புதன்கிழமை 16 ஜனவரி 2019

கடந்த வாரத் தலைப்பு ‘திராவிடச் சூரியனே’ வாசகர்களின் கவிதைகள்!

By கவிதைமணி| DIN | Published: 15th August 2018 01:10 PM

திராவிடச் சூரியனே!

முத்தமிழ் அறிஞனுக்கு
மூத்த தமிழனுக்கு - என்
இளந்தமிழ் கொண்டு
இரங்கற்பா பாடுவதோ..!

ஈரேழு உலகம் எங்கு நீ
சென்றாலும்...செந்தமிழ்
உன்னை உயிர்ப்போடு
வைத்திருக்கும் ஐயா..!

இரவா புகழ்ப் பெற்ற உனக்கு
எதற்கு இரங்கற்பா..!

இனி எம்மோடு இல்லை நீ
என்று யார் சொன்னது
ரோமாபுரி பாண்டியன் தொடங்கி
நீ எழுதிய வரலாற்று
நாவல்களிலும் உன் வாழ்வின் சரித்திர
பக்கங்களிலும்
என்றும் உயிர்ப்போடு பார்ப்போம்
உன்னை...!

சட்டப்பேரவை ஆனாலும்
அரசியல் மேடையானாலும்
ஊடகப் பேட்டியானாலும்
தமிழால் அலங்கரித்தாய்
உன் குறும்பு பேச்சும்
வீரத் தமிழும்
உன் பெயர் சொல்லில்யே
முழக்கம் இட்டது..!

அந்த சூரியனே உன்
வெற்றித் திலகம் ஆனது

தமிழால், தமிழர் உணர்வோடு
கலந்திருக்கும் உனக்கு
தமிழ் உள்ள வரை என்றும்
இறப்பு இல்லை

காற்று உள்ள வரை உன் குரல்
எம் செவிகளில் ஒலிக்கும்
என்பதால்
மரணம் என்பதும் உனக்கு
இல்லை..!

ஆயினும் ஒரு குறை ஐயா..!

எல்லோருக்கும் 24 மணி நேரமாக
இருந்த
ஒரு நாளின் அளவை நீ மட்டும்
48 மணிநேரமாக ஆக்கி
வாழ்ந்தாய்..!

அதுபோல உன் ஆயுளையும்
இன்னும் ஒரு
100 ஆண்டுகளுக்கு நீயே
நீட்டித்துக்
கொண்டிருந்திருக்கலாம்..!

உன் போல்
இனி ஒரு தலைவன்
வரும் தலைமுறை காணுமோ
என்றேன் தமிழ்தாயிடம்

தமிழன்னை கண்ணீரில்
நா தழதழக்க ஏதோ சொன்னாள்
உனை இழந்து..
வார்த்தைகள் வராமல்
வாய்மூடி நின்றாள்!

- கவிஞர் திருமலை சோமு

**

எதையும் தாங்கும் இதயத்தின் அருகில் 
துயில் கொள்ளச் செல்லும் ஓய்வறியாச் சூரியனே!
உன் போராட்டங்கள் எண்ணிலாதவை போலவே
உனக்காகத் திரண்ட உடன்பிறப்புகளும் எண்ணிலாதோர்
கண்ணீர் கடலில் மிதந்து செல்லும் கட்டுமரமே
உன்னைக் கடலோரத்தில் நிறுத்தி வைக்கிறோம்
என்றென்றைக்குமாய் எங்களுக்குப் பாடமாய் இரு!
நீ இன்றி எழுத முடியாது தமிழக அரசியல் வரலாற்றை
ஐந்தாண்டுகள் பொறுத்திருந்தால் நூறாண்டு கண்டிருப்பாய்
அதற்குள் என்ன அவசரமோ? அஸ்தமித்தாய் ஆகஸ்டில்
ஏற்றமும், இறக்கமும் புதிதில்லை உனக்கு காண்!
போராடி வெல்வதூஉம் பெரிதில்லை உனக்கு காண்!
இறந்தும் வென்றாய் இடஒதுக்கீட்டு போராட்டத்தில்!
அண்ணாவின் தம்பியாய் தமிழர்களின் தந்தையாய்
முத்தமிழ் காவலராய், திராவிட மும்மூர்த்திகளில் இளையவராய்
கடமைகளை முடித்திட்ட பாசமிகு குடும்பத் தலைவனாய்
ஐந்து முறை தமிழக முதல்வராய்
நயமான எதிர்கட்சி தலைவராய்
உடன்பிறப்புகளின் உற்ற தமையனாய்
நீ வகிக்காத பொறுப்புகள் இங்கில்லை!
போலவே உன் போன்று இனியொரு பிறவியில்லை!
எதையும் தாங்கும் இதயத்தின் அருகில்
துயில் கொள்ளச் செல்லும் ஓய்வறியாச் சூரியனே!
திராவிடச் சூரியனே!
என்றென்றைக்குமாய் எங்களுக்கு பாடமாய் இரு நீ!

- கார்த்திகா வாசுதேவன்

**

முத்தமிழ் சூரியனே 
மீண்டெழ மாட்டாயா ?
 கிழக்கின் விடியல்

 இனி நீ இன்றியா?

 பரணி பாடி 

மனதை தேற்றிட முடியுமா?

 கண்கள் அழுதாலும்

 நெஞ்சுரம் நீங்குமோ ?

புலம்பல் தேற்றுமோ?


 கலையும் எழுத்தும் 

சொல்லும் செயலும்

கட்டிய சாம்ராஜ்ஜியம் உறங்கிப் போகுமோ? கட்டுமரமாய் மிதக்குமோ? 

நம் மனக்கடலில் புயல் அடங்குமோ? தெள்ளு தமிழ் 

சூரியனுக்கு வீர வணக்கம்!! 

- கோமலீஸ்வரி

**
விதவைக்கு கைம்பெண் என பொட்டு வைத்தவர்
செம்மொழியாய் எம்தமிழை நட்டு வைத்தவர்
தலைமையேற்றபோதும்

தன்னைத் தடுத்தவரை விட்டு வைத்தவர்
தமிழை இகழ்ந்தோர்க்கெல்லாம் குட்டு வைத்தவர்
இன்று எட்டாம் தேதியில்

நம் அண்ணாவோடு எட்டு வைத்திருக்கிறார்

நிரந்திர ஒய்வு பெற்றது இந்த சக்கர நாற்காலி 
எமது ஓய்வறியா சூரியனான கலைஞரிடமிருந்து !!

