற எரிபொருள்களையும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது மக்கள் நலம் சார்ந்த செயலாகப்படவில்லை. அன்றாடம் மக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களான மளிகை, காய்கறி மற்றும் உணவுப் பொருட்களை 
எடுத்துச் செல்லும் வாகனங்களும் மருந்துவமனைக்கும் கூலி வேலைக்கும் செல்லும் சாமானியர்களும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பாதிக்கப்படுவார்கள். எனவே பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி., வரியைக் கைவிட வேண்டும்.
ஆ. செல்வராசு, வல்லம்.

ஊக்குவிப்பு
பழம் மற்றும் காய்கறிக் கடைகளில் செய்வது போல் ஒவ்வொரு விற்பனை நிலையத்திற்கும் விலை நிர்ணயம் செய்ய அனுமதி வழங்கி விடலாம். இவற்றை ஏன் சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் கொண்டு செல்ல வேண்டும்? சிறு வணிகர்களை ஊக்குவிப்பதாக ஒரு விளம்பரம் கொடுத்தால் லட்சக்கணக்கான விற்பனையாளர்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
வை. வேதையன், வேதாரண்யம்.

தயக்கம் ஏன்?
எல்லாத் தரப்பு மக்களுக்கும் இன்று பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள் அத்தியாவசியத் தேவைப்பொருள்களாகிவிட்டன. ஏழை எளியோர் கூட எரிபொருளால் இயங்கும் இரு சக்கர வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். எல்லாப் பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி 8 முதல் 28 வரை நிர்ணயித்துள்ள அரசுகள் நாளொன்றுக்கு கோடிக்கணக்கில் விற்பனையாகும் எரிபொருள்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரத் தயங்குவது மக்களை ஏமாற்றி வரி வசூலிப்பதற்கு சமமாகும்.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

வியப்பு
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள் நம் நாட்டில் மட்டும் தினம் ஒரு விலையில் விற்கப்படுவதற்கு காரணமே அவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வராததுதான். தங்க ஆபரணங்கள் ஜி.எஸ்.டி., வரம்புக்குள் வரும்போது பெட்ரோல், டீசல் மட்டும் வராதது வியப்பாக உள்ளது. தங்கம் இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். பெட்ரோல், டீசல் இல்லாமல் வாழ்வது கடினம். பெட்ரோல், டீசல் இவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது சரியே!
உஷா முத்துராமன், மதுரை.

விலைவாசி குறையும்
பெட்ரோலியப் பொருட்கள் ஜி.எஸ்.டி., வரம்புக்குள் வந்தால் அதிக பட்சம் 28% வரிதான் விதிக்க முடியும். தற்போது எரிபொருள்களின் விலையில் பாதி மத்திய, மாநில அரசுகளுக்கு வரியாய் செல்கிறது. எனவே, இவ்வரசுகள் சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் வருவதை விரும்பவில்லை. ஜி.எஸ்.டி. வரி விதித்தால் பெட்ரோலியப் பொருள்கள் உடயோகிப்போர் பயனடைவதோடு, பல பொருட்களின் விலைவாசி குறைவதால் பொதுமக்களும் பயன்பெறுவர்.
இராம. பரஞ்சோதி, சென்னை.

வருவாய் இழப்பு
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களை சரக்கு மற்றும் சேவை வரி முறையில் சேர்ப்பது நல்லதுதான். ஆனால், மத்திய மாநில அரசுகள் இதற்குச் சம்மதிக்காது. இப்பொழுது மத்திய அரசின் கலால் வரி மற்றும் மாநில அரசின் விற்பனை வரி இரண்டும் சேர்த்து 50 சதவீதத்தைத் தாண்டும். ஆனால், ஜி.எஸ்.டி., யில் அதிபட்ச வரியே 28% தான். இதை அமல்படுத்தினால் மாநில அரசுக்கு பெரிய வருவாய் இழப்பு ஏற்படும். எனவே அரசுகள் ஒருபோதும் இதற்கு உடன்படாது. 
மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

