புதன்கிழமை 16 ஜனவரி 2019

நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 11

பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 10
பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 9
பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 8
பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 7
பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 6
பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 5
பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 4
பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 3
பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல்  2

நாள்தோறும் நம்மாழ்வார்

‘திராவிட வேதம்’ என்று போற்றப்படும் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில், நாராயணனை பன்னிரு ஆழ்வார்கள் போற்றிப் பாடியுள்ளார்கள். ஒவ்வொருவர் பாடலும் ஒவ்வொரு சுவை, ஒவ்வோர் அழகு, தெய்விக அனுபவத்தில் தோய்வதற்கான பன்னிரு வழிகள்! அவர்களுள், நம்மாழ்வாரின் பாடல்கள் தனித்துவமானவை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களில் திருமாலின் பெருமையைப் பாடி மகிழ்ந்தவர் இவர். நம்மாழ்வாருக்கு இன்னும் பல பெயர்கள் உண்டு. குருகூர் நம்பி, மாறன், சடகோபன், பராங்குசன் அல்லது பராங்குச நாயகி, வேதம் தமிழ் செய்த மாறன் என்று விதவிதமான பெயர்களில் அவரைப் போற்றுவார்கள். இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் காரணம் உள்ளது. ‘மாறன்’ என்ற பெயரின் பொருள், மாறுபட்டவன். அதாவது, இயற்கையானவிதத்துக்கு மாறுபட்டு நடக்கிறவன். காரியார், உடையநங்கை இருவரின் மகனாகப் பிறந்த மாறன், அழவில்லை; பால் குடிக்கவில்லை. இந்த விநோதத்தைப் பார்த்து எல்லோரும் திகைத்தார்கள். பொதுவாக, குழந்தைகள் பிறந்தவுடன் அழும். அப்போது அழாவிட்டாலும், பின்னர் பசிக்கும்போது அழும். பால் குடித்துவிட்டுத் தூங்கும். இந்த இயற்கைகளுக்கெல்லாம் மாறுபட்டு அவர் இருந்ததால், ‘மாறன்’ என்ற பெயரில் அவரை எல்லோரும் அழைத்தார்கள். பிறந்த குழந்தை ஏன் அழுகிறது? குழந்தை பிறக்கும்போது, அதன் உச்சந்தலையில் ‘சடம்’ என்ற காற்று படுகிறது. உடனே, அந்தக் குழந்தை மாயையில் சிக்கிக்கொள்கிறது, அழத் தொடங்குகிறது. நம்மாழ்வாரையும் அந்தச் ‘சடம்’ என்ற காற்று தொட வந்தது. ஆனால், அவர் கோபமாகப் பார்த்தவுடன், அந்தக் காற்று பயந்து விலகிவிட்டது. ஆகவே, சடத்தைக் கோபித்தவர் என்ற பொருளில் அவரைச் ‘சடகோபன்’ என்று அழைத்தார்கள். மாயையை உருவாக்கும் ‘சடம்’ என்ற காற்று படாத காரணத்தால், அவர் அழவில்லை; பால் குடிக்கவில்லை. எப்போதும் அமைதியாக இருந்தார். ஒரு குழந்தை பால் குடிக்காமல் எத்தனை நாள் இருக்கும்? இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளைக்குப் பசிக்காதா? சாப்பிடாவிட்டால் அதன் உடல் மெலிந்துபோகாதா? ஆனால், குழந்தை மாறனுக்கு அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை. அவர் எப்போதும் கண்ணை