 - லீஷு

**

இரங்கற்பா..! ஒன்று
எழுதுகிறேன்
என் தலைவா..!
அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த
அஞ்சா நெஞ்சனே..!
அன்னைத் தமிழின் தலைமகனே..!
திருக்குவளை தந்த திருமகனே..!
அறிஞர் அண்ணாவின் பாசத்தில்
படைக்கு அஞ்சாத் தளபதியே
கல்லக்குடி கொண்ட
கருணாநிதியே..!
இழிசாதி என்றோர்க்கும்
இடம் கேட்டுப் போராடி
சமூகநீதி காத்த சமத்துவமே..!
திராவிடத்தின் வார் பிடித்த
பேனாவைக் கூர் தீட்டி...
தமிழன் மார்தட்டி எழுந்திட
எழுதியது உன் எழுத்து- அது
மாற்றியது
தமிழகத்தின் தலையெழுத்து..!
வாழ்க்கை ஒரு போராட்டம்
ஆனதுண்டு பலருக்கு
போராட்டமே வாழ்க்கையாய்
போனதென்ன உமக்கு..!
அன்று...
கல்விக்கூடம் சேரவும்
இன்று...
கல்லறைக்குப் போகவும்
போராட்டம்...
போராட்டம்...
போராட்டம்...
அதனால்தான்
உயிர்நீத்த பின்னும்
நீதிகேட்டு
போராட்டம்...
இறப்பிலும் உனையன்றி
போராட்டத்தில் யார்தான்
வெல்ல முடியும்..!
அண்ணாவின் தம்பிக்கு
இடம் கேட்டுப்
போராட வைத்திட்டார்
அவரிடம் சொல்லுங்கள்
உங்களுக்கும் சேர்த்துதான்
உழைத்திட்டார் கலைஞர்..!
ஓய்வறியா சூரியனே...
உறங்கத்தான் சென்றாயோ..!
இரவலாகப் பெற்றிட்ட
அண்ணாவின் இதயத்தை
அவர் காலடியில் வைத்திட்டு
தோள் சாய்ந்து துயில்வாயோ..!
எப்போதும் உழைத்தவன்
உறங்குகிறான் என்று
கல்லறையில் எழுதுங்கள்...
மலர்மாலை சூடிட்ட
புன்னகை முகத்தினை
புரட்சித் தலைவனை...
மண்ணுக்குள் மூடிவிட்டு
மலர்களைப் போடாதீர்..!
தமிழ் வாழ...
தமிழர் வாழ...
அவன்
மண்ணுக்குள்ளிருந்தும்
விதைகளை தூவுவான்
உடன்பிறப்பே கலங்காதீர்..!
அவர்தான்
மு.க.
அவர்தான்...
திருக்குவளை முத்துவேலர்
கருணாநிதி
தி.மு.க.
சென்று வா தலைவா..!

- ரஞ்சித் வைத்தியலிங்கம்

திருக்குவளையின் தீப்பொறியே

நெஞ்சுக்கு நீதி பேசி
குறளோவியம் படைத்த செம்மொழி ஊற்றே

பராசக்தியில் சமூக நீதி பேசி
சமத்துவபுரத்தில் சங்கமித்தவரே

அரசியலில் நீ இருந்தாயா இல்லை 
அரசியலே நீயாக இருந்ததா

எதிரிகள் மத்தியில் வாழ்ந்து பழக்க பட்ட உனக்கு 
எதிரிகள் இல்லா வாழ்க்கை சலித்துவிட்டதோ 

அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்ற உனக்கு
அண்ணா சமாதியில் இடமில்லையாம் பைத்தியக்காரர்கள் 
இறந்ததே அண்ணா என்று தெரியாதவர்கள்

நீ தி மு க வின் தலைவராக ஐம்பது ஆண்டுகள் 
இருந்தாய் என்று புகழ்கிறார்கள் 
தி மு க வே நீதான் என்று தெரியாதவர்கள் 
ஆம்
(தி)றுக்குவளை (மு)த்துவேல் (க)ருணாநிதி 

எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு
காவேரி பொங்கும்போதே எனக்கு தெரியும்
காவேரி உன் மேல் காதல் கொண்டுவிட்டாள் 
உன்னை அள்ளிக்கொண்டு போய்விடுவாள் என்று

எனக்கு உன் மீது ஒரு வருத்தம் உண்டு 
எதற்கும் அஞ்சா நீ
ஏன் இயற்கையின் அழைப்பை வணங்கி ஏற்றாய்
இயற்கையையே நாங்கள் ஏளனம் செய்துவிடுவோம் 
என்ற அச்சத்தாலா

போய்வா உதய சூரியனே 
நின் மறைவிற்கு பிறகும் மீண்டும் 
உன் நாமம் உதிக்கும் 

உன் சுவடுகள் இன்னும் ஓர் நூற்ற்றாண்டு 
உன் பெயர் சொல்லும்.

- ஆர்.ராமலிங்கம், கத்தார்

**

உன்னால் நாங்கள் விழித்தெழுந்தோம்
ஆம் - அடித்தட்டு மக்களுக்காக நீ உதித்தபோது

உன்னால் நிமிந்து நடந்தோம் 
ஆம் - ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக

நீ குரல் கொடுத்தபோது

உன்னால் ஒளி நிறைந்த வாழ்க்கையை

நோக்கி பயணப்பட்டோம்
ஆம் - சிறுபான்மை மக்களின் நலனுக்காக

நீ திட்டங்களை தீட்டியபோது

உன்னால் நிம்மதியாக படுத்துறங்கினோம்
ஆம் - பாதுகாப்பு அரணாக

நீ அரசு கோலோச்சியபோது

உன்னால் நாங்கள் உயர் கல்வி

நோக்கிச் சென்றோம் 
ஆம் - எங்களுடைய எதிர்காலத்திற்காக

நீ கடுமையாக உழைத்தபோது

நாங்கள் வாழ்க்கையில் உயர்ந்து விட்டோம்

என்று நினைத்து எங்களை விட்டுச் சென்றாயோ
ஆம் - எங்களை உயர்த்தி விட்டுச்

சென்றாயோ திராவிடச் சூரியனே 

- ஆம்பூர் எம். அருண்குமார்

**

எல்லா நாளும் சூரியன் கிழக்கில் உதித்தான். 
ஆனால் 27/7/18 முதல் 7/8/18 தேதிகளில்?
1956 முதல் 2017 வரை சட்டமன்றத்தில் 
ஒலித்த குரல் ஏங்க வைத்து 
7/8/18 ல் அன்பு அண்ணனுடன் உரையாடச்சென்று விட்டாயோ? 
ஆதவன் தினமும் கிழக்கில் உதித்து மேற்கில் மறைவான் 
ஆனால் 8/8/18 மட்டுமே கிழக்கில் உதித்து 
கிழக்கிலேயே மறைந்த விபரம் 
எத்தனை பேர் அறிவார்கள்.   