குழப்பம்
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களை சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்கிற கருத்து சரியல்ல. வீணான குழப்பத்தையே இந்த முறை ஏற்படுத்தும் ஒரு கூலித் தொழிலாளி உணவகத்தில் சென்று சாப்பிட்டால் ஜி.எஸ்.டி. என்ற வரியைப் போட்டு வாட்டுகிறார்கள். 100 ரூபாய் உணவு என்றால் 120 ரூபாய் தர வேண்டுமென்று ஜி.எஸ்.டி அச்சுறுத்துகிறது. பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலையை தினமும் கூட்டுவது அநியாயம்.
ச. கண்னபிரான், திருநெல்வேலி.

வரலாறு காணாத விலை
பெட்ரோல் மீது மத்திய அரசு லிட்டருக்கு சுமார் 20 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 15 க்கு மேலும் வரி விதிக்கிறது. இது தவிர மாநில அரசு மதிப்புக் கூட்டு வரியாக 34 மற்றும் 25 சதவீதமும் வரி விதிப்பதால், விலை வரலாறு காணாத வகையில் உச்சத்திற்கு சென்றுள்ளது. இவ்விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் வரி வருவாயை மட்டும் பார்க்கிறதே தவிர ஏழை நடுத்தரக் குடும்பங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. எனவே, ஜி.எஸ்.டி. வரம்புக்குள் எரிபொருள்களையும் கொண்டு வரவேண்டும்.
உ. இராசமாணிக்கம், கடலூர்.

அவசியம்
எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு விலை நிர்ணயம் செய்வதும், அரசும் வரியை வசூல் செய்து கொண்டு, உச்ச பட்ச விலையை பொது மக்கள் மீது சுமத்துவதும் கொடுமையானதாகும். பெட்ரோல் மற்றும் டீசல், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டால், இந்த அளவுக்கு விலை உயர்வு இருக்காது. எல்லா பொருள்களின் விலைக்கும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையுடன் தொடர்பு இருப்பதால், பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம்.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

வாங்கும் சக்தி
எல்லாவற்றையும் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து விட்டால் விலைவாசி குறையும் எனக் கூறும் மத்திய அரசு மக்களுக்குப் பெரிதும் பயன்படும் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனையை தனியாரிடம் தாரை வார்த்துக் கொடுத்திருப்பதும், கலால் வரியைக் கூட குறைக்க முன் வராமல் அடம் பிடிப்பதும் பயன்படு பொருள்களின் விலையேற்றத்திற்கே வழி வகுக்கும். பெருவணிகம், சிறு தொழில் அனைத்தும் பெட்ரோல் பொருள்களைச் சுற்றியே வலம் வருகின்றன. இதனால் மக்கள் வாங்கும் சக்தியை இழக்கின்றனர்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

அதிக லாபம்
இந்தக் கருத்து மிகவும் சரி. இந்தியாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் உற்பத்தியாளர்கள் அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். இந்த நிலையில் சரக்கு, மற்றும் சேவை வரி விதிப்பிலிருந்து விலக்களித்திருப்பதும் வியப்பாக உள்ளது. எனவே, அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களையும் சரக்கு மற்றும் சேவை வரி (வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.
 

More from the section

சிறார்களுக்கு பாலியல் தொல்லை அளித்தால் மரண தண்டனை அளிக்கும் வகையில் போக்சோ' சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
கடந்த வாரம் கேட்கப்பட்ட "அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்துவது குறித்து, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது நல்ல யோசனையா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
ஐந்து மாநில பேரவைத் தேர்தல்களின் முடிவுகளை வைத்து மக்களவைத் தேர்தலை கணிக்க முடியாது என்ற கருத்து சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
ரிசர்வ் வங்கி, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது சரிதானா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்கிற கருத்து சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...