மூடிக்கொண்டுதான் இருந்தார். அழவில்லை; பேசவில்லை; பால் குடிக்கவில்லை; வேறு எதுவும் சாப்பிடவில்லை. அப்படியே வளர்ந்தார். பெற்றோர் அவரைத் திருக்குருகூர் கோயிலுக்குக் கொண்டுசெல்ல, அங்கிருந்த ஒரு புளிய மரத்தடிக்குச் சென்றார் அவர். அங்கேயே பதினாறு ஆண்டுகள் தவம் செய்தார். அதேசமயம், மாறனின் ஞானம் வளர்ந்தது. தத்துவங்கள், சாத்திரங்கள் என அனைத்தையும் அவர் கற்றுக்கொண்டார். அவரிடமிருந்து வீசிய ஒளி எல்லாரையும் கவர்ந்தது. ‘இந்தப் பிள்ளையிடம் ஏதோ சிறப்பு இருக்கிறது’ என்று அவர்கள் வியப்போடு பேசினார்கள். மாறனின் ஞான ஒளியை, அயோத்தியில் ஒருவர் கண்டார். அவர், மதுரகவி ஆழ்வார்! இந்த ஒளியைப் பார்த்ததும் மதுரகவி ஆழ்வார் திகைத்துப்போனார். இது எங்கிருந்து வருகிறது என்று யோசித்தார். அதைத் தேடிச் செல்லத் தீர்மானித்தார். அயோத்தியிலிருந்து திருக்குருகூருக்கு வந்தார். அங்கே, புளிய மரத்தடியில் மாறன் தவத்தில் இருந்தார். அவருடைய மேனியிலிருந்து எழும் ஞான ஒளியை மதுரகவி ஆழ்வார் பார்த்துப் பரவசப்பட்டார். இத்தனை ஆண்டுகளாகத் தவத்தில் இருந்த மாறனை, மதுரகவி ஆழ்வார்தான் விழிக்கச் செய்தார். அவரிடம் ஒரு கேள்வி கேட்டார் அவர்: செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்? மதுரகவி ஆழ்வார் ‘செத்தது’ என்று சொல்வது உடம்பைதான். அது அறிவற்ற பொருள் அல்லவா? அந்த உடம்பில் சிறியது, அதாவது உயிர் பிறக்கிறது. அந்த உடலை இயக்குகிறது. உடம்பில் உயிர் சென்று சேர்கிறது என்றால், அது பிறக்கிறது என்று அர்த்தம். அப்போது அது எதை அனுபவித்துக்கொண்டு எங்கே இருக்கும் என்று மதுரகவி ஆழ்வார் கேட்டார். அதற்கு நம்மாழ்வார் சொன்ன பதில்: அத்தைத் தின்று அங்கே கிடக்கும்! அவர் ‘அத்தைத் தின்று’ என்று சொல்வது எதை? ஒருவன் பிறக்கிறான் என்றால், அதன் காரணம் அவன் செய்த வினை. அந்த வினைகள் தீரும்வரை அவன் அந்த உடலிலேயே கிடக்கவேண்டியதுதான். இந்தப் பதிலைக் கேட்டதும் மதுரகவி ஆழ்வார் மகிழ்ந்தார். நம்மாழ்வாருடைய அறிவையும் பக்தியையும் கண்டு வியந்து, அவரையே தனது ஆசிரியராக ஏற்றுக்கொண்டார். சிறந்த நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்தவர் நம்மாழ்வார். அவற்றின் சாரத்தைதான் அவர் தன்னுடைய நூல்களில் தந்தார் என்பார்கள். அவரை ‘வேதம் தமிழ் தந்த மாறன்’ என்று அழைப்பது அதனால்தான். நம்மாழ்வாரின் அந்த நான்கு ஒப்பற்ற நூல்கள்: திருவிருத்தம் (100 பாசுரங்கள்) திருவாசிரியம் (7 பாசுரங்கள்) பெரிய திருவந்தாதி (87 பாசுரங்கள்) திருவாய்மொழி (1102 பாசுரங்கள்) மொத்தம்: 1296 பாசுரங்கள். ‘பரன்’ ஆகிய இறைவனைத் தன்னுடைய அன்பு என்கிற அங்குசத்தால் கட்டியவர் மாறன். ஆகவே, அவரைப் ‘பராங்குசன்’ என்பார்கள். திருமால் மீது அன்புகொண்ட பெண்ணாகத் தன்னை எண்ணிக்கொண்டு பல அருமையான பாடல்களைப் பாடியதால் ‘பராங்குச நாயகி’ என்றும் குறிப்பிடுவார்கள். இனி, நம்மாழ்வாரின் அற்புதப் பாடல்களை, இப் பகுதியில் நாள்தோறும் சுவைப்போம்.