- பாரதிராஜன், பெங்களூர்

**

திகட்டாத பைந்தமிழே
திருவாரூர் அவதரித்து
பகட்டின்றி பார் மீது பகலவனாய் வந்ததென்ன?
அகலாத ஆண்மையுடன்
புகழோங்க அரசியலில்
திகழ்ந்தனையே திகழ்ந்தனையே
இகழ்ந்தோரும் நாணும்படி
நண்ணயம் பல செய்து
நடந்தனையே குறள் வழி,
அடர்ந்த காடதனில் 
அரிமா வாய் நீ இருக்க
அயவோர் அணுகிடவே
அஞ்சிய காலம் போய்,
விஞ்சிட உள்ளுவோர் - இனி
விவகாரம் செய்திடுவர்,
கலைத் தாயின் தலைமகனே
கதிரவனே - ஆதவனே
கண் துஞ்சு - கண் துஞ்சு
மீண்டு வா மண் மீதில்
ஈண்டு - துவண்டாளே தமிழ் தாயும் - கலைஞர் நான்கெழுத்து விவேகம்
நான்கெழுத்து - ஆற்றல்
நான் கெழுத்து - அதன் வழி
நடந்திடும் ஆதவன் நான்கெழுத்து, விரைந்து வா
எழுச்சி - எனும் நான்கெழுத்தை
எம் தமிழர் துடைத்து
ஏற்றம் எனும் நான்கெழுத்தை
இப்போதே - அடைந்திடவே.
திராவிடச் சூரியனே - நீ 
உறக்கம் விட்டு எம் உதிரம்
சேர்ந்தாய் -தமிழாக - தன்மானமாக
தமிழன் என்கிறார் இனமுண்டு - என பாரோருக்கு
இனி எவர் சொல்வார்!?

- கவிதா வாணி - மைசூர்

**
ஓயாமல் உழைத்தவர் இதோ ஓய்வு எடுக்கிறார்...

தமிழ் அன்னையின் மடியில் துயில் கொண்ட கலைஞா!
ஓயாது உழைத்த உன் ஓய்வு இதோ அண்ணாவின் பக்கத்தில்!

கடன் வாங்கிய இதயம் அதன் இருப்பிடத்திற்கு சென்றது!
கரகரத்த குரல் இனி எம்காதில் ஒலிக்காதென்பதில் மனம் பதைக்கிறது!

உன் திறமைகளை வார்த்தைகளில் அடைக்க இயலா!
தமிழுக்கு நீர் ஆற்றிய கடமையை ஒருவரும் மறக்க இயலா!

தமிழ் பார் எங்கும் ஒலிக்க செம்மொழியாக்கினாய்!
பலதலைமுறை காண தமிழை கணிணியில் ஏற்றினாய்!
திருவள்ளுவர்க்கு ஒய்யாரமாய் குமரியில் சிலை வடித்தாய்!
தமிழ், தமிழ் என எங்கும் முழங்கி நீர் இந்தி திணிப்பை எதிர்த்தாய்!

கொள்கை முழக்கங்கள்,
காலம் மறவா கடிதங்கள்,
கன்னித்தமிழ் கவிதைகள்,
சுவைமிகு நாடகங்கள்,
உணர்ச்சியான வசனங்கள்,
இவை நீர் காற்றில் கலந்தாலும்,
தமிழ் உள்ளவரை நீளும்!
தமிழ் உள்ளவரை வாழும்!

பகைவரும் உன்னிடம் அரசியல் பயில விரும்புவார்!
பிறமொழியினரும் உன் தமிழ் கேட்க விரும்புவார்!
போராட்டத்தின் மறுபெயரான கலைஞா நீர் துயில் கொள்!

இந்த நாடும், வீடும் தலைவரிழந்த மொட்டைக்காடாய் காட்சி தர,
திராவிடம் தன் ஓயாத பயணத்தை அடுத்ததலைமுறையிடையே பயணிக்கிறது!

சமூகநீதி வாழ்க!

- இனிய தமிழ் செல்வா, ஓமன்

**

கலைஞரின் சாவுக்கு வேவு பார்க்க வந்த

நோவினை சிறை படுத்தி; 

காவேரி யிருந்து தீவுக்கு கொண்டு

சென்று காவு கொடுக்க சிரம் தாழ்த்தி
தீர்ப்பளிக்க தீர்மானிக்குமுன்; 

தானே கர்வத்தோடு தலை நிமிர்ந்து

அண்ணா ஆணையிட்டார் எனக்கு;

என் தம்பி கருணாநிதி அல்லலுர க

னவு கண்டேன் நெஞ்சை நிறடுகிறது; 

போய் கையோடு அழைத்து வரச் சொன்னார்

அதனால் வந்தேன்;

கலைஞர் நாமம் பல்லாண்டு வாழும்

அண்ணாவை காணாமல்

கலைஞராலும் இருக்க முடியாது;

தயைக் கூர்ந்து அனுப்பி வையும்
இல்லையேல் அண்ணா என்னை வைவார்;

என்றே கெஞ்சி கூத்தாடி காஞ்சி 
தலைவரிடம் சேர்த்திட்டது நோய்;

ஒரு திராவிடச் சூரியனே மறைந்ததை

எண்ணி ஒளியிழந்து இருள் சூழ்ந்த வேளை;

மறு சூரியன் உதித்திட கண்டோம் 
ஆறுதல் அடைத்தோம் அதற்குள் 

அச் சூரியனும் அஸ்தமத்தை தேடி
மறைய இனி எச் சூரியன் உதித்து

வெளிச்சத்தை காண்போமோ அறியோம்
கண்ணீரை காணிக்கையாக

வைத்த வண்ணம் 

- அபிரகாம் வேளாங்கண்ணி, மும்பை 

**
திராவிடச் சூரியனே புகழாய்  வாழ்க

வற்றாத    எழுதுகோலில்    எழுதி   எழுதி
    வளரறிவைத்   தமிழர்க்கு   ஊட்டி   யோனே
கற்றோரும்   வியக்கின்ற    சுழலும்   நாக்கால்
    கருத்தூட்டி    விழிப்புணர்வை    ஏற்றி    யோனே
பெற்றதொரு    கணினியெனும்     மூளை    யாலே
    பெருந்திட்டம்     வகுத்துநாட்டை    உயர்த்தி    யோனே
உற்றதொரு    துணைநீதான் !    தமிழி    னத்தின்
    உயிர்கலைஞா  திரவிடத்தின் சூரியா    வாழ்க !

மலைஇமயம்    வென்றுவில்லைப்     பொறித்த   தைப்போல்
    மாச்செயலால்    புதழ்பொறித்த    நற்சே ரன்நீ
நிலைத்திருக்கும்    கல்லணைபோல்     குறள்கோட்    டத்தை
    நிலையாக    நிறுத்திட்ட    நற்சோ ழன்நீ
தலைச்சங்கம்    மூன்றமைத்துத்     தமிழ்வ   ளர்த்த
    தகைமையைப்போல்    வளர்த்திட்ட    பாண்டி   யன்நீ
கலைமிளிர்ந்த     பொற்கால    மூவேந்   தர்போல்
    கவின்ஆட்சி     தந்தகலைஞா  புகழாய்   வாழ்க !

பகுத்தறிவால்   பழம்மூடம்   சாதி   ஓட்டிப்
    படைத்திட்ட    சமத்துவத்தால்    பெரியார்   தான்நீ
வகுக்கின்ற    அரசியலின்    திறத்தால்   மாற்றார்
    வாழ்த்துமாறு    ஆற்றுவதில்    அண்ணா    தான்நீ
தொகுத்தளிக்கும்    நிர்வாகத்     திறனில்     நாடே
    தொழுதிட்ட    மூதறிஞர்   இராசாசி    தான்நீ
தகுகல்வி    உணவளித்த    காம   ராசர்
    தடம்வென்ற    கலைஞரேறே    வாழ்க   வாழ்க !

இந்தியாவே    பின்பற்றும்    உழவர்    சந்தை
    இருப்பவர்கள்    சமமென்னும்    சமத்துவப்    புரங்கள்
சிந்தனைக்கும்   எட்டாத    விதவை    மணங்கள்
    சிறப்பாக    உழுவோர்க்கே     சொந்த    நிலங்கள்
சந்தனத்    தமிழுக்குச்     செம்மொழித்    தகுதி
    சம்ச்சீரில்     கல்வியெனும்    நலத்திட்    டங்கள்
இந்நிலத்தில்    அளித்துத்தமிழ்      இனத்தின்     கண்ணாய்
    இலங்கிட்டாய்    புகழாக     வாழ்க   வாழ்க !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

கிழக்கு நோக்கிப் பார்,
காலைச்சூரியன்;
மேற்கு நோக்கிப்பார்,
மாலைச்சூரியன்

சூரிய ஒளியில்,
இருள் போனது;
கூரிய சிந்தனையால்,
வாளே உடைந்தது

போர் புரிய,
ஆயுதம் வேண்டாம்;
பேனா முனையே
போதும்

ஊர் அறிய,
விளம்பரம் வேண்டாம்;
நல்ல எண்ணமே
போதும்

வேருக்கு நீர்
வேண்டாம்;
அது
மரத்திற்கு

உழைப்புக்கு ஊதியம்
வேண்டாம்;
அது 
இனத்திற்கு

ஒவ்வொரு நாளும்
தேய்ந்து போகும்,
தேய்பிறை அல்ல நான்

மீண்டும் மீண்டும்
எழுந்து வரும்,
சூரியன் நான்

பகுத்தறிவுப்பகலவனின்
சீடன் நான்;
பகுத்தறிவுடன் வாழ்வை
வாழ்ந்தவன் தான்

அறிஞரின் அருகில்,
இருந்தவன் நான்
அவர் இதயத்தை,
இரவல் பெற்றவன் தான்

இன்று 
அவரருகிலேயே;
இளைப்பாறச்
சென்றுவிட்டேன்

ஒன்றைச்சொல்கிறேன்
கேள்;
உரிமைப்போராட்ட
களத்தில் நில்

உடன்பிறப்புகளின்
உரிமைக்காக போராடு;
உடன் இருப்பேன்
நான்

கிழக்கு நோக்கிப் பார்;
நான் காலையில் மலர்வேன்
மேற்கில் மறைந்தாலும்;
மறுநாள் உதிப்பேன்

கடமை,
கண்ணியம்,
கட்டுப்பாடு
வேண்டும்

நான் திராவிடச்சூரியன்.

- ம.சபரிநாத்

**

திராவிடமொழியாம் தமிழொளியை ஒளிர்செய் 
திராவிடச் சூரியன் மறைவதில்லை மண்ணில்
ஒளிரும் சூரியன் மிளிரும் சந்திரன் விண்ணில்
ஒளிராமலில் உலகில் எங்கோ ஒரு மூலையில்
மறைவது போல் மண்ணில் தோன்றினாலும் 
மறைவதில்லை, தமிழொளி ஒளிரும் வரை
மாமனிதர் தமிழ் தந்த சூரியனார் தமிழர்
மனதில் ஒளிரும் திராவிடச்சூரியன் அன்றோ
கருணை மிகு சூரியனால் மேகங்கள் உருபெறும்
மருவி மண்ணில் மழைபெய்யும் கருணையால்
தமிழ் விடுத்த திராவிடச் சூரியநிதியாய் என்றும்
தமிழ் திராவிடத்தில் வாரி வளங்குவார். 

- மீனாள் தேவராஜன்

**

திராவிடச் சூரியனே
திமுக தந்த பகுத்தறிவே
சட்டமன்றத் தேர்தல்தோறும்
சரித்திரம் படைத்துவிட்டாய்!

உறவுக்கும் வரவுக்கும்
உயர்வுகள் பல தந்தாய்
தமிழ் காக்கும் தலைவனாக
தரணியெங்கும் வலம் வந்தாய்!

ஆரியம் என்று பல உரைத்தே
அந்தணர் குலம் மழுங்கச்செய்தாய்
ஆண்டவனை வணங்கிடாமலே
ஆண்டவன் அடி அடைந்துவிட்டாய்.

- புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன், சிறுமுகை

**

ஒடுக்கப்பட்டவருள்
ஒடுக்கப்பட்டவருக்காக!
பிற்படுத்தப்பட்டவருள்
பிற்படுத்தப்பட்டவருக்காக!
தாழ்த்தப்பட்டவருள்
தாழ்த்தப்பட்டவருக்காக!
சிறுபான்மையினருள்
சிறுபான்மையினருக்காக!
இறுதிவரை ஓங்கி ஒலித்த குரலடா! 
அந்த தமிழ் குரல்! அந்த திராவிட குரல்!

நீ
பற்றவைத்து
சென்றிருக்கிறாய்!
அது
பற்றியெறியும்
பகுத்தறிவு
சுடராய்
தமிழகமெங்கும்!

- இராஜசேகர்

**

சூரியன் துயில் கொள்ள போனது! 
தமிழகம் இருள் சூழ நேர்ந்தது! 
உச்சம் கொண்டு பறந்த கொடி
உன் துக்கம் கேட்டு தோய்ந்ததோ? 
அச்சம் அறியா அறிஞனே
இன்னும் சொச்சம் கடக்க ஓடி வா! 
உடன் பிறப்புகளே என கூறிய உதடுகள் 
இன்று ஊமையானதே! 
உடை பொருளாய் உன் மக்கள் 
உள்ளம் சிதையலானதே! 
ஓய்வுக்கே ஓய்வு கொடுத்த 
மானுடம் நீ.. 
முத்தமிழில் மூழ்கி முத்தெடுத்த 
மூத்தத் தலைவன் நீ.. 
தாய் மீது கொண்டப் பாசத்தால் 
அன்று வடித்தாய் உருவச்சிலை! 
தாய்நாடு மீது கொண்டப் பாசத்தால் 
நீ அடைந்தாய் துருவ நிலை! 
காலனுக்கு ஏற்பட்டக் குழப்பத்தால் தான் 
உன் காலம் முடிந்தது.. 
மற்றபடி உன் இறப்பை காலம் 
தீர்மானிக்கவில்லை! 
தலைவா!    
ஓடி வா! 

 - பவித்ரா ரவிச்சந்திரன் 

**

திராவிடம் வேண்டி திருக்குவளையில் உதித்தது
கிராமந்தோறும் பகுத்தறிவுச் சிந்தனை விளைத்தது
பராரிகள் பாழைகளுக்காய்க் குரல் உயர்த்தியது
வராது வந்த மாமணியாய் தன் கட்சியை வளர்த்தது 

ஓயாது உழைத்த உழைப்பாளியாய் உருவானவர்
சாயாது தனித் தலைவனாய் தனித்துவமானவர்
தேயாத கொள்கைகள்வழி நிற்கத் தலைப்பட்டவர்
தீயாகப் பணிசெய்து அண்ணா கணையாழி பெற்றவர்

இழுத்து இழுத்துப் பேசிய வசனங்களின் வேகமின்மை
அழுத்திப் பேசி அனல் தெறித்த வசன வேகங்களாக்கி
புழுத்துப் போன மூட நம்பிக்கைகள் தானே எழுந்தோட
முழுமை நிறை தமிழ் வசனங்களில் வார்த்தெடுத்தார்

தெள்ளு தமிழ் தித்திக்கும் தமிழானது எழுதுகோலில்
அள்ளியெடுத்து அழகு பார்த்தது காகிதங்கள் நனைந்து
துள்ளிக் குதித்தோடிய துடிப்பு நடைச் சொற்களிலே
வெள்ளியின் வெண்மை பளிச்சிட்டதே ஒளிமயமாகி

உதிக்கும் சூரியன் மறைவதும் இயற்கைதானெனினும்
துதிக்கும் மக்களை விட்டுப் பிரிதல் துன்பமல்லவா
மதிக்கும் உலகம் திராவிடச் சூரியனாம் கலைஞரை
பதிக்கும் பொன்னெழுத்துகளால் புகழ் மணக்கவே.

- கவிஞர் ராம்க்ருஷ்

**

திருக்குவளையில் ஒரு அஞ்சுகம் – அவள்
கருப்பையில் உதித்தது ஒரு சூரியன் –அவன்
பள்ளிகள் பார்க்காத பண்டிதன் !!
திரைக்குள் கண்களை மட்டுமே வைத்த
ரசிகர்களின்
காதுகளை அல்லவா திருப்பச்செய்தாய் –
உன் வசனங்களால்
தேனில் தோய்த்த
சவ்வுகளை,  செவிகளில், முதன் முதலாய்
தமிழன் அனுபவித்தான் ...
உன் செம்மொழியை பேனா முனையில்
கசக்கிச்சொட்ட வைப்பாயே
உடன் பிறப்புகளுக்கு கடிதமாய் ---
சமூக வலைதளத்துள் புகுந்த
“மத” வைரஸ்களை
வதம் செய்தவன் ..
சதம் அடிப்பாய் என்று நினைத்தோமே !!  
உன் குரலை உள்வாங்கிய
ஒலி பெருக்கிகளின் உள்ளங்கள்
உணர்ச்சியில் துள்ளுமே !
அய்ந்து முறை முதல்வன் –
கோப்புகளுக்குள் உன் பார்வையின் வேகம்
விமானிகளுக்கும் பாடமே !
மனிதர்களை ஈர்த்து
ஓயாமல் சுழன்ற  பூமியாய் நீ !
உன் உழைப்பிற்கு முற்றுப்புள்ளி
வைத்தது இயற்கை !!
கடற்கரைக்குள் கலந்தாயே என்று
கலங்காதே தமிழா !
மெரினாவின் மெல்லிய காற்றில்
இனி என்றும் தமிழ் மணம் வீசும்

- கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி -- MD DNB PhD

**

உன்
மேடைப் பேச்சைக் கேட்டு
மேனி சிலிர்த்தது
தமிழகத்துக்கு மட்டுமல்ல
தமிழ்த்தாய்க்கும்

இருள்கவ்விய  தேசத்தில்
எழுந்து சிவந்து ஒளிபாய்ச்சிய
திராவிடச் சூரியன் நீ
திசைகளின் தீபம் நீ

எழுதுகோல் ராஜ்ஜியத்தில்
என்றுமே
முதல்வர் நீ

காலையில் தொடங்கி
மாலையில் முடங்கிப் போய்விடும்
சூரியனுக்குப் பொறாமை 
உன்
சுடர்முகம் பார்த்துத்தான்

எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்?
இரவிலும் பகலிலும்
எந்தப் பொழுதிலும்
உதய சூரியனாய் நீ மட்டும்தான்!

கலைஞர் என்ற பெயரை
உச்சரித்தே வாழ்ந்தது
ஒரு நூற்றாண்டு காலம்


உன்னைப் படித்தால்
ஒவ்வொருவரும் கற்கலாம்
நெருப்பாறுகளை
நீந்திக் கடக்க

-கோ. மன்றவாணன்

**

குவளையிலே பூத்தபெரும் அருள்நிதியே!
குவலயமே போற்றும்நின் கூர்மதியே! 
பேரறிஞர் அண்ணாவின் உடன்பிறப்பே!
பார்போற்றும் தமிழ்முழக்கம் உன்சிறப்பே!
ஆட்சியிலே மாட்சியுடன் அமர்ந்தவனே!
காட்சிக்கு எளியனாய்த் திகழ்ந்தவனே!
சமத்துவம் காத்திடவே ஊரமைத்தாய் உழவர் 
தமதுபொருள் விற்றிடவே சந்தை கண்டாய்!
நம்மொழியின் மகத்துவத்தைச் சகத்தோர் காணச்
செம்மொழியாம் தகுதியினைப் பெற்றுத் தந்தாய்!
அர்ச்சகராய்ப் பணிபுரிய அனைவ ருக்கும்
அரியதோர் வாய்ப்பளித்த அறிஞன் நீயே!
புவிபோற்றும் வள்ளுவனாம் பெரியோ னுக்குக்
கவினுறவே சிலையெடுத்தாய் கோட்டம் வைத்தாய்!
மணியான காவியங்கள் பலவுந் தீட்டி
அணியாகப் பூட்டினையே தமிழ்ப்பெண் ணாட்கு!
அயராத உன்னுழைப்பைக் கண்டு வானில்
அயர்ந்துபோய் ஆதவனும் நின்ற துண்டு!
வாழ்நாளில் போராட்டம் பலவுங் கண்டாய்!
வீழ்ந்தபின்னும் போராடி நீதி வென்றாய்!!
இருந்தாலும் மறைந்தாலும் எம்மு ளத்தில்
மறையாத திராவிடநல் சூரி யனே!!

- மேகலா இராமமூர்த்தி

**

தென்னகமாம் தமிழகத்தில்
தென்பாண்டிச் சிங்கமென
திருக்குவளையில் உதித்த
தினகரனே -திராவிடமே
தமிழுக்கு தலை மகன் நீ
தஞ்சைக்கு வந்த
நெஞ்சுக்கு நீதியும் நீ
அஞ்சுகத்தின் மைந்தனாய்
அவனியிலே உதித் திட்ட
ஆதவனே - மேதினியில்
இவர் போல் யார் வருவார்
ஈரோட்டு பெரியார் தம்
உள்ள மென நீ திகழ்ந்து
ஊரெங்கும் அவர் கருத்தை
எழுச்சியுடன்
ஏந்தி நின்று
ஐயன் வள்ளுவனின்
ஒரு உருவச் சிலை தன்னை
ஓங்கி நீ நிறுவிட வே
ஒளவையும் அகமகிழ்ந்தாள்

அஞ்சா நெஞ்சனே
ஆறாத் துயரில்
இப்புவியோரை
ஈண்டு ஆழ்த்தி
உதய சூரியனை
ஊட்டி வளர்த்து
எட்டாத உயரத்திற்கு
ஏன் சென்றாய்
ஐயன் வள்ளுவனுக்கு
கோட்டம் தந்து
சிலப்பதிகாரத்தை
புலப்பட  வைத்தவன்,
களத்தை இழக்கவில்லை என்று விடாது யுத்தம் கண்டவன்,
நாடே பயந்திருந்த போது
இந்திரா வை எதிர்த்து - ஒரு கண் இழந்தாலும் பொருட் படுத்தாது
ஓயாது உழைத்தவன்,
கோயில் தமிழ் பேசுவது உன்னால்,
அரசாங்க அலுவலில் தமிழர்களை உயர்த்தியது நீ
ஆசிரியர்களை பிற அரசு ஆ சிரியர்கள் என ஒதுக்க நீ யோ சம்பளத்தை ஆறு மடங்கு உயர்த்தினாய்,
சாவைப் பற்றி நீ கூறியதை
இங்கு தருகிறேன் 

உதிராத மலர் இல்லை;
உலராத பனி இல்லை;
புதிரான வாழ்க்கையிதில்
புதையாத பொருள் இல்லை;
உடையாத சங்கில்லை;
ஒடுங்காத மூச்சில்லை;
இயற்கை நியதிகளில்
இறப்பும் ஒரு கூறு அன்றோ!

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**

நாடாண்ட நற்றமிழே - உன்
நா உதிர்ப்பது தெவிட்டாத தீந்தமிழே
நானிலம் போற்றும் நறுந்தமிழே
தமிழ் மாநிலம் காத்த பைந்தமிழே

முத்தமிழ் பருகிய முதல்வனே - நீ
தமிழின் கருப்பொருளே
தமிழரின் உயிர்ப்பொருளே


திரைகடலோடி திரவியம் தேடுவாருள்
நீ "திரை" கடல் மூழ்கி முத்தெடுத்தாய்
காவியம் பல வடித்து
காலத்தை வென்று நின்றாய்

ஓய்வறியா துழைத்த உழைப்பின் சிகரமே
ஏழைகளுக்கு கைகொடுத்தாய்
அவர்கள் வாழ்வுயர வழிகொடுத்தாய்
பாரதி கண்ட புதுமைப் பெண்ணுக்கு
சம உரிமை கொடுத்திட்டாய்
சமூகம் சீர்பெற அயராது உழைத்திட்டாய்

தமிழகம் தழைக்க தரணியில் உதித்தீரே
பட்ட கடன் தீர்த்து வைக்க விண்ணுலகம் சென்றீரோ
ஓய்வு தான் தேவையென்று
வங்கக்க கடலோரம் துயில் கொண்டீரோ

- சசி எழில்மணி

**

தீயாக, தீண்டாமை, 
சுட்டதை, எடுத்திட, தடுத்திட,
திராவிடத்தைக் கையில் எடுத்தாய்.
உன் மூலம் பயனுற்று, 
பலம்பெற்று, நலம்பெற்று 
வாழ்பவர் பலருண்டு.
உம்மைப்போல, தமிழை, 
தமிழன்னையை, பூஜித்தவர்
நேசித்தவர் யாருண்டு. – இனி,
உம்மைப்போல, தமிழை, 
தமிழன்னையை நேசிப்பவர், 
பூஜிப்பவர் யாருண்டு….
நீர் ஊற்றி, நீ, வளர்த்திட்ட, 
திராவிடஉணர்வுப்பயிர்களை,
திராவிடச் சூரியனாக, இனி,
காப்பவர் யாருண்டு

- களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்

**

பராசக்தி தென்பாண்டி பரப்பிரம்மம் மனோகராவும்
  பண்டார வன்னியனும் பொன்னரொடு சங்கருமாய்..
இராப்பகலாய் எழுதியவை இரவாது எழுச்சிதரும்
  இலக்கணங்கள் மாறாத இனியதமிழ்ப் பொக்கிஷங்கள்.!
உராய்வின்றி நெருடலிலா உன்னதமா யோங்கியவை
  உயிருடனே வாழ்பவையே.! ஓய்வின்றிப் படைத்தவரே.!
தராசிலிட்டால்..தமிழினிமைத் தங்காது மேலெழும்பும்
  தொல்காப்பி யத்துக்கோர்த் தெளிவுரையும் தந்தவராம்.!

அஞ்சுகத்தின் மகனாக அஞ்சுவிரல்க் கைகாட்டி
  ஆர்ப்பரிக்கும் குரலிலவர் அனைவரையும் ஈர்ப்பாரே.!
நெஞ்சுக்கு நீதிகேட்டு நெடும்பயணம் மேற்கொண்ட
  நிலையாது இதயத்தில் நின்றபெரும் எழுத்தாளன்.!
பஞ்சகச்சப் பெருமானாம் பெரும்பூதூர் மாமுனியைப்
  பாருலகப் பாமரர்கள் பார்த்தபடி வியக்கவைத்தான்.!
மஞ்சளாடைக் கண்ணாடி மங்காத விழிப்பார்வை
  மயக்குகின்ற தமிழாலே மாநிலமே போற்றுபவன்.!

கோடையிடி போன்றதொரு கரகரத்தக் குரலொத்த
  கலைஞரென்ற சூரியனால் கனிந்ததமிழ் அழியாது.!
ஓடைபோல அசைந்தாடி ஓடிவரும் அடுக்குமொழி
  ஓரிடத்தில் நில்லாமல் உதயமாகி எழுந்துவரும்.!
கூடைமலர்க் கவிதைமணம் கமழுகின்ற தமிழின்பம்
  கொத்தாகப் பலமொட்டுக் கருத்தாகக் கொந்தளிக்கும்.!
மேடையிலே வீசுகின்ற மெல்லியதோர்ப் பூங்காற்றும்
  மேடைக்குள் அடங்கியது மேன்மையான தமிழுயிராய்.!

- பெருவை பார்த்தசாரதி

**

தெற்கில் உதித்தொளிர்ந்த திராவிடச் சூரியனே
திருக்குவளை பெற்றெடுத்த தீந்தமிழ்ப் பாவலனே
தெலுங்குப் புலமையிலும்   தேர்ந்திட்ட பண்டிதனே
ஆற்றல், முயற்சி, ஆழுமைத்திறனோடு
போற்றற்குரிய பொறுமையையும் கைக்கொண்டு
ஆண்டு தமிழ்நாட்டை அனைவரும் வியந்திடவே
ஓயாதுழைத்து உச்சிதனையடைந்து
வழிகாட்டியாகி வரலாற்றை வசமாக்கி
தொண்ணூறைத் தாண்டியவோர் தொண்டுகிழமானாலும்
எண்ணற்றோர் நெஞ்சில் இடத்தைப் பிடித்து விட்ட
கலைஞர் கருணாநிதியே கரைபுரண்டு ஓடிய நின்
பேராற்றலாலே பெரும்பயனைப் பெற்றோம் நின்
விலை மதிக்க வொண்ணா வித்தகத்தாற் புத்தகங்கள்
சாலச்சிறந்தனவாய்த் தமிழுலகு மேன்மையுறத்
தந்தனை நீ ஐயா சாந்தியடைந்திடுக.

- எஸ். கருணானந்தராஜா, லண்டன்

**

கழுத்தில் அலங்கரிக்கும் மஞ்சள் துண்டு
  கண்ணில் அணிந்திருக்கும் கறுப்புக் கண்ணாடி
பழுத்த தமிழ்பேசும் மா, பலா, வாழைதோற்றுவிடும்
   புன்சிரிப்பால் பகையை கவிக்கும் கவிமுரசு
எழுத்துக்கள் எல்லாமும் எழுச்சி முரசாகும்
    இளஞர்களை கவரும் தென்றல்நடை பேச்சு
எழுத்தாளன் பேச்சாளன் கவிஞன் வசனகர்த்தா
    ஏதாவது ஒன்றில் எப்போதும் ரசிக்கின்றோம் !
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி
    கட்டளைகளாக  சொன்னார் ஐந்தை
அதன் படி மாநில முதல்வர் கொடியேற்றிட
  அந்நாளில் பெற்றளித்தார் உரிமை மய்யரசிடம்
அதன் பலன் எல்லா முதல்வர்களுக்கும் ஆனது
    இந்தித்திணிப்பை என்றும் எதிர்ப்போமென்றார்
இருமொழி தீர்மானித்தை நிறைவேற்றினார்
    உறவுக்குக் கைகொடுப்போம் உரிமைக்கு
குரல் கொடுப்போம், என்றார், டில்லியில் மாநாடு
இருந்த நிலை மாற்றவேண்டும், திட்டம் வகுப்பதுஅதை
   செயல் படுத்துவது எல்லா அதிகாரமும் ஒரே
இடத்தில் இருப்பதை மாற்றவேண்டும் என்றார்
 தேசிய வளர்ச்சி கூட்டத்தினின்று வெளியேறினார்
சொன்னதை செய்வார், செய்வதையே சொல்வார்
  எந்நாளும் அவரின் புகழ் வாழ்க! அவரின்
இலட்சியம் நிறைவேற உறுதி எடுத்துகோள்வோம்.
   இன்று நம் முன்னிருப்பது திராவிடம் முழுவதும்
இங்கிருக்கும் மாற்றங்கள் பிரதிபலிக்க வேண்டும்
  பெயருக்குப் பின்னால் ஒட்டுக்கள் போடுவது
ஒழிப்போம் என்ற உறுதி யைநாம் எடுப்போம் அதுதான்
     திராவிட சூரியனுக்கு நாம் செய்ய்யும் அஞ்சலி!

 - ரெ. தயாநிதி, விருதுநகர்

**

சூரிய முகத்தில்
உன் உதடுகளில் மலர்ந்து
சிரிப்பின் பலாச்சுளைகளென 
என்றும் குளிர்ந்து சுடரும்
நிலாப்பிறைகள் கொண்டவனே…

பொதிகை மலை தவழ் 
கருமுகிலாய்
சுருண்டு பிளந்த முடிகளின் நடுவில்
உதித்து
எல்லார்க்கும் பேதமிலா ஒளி பொழியும்
சூரியனுமாகிக் கொண்ட
சுந்தரவதனக் கலைஞன் நீ…

எதிரிகளை நேசிக்க வைத்தும்
கலவரப்படுத்தியும்
பே"னா"வில் குரல் முழக்கி
உடன்பிறப்புகளை அரவணைத்து
தலைமேல் 
கழகத்தைச் சுமந்து காத்து
தாயாகிப் போன
அதிசயம் நீ...

பதினான்கு வயதில்
கைப் பிடித்த போராட்டக் கொடி
மரணித்தும் போராடி
அண்ணா இடத்தில் இடம் பிடித்த நீ
நவீன சீதகாதி ...

நூற்றாண்டைத் தொட்டு
பல நூற்றாண்டுகளுக்கு வரலாறாய்
ஞாபகத்தில் கொண்டாட
தொண்டாற்றிய தொண்டின் தலைவன் நீ...

ஒடுக்கப்பட்ட 
இருளொழிக்க வந்த பகல் நீ
பகலின் துயரங்களை
சுட்டெரித்த சூரியனும் நீ...

இருளின் திரையில் வெளிச்சம் பாய்ச்சி
பகுக்கும் பேரறிவைப் பெருக்கிய
புதிய சிந்தனையாளனே...

பெரியாரின்
கைத்தடியைப் பற்றிக்கொண்டு
அண்ணாவின் தோள் சேர்ந்த
தொண்டனும் தம்பியும்
தலைவனும் கூட நீ தான்...

இனி
முன் வரிசையில் அமர வைத்து
உன்னைக் கொண்டாடி மகிழ்ந்து கொள்ளும்
உலக வரலாறு...

பன்முகம் கொண்டு
திசைகளுக்குப் பாடமாகி விட்டதில்
தென்தமிழ் சகாப்தம் நீ...

ஆம்
திராவிடச் சூரியனே
இனி நீ
திசைகளுக்கு ஒளியூட்டி
பிரகாசமானதில்
பெரும்பேறு கொண்டது;
பூகோள வரலாற்றில் தமிழ்நாடு...

- கவிஞர். கா.அமீர்ஜான்

**

அஞ்சுகமமாள் பெற்றெடுத்த 
அரசியல் சகாப்தமே....
திருக்குவளையில் உதித்து 
தமிழகத்தை ஆண்டு 
மெரினாவில் மறைந்த கலைஞரே...
தமிழென்னும் விதையை விதைத்து 
தமிழர்களின் உள்ளங்களில் 
வாழும் வித்தகரே....
கலை,அரசியல் என்று 
இரட்டை குதிரையில் 
சவாரிச் செய்த சாணக்கியரே...
தென்கோடியில் பிறந்தாலும் 
உலகத் தலைவர்களை 
கட்டியிழுத்த ஆளுமையே...
முற்போக்குச் சிந்தனைகளை 
ஊட்டிய மூத்தவரே...
கண்ணீர்களுடன் 
மலர் அஞ்சலி செலுத்துகிறோம்... 
பாசப்பிணைப்புடன் வளர்ந்து
ஒற்றுமையுடன் வாழ  
உடன்பிறப்புகளுக்கு ஆசியளியுங்கள் 
"திராவிடச் சூரியரே"!!!

- சு.ரேவதி, பரமக்குடி

**

அகவற்பா வல்ல இது, உனக்கு இரங்கற்பா!

நட்டத்தில் லாபம் உன்னை அனைவரும் 
ஏற்று கொண்டுவிட்டார்கள்
நீ இறந்தது எனக்கு சோகம், 
கோடிக்கணக்கான மக்கள்

உன் சேவையை! கொள்கையை! 
வெற்றியை! ஏற்றது!

அகம் நிறைந்திருக்கிறது! 
மகழ்ச்சியாக இருகிறேன்!
கலைஞரே ! நின் புகழ் நீடு வாழு
அன்னை தமிழ் உனக்கு மட்டும் 
இந்த திறன் கொடுத்தாள்!
என்னே புலமை முறையான 
பெரும் புலவர்க்கில்லா சிறப்பு
விந்தைமிகு தமிழ்ஆளன் நீ! 
தமிழின் மகுடத்தில் வீற்றிருக்கிறாய்

கந்தை கட்டுபவர்,முதல் கனவாங்கள் வரை
உன்னை உணர்கின்றார்

“என் உயிரிலும்மேலான உடன்பிறப்புகளே”
வசீகரமான உன் வார்த்தை

என் இதயத்தில் என்றும் 
ஒலித்துகொண்டிருக்கும் 
இன்பத்தமிழன் நீ

அகவற்பாவால் உன்னை அடக்கிவிட 
முயல்கின்றேன் ஆர்வத்தால்
அகவற்பா உன் போல் 
யாத்துவிட முடியுமா? 
என்னே நின் பாங்கு!


அண்ணாவைப் பற்றி 
அலங்காரவார்த்தைகளில் 
வர்ணிக்கும்போது

உன் நாவின் சுழற்சி ஒலி 
என் இதயம் தட்டுகிறது எ
ழுச்சிகொண்டு
கண்ணைவிட்டு அகலும் பொருள் 
நீ காணாமல் போவதுதான் நியதி!

கண்ணைவிட்டு அகலாமல் 
காட்சி தருகிறாயே நீ மீண்டுமீண்டும்!
உன்னை புதைத்துவிட்டோம்!
தமிழ் தாகத்தை,வீரத்தை புதைத்தோமா?

விண்ணைப்பிளக்கும் முழக்கங்கள்! 
“எழுந்து வா தலைவா”ஒலிகின்றது
உன் இடத்தை நிறைவு செய்ய 
கட்சிக்கு,ஆட்சிக்கு, அய்யாதுரையா?

உன் தமிழினின் மாட்சிக்கு யாரேனும் உள்ளனரா?
நம் தமிழ்மண்ணில் 
தன்மானத் தலைவனே, 
உன்னை “ திராவிடச்சூரியன்” என்பேன் நான்!

தமிகத்தின் சாதி சமத்துவக் கொள்கை 
திராவிடமுழுதும் பரவட்டும்

- கவிஞர் ஜி.சூடாமணி, ராஜபாளையம்

Tags : கருணாநிதி Karunanithi Poem kavithaimani kalaignar கலைஞர் திராவிடச் சூரியன் dravida sooriyan

More from the section

புத்தாண்டு சபதம்!
இந்த வாரத்திற்கான தலைப்பு: உன் விழிகளில்
கடந்த வாரத் தலைப்பு தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!
இந்த வாரத்திற்கான தலைப்பு: தேநீர்ப் பொழுதுகள்
கடந்த வாரத் தலைப்பு வனவாசம்! வாசகர் கவிதைகள்!